கிறிஸ்டோபர் பல மாதங்களுக்கு முன்னால் அவர் வீட்டில் நடந்த ஒரு மீன் குறித்த சம்பவத்தோடு ஒரு கடிதம் எழுதி இருந்தார். என் பிள்ளைகள் மீன் வாசமே பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்று முடித்து இருந்தார். அந்தக் கடிதத்தின் இறுதியில் நீங்கள் கிறிஸ்டோபரின் எழுத்தை மிக பாராட்டி தொடர்ந்து எழுதச் சொல்லி இருந்தீர்கள். இவர் அதே கிறிஸ்டோபர்தான் என்று நினைக்கிறேன்.
கடலாழம் பயன்படுத்திய மொழி பழகாததால் துவக்கத்தில் சிரமம் தந்தது. வார்த்தைகளை கற்பனையாக்கிப் பார்க்கும் இடம் எனக்கு சிரமமாக இருந்தது. கடலாழம் எது? கப்பல் கண்ணுக்கு தெரிந்த பின்னும் கன்னாசை கிளிடனுக்கு தள்ளிய இடமே, ஆனை கதை கேட்டு அழுத இடத்துக்கு வந்தால் மட்டுமே அது செய்திருக்க முடியும்.
/*கிளீடனின் கண்களைப் பார்தேன். என்னிடம் ஏதோ சொல்லவருவதுபோல். என்னிடம் பிரியாவிடை கேட்பதுபோல். அழுகையோடு மூக்கிலிருந்து சளியும் நீர்போல் வடிந்துகொண்டிருந்தது. கை தூக்கித் துடைக்க அவனுக்கு சக்தியில்லை. தலையை அசைக்கின்றான். மெதுவாக இமைக்கின்றான். அவன் கண்ணை மூடிக்கொண்டால் கீழே சென்றுவிடுவான். */
கிளிடன் மிக ஆழமானவன். எனக்கு கன்னாசை கொடு என அந்த இடத்தில் பிடுங்காமல் இருக்க எத்தனை ஆழம் வேண்டும். எங்கிருந்து வருகிறது அந்த ஆழம்?
நல்ல கதை.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள ஜெ,
கடலாழம் அருமையான கதை. ஒரு முக்கியமான சாகசக்கதை. தமிழில் உண்மயான சாகசக்கதைகள் மிகவும் குறைவு. சுஜாதாக்களும் ராஜேஷ்குமார்களும் பொதுவாக எழுதும் கதைகள்தான் உள்ளன. இம்மாதிரி ஆழமான உண்மையான கதைகள் நமக்குத்தேவை. இந்தக்கதையை நாங்கள் ஆங்கிலத்திலே வாசிக்கமுடியாது. ஆகவே தமிழில் வாசிப்பு உண்டாகிறது.
சிந்தனைச்செல்வன். அ