பூ – கடிதங்கள் மேலும்

போகனின் பூ கதையை இன்றுதான் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. சில இயக்குனர்களின் படங்களை நாம் தியேட்டரில் அமர்ந்து பார்க்கும்பொழுது எந்தத் தவறும் தெரியாது. விறுவிறுப்பாகவும் நமக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். உள்ளே நம்மை கட்டிப்போட்டு விடுவார்கள். வெளியே வந்து டீ கீ குடித்து இரவு சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் நெருடும். அது போலத்தான் “பூ” எனக்கு பட்டது. வெகுநேரம் கழித்து மீண்டும் கதையை யோசிக்கையில் கதை பழையதாகவும், அடுத்தடுத்து நடப்பது யூகிக்கக்கூடியதாகவும் முடிவில் பெரிய உச்சம் இல்லாதது போலவும் தோன்றுகிறது. மீண்டும் வாசிக்க வேண்டும்.

தனசேகர்

.

போகன்,

மற்றுமொருமுறை கதையை வாசித்தேன். காந்திமதி ஒரு தேவலோகத்து மலர், அதற்குரிய ஆகர்ஷனமும் சௌந்தர்யமும் கொண்ட மலர், ஆராதிக்கப்பட வேண்டியவள், ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாதவள். அவளிடமிருந்து எழும் நெடி அவளுடைய கட்டுபாட்டில் இல்லை. அவள் தீயிட்டு இறந்த பின்னரும், காற்றில் அவளுடைய நறுமணம் எஞ்சி இருக்கிறது. வேறுவகையில், அனந்தராமனுக்கு மகளாக வருவதும் அவளேதான். தீரா வன்மத்தை அப்படித்தான் தீர்த்துக் கொள்கிறாள். ஒரு நாவலுக்கான விரிவு கதையில் உள்ளது என்றே எண்ணுகிறேன். நடை வழுக்கிக்கொண்டு செல்கிறது. அத்தனை வேகத்திலும் சித்தரிப்புகள் துல்லியமாக இருக்கின்றன. பல உள் மடிப்புகளை கதை கொண்டுள்ளது. உதாரணமாக வைத்தியரின் பாத்திரம் – ஒரு கால மாற்றத்தை கண்முன் நிறுத்துகிறது. வத்சலையின் பகுதி மொழி ரீதியாக கொஞ்சம் தொய்வாக இருப்பதாக எனக்கு படுகிறது. சிறு பிசிறுகள் ஆங்காங்கு தென்படுகின்றன. கதை களத்திற்கு அப்பாற்பட்ட உவமைகள், பில்ஹார்மொனிக் ஒலி, காந்தியின் ஒழுக்கம் போன்றவை. எழுத்தாளனின் brillianceஐ காட்டி விடுகிறது. கண்ணகியுடனான் இணைப்பும் கூட துருத்தலாக இருப்பதாக தோன்றுகிறது. ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தை இவை எவ்விதத்திலும் குலைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

வாழ்த்துக்கள்.

சுனில்கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநாம் புரிந்துகொள்கிறோமா?
அடுத்த கட்டுரை7. நீர்க்கோடுகள் – துரோணா