ஜெயன் கோபாலகிருஷ்ணன்,
“அப்பாவின் குரல்” இப்போதுதான் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பளார் என்று பெரும்பாலும் காட்சிகளால் மட்டுமே கட்டமைத்து அதிவேகத்துடன் சொல்லப்பட்ட கதை. “அப்பா கதவைத்திறந்து வெளியேறினார்.” என்று முடிக்கும்போது மூச்சிரைத்தது. திரைக்கதையின் “enter late, leave early” கான்சப்ட் இயற்கையாகவே உங்களுக்கு வருகிறது. இதுதான் உங்கள் நடை என்றால் வேறு எழுத்து நடைக்கு தயவு செய்து மாற்றாதீர்கள். இதுவே “டான் பிரவுன்” களின் நடை.!
கூடிய விரைவில் இதே சத்தும், வாழ்க்கையும், வேகமும் கொண்ட ஒரு நாவல் எழுத வாழ்த்துகிறேன். புதிய இடங்கள், புதிய சுவாரசியமான் காட்சிகள் கொண்டு ஒரு புதுக்கதை சொல்லுங்கள்.
அன்புடன்,
ஆனந்தக்கோனார்
ஜெயன்
நம் மூத்த தலைமுறையிலிருந்து நாம் பலவற்றை பெறுகிறோம், சில புள்ளிகளில் திமிறி வெளியேற முயல்கிறோம். ஒரு மரபான குடும்பச் சூழ்நிலையில் அந்த விலகல் அத்தனை எளிதில் சாத்தியமாவதில்லை. ஏதோ ஒருவகையில் நாம் நம் பிரதிகளாக அடுத்தடுத்த தலைமுறையை உருவகித்து வைத்துள்ளோம். தன் மேல் ஒரு அவசியமற்ற சுமையாக வந்திறங்கும் அநாகரீகமான, காலத்திற்குப் பொருந்தாத எடையை தூக்கி வீச வேறு வேறு வகையில் நாம் ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கிறோம். இந்த முரணை அழகாக பிரித்துக்காட்டுகிறது உங்கள் கதை. அதன் உச்சத்தில் அவன் எடுக்கும் முடிவு, மேலும் ஆழமாக்குகிறது.
//“லே பெரிய ஆளாக்கும் கேட்டியா, ஆனா இங்கிண போற வாற ஒருத்தனுவளுக்கும் இது தெரியாது”
எனக்கு ஆர்வமாக இருக்கவே அவர் புத்தகங்களை வாசித்தேன். பின்பு வேறொருவர். வேறொருவர்.
ஏனோ தோன்றியது “எளவு இந்த எலக்கியம் மயிரு மத்ததுணி படிக்கலண்ணா இந்த தேவடியாள நாலு சவுட்டு சவுட்டி ஏசிட்டு நிம்மதியாவது இருக்கலாம்”//
இந்த வரிகள் எல்லோருக்கும் இந்த நுண்ணுணர்வு வாய்ப்பதில்லை, ஒருவகையில் இலக்கிய வாசிப்பின் வழியாக அவன் அடைந்த நுண்ணுணர்வு என்பதை காட்டிச் செல்கிறது. எனக்கு இவ்வரிகள் இல்லாமேலேயே கதை நிறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.
வாழ்த்துக்கள்..
சுனீல் கிருஷ்ணன்