கடிதம்

மதிப்பிற்குரியவர்க்கு,

வணக்கம்.

1) தங்களுடைய “குலதெய்வம்-கடிதங்கள் (20-ஜூலை-2012)” கட்டுரையில், அவர் சொன்ன தகவல்கள் அபத்தம்தான். மேலும் DNA பரிசோதனை பற்றி குறிப்பிட்டிருந்தது. அதில் ஓரளவு உண்மை உள்ளது. “National geographic” Genographic ப்ராஜெக்ட் என்று ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது. நமது DNA மூலம் நாம் எந்த இனக்குழுக்களின் கலவை என்பது போன்ற தகவல்களை தருகிறார்கள். மனித இனத்தின் பயணப்பாதையை இந்தத் தகவல்கள் மூலம் வரைபடமாக கொடுத்திருக்கிறார்கள்.
https://genographic.nationalgeographic.com/human-journey/

2) தங்களுடைய “பெயர்கள் (26-Jan-2013)” கட்டுரையைப் படித்தேன். நன்றாக இருந்தது. சமஸ்க்ருதம் அல்லது வட-இந்திய பெயர் என்றால் இப்பொழுது பேஷன் ஆகி விட்டது. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் சாதாரணமாகத்தான் உள்ளது. சில தகவல்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.  தொடர்ந்து பெண் பிள்ளைகளாக பிறந்தால் “போதும் பொண்ணு” என்று கடைசி பெண் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். பிறகு பிள்ளை பெற்றுக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து இறந்து கொண்டிருந்தால், அடுத்த குழந்தைக்கு வேண்டிக் கொண்டு, உயிர் பிழைத்த குழந்தையை குப்பைக்கு அருகில் வைத்து எடுத்து “குப்புராஜ்” என்றோ “குப்புசாமி” என்றோ “குப்பு” வரும் வகையில் பெயர் வைப்பார்கள்.

தாங்கள் இதை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தகவலை பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

நன்றி.
இப்படிக்கு,
சா. ராஜாராம்.

முந்தைய கட்டுரைஇந்தக்கதைகள்- சில விளக்கங்கள்
அடுத்த கட்டுரைசீர்மை-கடிதங்கள்