ரப்பர் – ஒரு கடிதம்

அன்பின் ஜெ ,

நலமா? ஒழிமுறிக்கு விருது பற்றிய அறிவிப்பு வாசித்தேன்… வாழ்த்துக்கள். அசடன் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். இடையில் ரப்பர் எட்டாம் பதிப்பு கிடைத்தது. வாசித்து முடித்தேன்.

நாவல் ஒரு சமூக இயல் நூலாக விரிகிறது. நீங்கள் ஏற்கனவே கட்டுரைகளில் கூறிய நினைவு. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முன்னேறிய குமரிமாவட்ட கிறிஸ்துவ நாடார்களையும் அவர்களின் ஏமான்களாக இருந்த நாயர்களை சுற்றியும் பின்னப்பட்ட கதை.

இதில் இரப்பர் நாடார்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்புக்குட்டி நாயரின் தந்தை அந்த ஊரின் பெரிய நிலக்கிழார், அவரிடம் இருக்கும் நம்பூதிரியே பொன்னனுக்கு ஊரின் மலை ஓர காடுகளை பாட்டயதுக்கு அளிக்கிறார், நாயரின் முன்னிலையில்.குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் அப்புக்குட்டி நாயர் சிறு பிராயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னனின் வாழ்வையே மாற்றிய அந்த சம்பவத்திற்கு அப்புக்குட்டி நாயரின் தந்தை எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதிலிருந்து, அவரைப் பொறுத்தவரை அது விவசாயத்திற்கு லாயக்கில்லாத அல்லது அவருக்கு முக்கியத்துவமில்லாத நிலமாகையால் கவனமின்றி இருக்கிறார்.

பொன்னையா பெருவட்டரின் முதல் மரணப்படுக்கையின் முதல் அத்தியாயம் “இவான் இலியீச்சின் மரணம்” நாவலை நினைவுபடுத்த தவறவில்லை. முன்னரையில் நீங்களே “நான் ருஷ்யப் பேரிலக்கியங்களை வாசித்த தருணம் என” நாவல் எழுதிய நாட்களை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

நாவலில் என்னை பிரமிக்கச் செய்த ஒன்று அதன் கட்டமைப்பு. நாவல் சுருக்கப்பட்டது ஒருவகையில் அதன் கட்டமைப்புக்கு பெரிதும் உதவி இருக்கிறதென்றே என்ணுகிறேன். புளியமரத்தின் கதை அமைப்பிற்கும் ரப்பர் நாவல் அமைப்பிற்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் வடிவத்தை மட்டும் கூறுகிறேன்.

இதிலும் நீலி இருக்கிறாள், தங்கமாக. குளம்கோரி விடைபெறும் தருணம் கண்கலங்கச் செய்துவிட்டது. ஒரு எதிர் பாத்திரமாக அறிமுகமாகி “வல்ல சரக்குலே”என்று சொல்லி தங்கம் அவன் தங்கை என்று தெரியும் இடம், சுகேசினியிடம் தகவல் தெரிந்தபின் அவன் தெரிவிக்கும் மௌனமே அதற்குள் பொதிந்திருக்கும் துயரத்தை காட்டிவிட்டாலும், அது மறு வாசிப்பிலேயே தெளிவாக அர்த்தப்படுகிறது. தங்கத்தைப் பற்றி செல்லையா பெருவட்டர் பேசும்போதே குளம்கோரி அறிமுகப்படுத்தப்படுகிறான், இது மறுவாசிப்பிலேயே இன்னும் தெளிவாகிறது.

பிரான்ஸ்சிஸின் தரிசன உச்சம் டாக்டர் சார்லசின் அத்தியாத்தின் துணையுடன் வாசகன் எளிதாக அடையமுடியும். ஆகாயத்து பறவை! எதையும் விதைக்காத,அறுவடை செய்யாத, இயற்கையில் இருந்து உயிர் வாழத் தேவையானதை மட்டும் எடுக்கும் ஆதிவாசி.

மிக அற்புதமான வாசிப்பாக அமைந்தது . …

நன்றிகளுடன்
ப்ரகாஷ் .

அன்புள்ள பிரகாஷ்,

ரப்பர் நாவல் சுருக்கப்பட்டது. ஆனால் அதன் வடிவமே சுருக்கப்படுவதற்கும் விரிப்பதற்கும் உரியதாக இருந்தது. ரப்பர் நில உறவுகளின் கதை. உழைப்பவனுக்கு நிலம் எந்த அளவுக்கு முக்கியமென நாம் பொன்னுமணியில் காண்கிறோம். உழைக்காதவனுக்கு அது முக்கியமே அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை
அடுத்த கட்டுரைபுகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]