நூல்கள் – கடிதங்கள்

திரு ஜெயமோகன் அண்ணன் அவர்களுக்கு,

வணக்கம். நீங்கள் நலமாய் இருக்க வாழ்த்துகிறேன்.

தங்களின் ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ நூல்கள் அச்சில் இல்லை என்று எண்ணுகிறேன். எங்கும் வாங்கக் கிடைப்பதில்லை. அவ்வரிசை நூல்கள் நவீன தமிழிலக்கிய மேதைகளை அடையாளம் காண பேருதவியாய் இருக்கிறது. எனவே அவ்வரிசை நூலை மீள அச்சில் கொணர்ந்தால் மிக்க உதவியாய் இருக்கும்.

தங்களின் ‘புறப்பாடு’ இரண்டு பகுதியும் முழுமையாய் வாசித்ததும் எந்த ஒரு கலைஞனுக்கும் இருக்கும் பதின்வயது தேடலும் அலைதலும் மீண்டும் மீண்டும் உறுதியாகியது.

அன்புடன்

வ.அதியமான்..

அன்புள்ள அதியமான்,

நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசையில் வெளிவந்த ஏழு நூல்களும் ஒரே நூலாக நற்றிணைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. புறப்பாடும் அவர்களால் வெளியிடப்படும்.

ஜெ

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களே,

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று விரும்புகிறேன் .

எனக்கு ஒரு உதவி. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிகளில், புத்தக நிலையங்களில் திருக்குறளுக்கான ஒரு நல்ல உரையை தேடிக்கொண்டு இருக்கிறேன். நான் கண்ட வரையில் ஒரு உரையைத் தவிர மற்ற எல்லாம் மிகக் குறைந்த விளக்கம் தனியே தருகின்றன. ஆனால் நான் கண்ட அந்த ஒரு உரையை (அது ஐந்து பாகம் இருக்கும்), இன்னும் கொஞ்சம் தேடல் செய்த பின் வாங்கலாம் என்று எண்ணி தவறவிட்டேன். பின்பு அந்த நூல் இதுவரை கண்ணில் படவில்லை.

ஒரு உரை நமக்கு ஒரு உதவிதான். நாம் அதன் உதவியுடன் ஒரு குறளினை மனதில் நன்கு அசை போட்டு உட்பொருளும், மற்றும் உளவியல் ரீதியான உட்பொருளும் தெளிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் பல உரைகள் உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்லவில்லை என்றே காணுகிறேன்.

என்னுடைய பாட்டி எனக்குப் பரிசாக அளித்த பரிமேலழகர் உரையும் நிகழ்கால தமிழிலான உரையாக எனக்கு திகழவில்லை.

திருக்குறளுக்கு ஒரு நல்ல உரையினை பரிந்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.

​அன்புடன்
ராஜேஷ்
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

அன்புள்ள ராஜேஷ்,

திருக்குறளுக்கு இன்று எளிமையான நீதிநூல் என்ற வகையில் எழுதப்பட்ட பல உரைகள் கிடைக்கின்றன. அவற்றில் சொல்லுக்குச் சொல் பொருள் அளிக்கும் எந்த உரையை வேண்டுமானாலும் வாங்கலாம். மேற்கொண்டு பொருளை நீங்களே விவாதித்து உணர்ந்துகொள்ளவேண்டியதுதான். மெய்யியல் அடிப்படையில் குறளை அணுகும் உரைகளோ விளக்கங்களோ மிகமிகக் குறைவு – அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

கி.வா. ஜகன்னாதன் தொகுத்த திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு இப்போதும் கிடைக்கிறது. அதில் எல்லா மரபான உரைகளும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன [திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு : கி.வா.ஜகன்னாதன், ராமகிருஷ்ணமிஷன் வித்யாலயம் வெளியீடு]

ஜெ

முந்தைய கட்டுரைநாளைக்காக மட்டும் வாழமுடியுமா?
அடுத்த கட்டுரைஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்