விழிகள்
=========
நசுங்கிய பாத்திரம் போல
நதியில் சந்திரன்
விழி அசையாமல் எடுத்து
அள்ளிக்குடித்தேன்
நீரை முழுக்க
விழி
அன்று உறங்கவில்லை
தளர்ந்து விழத்தொடங்கும்
கண்பீ£லிகளை விலக்கி
இமை
பொறுமை போல
காவலிருந்தது.
ஓரு மதியவேளை
===========
அபுவிடம் தூங்கவும்
தொட்டிலிடம் ஆடவும்
சொல்லிவிட்டு
அடுக்களைக்குப் போனாள்
உச்சிவெயிலு நிமிர்ந்தமர்ந்து
ஒரு காற்று
தென்னையோலைகளுக்கு
நாளிதழ் வாசித்துக்காட்டுவதை
பார்த்தது ஜன்னல்
[ஆமாம், தலையாட்டுவது தெரிகிறது]
உறங்கும் உம்மாவை தழுவி
சுயநிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும்
ஒரு டிவி நிகழ்ச்சியை
பாதிவாசல்வழியாக எட்டிப்பார்க்கலாம்.
[பார்த்து கற்றுக்கொள்ளட்டும்
தனிமைவாசிகள்!]
குளுகுளு… குளுகுளு…
புரி தளர்ந்த குழாயிலிருந்து
நீரின் சுதந்திரப்பிரகடனத்தின்
ஒலி
ஸ்டோர் அறையில் இருந்து
மூன்று குழந்தைகளின் மியாவூக்களை
கடித்தெடுத்து
கள்ளிப்பூனையை தேடி இறங்கிய
ஒரு பொரியல்மணம்
பார்த்தஸாரின் ஓர் அற்புதப் பிற்பகல் நேரம்
டும்
மொட்டைமாடியில்
ஒரு தேங்காய் விழுந்தது.
புல்லரித்துப்போயிற்று
என் வீடு
ஒரு சாயங்காலம்
============
இருபத்தைந்து வருடங்களை
இருபத்தைந்து வருடங்கள்
கொன்று தின்றபின்
ஒரு மாலைநேரம்
நகரத்தின் பிடரியில் வைத்து
இரும்புச்சக்கரங்களின் உறுமல்களுகுமேலே
குரல் உயர்த்தி
‘என்னை நினைவிருக்கிறதா?’
என்று கேட்டாய்.
பதிலிழந்து
எச்சில் வற்றி
நின்ற நினைவு
”முன்பு பர்க்மான் படங்களுக்கு முன்னால்
மியூசியம் தியேட்டரில்
நாம் சேர்ந்து இருந்து எரிந்தோமே’
என நீ நீட்டிய
பீடித்துரும்பில் பற்றி தொங்கியது.
த்ரூ எ கிளாஸ் டார்க் லீ
பார்த்து விட்டு திரும்பிய கல்லூரி இரவில்
மட்கார்ட் இல்லாத சைக்கிளில்
எதிரே வந்த ஆட்டோவின்
படிகத்துல்லியம் வழியாக
கடந்துசென்றதும்
த்ரூ எ கிளாஸ் டார்க் லீ
நாம் சேர்ந்திருந்து பார்த்தோம்
என்ன ஒரு படம் என்று நீ சொன்னதும்
ஒன்றாக.
ஒரே நேரம்
ஒரே இடத்தில்
இரு பொருட்கள் போல
இருபத்தைந்து வருடங்களை
இருபத்தைந்து வருடங்கள் கொன்று தின்றபிறகு
ஒரு மாலை நேரம்.
நீ கோபம் கொள்ளக்கூடாது
——————————
நீ கோபிக்கக் கூடாது
உன் இடது உள்ளங்கை நடுவே
ஆயுள் ரேகைக்கு அருகே
இரு அடையாள ரேகைகளுக்கு மத்தியில்
ஆணாகவோ பெண்ணாகவோ ஆகும் முன்பு
அடக்கம்செய்யப்பட்ட நம் அன்புக்கு
நான்
நேற்றிரவு
நீயறியாமல் ஒரு முத்தம் கொடுத்தேன்.
அது கேட்டது
‘போன பிறவியில்
நிலதொடாமல் வளர்த்தமைக்கா
அல்லது அடுத்த பிறவியில்
தெருவில் வீசிச்சென்றமைக்கா இது?’
நான் சொன்னேன்
‘மழை இப்பிறவியை நனைத்த
ஒருநாள் மாலை
சாலையோர இலவு மரங்களை
பூமியிலிருந்து பாதாளத்துக்கு
தலைகீழாகத் தூக்கிய
ஓர் அஸ்தமனத்திற்கு முன்பாக
அவ்வழிச்சென்ற
ஒரு லாம்ப்ரட்டா ஸ்கூட்டரின்
குடுகுடு சாட்சியாக
இரண்டாகக் கிழிபட்டு
இரு வீடுகளில்
இரு கொடிகளில்
உலரப் போனமைக்காக
எனக்கும்
உன் அம்மாவாகாது போனவளுக்கும்
கிடைத்த தண்டனை நீ
அது சிரித்தபடி எழுந்து
நான் கொடுத்த முத்தத்தை உடுத்துக் கொண்டு
கூடவே வந்தது.
நீ கோபப்படலாகாது.
பதிலுக்கு
இன்றிரவு என்னைப் பழிவாங்கு
நானறியாமல்.
காஃப்கா
=======
வெறிவெயிலில்
ஒரு தென்னை உச்சியில்
இரு துளைக்கும் சூரியக்கதிர்களை
குதறிக் கொண்டிருந்த ஒரு காக்கா
திடீரென்று
அதிகப்பிரசங்கித்தனமாக
வானம் துளைத்து
பல்லாயிரம் அபார்ட்மெண்டுகளுக்கு அப்பால்
உயர்ந்து நின்ற
ஒரு மரத்தை இலக்காக்கி
பறக்க ஆரம்பித்ததும்
ஒரு மழை பெய்தது.
அபார்ட்மெண்டுகளில் ஒன்றில்
இருபத்துநான்காம் தளத்தில்
பால்கனியில்
இணைந்து நின்ற ஆணும் பெண்ணும்
அதைக் கண்டு திகைத்தார்கள்
மழைக்கு குறுக்காக
ஒரு கரிய கோடாக
கிழித்துப் போனது
ஒரு காஃப்கா