கண்ணிலெழுத…
========
பத்திரப்படுத்துகிறேன்,
முன்பு கண்டிராத
இந்த மழைத்துளியை
இன்றிரவு
அதை உனக்காகக் கொடுத்தனுப்புவேன்,
இங்கு பெய்யும் தாய்மழையின் கையில்.
அவள் இன்றே
அங்கே பெய்து
அத்துளியை உனக்கு தருவாள்.
உறங்கக் கிடக்கும்போது
நீ அதை
கண்ணில் எழுதவேண்டும்.
திடீரென்று காட்சியாகும்,
மழைவிதைகள் விதைத்து
முளைத்து வளரும்
ஆகாய நிலங்கள்.
அவை மரமாகி பூவாகி காயாகி
பொங்கித் ததும்பும்போது
பொறுக்கியெடுத்து
பூமிநோக்கி வீசும் தேவைதைகள்.
நிலங்களுக்கெல்லாம் உரிமையாளன்
அவனது வயல்களையெல்லாம்
உன்னைக் கூட்டிச்சென்று காட்டுவான்.
இரவில் வரப்புமீது உன்னை
தூங்க வைப்பான்.
ஆனால்
நாளை பூமியில் உன்வீட்டில்
உன் அறையில்
நீ விழித்தெழுவாய்
நீ பாதுகாத்து வைத்திருக்கும்
அபூர்வமான
ஒரு மழைத்துளியை
அங்கே பெய்யும் அன்னைமழையின் கையில்
எனக்காகக் கொடுத்தனுப்புவாயா?
உறங்கப் படுக்கும்போது
கண்களில் எழுதிக்கொள்ள?
*******************************************
விற்பனை
======
கோர்த்தெடுத்தேன்
கோர்ப்புக்குச்சியில்
மிச்சமுள்ள ஊடுவழிகளை.
அவ்வழிச்செல்லும்
வழிப்போக்கர்களுக்கோ,
சைக்கிள்காரனுக்கோ,
நாய்க்கோ,
விழுந்துறங்கும் குடிகாரனுக்கோ,
ஊர்ந்துசெல்லும் சாரைக்கோ,
பாத்திரம் விற்கும் தமிழ்நாட்டுக்காரருக்கோ
குத்துக்காடுகளுக்கோ
என்னவேண்டுமானாலும் நடக்கட்டும்
என்று எண்ணினேன்.
அல்லது
அவற்றை பொருட்படுத்தவேயில்லை
பல நீளங்களில்,
பல அகலங்களில்,
தொங்கிக் கிடந்து துடித்தன
கோர்ப்பில் அவை.
இன்னமும் சாகாத ஊடுவழிகள்
நெளியும் கோர்ப்புடன்
தேசிய நெடும்பாதையின் ஓரமாக
நிற்கிறேன்
பாய்ந்துசெல்லும் வண்டிகளை நோக்கி
அவற்றை உயர்த்திக்காட்டி
நல்ல விலைக்கு
விற்பேன்.
****************************
வீடு
===
இருட்டை
ஆசையாக பார்த்து நின்ற வீடு
என்னை அதட்டியது.
”டேய் எருமமாடு
போய் படுடா.
ரூம்ல
பாய் போட்டாச்சு போ”
நான் அப்போது
முற்றத்தில் நின்றிருந்தேன்.
வீட்டின் பேச்சு
எனக்கு மட்டுமே கேட்கும்.
நல்ல வேளை,
வசை யார் காதிலும் விழாது.
திருப்பி ஒன்றும் சொல்லாமல்
போய் படுத்துகொண்டேன்,
இருட்டின் சேற்று நீரில்.
”உறங்கியாச்சாடா
எருமமாடே?”
வீடு கேட்டது.
பேசத்தோன்றவில்லை.
வெளியே உள்ள இருட்டையெல்லாம்
நாக்கு நீட்டி நக்கியெடுத்து
உள்ளுக்கு நிறைத்து
ரசித்துக் கொண்டிருந்தது
மேலாளான வீடு
******************************
ஒன்றும் நடக்காதது போல!
=====================
பேருந்துப்பயணத்தில்
உறங்கும் இளம்பெண்
காணும் கனவு
என்னவாக இருக்கும்?
ஓடையில் நிற்கும் குளவாழையில்
தாமரை விரிவதும்,
காதலனுடன் மலைமீது
ஏறிச்செல்வதும்,
நாலுவயது மகள்
வண்ணத்துப்பூச்சிகளுடன்
வானில் பறப்பதும்,
கணவனை பசு
துரத்தி வீழ்த்துவதும்,
கிணற்றிலுர்ந்து அள்ளிய நீரில்
உதிரம் நிறைந்திருந்ததும்…
என்னவாக இருக்கும் அவை?
குனிந்துறங்கும் தலை
எல்லாவற்றையும்மறைத்துவைக்கிறது.
ஆடும்தலை
எல்லாவற்றையும் ஒத்துக் கொள்கிறது.
திறந்த வாய்
எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
அதே வயல்.
அதே தென்னைகள்….
பேருந்துப்பயணத்தில்
உறங்கும் இளம்பெண்
காணும் கனவு
என்னவாக இருக்கும்?
நிறுத்ததில்
பேருந்து நிற்க
விழித்து
ஒன்றும் நடக்காதது போல
அவள்
வீட்டுக்குப்போகிறாள்
***************
அடைக்கலம்
=========
பனிக்காலத்தை
அஞ்சும்
ஓர் இதயம் உண்டு.
முன்பனியின்
முதல்நாளே
அது ஒளிக்க இடம் தேடும்.
பனி பெய்திருப்பவையாதலால்
மலைகளிலோ
மரங்களிலோ
இலைகளிலோ
பூக்களிலோ
புல்நுனியிலோ
அதற்கு இடம் கிடைப்பதில்லை.
குளிர்ந்து உறைந்திருப்பதனால்
ஆறுகளிலும் குளங்களிலும்
இரவில்
ஒண்ட இடம்தேடி
நடுநடுங்கி
பயத்துடன் அது துடிப்பதை
பனிக்கிளிகள்
கேட்பதில்லை.
எனினும்
புலரியில்
சிவந்து
கனிந்து
உயர்ந்துவரும்
அந்த இதயத்தை
சமவெளி மரங்கள்
காணும்.
**************************************
செபாஸ்டின் மலையாள இளங்கவிஞர். திரிச்சூரில் வசிக்கிறார்.
ஜெயமோகன்
பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்
அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து