அமெரிக்கா கடிதங்கள்

பேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்பவரின் குரலில் படித்துக் கொள்ளவும்)

வெற்றிகரமாக அமேரிக்கா நாடு சென்றூ.. அங்கே கல்வியின் தலைநகராம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பல நாட்டினரைக் கண்டு அறிவு பெற்று, பற்பல நூட்களைப் படித்துத் தாயகம் திரும்பிய நம் ஆருயிர் அண்ணன்.. புரட்சிப் பொழில்.. (ஏதானும் புரட்சி வேணாமா..) அறிவுக் கடல்.. அன்புச் சுடர் வடமொழி வித்தகர்.. திரைப் பட வசன கர்த்தா.. இலக்கியப் பேரொளி.. (நாட்டியப் பேரொளியவா கிண்டல் பண்றீங்க?? இந்தா வாங்கிக்குங்க..)

அண்ணர் ஜெயமோகர் அவர்களை வாழ்த்த வயதில்லை.. (அப்படீன்னா திட்டலாமா??) வணங்குகிறோம்!!!

பாலா

 

அன்புள்ள பாலா,

இன்றைய தீனம் இங்கே கூடியிருக்கும்  அருமைத் தம்பிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதென்னவென்றால் இன்றைய தீனம் நான் அமெரிக்கா சென்று அங்கு தமிழ் மாக்களை சந்தித்து இன்றைய தீனம் அவர்களுக்கு நல்ல தமிழுணர்வை உருவாக்கி அதே நேரத்திலே நான் சொல்ல ஆசைப்படுவதென்னவென்றால் இன்றைதீனம் இந்த தமிழ்நாட்டிலே நாமெல்லாம் சிறப்பாக முன்னேறிக்கொன்டிருக்கும் அதே நேரத்திலே அமெரிக்காவிலே அண்ணன் கறுப்பு ரூஸ்வெல்ட்டு ஒபாமாவார் அவர்களின் நல்லாட்சியிலே இன்றைதீனம் சாஸ்தா மலையிலே நமது சபரிமலை அய்யப்பன் சிலை ஒன்றை அமைப்பதோடன்றி சுதந்திர தேவி சீலையருகே நாம் தமிழன்னைக்குச் சிலைவைக்க வேண்டும் என்று கோரும் அதே நேரத்திலே இன்றைதீனம்…

 

 

உயர்திரு ஜெ மோ சார்,
அமெரிக்க பயணத்தை பற்றிய கட்டுரைகள் அருமை
அமெரிகாவின் உள் கட்டமைப்பை பற்றி அதிகம் நீங்கள் சொல்லவில்லைஎன்பது என் தாழ்மையான கருத்து.  சாலை வசதி எவ்வாறு இருந்தது. பொதுக்கழிப்பிடங்கள் பொது மானதாக இருந்ததா? அவைகள் நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளதா? குடிதண்ணீர் வசதி எப்படி இருந்தது. மின்சார விநியோகம் எப்படி இருந்தது. இது போன்றவைகளை உங்களின் பார்வையில் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எந்தல்மையான கருத்து..

பணிவுடன்
பெருமாள்
கரூர்

அன்புள்ள பெருமாள்

நாஞ்சில்நாட்டிலே ஒரு பழமொழி உண்டு, ஆடு அறுப்பதற்கு முன்னரே புடுக்கு சுடுவதற்கு அவசரப்பட்டமாதிரி என்று… ))))

எழுதுவோம் எழுதுவோம் என்ன அவசரம்!

ஜெ

 

அன்புள்ள ஜெ,

அமெரிக்காவிலே அதென்ன குச்சி வைத்துக்கொண்டு சாப்பிடுகிறீர்கள், சுட்ட கருவாடு கணக்காக ஒரு கெட்ட தோற்றத்துடன் இருக்கிறதே? முகமும் ஒருமாதிரி இஞ்சிதின்ற அறிவுஜீவி போல் இருக்கிறது?

சாம் செல்வமணி

அன்புள்ள சாம்

நக்கல்செய்ய வழக்கமாக வரும் பட்டியலைச் சேர்ந்தவர் அல்ல நீங்கள். கெளம்பிட்டீய்ங்களா?

அதன் பெயர் ஸ்டேக். ஸ்டிக் மாதிரித்தான் இருக்கும். எண்ணையில் சுட்ட மாடு. சுவையானதுதான். ஆறுமாசத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம். குடலில் நிறுத்தி நிதானமாக , திருவாரூர் தேர் மாதிரித்தான் பயணிக்கும். முக்கு திரும்ப நாளாகும்

சாப்பிடும்போது பொதுவாக ஆழமான சிந்தனைகளை அது உருவாக்குகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ

அமெரிக்காவில் பஸில் பாட்டாக்களுக்குப் பதிலாக ஒரு மாறுதலுக்காக ஏன் நீங்கள் பாட்டிகளுடன் பேச்சுக்கொடுத்துப் பார்க்கக் கூடாது?

சிவம்

அன்புள்ள சிவம்

பேச்சுக்கொடுத்துப் பார்த்தால்தான் பாட்டியையும் தாத்தாவையும் பிரித்துப் பார்த்து கண்டுபிடிக்கவே முடிகிறது

ஜெ

பலரும் அழகாக எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே? 

நேசகுமார்.

அன்புள்ள நேசகுமார்

நூலாக்கிய பின் பலர் அசிங்கமாக எழுதுவார்களே?
ஜெ

முந்தைய கட்டுரைபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநூல்கள் கடிதங்கள்