புறப்பாடு – கடிதங்கள்

அன்பு ஜெ,

உங்கள் புறப்பாடு 2 ஐ வட இந்திய சுற்றுலா முடிந்து திரும்பியவுடன் மூச்சு வாங்க படித்து முடித்தேன். உங்கள் இளம் வயது அனுபவத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ‘சாமியாரைத்’ தொடர்ந்து கால் நடையாகவே வள்ளலார் வழிபாட்டைக் காணச்சென்றது போல நானும் கூடவே நடந்த அனுபவத்தை அடைந்தேன். வழி நெடுக்க தீராத தேடலும், ஏக்கமும், பசியும், தூக்கமின்மையும் என்னையும் ஆட்கொண்டது. இது போன்ற அனுபவங்களால்தான் சிறந்த இலக்கியத்தைப் படைக்க முடியுமோ என்ற பிரமையையும் உண்டாக்குகிறது, பரந்த வாசிப்பும், அடர்த்தியான மொழி ஆளுமைக்கும் அப்பாலும்.

தொடர் சரடாக இல்லாமல் நீங்கள் துய்த்த அனுபங்களை தனித் தனி பதிவாக எழுதியபோது அறம் சிறுகதைகளைப் படிப்பது போன்ற உள் எழுச்சியைக் கிளர்த்தியது. உங்கள் அனுபங்களைப் பெருங்கலையாக மாற்றும் ரசவாதம் வியக்கவைக்கிறது ஜெ. புறப்பாடு 3 எப்போது வரும். ஞான மார்க்கத்துக்காக நீங்கள் தேடி அலைந்து அடைந்தவற்றை எழுதுங்களேன்.

கோ. புண்ணியவான்

அன்புள்ள புண்ணியவான்

நலம்தானே?

மூன்றாவது பயணம் புற அனுபவங்களை விட அக அனுபவங்கள், யோகம் சார்ந்த அனுபவங்கள் மற்றும் சிக்கல்கள் கொண்டது. அவற்றை தனிநூலாக வேறு மொழியில் வேறு வடிவில்தான் எழுதவேண்டும்.

பார்ப்போம்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

தங்களது புறப்பாடு அனுபவ கட்டுரைகள் அனைத்தும் படித்து முடித்தேன். அனுபவங்கள் அனைத்தும் பிரமிப்பும் மலைப்பும் அடைய வைக்கின்றன ….எண்ணப்பெருகுவது, நீர்கங்கை, காலரூபம், புரம் ஆகிய பதிவுகள் ஆழமான அதிர்வையும், பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன … அநேக பதிவுகளின் சில இடங்களை இரு முறை வாசித்தேன் ..

இப்படியான உலகங்கள் (நகர வாழ்க்கை என்பதன் பொதுவான பிம்பத்துடன் ஒப்பிட்டு பார்த்தல் இவை எல்லாம் வேறு உலகங்கள் என்று தான் தோன்றுகின்றது) நாம் வாழும் இடங்களுக்கு அருகில், அன்றாடம் போய் வரும வழிகளில் மிக அருகில் இருக்கின்றன என்று நினைக்கும்போது மனதில் ஒரு வெறுமை வருகிறது ..

சிறு வயதில் பாதுகாப்பான வாழ்க்கை குறித்த கவலைகள், பிரச்சினைகள் இல்லாத சூழலில் இருந்து விலகி, இப்படிப்பட்ட மிக உக்ரமான அனுபவங்களைப் பெற்று, அவற்றில் புதைந்து போகாமல், அவை மூலம், அவைகளைக் கடந்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்ட தங்களது மன திடம் அபாரம் .. தோன்றல் பதிவில் தாங்கள் பதிந்த “மனிதனாக நான் எவருக்கும் குறைந்தவனல்ல என்று எனக்கே தெரியவரும். நான் அங்கே வாழ்வதில்லை என்றால் அதற்குக் காரணம் அது எனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காகத்தான்” மிக ஆழமான எண்ணம் என்று நினைக்கின்றேன்.

தங்கள் பதிவுகளை படித்ததில் இருந்து என் மனதில் அடிக்கடி தோன்றும் கேள்வி… இப்படிப்பட்ட சூழலில் எப்போதும் வாழும் மனிதர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கும்? ‘சமையலறையிலும் வழியும்…மழைக்காலத்தில் கொஞ்சம் அதிகம்…ஆனால் பழகிவிட்டது’ என்ற ராவ்-இன் கூற்றும் ‘என்னாலே இனிமே இதெல்லாம் முடியாது…’ என்ற தேவியின் கூற்றும் இரு வேறு முனைகளில் இருப்பதாகப் படுகிறது ….

அத்தனை உக்ரமான பதிவுகளைப் படித்துவிட்டு பின் நின்றவர் படிக்கும் போது வாய் விட்டு சிரித்துவிட்டேன் !…

சைவகுருமணி உலகநாத பிள்ளை, சங்கரப்பிள்ளை ஆசான், ஆளூர் அச்சுதன், துர்க்கைதாசன். பச்சியப்பன் ஆகியோரின் நூல்கள் இன்றும் கிடைக்கின்றனவா? … :-)

நீண்ட நாள் படித்தவர் மனதை விட்டு அகலாமல் இருக்கப்போகும் அனுபவங்கள்….

நன்றி

அன்புள்ள
வெண்ணி

அன்புள்ள வெண்ணி,

நன்றி.

திடீரென்று குஜிலி நாவல்களின் வெளியீட்டுக்கான வணிக அடிப்படை அழிந்துவிட்டது. அவை இப்போது அச்சில் இல்லை என நினைக்கிறேன். ஆன்மீகநூல்கள் கிடைக்கலாம். ஆனால் அவை மறுசுழற்சி அடைபவை. வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வடிவங்களில்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘புறப்பாடில்’ தங்களது தேடலையும், பயணங்களையும், வழி நின்ற மனிதர்களையும், அவர்கள் பட்ட பாடுகளையும் விவரித்த விதம், அந்த அனுபவங்கள் இன்னும் எத்துணை பசுமையாக உங்களுக்குள் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

வாசிக்கும் போதே ‘புறப்பாடு I’ எனது கல்லூரி காலத்திற்கான ரீவைன்டு பட்டனை அழுத்தி விட்டுச் சென்றது. அருமை, ஜான், அருள், நாகமணி என ஒவ்வொருவரிலும் என் தோழர்களின் சாயல் தெரிந்தது.

கண் முன் நிகழ்ந்த தோழனின் மரணத்திலிருந்து நாம் மீண்டு வர மாதங்கள் ஏன் வருடங்கள் கூட பிடிக்கும். ஏதாவது ஒன்று அவர்களது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும்; அவர்களது இழப்பை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்தத் துயரத்தையும், இழப்பையும், அதன் தாக்கத்தையும் ‘புறப்பாடு II’ பதிவு செய்திருக்கிறது.

‘பின்நின்றவர்’ – ‘புறப்பாடு II’-ன் கதைச் சுருக்கத்தை வேறு ஒரு கோணத்தில் சொல்வது போல் இருந்தது.

‘புறப்பாடு’ மூலம் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

‘புறப்பாடு’ புத்தகமாக வெளி வந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இரா.சுப்ரமணி

அன்புள்ள சுப்ரமணி,

புறப்பாடு நற்றிணை வெளியீடாக வரவிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஇருமண்வெட்டிகள்
அடுத்த கட்டுரைமுதல் எதிர்க்குரல்