புறப்பாடு முற்றிற்று என்றாலும் இறுதிப் பகுதி கனம் மிக்கது. எடை எந்த நிமிர்வையும் கூனச் செய்துவிடும். அனைத்து பகுதிகளையும் படித்த பின் இறுதிப் பகுதியை கண்ணீர் சிந்தாமல் படிப்பது ஒரு சவால். அலைகழிப்பு மிக்கது என்றாலும் புறப்பாடு III என ஒன்று வருமா என அந்த ரணத்திற்காகவும் வதைக்காகவும் காத்திருக்கிறேன்.
கிருஷ்ணன்.
கிருஷ்ணன்,
புறப்பாடு என்ற தலைப்பில் இனிமேல் கட்டுரைகள் இல்லை. வீடுதுறந்து வெளியே செல்லுதல் என்றே புறப்பாடு என்ற சொல்லை உத்தேசித்தேன். அது முழுமையடைந்துவிட்டது.
மூன்றாம் முறை சென்றது துறவியாக. அந்த அனுபவங்களில் மிகச்சிலவே புறவயமானவை. தியானம் யோகம் பயின்றது, தவறாகசெய்தது, மீண்டும் யோகத்தின் தவறுகளில் சிக்கி மூளைச்சிக்கல் வரை சென்று மீண்டது, நூற்றுக்கணக்கான போலிகள் நடுவே உண்மையான ஒளிமிக்க வைரங்களைக் கண்டது, இமையமலை, கங்கைக்கரை, திருவண்ணாமலை என மகத்தான அனுபவங்களின் ஒளியும் அதைச்சூழ்ந்திருந்த இருளும்….
அது வேறு ஒரு அனுபவமண்டலம். இதில் வராது. எழுதலாம். எழுதாமலே போகலாம்.
ஜெ
Dear Jeyamohan Sir,
How are you doing?
This is Sajeev writing from the US. (Originally from Thuckalay).
I started reading your Purappadu-II series on your blog. Wow! It is just amazing. I am sure these experiences made you the powerful and expressive writer you are!.
You write about your experiences and the thought processes in such vivid details. I am curious about one thing. When you use various metaphors to describe certain past life events, were those really thoughts that ran through your mind while experiencing those events, or are those thoughts that comes to your mind now (as you sit to write and think about those past events)?
It seems like you could witness your own mind and its thoughts even while you were going through such distressing experiences.
Thanks for your time!
Regards,
Sajeev Nair
அன்புள்ள சஜீவ்
உண்மையில் இதை எழுத ஆரம்பித்தது ஒரு தற்செயல். ஒரு நண்பனைப்பற்றி அஜிதனிடம் சொன்னேன். அவனுக்காக அந்த நினைவை எடுத்தேன். அன்றே எழுத ஆரம்பித்தேன். இந்தத் தொடரே அவனுக்காக எழுதப்பட்டது எனலாம். அவன் அந்த வயதில் இன்று இருக்கிறான்.
அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக்காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது.
அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றை தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக்காலத்தின் வரிசையை அமைத்துவிடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது, அதாவது எழுதும் கணத்தில், ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.
உதாரணமாக நாணப்பண்ணனின் கடைக்குமுன் காத்திருப்பதை எழுதியதுமே மும்பையில் எல்லாருமே காத்திருப்பதாகத் தெரிய ஆரம்பித்தது. எழுதிக்கொண்டிருக்கும்போதே ரயில்நிலையத்தில் பார்த்த அந்த தற்கொலை, அதைக்கண்டு என்னைத் திரும்பிப்பார்த்தவனின் கண்கள் நினைவில் வந்தன. சாப்பாட்டுக்குக் காத்திருப்பது போல அல்லவா மரணத்துக்கும் காத்திருந்தார்கள் என்று தோன்றியதும் கதை முடிந்துவிட்டது.
அவன் ஏன் சட்டென்று எழுந்து தற்கொலை செய்துகொண்டான் என நானே இதுவரை யோசித்துக்கொண்டிருக்கிறேன். காத்திருப்பின் சுமை முதுகை முறித்த ஒரு கணம் என தோன்றியது. காத்திருந்ததே மரணத்தைத்தானோ என இன்னொரு முறை.
ஜெ