புறப்பாடு – கடிதங்கள் 4

ஜெயமோகன்,

புறப்பாடு இரு பகுதிகளும் ஒன்றையொன்று நிறைத்துக்கொண்டன. புறப்பாடு II கொஞ்சம் எளிமையானதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. அதிலுள்ள அனுபவங்கள் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் உண்டு. நஸ்டால்ஜியா பிடிக்கக்கூடியவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். புறப்பாடு II அபூர்வமான அனுபவங்கள். நானும் உங்கள் வயதை ஒட்டியவன் என்பதனால் எழுபது எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த பஞ்சகாலத்தைப்பற்றியும் பஞ்சம்பிழைக்க தமிழர்கள் கூட்டம் கூட்டமாக போய் அவமானப்பட்டதைப்பற்றியும் தெரியும். நான் ராணுவத்திலே இருந்தபோது லடாக்கில்கூட சாலை தமிழர்கள்தான் போடுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். லோனாவாலாவிலேயே தமிழர்கள் வேலைசெய்வதை கண்டிருக்கிறேன். இவர்கள் ஏன் தமிழ்நாட்டிலேயே வேலைபார்க்கக் கூடாது, ஏன் இங்கே வந்து மானத்தை வாங்குகிறார்கள் என்றுதான் அன்றெல்லாம் நினைப்பேன்.

அந்த வாழ்க்கை வழியாக நீங்கள் கடந்துசென்ற அனுபவங்கள் எல்லாம் அருமையாக உள்ளன. எதையும் மறைக்காமல் எழுதியிருக்கிறீர்கள். கோழைத்தனமும் தப்பித்துக்கொள்வதும் அந்த வயதுக்கு உரியவைதானே. ஹீரோயிசமெல்லாம் கதைகளிலேதான். அல்லது அப்படியெல்லாம் ஹீரோவாக இருப்பவர்கள் பகத் சிங் மாதிரி பிறகு பெரிய ஹீரோவாக அறியவருவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறீர்கள்.

குமார் முருகேசன்

முந்தைய கட்டுரைசமூகவலைத்தளங்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைகுமரி உலா – 3