அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் கடிதத்திற்கு நன்றி. எனக்கு என் தன்னம்பிக்கை பற்றி சரியாகத் தெரியவில்லை. யோசிக்க பிரியப் படுபவனாகவே இருக்கிறேன். சிந்தனையைப் பொறுத்தவரை நான் இன்னும் செல்ல வேண்டிய தூரம் பற்றி நன்றாகவே அறிவேன். நீங்கள் சூட்டிக் காட்டியவற்றையும் நினைவில் கொள்கிறேன், நிச்சயம் சிந்திக்கிறேன். நன்றிகள்.
நீங்கள் எனக்கு எழுதியிருந்த பதிலில், குறிப்பிட்டிருந்த பெரும்பாலான விஷயங்களை, நான் மறுக்க முயல்பவனில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை புரிந்து கொண்ட பின் தான் அந்த கடிததத்தை எழுதியதாக நினைக்கிறேன். நீங்கள் வேறு வகையில் மறுக்கலாம். தெரியவில்லை, ஒரு வேளை நான் பிள்ளையார் பிடிக்கப் போக அது குரங்காக மாறி விட்டதோ என்னவோ.
யுவன் படைப்புலகம் பற்றி, நான் பேச முயன்றது வரையறைகளின் போதாமை பற்றி மட்டுமே. நீங்கள் இதற்கு முன்பாக, ‘யுவன் சந்திரசேகரின் கதையாட்டம்’ என்றொரு கட்டுரையை எழுதியிருந்தீர்கள். அதனை வாசித்தபோது அதில் மறுப்பாக ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. அதே சமயம், நீங்கள் பேசியிருக்கும் விஷயங்களில் வேறு ஏதோ ஒரு முக்கியமான விஷயம் – என்னவென்று தெரியவில்லை- விடுபட்டு விட்டதாக பட்டது. அது இயல்பான விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டேன். என் வாசிப்பனுவம் சார்ந்து நான் நினைப்பதையெல்லாம் ஒருவர் எழுதிவிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதாக புரிந்து கொண்டேன். இப்போது இந்த ‘சின்னஞ்சிறு விஷயங்களின் கதை சொல்லி’ யும் அப்படியானதாகவே இருந்தது.’விடுபட்டு விடும்’ விஷயங்களின் சுமை ஏறிக் கொண்டே போவதால் அவற்றின் முக்கியத்துவமே நான் எனது கடிதத்தில் குறிப்பிட முயன்றது.
நான் பேச முயன்றது நீங்கள் எனக்கான பதிலில் சொல்லியிருக்கும் விஷயங்களை அல்ல. அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது- ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ள நான் ‘வரையறை’ என்ற பதத்தை ஏற்கவேண்டும். ‘பெருவெளி’, ‘பின் நவீனத்துவம்’, ‘வேறொரு எழுத்தாளருடனான ஒப்பீடுகள்’ போன்ற சொற் பிரயோகங்களினால் எழும் வரையறையை ஏற்பதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. அதாவது நான் பேச முயல்வது, வரையறுத்த பின், அதிலுள்ள ஏற்பு மறுப்புகளை பற்றி அல்ல. அதற்கு முன்பாக வரையறை – என்ற விஷயத்திலேயே நான் தயக்கம் கொண்டு விடுகிறேன். நீங்கள் வரையறுத்த பின் அதிலுள்ள கூற்றுகளில் பிழை கண்டு பிடித்து, அதன் மூலம் அவர் சிறிய விஷயங்களை பேசும் சல்லிசான எழுத்தாளர் என்று நீங்கள் சொல்கிறீர்கள் – என்று நிறுவ முயல்வது எனது நோக்கம் அல்ல. அப்படி இருந்திருந்தால், அது நீங்கள் உங்கள் பதிலில் சொல்லியிருப்பது போல், நான் புரிந்து கொள்ளும் கவனம் இல்லாமலே முன் முடிவுடன் வாசித்திருக்கிறேன் என்பதே சரியானது.
தனித்த பண்பாடுகள் என்று ஒன்று இல்லை என்று நான் கூறினால் தானே அது கட்டிடமே இல்லை என்று மறுப்பது போலாகும். நான் அப்படி எந்த இடத்திலும் குறிப்பிட வில்லையே. உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை -இதற்கு முன் அனல் காற்று பற்றி நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கான தங்களின் பதிலில் நீங்கள் ‘ நான் மரணத்தின் மூலம் பண்பாடு பேனப் படவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன் அது தவறு என்ற வகையில் எழுதியிருந்தேர்கள். நான், அதற்கு பதில் எழுதுகையில் பண்பாடு பேணப் பட வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை, நான் அந்த கதையின் கூறுகளை வைத்தே விவாதிக்க முயன்றிருக்கிறேன் என்று எழுதியிருந்தேன். இப்போது கிட்டத் தட்ட அதற்கு நேர் எதிர் நிலையில் சொல்லியிருக்கிறீர்கள்!
நான் உதாரணமாக பயன் படுத்தியிருந்த இரண்டு படங்களுமே – க்ராஷ், ரெட் பியர்ட் அழுத்தமாக பண்பாட்டுக் கூறுகளை வெளிப் படுத்தும் கதாபாத்திரங்களும், காட்சி அமைப்புகளும் கொண்ட திரைப்படங்கள். அவை அந்தந்த பண்பாட்டு நிலைகளின் பின்னணியில் இருந்தே தலை நீட்டி பொது அம்சத்தை முன் வைத்துப் பேசுகின்றன. அந்த பொது அம்சம் மட்டுமே நான் பிரதானப் படுத்த முயன்றது. அமெரிக்கா கலவியான கலச்சாரங்களை கொண்ட நாடு என்பதால் பண்பாட்டின் தனிக் கூறுகளை விட அங்கு பொது அம்சம் பிரதானப் படுத்தப் படுவது முக்கியம் என்று கருதுகிறேன். (எது பிரதானப் படுத்தப் பட வேண்டும் என்பதே என் வாதம் நீங்கள் கூறும் உண்மையை மறுத்துப் பேசுவது அல்ல) அதனால் தான் இதையே நீங்கள், தமிழ் நாட்டில் பேசியிருந்தால் அது வேறு என்று எழுதியிருந்தேன். கட்டிடம் இருப்பதையே மறுத்து பேசும் தளத்தில் நின்றிருந்தேன் என்றால், நான் தமிழ் நாட்டில் அந்த கட்டிடம் வேறு, அமெரிக்காவில் அந்த கட்டிடம் வேறு என்று சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
எனக்கு இந்த தனி மனித பண்பாடு என்பது பொய், உலகப் பண்பாடு என்பதே மெய் போன்ற எண்ணங்கள் துளியான துளி கூட கிடையாது. அவை இருக்கின்றன – அதற்கு மேலான நகர்வு என்ன, கலவியான சூழ் நிலையில் பொது அம்சங்கள் என்ன என்பதே நான் கவனப் படுத்திக் கொள்ள முயல்கிறேன். நீங்கள் அதற்கு மேலான நகர்வுக்கு, முதலில், அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் பொழுது, நான், புரிந்து கொள்ளுதலின் முயற்சியில் வித்யாசங்கள் ஆழப்பட்டுப் போய்விடக் கூடாது என்று மட்டும் யோசித்தபடி அதை கவனித்துக் கொள்கிறேன். அதற்கும் நான் எழுதிய கடிதத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
நான் நீங்கள் கூறும் மரபு சார்ந்த விஷயங்களை முழுமையாக மறுக்கவும் எத்தனிக்கவில்லை. சுதந்திரம் என்ற வார்த்தையை நான் மரபை புறக்கணித்து எழும் அர்த்தத்திலும் பயன் படுத்தவில்லை. மரபின் மேலான பிடிப்பை விட சிக்கலான சமூக அமைப்புகளில் வேற்றுமைகளுக்கிடையில் எழும் சாராம்சமாக வெளிப் படும் அன்பு, சுதந்திரம் போன்றவை முதன்மையாக்கி பேசப் பட வேண்டியது முக்கியம் என்று கூற முனைந்ததே எனது நோக்கம். முக்கியமாக நான் அந்த கடிதம் எழுதக் காரணம் ‘பெருமிதம்’ என்ற சொல்லாட்சி மட்டுமே. அந்த சொல் பயன் படுத்தப் பட்டிருக்காவிட்டால் நான் நிச்சயம் அந்த கடிதத்தையே எழுதி இருக்க மாட்டேன் என்று தான் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. அந்த சொல்லானது நேரடியாக நான் வாழும் தேசத்தில் ஏகப் பட்ட குழப்பங்களை உண்டு பண்ணிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன், அதன் காரண்மாகவே தூண்டப் பட்டு அந்தக் கடிதத்தை எழுதினேன்.
நான் ஓஷோ வை சூட்டியிருப்பதால், அது வேறொரு வகையில் பிரிந்து நான் கட்டிடம் இருப்பதையே மறுத்து, ‘விசேஷ’ உண்மைகளின் தளத்திற்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. இல்லை, நீங்கள் தனித் தன்மை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் சுதந்திரம், அன்பு, சாரம்சம் என்ற பொதுவான தளத்தில் நின்று, பேசியதால் நீங்கள் பேசிய தளத்திலிருந்து நகர்ந்து விட்டேனோ என்னவோ. அப்படிப் பார்த்தால், அந்த அர்த்தத்தில் நான் பேசுவது விசேஷ உண்மைகள் தானா, இல்லை இவை சாதாரண உண்மைகளா, என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.’ சாராம்சம்’ என்ற சொல்வழி ஒருவகை நேரடித் தொடர்பு ஏற்பட்டுப் போகும் நிலையில், இப்படி சிலவற்றை துணைக்கு அழைத்து பேச முயலலாம், அவையும் தானே இந்த கட்டுமானத்தில் முக்கிய பங்கினை நேரடியாக வகிக்கின்றன, என்று நினைத்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.
நீங்கள் எனக்கு எழுதிய பதிலில், எனக்கு முழு மறுப்பாகத் தோன்றிய விஷயம், நகுலன்- தேவதச்சன் -யுவன் -நாஞ்சில் நாடன் இடையேயான தொடர்பு பற்றி. நகுலனின் பெயரைச் சொல்பவர்களின் பாவனை பற்றி எனக்குத் தெரியாது. நகுலனின் எல்லா கவிதைகளும், படைப்புகளும் அற்புதமானவை என்று விளம்பவும் நான் முனையவில்ல. நான் இன்னும் அவரது ஆக்கங்களை, குறிப்பாக நாவல்களை முழுமையாக படித்து முடித்தவனுமில்லை. நான் படித்தவரை நீங்கள் கூறி இருப்பது போல் குறைவான ஆக்கங்களே எனக்கும் நெருங்கியவையாக இருக்கின்றன. ஆனால் நகுலனின் உலகை புரிந்து கொள்ள அது தாராளமாகப் போதும் என்று நினைக்கிறேன்.
நாஞ்சில் நாடனை நான் படித்தது மிக மிகக் குறைவு. படித்தவரை அவரது படைப்புகளில் இயங்கு தளம் வேறு என்று மட்டுமே நான் புரிதல் கொண்டிருக்கிறேன். தரையும் தரையினாலானதல்ல,,,போன்றதொரு வரி, யுவன் நீங்கலாக மெளனி, தேவதச்சன், நகுலன், ஆனந்த் என யாருடைய படைப்பிலும் வந்து விட வாய்ப்பு உண்டு. நாஞ்சில் நாடனில் வர வாய்ப்பு இல்லை என்றே இப்போதும் படுகிறது.
இப்போதும் நான் சொல்ல முனைவதை தெளிவாகச் சொல்லிவிட்டேனா, என்ற சந்தேகம் எழவே செய்கிறது. மற்றபடி நீங்கள் கூறியவற்றில் பிழை கண்டு பிடித்து திருத்தம் சொல்லியாக வேண்டும் என்பதெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க இயலாதது. அந்த பாவனை வந்து சேர்கிறது என்றால் அது வருந்த வேண்டிய விஷயம் தான் – கவனத்தில் கொள்கிறேன். அனல் காற்று பற்றிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் – எனக்கு வயது 27. நியாயமாக நடக்கத் துவங்கியிருக்க வேண்டும். இப்போது தான் தவழத் துவங்கியிருக்கிறேன். எனவே எனது முயற்சியில் நான் இடறி விழுந்திருந்தால் – மன்னிக்கவும்.
அன்புடன்
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்
மீண்டும் உங்கள் நீளமான கடிதம்.
நான் எழுதியது உங்கள் தரப்புகளைப் பற்றியே அல்ல. ஒரு கட்டுரையை எதிர்கொள்ளும்போது நீங்கள் அதன் சாராம்சமான பகுதியை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றித்தான். உங்கள் குழப்பங்களும் வினாக்களும் இளமைக்குரிய தொடக்கநிலையில் இருந்து உருவாகின்றன. ஆனால் அதற்கு பொருந்தாத ஒரு உறுதிப்பாடு உங்களிடம் இருக்கிறது. அது உங்களை சரியாக நடத்திச் செல்லாது என்றுதான்.
இந்த கடிதத்தில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாக அலச இப்போது சந்தர்ப்பம் இல்லை. இரு விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லி முடிக்கிறேன்
1. வரையறைகளைப் பற்றி. நான் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். என்னுடைய நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலில்கூட இதைப்பார்க்கலாம்.
நீங்கள் இலக்கிய விமரிசனம் என்ற எதைப்படித்திருந்தாலும் எல்லா விமரிசனங்களும் இலக்கியப்படைப்பை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வரையறை செய்யவே முயல்கின்றன என்பதை கண்டிருப்பீர்கள். ஏனென்றால் இலக்கிய விமரிசனம் தத்துவம், அறிவியல் போன்ற ஓர் ஒரு அறிவுத்துறை. அதன் அடிப்படை இயல்பு தருக்கம். அறிவுத்துறையின் அடிப்படை அலகு என்பது வரையறைதான். அவதானிப்புகளின் அடிபப்டையில் வரையறைகளை நடத்தி அவ்வரையறைகளை ஒன்றுடன் ஒன்று தர்க்க பூர்வமாக பிணைத்து முடிவுகளை நோக்கிச் செல்வதே அறிவுத்துறைகளின் இயல்பு
நவீன இலக்கிய விமரிசனம் என்பது அறிவியலை எழுத உருவாக்கப்பட்ட மொழியில் இலக்கியத்தை எழுதமுற்பட்டபோது உருவானது. பிரிட்டிஷ் அறிஞர் ஜெ.எஸ்.மில் இதன் முன்னோடி வடிவத்தை உருவாக்கினார். வரையறை செய்யாமல் இலக்கிய விமரிசனம் இயங்கவே முடியாது
ஆனால் ஓர் அறிவுத்துறையாக இலக்கிய விமரிசனம் எல்லைகள் கொண்டது. அது நிரூபணவாத அறிவியல் எந்த எல்லையில் நிற்கிறதோ அதற்கு நேர் எதிரான எல்லையில் நிற்கிறது. இதில் முழுமுற்றான வரையறைகள் கிடையாது. வரையறைகள் அந்த விவாதத்தின் எல்லைக்குள் — அந்த சொற்களனில் — தற்காலிகமாக உருவகிக்கப்படுனவே. அந்த விவாதத்துக்கான வழிமுறைகளே. ஆகவேதான் இவை அ-நிருபணவாத சிந்தனைகள் எனப்படுகின்றன
ஓர் இலக்கியவாதியின் ஆக்கத்தை பல வரையறைகள் மூலம் நிர்ணயம்செய்து தர்க்கபூர்வமாக ஒரு முடிவை நோக்கிச் செல்லும் இலக்கிய விமரிசனம் எதையும் ‘நிரூபிப்பது’ இல்லை. ஒரு கோணத்தை திறக்கிறது அவ்வளவே. அப்படி பற்பல கோணங்கள் மூலமே இலக்கியவாதி துலக்கம் பெறுவான்.
அதாவது சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்பது ஒரு நிரூபணவாத கருத்து அல்ல. அதற்கு நேர் எதிரான கருத்தும் உண்மையாக இருக்கும். அதுவே இலக்கியவிமரிசனத்தில் உள்ள வரையறையின் இயல்பு
மிக அடிப்படையான பாடம் இது. இதில் இருந்தே இலக்கியம் சார்ந்த சிந்தனைகளை தொடங்க முடியும். சிந்தனை என்பதே இத்தகைய வரையறைகள் வழியாக மட்டுமே நிகழக்கூடிய ஒன்றுதான். வரையறை செய்ய மாட்டேன் என்பதெல்லாம் அபத்தம். உங்கள் கடிதமே பல வரையறைகளைச் செய்தபடித்தான் விவாதிக்க வருகிறது
2. யுவன், நகுலன் குறித்து . பொதுவாக நம் சூழலில் அடிப்படைகள் அதிகமாகப் பேசப்படுவதில்லை என்பதனாலேயே எத்தனையோ காலம் முன்பு பேசபப்ட்டுவிட்ட அடிப்படைகளை மீண்டும் மீண்டும் விவாதிக்கிறோம். வரையறைகள் போல. நம் சூழலில் கொஞ்சம் கூட தத்துவ அறிமுகம் இல்லாமல் இருப்பதனால் நாம் தத்துவத்தில் உள்ள எளிய விஷயங்களை இலக்கியத்தில் கண்டால் பிரமிக்கிறோம்
‘தரையும் தரையல்ல’ என்பவை போன்ற வரிகள் தத்துவ அறிமுகம் உள்ளவர்களுக்கு சாதாரணமானவையே. இலக்கியம் மூன்று காரணங்களால் இலக்கியம் ஆகிறது 1. வாழ்க்கை போன்றே ஒரு கற்பனை வாழ்க்கையை வாழச்செய்யும் சித்தரிப்பு 2. வாழ்க்கையின் உணர்ச்சிகரமான, தரிசனம் சார்ந்த உச்சங்களை நோக்கிக் கொண்டுசெல்லும் கவித்துவம் 3. அங்கதம்
இவற்றில் எதை ஒரு படைப்பு அடைந்துள்ளது என்பதே அதை மதிப்பிட ஏற்ற வழி. யுவன் முக்கியமான படைப்பாளியாக ஆவது அவனது சித்தரிப்பு அங்கதம் ஆகியவை சார்ந்து. நகுலன் அவரது அங்கதத்தால். அவர்களின் அங்கதங்கள் நடுவே எந்த பொது அம்சமும் இருப்பதாக தெரியவில்லை. நாஞ்சில்நாடனின் உயர்தர அங்கதம் தமிழின் சாதனைகளில் ஒன்று. ஒருவகையில் இவ்விருவரையும் விட ஒருபடி மேல்.
மற்றபடி பண்பாடு சார்ந்து நான் சொன்னவற்றுக்கும் நீங்கள் சொல்வனவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. குழப்பிக்கொள்வதை சிந்தனை என எண்ணும் இடத்தில் இருக்கிறீகள்.
ஜெ
[கொஞ்சம் கடுமையாகவே இரு கடிதங்களும் உள்ளன. சென்ற கடிதம் சற்றே கடுமையானது என்று என் வாசகர்களும் சொன்னார்கள். ஆனால் நான் அதை ஓர் எளிய வாசகனுக்கு எழுதவில்லை, குறிப்பிடத்தக்க எழுத்தாளனாக ஆகப்போகும் ஒருவருக்கு எழுதினேன் என்று பதில் சொன்னேன். அடிப்படைகளில் இருந்து ஆரம்பிக்காமையின் தெளிவின்மையை ஒரு நுண்மையாக கருதிக்கொள்ளுதல் உங்களுக்கு நலம் பயக்காது என்பதனால் அந்தக் கடுமை. அதை சரியான முறையில் எடுத்துக்கொண்டது உங்கள் சமநிலையை காட்டுகிறது. அந்தச் சமநிலை எப்போதும் வழிகாட்டட்டும். நன்றி ]