மண்ணும் ஞானமும்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் “இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இந்தியன் என்று ஏன் உணர வேண்டும்? உணர்வதால் என்ன பயன்?” போன்ற கேள்விகள் எப்போதும் உண்டு. உங்கள் உரை பல கேள்விகளுக்கு விடை சொல்லியுள்ளது.

இது தொடர்பாக என்னுள் எழும் இன்னொரு முக்கிய கேள்வி – “இந்திய ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இந்தியாவில் இருத்தல் அவசியமா?”. உங்கள் உரை தொடர்பான விவாதங்களில் நண்பர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் இரண்டு விதமானவை.

1. இந்தியாவில் வாழும் நண்பர்கள் சொல்லும் “தேசமென்னும் உணர்வைப் புகட்ட வேண்டும், இந்திய ஞான மரபை, தத்துவங்களைக் கல்விப் பொருளாக்க வேண்டும்” என்று கிட்டத்தட்ட இந்துத்வ பிரச்சாரம் ஒரு புறம். சத்குரு இதே கருத்தை இந்தக் காணொளியில் வலியுறுத்துகிறார். நாடு என்ற கருத்தை விதைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அமெரிக்க மாதிரியின் பின்செல்வது பெரும் அபத்தமாகத் தோன்றுகிறது. உங்கள் உரையின் தலைப்பைப் போல தேசம் தன்னுணர்வாக இங்கு வாழும் அனைவருக்குள்ளும் இருக்கிறது. அதைப் பட்டியலிட்டு, ஒரு எல்லைக்குள் சுருக்கி புகட்டினால் அது இந்திய ஞான மரபிற்கே எதிரானது என்பது என் எதிர்வாதம்.

2. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசிக்கும் நண்பர்கள் சொல்வது “தன் ஞான மரபை உணர்ந்த/பேணுகின்ற சமுதாயமாக இந்தியா இன்று இல்லை. எங்கும் ஊழல், அழுக்கு, சட்ட மீறல்கள், நேர்மையின்மை நிறைந்த காட்டுமிராண்டித்தனமான சமூகமாகத்தான் இன்று இருக்கிறோம். இங்கு வாழ்வதை விட நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்திய ஞான மரபின் அம்சங்களை சரிவரப் புரிந்து கொண்டு, பின்பற்றினால் போதும். நம் வேலைக்கு, தரமான வாழ்க்கைக்கு, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மேற்கத்திய சமூகங்களே சரியான சூழலை அளிக்கின்றன” என்பதே.

நான் அமெரிக்காவில் பத்து வருடங்கள் வசித்தவன். குழந்தைகள் அமெரிக்கக் குடிமகன்கள். 2010-இல் இந்தியா திரும்புவதற்கு தேசம் என்னும் தன்னுணர்வு காரணமாக இருக்கவில்லை. தமிழ் பேசும் சூழலில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய இயக்கி. கடந்த மூன்று வருடங்களில் என் இளம்பருவ காலங்களில் காணாத இந்தியாவின் இன்னொரு தரிசனத்தைக் கண்டு கொண்டிருக்கிறேன். அதில் பெரும்பங்கு உங்களுக்கு இருக்கிறது. தேவ்தத் பட்னாய்க்கின் இந்த உரையிலும் சிக்கலான இந்தியாவின் வெளித்தோற்றத்துக்குப் பின்புலமாய் இருக்கும் ஞான மரபுகளைப் பற்றிய தெளிவு கிடைத்தது.

நம் குழந்தைகளும் இந்த மரபை உணர்ந்து போற்ற இந்தியாவில் வசிப்பது தேவை இல்லையா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

அன்புடன்,
இலட்சுமணன்

http://www.youtube.com/watch?v=xKOh9DfQBgU&feature=share

அன்புள்ள இலட்சுமணன்,

ஒருவர் தன் மண்ணைவிட்டு நிரந்தரமாகச் சென்றாரென்றால் ஒரு தலைமுறைக்குமேல் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியாதென்றே நினைக்கிறேன். மிக அபூர்வமாக சில சமூகங்கள் சமூகங்களாகவே கிளம்பிச்சென்று, தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பண்பாட்டைப் பேணிக்கொள்கின்றன. ஆனால் அது சாதாரணமாக நிகழ்வதில்லை.

பொதுவாக மண்ணைவிட்டுச்செல்பவர்கள் முதலில் மொழியை, பின்னர் வாழ்க்கைமுறையை இழக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த இழப்பை உணரும்போது கொஞ்சம் அதிகப்படியான ஆவேசத்துடன் அதைத் தழுவிக்கொள்ள முயல்கிறார்கள். அதைப்பற்றிப் பேசுகிறார்கள். அப்போதே அதை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று பொருள். ஏனென்றால் அதை அவர்கள் தங்களிடம் இயல்பாக வைத்திருக்கவில்லை.

அடுத்த தலைமுறையில் அவை மறைகின்றன. அதிகம்போனால் இன்னுமொரு தலைமுறை. அவ்வளவுதான். ஈழத்தமிழர் இந்தியத்தமிழர் எல்லாரிடமும் இதையே காண்கிறேன். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப பண்பாட்டையும் மொழியையும் வெறுத்து உதறமுயல்பவர்கள் என்றே தோன்றுகிறது – அதற்கு எதிரான ஒரு பசப்புப் பேச்சு அவர்களிடமிருக்கும் என்றாலும்.

மெய்ஞானம் என்பது அடையாளங்களற்றது. உலகுதழுவியது. அது வேறு. இந்தியஞானம் என்னும்போது அது இந்தியாவின் வாழ்க்கைசார்ந்த நூற்றுக்கணக்கான குறியீடுகள் வழியாகவே எண்ணப்படவும் பகிரப்படவும் சாத்தியமானது. இடம்பெயர்பவர் அந்தக்குறியீடுகளில் இருந்து மானசீகமாக அன்னியப்படுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவை அவரில் பெரிய விளைவுகளை உருவாக்காமலாகின்றன. அடுத்த தலைமுறையில் அவை வேறு எங்கோ இருக்கும் அன்னியமான அடையாளங்கள் மட்டுமாக ஆகிவிடுகின்றன.

இருபதுவருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு இந்தியக் கோயில்கள் இந்திய இசை எதுவுமே எந்த மனப்பதிவையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கண்டிருக்கிறேன். பெற்றோர் அவர்களுக்குள் செயற்கையாக அவற்றைப்புகுத்த முயல்வார்கள். பாவமாக இருக்கும்.

இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்கள் எழுதிவைக்கப்பட்ட திட்டவட்டமான கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவை. சொற்களை பெரிதும் சார்ந்தவை. அவையே கூட அவை உருவாகி வளர்ந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்கள் வழியாகவே தொடர்புறுத்திக்கொள்கின்றன. அராபியப்பண்பாடு இல்லாமல் இஸ்லாம் உண்டா என்ன?

இந்துமதம் என்பது அதிகமும் குறியீடுகள் – குறியீட்டுச்சடங்குகள் சார்ந்தது. ஆகவே அதை மண்ணிலிருந்து பிரிக்கமுடியாது. அப்படிப் பிரித்து ஒரு சர்வதேசத்தன்மையை அதற்களித்து உலகமெங்கும் கொண்டுசென்று அனைவருக்குமுரியதாக அதை ஆக்குவதென்றால்கூட அதற்குப் பலநூற்றாண்டுக்கால பெரும் முயற்சி தேவைப்படும்.

ஆகவே இந்துமெய்ஞானம் தேவை என்றால் இந்தியாவில் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்
அடுத்த கட்டுரைபுனத்தில் பேட்டி