தூசியெழுத்து
உனது வீட்டில்
கையும் துடைப்பமும் எட்டாத
ஒரு ஜன்னல்மூலையில்
தூசுப்பரப்பில்
காதலைப்பற்றி நீ
உணர்ச்சிகரமாக சொல்லிய
மாலையில்
கேட்டு மயங்கி என் விரல் வரைந்த
ஓர் இதயமுத்திரை உள்ளது.
எந்தத் துடைப்பமும் விரலும்
கண்டுபிடிக்காமல்
அது அங்கேயே இருக்கும்
இன்னும் சில வருடங்கள்.
பின் அதன் மீது
இன்னொரு மறதித் தூசிப்பரப்பு.
மற்றொரு காதல் விரல்,
மற்றொரு இதயமுத்திரை.
இதெல்லாம் என்றும்
ஒன்றுபோலத்தான்.
அதையறிந்த ஒரு முக்காலஞானி எறும்பு
வலம் வைத்து விலகிச் செல்கிறது
ஒரு சிறு புன்னகையுடன்
வழக்கமான அவசரத்துடன்.
*********************
அறிவியல் காதலிடம் சொன்னது..
காதல் பாய்ந்து உன்னை நெருங்கும்போது
என்னிடம் அடைக்கலம் தேடு
ஒரு புன்னகையில்
உலகமே சுருங்குவதற்கு முன்பு
பிரபஞ்சத்தையே கடந்து செல்ல
உனக்கு நான் கற்பிப்பேன்
ஒரு 36-24-36ல்
அடிதவறி விழுவதற்கு முன்
அதனுள் உள்ள 206யையும் எண்ணும்
எக்ஸ்ரே கண்களை அளிப்பேன்
ஒரு முத்தத்தின்
மின்னதிர்ச்சியைப் பெறும் முன்பு
காதலின் நரம்பியலை
நான் உனக்கு நினைவூட்டுவேன்.
·பெரமோன்ஸ் கவற்சி
ஸெரட்டோன் மூளையில்
முறுக்கவிழும் நரம்புகள்,
அவவ்ளவுதான்,
மாயமேதுமில்லை
காதல் தகர்ந்தாலும்
இதயம் தகர்வதில்லை.
வால்வுகள் இயங்க
உன் குருதியே போதும்
இலக்கியமெல்லாம் சரிதான்
உன்னைக் காக்கவருவதென்னவோ நான்தான்.
*********************
சொல்லிச்சொல்லி…
இல்லாத கூந்தலைத்தடவியபடி
பாட்டி சொல்வாள்.
‘சொல்லிச் சொல்லி அப்டியாச்சு’
ருக்குவுடன் சேர்ந்து
பட்டுபாவாடை வட்டத்தில்
விரிந்த விழிகளுடன்
கேட்டு அமர்ந்திருந்தபோது
அதன் பொருள்
முழுக்க புரிந்ததில்லை
இன்றறிகிறேன்
தினமும் காலையில்
‘இதுதான் சொற்கம்! சொற்கம்!’
என்று மூன்றுதடவை சொன்னால்
தங்கக் கூண்டின் கம்பிகள்
ஒன்றொன்றாக
காணாமலாகும்.
‘இது நான்
இதுவே நான்’
கண்ணாடி பார்த்து
தினம் பலதடவை சொன்னால்
ஏதோ ஒன்று நானாகும்.
‘இதுவெறுமொரு பிரியம்’ என்று
நூற்றொரு தடவை சொன்னால்
ஆத்மாவை வேருடன் பிடுங்க
பாய்ந்து வரும் காதல்
ஒரு செல்லக் குறுகுறுப்புத் தென்றலாக
பதுங்கிப் பதுங்கிப் போய்விடும்.
இன்றெனக்குத் தெரியும்
சொல்லிச் சொல்லி
எதையும் எதுவாகவும் ஆக்கும் வித்தை
ஆனால்
அக்ரஹார இருளில்
சொல்லிச் சொல்லி
நீ
எதை எதுவாக ஆக்கினாய்
எப்படி நீ
எப்போதும் சிரித்திருந்தாய்?
********************
பார்வதி
அன்புறைந்த பனிக்காலத்தில்
இதயம் விரைக்கும்போது
போர்வை விலக்கி
பனியில் வந்து அமர்வேன்.
இதயம் பிளந்து நீர்
கன்னங்களில் வழிகையில்
குடையை வீசி
மழையிலாடுவேன்.
அடக்கும் குரோதச்சூடில்
அகங்கள் எரியும்போது
செருப்பைக் கழற்றி
வெயிலில் உலாவுவேன்
அறிய மாட்டய் நீ என்
அகத்தின் பருவங்கள்.
அறியாமலிருக்கவே
இயற்கை சமைக்கிறது திரை.
[திருவனந்த புரத்தில் ஒளியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் பிந்து பிறப்பால் ஒரு
தமிழர்- தமிழ் தெரியாது]
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
மலையாளக்கவிதை பற்றி
பத்து மலையாளக் கவிதைகள்
பி.ராமன் கவிதைகள்