1. பூ – போகன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்]

கிருஷ்ணன்

சரியாக அவனும் லலிதாவும் எல்லா வேலைகளையும் அரைகுறையாக அவசரமாக முடித்துவிட்டு ஆபிஸ் கிளம்பும்போது ஊரிலிருந்து கக்கத்தில் ஒரு பெரிய பலாப் பிள்ளை போல தொங்கும் பையோடு அவர் வந்தார்.

”நான் கேசவன். உங்க அப்பா ஊர்ல இருந்து வரேன். உங்களுக்கு உறவும் கூட. உங்க கிட்டே பேசணும்”

லலிதா எரிச்சலை மறைத்துக் கொள்ளாத கண்ணுடன் அவனைப் பார்த்தாள். அவளுக்கு ஏழே முக்காலுக்கு பஸ். அங்கிருந்து ஒரு மணிநேரம் பயணம் செய்து ஆபிஸ் போகவேண்டும். அதைவிட்டால் அவளது அதிகாரி அவளது தலையைத் தின்றுவிடுவான்.

அவன் சங்கடமாய் உள்ளே பார்த்தான். வீடு மிக அமைதியாக இருந்தது. கழுவிவிட்ட ஈரத்தரை காய்வதற்காக முழுவீச்சில் சுழலும் மின்விசிறியின் அலைச் சத்தம் மட்டும் உள்ளிருந்து கேட்டது. நல்லவேளையாக விஜய் தூங்கி விட்டிருந்தான். மருந்தின் வேகம். ஆனால் எல்லா நாட்களிலும் இப்படி இருக்காது. மருந்து எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. வேலைக்காரி – வேலைகாரி என்று சொல்லக் கூடாது, லலிதாவின் உறவுக்காரி – ஆளையே காணோம். புறவாசலில் நின்றுகொண்டு பின் வீட்டுக்காரியுடன் பேசிக் கொண்டிருக்கக்கூடும். சட்டென்று கோபம் ஒருகணம் பாட்டில் திறக்கப்பட்டது போல பொங்கி வந்தது. ஆனால் முடியாது. இவளையும் விட்டுவிட்டால் விஜயை பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்காது. ”ஒருநாளைக்கு முப்பது தடவை குண்டி கழுவி பீத்துணி மாத்த நம்மால முடியாது”

இவளோடு ஆறாவது நபர். இவளும் போய் லலிதா வேலையை விடவேண்டும். லலிதா வேலையை விட்டால் வாங்கியிருக்கிற கடன்களுக்கு வாழ்க்கையையே விட்டுவிட வேண்டியதுதான்.

அவர் லலிதாவைப் பார்த்துச் சிரித்து ”நிண்ட பார்யா அல்லே? ஆபிசுக்கு கிளம்பறாப் போலிருக்கு. மன்னிக்கணும். நான் நேத்தே மெட்ராஸ் வந்துட்டேன். இவன் நம்பருக்கு போன் அடிச்சுட்டே இருந்தேன். இவன் எடுக்கவே இல்லை’ என்றார். நான் கடன் கொடுத்த வங்கிக்காரன் என்று எடுக்காமல் இருந்துவிட்டேன்.

பிறகு அவளைப் பார்த்து மறுபடியும் ”நான் கேசவன். கிருஷ்ணனின் அப்பா ஊர்ல இருந்து வந்திருக்கேன்” என்றவர் ”என்ன ஆபிஸ் போறியா? அதுக்கெல்லாம் தேவையே இல்லை. கோடிக்கணக்குல அங்கே கொட்டிக் கிடக்கறப்ப இப்படி ஏன் அலையணும்?”

லலிதா உறைந்து போனவள் போல நின்றாள். “உன் பையனுக்கு எதோ அசுகம்னு கேள்விப்பட்டேன்…நம்மூர்ல அதுக்குன்னே ஜனிச்ச ஆசான்மாருண்டு. வெளிநாட்டில இருந்தெல்லாம் வராங்க. செத்தவனை எழுப்பி கையில கொடுத்துடுவான்லா? இங்கிட்டு உள்ளவனுங்களுக்கு என்ன தெரியும்?”

லலிதா தோள் பையை கீழே வைத்துவிட்டாள்.

அப்பாவின் ஊர் திருவட்டார் அருகே. தீயிடுகாலை என்று சொல்வார்கள். அப்பாவை தீயிட்ட ஊர் அதுதான். அநாதை மாதிரி வேறு யாரோ தீயிட செத்துப் போனார். அம்மை தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டாள்.

உண்மையில் அவர் இறந்த செய்தியே ஒருவாரம் கழித்துதான் கிடைத்தது.

கடைசியாக ஊர்ப்பக்கம் போய் இருபது வருடங்களுக்கு மேலிருக்கும். குழித்துறை கோர்ட்டில் நடந்த கேஸ் வாதத்துக்காகப் போனது ”பையன் வந்து கச்சேரில பேசணும். அப்ப கேசில ஒரு சூடு இருக்கும். வந்து இது எனது தகப்பனுக்க சொத்துன்னு கண் கலங்கி நிக்கணும். அப்படின்னா ஒருக்கால் ஒரு தெளிவு கிட்டும். மத்தபடி நம்ம கேசு ரொம்ப வீக்கு. அனந்தராமன் வக்கீலுக்கு வக்கீல். அவனுக்குத் தெரிஞ்ச கோடதி நியமங்கள் ஜட்ஜுக்குத் தெரியாது பாத்துக்கிடும்.”

கல்பாலத்தடி இசக்கி அம்மனை தொழுதுவிட்டு கோர்ட் வாசலில் இருந்த கடம்ப மரத்தின் அடியில் இருந்த கடையில் ரசவடையும் சாயாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பெரியப்பா தங்க சரிகை நேரியலின் ஒரு நுனியை கையில் பிடித்துக்கொண்டு கடைக்குள் ஏறி வருவதைப் பார்த்தான். ஏறிவந்தவர் ஒரு கணம் இரு புறமும் கை வைத்துக்கொண்டு கடையை ஒருமுறை சுற்றிப் பார்த்தார். சிறகு விரித்து நிற்கும் ஒரு சேவல் போல அவனுக்குத் தோன்றிற்று. அவரைப் பார்த்ததும் மாமாவின் முகம் கருத்தது. ”அவன் பக்கம் பார்க்காதே” என்றார்.

கல்லாவில் இருந்தவனிடம் ”கழிக்க ஏதேனும் உண்டோ ஆசானே?”‘

ஆசான் சிரித்து ”உண்டு. ஆப்பக் கல்லும் அடுப்புக் கரியும்”

”அதை நீ கழிச்சுக்கோ எனக்கு கடலைக் கறியும் தோசையும் கொடு”

”பீஃப் வேனோ?”‘

”அ …ஒரு காரியமாட்டு கசேரிக்குள்ள போறேன். ஜெயமானா பீஃப், அரிஷ்டம், சக்கைப் பிரதமன் எல்லாம் உண்டு. உனக்கும் சேர்த்து ”

‘அ ..அனந்தராமன் ஜெயிக்காத கார்யம் உண்டோ?”‘

கடைக்காரனும் அவரும் ரொம்ப சிநேகம் என்று தெரிந்தது. மாமா எழுந்து அவனை கையில் பிடித்துக்கொண்டு கல்லாவில் காசு கொடுக்கப்போகையில்தான் அவர் அவர்களைப் பார்த்தார். அவரது புன்னகை ஒருகணம் நிறுத்தப்பட்டது போல உறைந்தது. கிருஷ்ணனைக் கண்டதும் அவர் கண்கள் ஒருகணம் நுட்பமாக மாற்றம் அடைந்தன.

அன்றைக்கும் கடைக்காரன் சொன்னதுபோல அனந்தராமன்தான் ஜெயித்தார். பத்திரத் தெளிவுகள் மிகத் துல்லியமாக அவர் பக்கம் இருந்தன. வக்கீல் சொன்னது போல கிருஷ்ணனின் சோகம் தட்டிய முகம் நீதிபதியின் முகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அப்பாவுக்குக் கொள்ளியிடக் கூட அவன் வரவில்லை என்ற தகவல் சரியான நேரத்தில் சரியான தொனியில் அவருக்குச் சொல்லப் பட்டது .ஜட்ஜ் அவனையும் மாமாவையும் ஒரு பூச்சியை போல அப்போது பார்த்தார்

தீர்ப்பைச் சொல்லிவிட்டு அவர் பெரியப்பாவைப் பார்த்து லேசாகச் சிரித்ததாக மாமா சொன்னார். ”அவன் எல்லாத்தியும் விலைக்கு வாங்கி இருப்பான்”

அப்படிப்பட்ட அனந்தராமன் இன்று ஆள்மேல் ஆள் அனுப்புகிறார்.

மாமா இருந்திருந்தால் என்ன செய்வது என்று கேட்டிருந்திருக்கலாம். இறக்கும் வரை அவன் வாழ்வின் எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுத்தார். எடுக்க அவன் அனுமதித்தான். பெரியப்பாவின் நேர் எதிர் அவர். பெரியப்பா ஒரு இடி முழக்கம். மாமா ஒரு சிறிய முணுமுணுப்புதான். எனினும் அதில் ஏதோ சக்தி அவன் மறுத்துப் பேச முடியாதபடி இருந்தது. ஒழுக்கத்தின் சக்தி என்று மாமா ஒருதடவை சொன்னார். காந்தி பற்றி ஒருதடவை பேசும்போது இவ்விதம் சொன்னார் ”காந்தியிடம் என்ன சக்தி இருந்தது, அவரது ஒழுக்கத்தைத் தவிர?”

அம்மையை திருவட்டார் ஆற்றில் கரைத்த அன்று ஆற்றங்கரையில் ”நீ இந்த ஊர்ல இருந்தது போதும். என்னோட ஊருக்கு வந்துடறியா?”என்றதும் ஒரு மறு பேச்சு பேசாமல் அவனது சட்டை கால் டிரவுசர்கள் இரண்டு சில பாடப்புத்தகங்கள் மற்றும் அம்மையுடன் அருமனை ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட மங்கிய புகைப்படம் ஒன்று எல்லாவற்றையும் ஒரு சிறிய பெட்டியில் வைத்துக்கொண்டு மறுநாள் அவர் புறப்படும்போது மௌனமாக அவர் முன் வந்து நின்றான். அவரே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் கண்களில் தெரிந்தது.

வீட்டுக் கார்யம் பார்க்கும் குடும்பவேலைக்காரன் நாராயணன்தான் ”கொச்சு மோனே ..இதென்ன கார்யம்? பெட்டியை இறக்கணும்” என்று பதைபதைத்தான். அவன் கண்களில் தெரிந்த உறுதியைப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிப்போய் அப்பாவைக் கூட்டி வந்தான். அப்பா போதையில் நிலை அழிந்து போய் அவிழும் வேஷ்டியை தூக்கிப் பிடித்தவாறே வந்தார். வந்தவர் நின்று கிருஷ்ணனையே உற்றுப் பார்த்தார். நாட்டு வாற்றின் மரமரப்புக்குப் பின்னர் அந்தக் கண்களில் தெரிந்தது என்ன? பிறகு புரிந்துகொண்டு ஏதோ தோன்றினவர் போல சட்டை பையைத் துழாவ வேஷ்டி நழுவி விழ நாராயணக் குட்டி அதைத் தாங்கிப் பிடித்தான். அப்பா வெடித்தழுது ”நாராயணா உன்கிட்டே பைசா எதுவும் உண்டா? என் பையன் போறானே. அவனுக்குக் கொடுக்க ஒன்னும் இல்லியே!” அவனும் அவரை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதான். அதற்குள் தெருவில் கூட்டம் சேர்ந்துவிட ஒருவர் வாசல் ஏறிவந்து, “எடா சங்கரா வாதில்ல நின்னு இது என்ன பெகளம்?அகத்த போ!” என்றார்.

இதற்குள் சத்தம் கேட்டு அடுத்த வீட்டிலிருந்து பெரியப்பா இறங்கி வந்து ”இதென்ன கதக்களி இங்கே? மனுஷன் ஒரு கண் உறங்கான் வழியில்லையே?”

நாராயணன் குட்டி ”கொச்சு மோன் ஊருக்குப் போறேன்னு நிக்கான்”

அவர் திரும்பி மாமாவைப் பார்த்தார், என்ன இது என்பது போல.

மாமா பல்லை கடித்துக்கொண்டு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “கிருஷ்ணனை நான் ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்.”

அவர் விழித்து ”எதுக்கு? உங்க பாண்டித்தனத்தை அவன்கிட்ட ஏத்தறதுக்கா?அவன் இங்கே கிடப்பான். அவனாவது குண்டில உறப்பு உள்ளவனா வளரட்டும. நான் அவனை நட்டல் எலும்புள்ளவனா வளர்ப்பேன்” என்று ஒரு முறை அப்பாவை புழு போலப் பார்த்தார் ”டேய் சங்கரா அவன அகத்தே இழுத்துப் போடுடா ”

மாமா ஆஸ்த்மா வந்தவர் போல மூச்சுவிட்டுக் கொண்டு “உங்க பாவத்துக்கு அஞ்சாத நெஞ்சுரப்பு அவனுக்கு வேண்டாம். என் தங்கச்சி கதி இவனுக்கும் வரவேணாம். அவன் என்கூட வருவான்”

பெரியப்பா அதை காதில் வாங்காமல் ”போடே மயிரே. வல்லாத பாவ புண்ணியம் கண்டுட்டான்..அவனது திருநெல்வேலிப் பிள்ளைமார் புத்தி. கண்ணு.புத்தி மனசு எல்லாம் சோகை’ ‘என்றவர் திரும்பி ”சங்கரா புத்தியோட செவியும் போயோ?மோனை உள்ளே இழுத்துப் போடணும் ”

அப்பா தடுமாறியபடியே கேட்காதது போல நிற்க பெரியப்பாவே முன் நகர்ந்து கிருஷ்ணனைப் பிடித்து உள்ளே தள்ள முயல அவன் கீழே விழுந்தான். அதற்குள் நாராயண குட்டியின் மனைவி உள்ளிருந்து ஓடிவந்து ”ஐயோ இது எந்த களியானு?நீங்கள் எல்லாம் மனுஷப் பிறவியா ?அம்மை இல்லாக் கொச்சுவை எல்லாரும்…” என்று தூக்கினாள்.

மாமா ஏதோ பேச வாயைத் திறக்க, பெரியப்பா ”நீங்கள் இப்ப இன்ட ஸ்தலம் விடனும்’ ‘என்றார். மாமா வாயை மூடிக் கொண்டு எழுந்து போக முயலும்போதுதான் கிருஷ்ணன் கையை விடுவித்துக்கொண்டு ”நான் போறேன்”என்றான் தீர்க்கமாக. ”இங்கே இருந்தா நான் எங்க அம்மையை மாதிரியே செத்துப் போவேன்”

அன்று அந்த இடம் விட்டு வந்தது. அம்மையை, அப்பனை, ஆதிகேசவனை. பரலி ஆற்றை, அதன் கரையில் நிற்கும் நாகலிங்கப் பூ மரத்தை, அங்கு எப்போதுமிருக்கும் பச்சை வாசனையை எல்லாவற்றையும்.

விட்டு வந்து மதுரையின் மையத்தில் புழுதியும் புழுக்கமும் பறக்கும் சூழலில் ஏறக்குறைய இருபது வருடங்கள்.

மாமாவுக்கு மதுரா மில்லில் வேலை. அதன்பிறகு அப்பாவை பார்க்கவே இல்லை. ஆனால் சில வருடங்கள் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் அவனை வந்து பார்ப்பதாக எழுதுவார். வரவே இல்லை. ஒரு நாள் மாமா ”உங்க அப்பாவைப் பார்க்கணும்னு உனக்குத் தோணவே இல்லியா?” என்றார்.

கிருஷ்ணன் யோசித்தான். பிறகு இல்லை என்று தலை அசைத்தான். ஆனால் அம்மாவின் நினைவு ஆறாத புண் போல எப்போதுமே இருந்தது. அவள் தீக்குளித்த அன்று தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ஓலைப்பாயில் மீன்பொதி போல சுருட்டி வைக்கப்பட்டிருந்த அவள் உடம்பில் மெட்டி அணிந்த கால்கள் மட்டும் வெளியே நீண்டு கிடந்தது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

முகம் முழுக்க கருகிவிட்டது என்று காட்டவில்லை. ”ச்சே! என்னவொரு சுந்தரமான முகம்! இப்படி ஆச்சே” என்று யாரோ கசந்து சொன்ன நினைவு இருக்கிறது.

அம்மாவுக்கு மிகப்பெரிய அன்பு மிதக்கும் கண்கள். அவள் கண்களில் எப்போதுமே அன்பின் ஒளி இருக்கும். அந்த ஒளி அணைந்து அவன் பார்த்ததே இல்லை. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அணையாவிளக்கு போல அவளுள் அந்த அன்பு இருந்தது. மிருகங்கள் கூட அவள் அன்புக்கு கட்டுப்படுவதை. அமைதி ஆவதை அவன் கண்டிருக்கிறான். அவர்கள் வீட்டில் நிறைய மாடுகள் இருந்தன. அதில் சண்டி மாடு ஒன்று உண்டு. பேரே சண்டிதான். மற்ற மாடுகளை சினையுறுத்த வைத்திருந்தார்கள். சில நேரங்களில் வெளியூரில் இருந்துகூட கூட்டிப் போவார்கள். ஆனால் அதற்கு முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். அதற்கு எல்லோரும் தன்னை மரியாதையாக நடத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்குக் குறைவு வந்துவிட்டது என்பதுபோல் அதற்குத் தோன்றிவிட்டால் அவ்வளவுதான். இரண்டு மூன்று பேரை முட்டி வயிற்றைக் கிழித்திருக்கிறது. தொழுவத்தில் நிற்கும்போதுகூட கால் மாற்றி கால் மாற்றி அமைதி இன்றியே நிற்கும். ஆனால் அது அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்படும். அவள் கொட்டகைக்குள் வந்துவிட்டால் அப்படியே எப்போதுமே மின்சாரம் செலுத்தப்பட்டது போல துடிக்கும். அதன் முதுகுத் தசைகள் தளர்வதைப் பார்த்திருக்கிறான். அவள் அருகில் வந்து அதன் முதுகை நீவிக் கொடுத்துக் கொண்டே நிற்பாள். அது இன்னும் கொஞ்சம் என்னை தடவிக் கொடேன் என்பது போல அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே நிற்கும்.

அதே போல காய்கறியும் உப்பும் வள்ளிக்கிழங்கும் மீனும் விற்க வரும் மனிதர்கள் கூட வியாபாரத்தை மறந்து அவள் முகத்தையே பார்த்தபடி கிறங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறான். பேரமே பேசாமல் “நீ கொடுக்கிறதக் கொடு தாயே” என்றுவிடுவார்கள்.

”உங்க அம்மைகிட்ட எப்பவும் ஒரு குளிர்ச்சி உண்டு பார்த்துக்க. திருவந்திரத்தில ஒரு தரம் ஒரு ஹோட்டலில் ஐஸ் பெட்டி கிட்டே உட்கார்ந்திருந்தேன். அதே மாதிரி ஒரு குளிர்ச்சி. சில சமயம் அவ கிட்டே வந்தாலே வேலை எல்லாத்தியும் விட்டுட்டு கையை கவட்டைக்குள்ள விட்டுட்டு கொச்சுப் பிள்ளைகள் மாதிரி தூங்கணும் போலத் தோணும்” என்பான் நாராயணக் குட்டி. ”உனக்குத் தோணிருக்கா ?””

அவ்வாறு மற்றவர்கள் பேசும்போதெல்லாம் அவனுக்கு பெருமையாக இருக்கும். ”எங்கம்மா ”என்பான்.

”உங்க தோட்டத்தில பெரிய புஷ்பம் நிண்ட அம்மா” என்பான் நாராயணன்.

அம்மாவுக்கு பூக்கள் என்றால் ரொம்ப இஷ்டம். திருவனந்தபுரத்தில் கரமணையில் தோட்டம், பூ இவற்றுக்கெல்லாம் இடமே இல்லை. பூசலார் போல மனதுக்குள்ளேயே வளர்த்துக் கொள்ளவேண்டியதுதான். ஆதியில் திருநெல்வேலி மேட்டுத் தெருவில் இருந்த சந்துவீட்டிலும் அதே கதைதான். விடிகாலையில் கைரேகை தெரியாத இருட்டில் எழுந்து வாய்க்காலுக்கு குளிக்கப் போகும்போது லேசாக விரிகிற உலகம். அல்லது அப்பாவுக்கு மத்தியானம் சாப்பாடு கொடுக்க மார்க்கட்டுக்குள் செல்கையில் தெரிகிற உலகம். ஆனால் அது உலகம் அல்ல. சந்தை.

ஆகவே திருவட்டாரில் பெரிய காடு போல வீட்டின் பின்னால் கிடக்கும் இடத்தைப் பார்த்துவிட்டதும் அவளுக்கு சந்தோசத்தில் அழுகையே வந்துவிட்டது  என்று ஒருதடவை சொன்னாள். நாரயணக் குட்டியிடம் சொல்லி விதம்விதமாய் பதியன்கள் வாங்கி தோட்டத்தில் நட்டுக் கொண்டே இருந்தாள். சில சமயம் செருவாரக் கோணம் அருவிப்புறம் கன்னியாகுமரி என்று அவனை செடி வேட்டைக்கு அனுப்பி விட்டு காத்திருப்பாள் ,

அம்மா தோட்டம் முழுக்கவும் பூக்களாய் வளர்த்தாள். அப்பா ஒருநாள் பார்த்து ”கொஞ்சம் மலைக்கறி இட்டா கடைக்கு ஆவும்’ ‘என்றார். கடை என்றால் சாப்பாட்டுக் கடை.மார்த்தாண்டத்தில் சரஸ்வதி விலாஸ் என்று அப்போதிருந்த பிரபலமான ஒரே ஒரு சாப்பாட்டுக் கடை.

”பூவில என்ன இருக்கு?ஒரு ஆள் எத்தினி பூவு வச்சுக்க முடியும்?”

அம்மா பதில் பேசாது குனிந்திருப்பாள்.

”கொச்சு ஏமான் மண்டை முழுக்க தோசையும் சம்பந்தியும்தான் அடைக்க உண்டு. வேறு எதுக்கும் அங்க இடமில்லை” என்றான். நாராயண குட்டி ”ஏட்டத்தி மனசிலாக்கேண்டா ”என்பான்.

உண்மையில் அவன் வயசுக்கு அம்மா சிறுபெண் ஆனாலும் அவன் அப்படித்தான் ஏட்டத்தி என்று விளிப்பான். “கன்யாகுமரில அரைப் பாவாடை கட்டிட்டு நிற்கிற கல்யாணம் ஆகாத சிறு பெண்ணை அம்மேன்னு கும்பிடலியா அது மாதிரிதான்” என்பான்.

ஆனால் அம்மாவுக்கு பிடித்த பூ அவள் தோட்டத்தில் இல்லை. அவளுக்குப் பிடித்த பூ நாகலிங்கப் பூ.

ஆதிகேசவன் கோயிலுக்கு எதிரே ஆற்றங்கரையில் நின்றிருந்த மரத்தில் இருந்து தினம் ஒரு பூ கொண்டுவருவாள். ஒருமாதிரி நெடி அடிக்கும் மணம் உடையது அது. அவனுக்கு அந்தப் பூ ஒரு பூச்சி மாதிரி இருப்பதால் சற்றே பயம் உண்டு. கொண்டுவந்த பூவை பூஜை அறையில் இருந்த சிறிய பாணலிங்கத்தின் காலடியில் வைத்துவிட்டுத்தான் அவள் நாளே தொடங்கும். ”சிவனுக்கு ரொம்பப் பிடிச்ச பூடா இது ”

”அது இருக்கட்டும். உனக்கு ஏம்மா பிடிச்சிருக்குது?”

அவள் தலை சாய்த்து யோசித்து ”எனக்கு சிவன் பிடிக்குமே” என்று சிரித்தாள்.


நான்

பரக்குன்று என்ற அந்த ஊரில் காளியாசான் என்ற வைத்தியரின் வீட்டு வாசலில் கைகளில் நீட்டமாய் விஜயை கிடத்திக் கொண்டு காத்திருக்கையில்தான் நினைவு வந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் அம்மாவுடன். மார்த்தாண்டத்தில் ரயிலில் இறங்கியதும் நேராக இங்கு வந்துவிட்டோம். அப்புறமாய் ஊருக்குப் போனால் போதும் என்று சொல்லிவிட்டாள் லலிதா.

ஒரு தடவை மாமரத்தில் ஏறி விளையாடும்போது கீழே விழுந்து கை முறிந்து விட்டது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இங்கு வந்து கட்டுப்போட்டு கட்டுப்பிரித்து கையில் முறிவு எண்ணெய் தடவி என்று வந்து போய்க் கொண்டிருந்தேன். அம்மாவை மிக நெருக்கமாக அறிந்த நாட்கள் அவைதான். என்னுடைய வலியிலிருந்து கவனத்தை திருப்புவதற்காக அவள் பேச ஆரம்பித்தாள். ஓரளவு அவள் பேசுவதை புரிந்துகொள்ளும் வயது வந்துவிட்டது என்றவள் நினைத்திருக்கவும் கூடும். வைத்தியர் வீட்டில் ஒரு பெரிய கொன்றை மரம் உண்டு. கனி கொன்னு என்று இந்தப்பக்கம் சொல்வார்கள். அந்த மரத்தின் பூக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஆடம்பரமான ஒரு நகை போல அது இருக்கும். அது எனக்கு நினைவு இருக்கிறது. அங்கு போகும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூவுடன் திரும்பி வருவேன். ”உனக்கு நாகலிங்கப் பூ மாதிரி எனக்கு இந்தப் பூ’ ‘என்பேன். இப்போது அந்த மரத்தைக் காணவில்லை. வெட்டிவிட்டார்களா பட்டுப் போய்விட்டதா தெரியவில்லை. சற்று ஒருமாதிரி இருந்தது. ஒரு இழப்பு போல. அம்மாவின் ஞாபகங்களுடன் இணைக்கும் இன்னொரு சங்கிலி. நான் வைத்தியரின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன்.அப்போதே அவருக்கு வயதிருக்கும். நரைத்த புருவங்களுடன் மீசையுடன் மார்பு முழுக்க நரை மயிருடன் ஒரு பனிக்கரடி போலிருப்பார். அவர் இன்னும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவர் நெஞ்சுக் கூடு வரை ஏற்றிக் கட்டிய முண்டுடன் வந்து ”என்ன?”

நான் எழுந்து ”வைத்தியம் பார்க்கணும்”

அவர் லலிதா கையிலிருந்த விஜயைப் பார்த்து விட்டு ”உம் ”என்றார். ”மகன் வருவான். தொடுவட்டி வரை மூலிகை வாங்கப் போயிருக்கான்” என்று உள்ளே போனார்.

நான் பேச நினைத்து அடக்கிக் கொண்டேன்.

ஆனால் சற்றுநேரத்தில் அவரே உள்ளிருந்து வந்தார். என்னை புதர் போன்ற புருவங்களுக்கு அடியிலிருந்து உற்றுப் பார்த்தார் ”முன்பு இங்கிட்டு வந்துட்டுண்டோ?”

நான் ஆம் என்று தலை அசைத்தேன்.

”ஸ்தலம் எவிட?”

நான் தீயிடுகாலை என்றேன்.

அவர் முகம் இப்போது மாறியது ”காந்திமதி அம்மையோட மோன் இல்லே?”

நான் மறுபடி தலை அசைத்தேன். அவர் எனது மகனைப் பார்த்து ”எந்தா இது?”‘

நான் கண்ணீரை அடக்கிக் கொண்டு ”பிறந்ததிலிருந்து இப்படியே இருக்கான்”

”ஆயுதக் கேசோ?”

”ஆமா”

”வயசென்ன ?”

”அஞ்சு”

அவர் முகம் தளர்ந்தது. கண்களை மூடிக் கொண்டு ”பகவதி இதுவென்ன?’ என்றார் பிறகு ”உள்ளே வா ”என்றார்.

மகனைத் தூக்கிக் கொண்டு உள்ளே போகும்போது கூடத்தின் நுழைவாயிலில் சினாய் வனாந்தரத்தில் ரத்தக் கண்ணீருடன் ஜெபிக்கும் ஏசு கிறித்துவின் படம் ஒன்று கண்டேன். எனக்கு நினைவிருக்கிறது. முன்பு அந்த இடத்தில் ஒரு பெரிய காளி படம் இருந்தது. அவர் அதை கவனித்து, ”மக்கமார் ஜீவிக்கிற லோகம் வேற. பகவதி பகவான் ஆகி பரம பிதாவும் ஆயாச்சு’ என்றார்.

பிறகு பையனை பெஞ்சில் கிடத்தச் சொல்லி பரிசோதித்தார் ”தலை நிக்கவே இல்லை இல்லியா?”

சில கேள்விகளை லலிதாவிடம் கேட்டார்.

கண்களைத் தூக்கி,கால்களை நீவ விஜய் முனகினான்.

பிறகு என்னைப் பார்த்து ”நான் இப்போ வைத்தியம் பார்க்கறதில்லை. எல்லாம் மகன் பால் ராஜ்தான் பண்றான். கொஞ்சம் கஷ்டமான கேஸ்தான். ஒருவருஷம் உள்ளே மருந்தும் கொடுத்து தொக்கனமும் பண்ணனும். ஓரளவு தேத்தி எடுக்கலாம்’ என்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அவர் மகன் வந்தான். வைத்தியம் பண்ணிக் கொண்டிருக்கும் அவரை சற்று வியப்பாகப் பார்த்தான். அவர் ”பழைய கேஸ். இருபது வருஷம் முன்னால இவனுக்கு கை கட்டியிருக்கேன். இவன் அம்மை ஒரு தேவ ஸ்திரீயாக்கும்’ என்றார். ”தீயிடுகாலை ஊர்.”அவன் முகம் சுருங்க ”போனவாரம் வந்து கத்திட்டுப் போனாரே அந்த ஊர்தான். இவன் அவருக்கு தம்பி மகன்”

”ஓ ”என்றான் ”அந்த எரிவு கேசு.என்னா பெகளம். மருந்து பாட்டிலை எல்லாம் வீசி எறிஞ்சிட்டுல்லா போனாரு”

அவர் ”அந்த எரிவு தீராது. அது ரோகமில்லே. கன்மம். இவன் அம்மைக்கு அவரு செஞ்ச கன்மம். அவ மனசு ஆறும் போதுதான் அவன் மேனி அனலும் அடங்கும்”

”முந்தா நேத்தி மூலச்சல் வைத்தியர்கிட்டே நின்னதாக் கேள்விப்பட்டேன் ”

அவர் ”எங்க போனாலும் தீராது’ என்றார். பிறகு என் பக்கம் திரும்பி ”உள்ளுக்கு கொடுக்க ஒரு மருந்து தரேன். மூலிகைக் கிருதம். கொஞ்சம் குமட்டும். சுடு வெள்ளத்தில சேர்த்தோ பாலில சேர்த்தோ கொடுக்கணும். வாரம் ஒரு தடவை தடவலுக்கு வரணும்”

நான் சந்தேகமாய் ”மாற்றம் வருமா?” என்றேன். லலிதா ”ப்ச்’ என்று கண்ணால் கண்டித்தாள். அவளுக்குள் இருக்கும் தாய்மனம் நம்பத் துடிக்கிறது என்பது தெரிந்தது. அது எனக்கு ஆயாசத்தைத் தந்தது. இவை எல்லாமே தவிர்க்கவே முடியாத ஒரு நாடகத்தின் அலுப்பூட்டும் காட்சிகள். நாடகத்தின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

அவர் என்னை உற்றுப் பார்த்து ”ஏழு தாதுல கடைசி தாது வரைக்கும் மருந்து ஊடுருவிப் போகணும். கொஞ்சம் சமயம் ஆகும். முதல் அடியிலேயே பாறை உடைஞ்சுடுதா என்ன? அடிச்சுகிட்டே இருக்கணும் ”

பால்ராஜ் அதற்குள் மருந்துடன் வந்து ”விசுவாசமும் வேணம். மருந்து பாதி விசுவாசம் பாதி. விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம்.”

வைத்தியர் சற்றே எரிச்சலுடன் ”ஏலே விசுவாசி இந்தப் பையனோட வியாதி காரணம் இவனோட விசுவாசக் குறைவா இவங்க அப்பனோட விசுவாசக் குறைவா?”‘

பால் ராஜ் அதைக் கேட்காதது போல என் கண்களைப் பார்த்து ”இதுக்கு நிறைய செலவாகும். அப்பா சொன்னாரா?இப்பல்லாம் மூலி விலை கூடிப் போச்சி”

நான் தளர்ந்து ”எவ்வளவு ஆகும்?”‘என்றேன்.

ஏற்கனவே அவனது மருத்துவச் செலவுகள் தாங்க முடியாத அளவு ஆகிவிட்டிருந்தது. நடுவில் வீட்டுக் கடன் வேறு. வீடு கட்டி முடித்து இரண்டு மாதம் கழித்து பிறந்தான். வீடு பூசி தளம் எல்லாம் இட்டு வர்ணம் எல்லாம் பூசி பால் காய்ச்சுவதற்கு ஒரு வாரம் முன்னால் ஒரு மதியம் மொசைக் தரையில் விரிப்பு எதுவும் விரிக்காமல் வீட்டை வியந்து பார்த்தபடி நானும் லலிதாவும் தனித்துப் படுத்துக் கிடந்தோம். வாழ்க்கை அப்போது எவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாகத் தோன்றியது !

புதிய வீடும் ஒரு புதிய உயிர் போலவே தோன்றியது. ‘இதை நாமா செய்தோம்?’ என்ற ஒரு பிரமிப்பு தோன்றியது.

‘இனி இந்த வீட்டில்தான் நமது ‘வாழ்க்கை ‘என்றேன். ‘நமது குழந்தைகள் இந்த வீட்டில்தான் தவழ்ந்து ஓடி சிரித்து அழுது விளையாடப் போகிறது. நாம் ஒரு பெரிய சங்கிலியைத் தொடங்குகிறோம் லலிதா” என்றேன் சற்றே நாடக பாணியில்.

லலிதா பெரிய வயிற்றுடன் நகர்ந்து நகர்ந்து வந்து என்னை இழுத்து உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டாள் ”கவிஞண்டா நீ ”

மருத்துவச் செலவுகள் என்றில்லை. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு அவனைக் கொண்டு செல்வதற்குக் கூட நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தது. பேருந்தில் முடியாது. ரயிலில் கூட கடினமாகிவிட்டது. அவனுக்கு அடிக்கடி வலிப்பு வரும். ஒரு தடவை ரயில் பயணத்தில் அவ்வாறு வந்து கஷ்டம் ஆக்கிவிட்டது. கூட பிரயாணம் செய்தவர் ”இந்த மாதிரிக் குழந்தைகளை ரயிலில் கொண்டுவரவே கூடாது” என்பது போல சொன்ன அன்று லலிதா ரொம்ப உடைந்து அழுதாள். அன்று இரவுதான் கருணைக் கொலை பற்றி எல்லாம் பேசினாள். நான் அன்று அவளை மிகக் கடுமையாகப் பேசி மனம் நோக வைத்தேன். தாய்மை என்பதுதான் உலகின் மிகப்பெரிய பொய் என்று அவளிடம் சொன்னேன். தாய்மை, குழந்தைப் பேறு, வளர்ப்பு எல்லாம் வெறும் உயிரியல் செய்கைகள், நிர்ப்பந்தங்கள், பெண்கள் சாமர்த்தியமாக அதை ஒரு பெரிய கனவு போல ஆண்கள் மனதில் வளர்த்துவிட்டார்கள். ஆண்களை தங்கள் பிடியில் வைத்திருக்க அவர்கள் செய்த நுட்பமான தந்திரம் அது. லலிதா ஒருவாரம் முழுக்க பேய் அறைந்தது போல இருந்தாள். சரியாக என்னிடம் பேசவே இல்லை. ஒருநாள் இரவு ”நிஜமாகவே நீ என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறாயா?” என்று கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.

ஆனால் நான் அழுதது இன்னொரு சமயம். பகலில் விஜயை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டி இருந்தது. அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆட்கள், அதற்கான மையங்கள் சில இருந்தன. ஆனால் அவை லேசான குறைபாடுள்ள குழந்தைகளை மட்டுமே கவனித்துக் கொண்டன. ஐயர் பங்களா பக்கம் விஜய் போன்ற அதிகக் குறைபாடு உள்ள குழந்தைகளையும் சேர்த்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள் என்று போனேன். காசு அதிகம். போகட்டும் என்று முதல் நாள் கொண்டுவந்து சேர்த்துவிட்டு வந்தேன். முதல் நாள் பையனை சிறப்புத் தாதியிடம் விட்டுவிட்டு வரும் வழியில் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு போக ட்ராபிக் சிக்னலில் வரிசையாக நிற்கும் மாணவர்களைப் பார்த்து நானும் லலிதாவும் கலங்கி நின்றது இன்னும் நினைவுக்கு வருகிறது. என் மகனும் இப்படி பள்ளி போகவேண்டியவன்தானே என்று.

அன்று மாலை நண்பரிடம் விஜயின் புதிய பள்ளி பற்றி சொன்னபோது அவர் ”ஐயோ அங்கே குழந்தைகளை அடிப்பாங்க கிருஷ்ணன்” என்றதும் பதறிப்போய் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு பள்ளிக்கு ஓடினேன். பள்ளியில் விஜய் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருக்க அருகில் ஒரு பிரம்புடன் ஆசிரியை நின்றிருந்தாள். அதன் முனைகள் பிய்ந்திருப்பதை கவனித்து அங்கேயே உடைந்து அழுதேன். ”சரியாய் அழக் கூடத் தெரியாத பிள்ளைங்க…எப்படி அடிக்கறீங்க?” அவள் என் வேகத்தைப் பார்த்ததும் பின்வாங்கி  ‘அடிக்க மாட்டோம்.சும்மா பயமுறித்தறதுக்கு…. ”என்றாள். பிறகு கோபமுற்று ”இந்தக் குழந்தைகளை கவனிக்கிறது அத்தனை எளிதில்லை” என்றாள். நான் அப்படியே விஜயை அணைத்தவாறே தூக்கிக் கொண்டு ஓடிவந்துவிட்டேன். அன்றிரவு பிள்ளையின் உடல் முழுவதும் சிவந்திருந்த இடங்களை தடவித் தடவி மூவரும் அழுதோம். விஜய் அழுவது கூட சிரமப்பட்டுத்தான். ஒரு மாதிரி மயில் அகவுவது போல கூவி அழுவான். பல நேரங்களில் மூச்சுத் திணறி வெறுமனே கண்ணீரும் எச்சிலும் மட்டுமே வழிந்து கொண்டிருக்கும். மூவரும் விஷம் தின்று இறந்து போகலாம் என்றுகூட லலிதா சொன்னாள்.

எவ்வளவு கண்ணீர் !

என் கண்களைப் படித்துவிட்ட வைத்தியர் பால்ராஜை அதட்டி ”செலவெல்லாம் பாத்துக்கலாம். எலேய் பால்ராஜ் இது எனக்க ஸ்பெசல் கேசாக்கும். நீ பாட்டுக்குப் போ”.என்றவர் கனிந்து ”அதெல்லாம் நோக்க வேண்டாம்பிள்ளே. நீ போய்ட்டு வா’ என்றார்.

நாங்கள் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து ஊர் நோக்கிப் புறப்பட்டோம்.

ஊர் போகப் போக ஒரு புகைமூட்டத்தில் இருந்து ஒளிப் புள்ளி போலத் தெளிந்து வந்தது. நாங்கள் போவதற்கு எதிர்த்திசையில் சக்கடா வண்டி ஒன்றில் கை முறிந்த என்னை கிடத்திக் கொண்டு அம்மா எதிர்வருவதாகத் தோன்றி திடுக்கிட்டேன்.

லலிதா ஆர்வமாய் பார்த்துக்கொண்டே வந்தாள். அவள் இங்கே வந்ததே இல்லை.”எவ்வளவு பச்சை!”என்றாள்..

ஆட்டோ நின்றது.

நான் இறங்கி இருபது வருடங்களுக்கு முன்பு எனது அம்மை தீயிட்டு எரிந்து போன வீட்டின் முன்பு நின்றேன்.

அது ஒரு தூசு துடைத்த ஓவியம் போல எழுந்துவந்தது.

மெல்ல ஒரு கருப்பு வெளுப்பு புகைப்படத்தில் வண்ணங்கள் சேர்வதுபோல நினைவுகள் பொருந்திக் கொண்டு துலங்கின.

அந்த இருண்ட நாளன்று கடைசியாக அவளைப் பார்த்த கணத்தை நான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திபப் பார்த்திருக்கிறேன். அது சட்டென்று ஒரு கத்திக்குத்து போல மீண்டும் நினைவுக்கு வந்தது.

அன்று நடக்கப் போவதன் சாயல் எதுவும் அவளிடம் இருந்ததா?என்று நான் பலதடவை என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

வழக்கமாய் சாலை வரை வந்து வழி அனுப்புகிறவள் அன்று ஆலமரத் திருப்பு வரை வந்தாள்

நான் வெட்கமடைந்து ”நீ போ நான் போய்க்கறேன் நீ போ ”என்று சொல்லிக் கொண்டிருந்தேன் .எப்போதுமே அப்படித்தான் சொல்வேன்.ஏனோ அம்மையின் அதீத அன்பு என்னை நாணம் கொள்ளவைத்தது .மற்ற பிள்ளைகள் என்னை ஒரு ஆணாய் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன் அன்பை வெளிப்படுத்துவது ஒரு பெண்டுகள் காரியம் என்று ஏனோ நினைத்தேன்.ரொம்ப அன்பில் தோய்கிறவன் பெண்ணாகி விடுவான்.

அவள் மெல்ல என் பின்னாலேயே நடந்துவந்து ”இரு அந்த விளை வரைக்கும் ஆல மூடு வரைக்கும் ”என்று என் பின்னாலேயே வந்துகொண்டிருந்தாள்

ஆலமூடு வந்ததும் ”போய்டுவியா ”எனும்போது நான் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பதை ஒவ்வொருதடவையும் நான் மறக்க முயல்வேன் பதட்டத்தோடு

ஆனால் மற்றபடி நான் அன்றைய நாளில் வேறெந்த வித்தியாசத்தையும் உணரவில்லை

மதிய உணவுக்கு பிந்தைய பீரியடில் எல்லோரும் உறக்கக் கலக்கத்தில் இருந்தபோது நாராயணன் குட்டி பள்ளிக்கே வந்து பதட்டத்துடன் என்னை அழைத்துப் போனான்

”கொச்சு மோனே வரணும் சீக்கிரம் ‘ஏறக்குறைய சைக்கிளில் வைத்து என்னை வைத்துக் கொண்டு பறந்தான்

”ஏனித்தனை வேகம் நாராயண குட்டி?மெதுவாப் போ.எங்கே போறே வீட்டுக்குப் போலியா?”‘

”ஒரு அபத்தம் பத்திப் போயி.உடனே கொச்சுமோனை அம்மை பார்க்கணும் ”என்றான் அவன் திரும்பாமல் நுரை தப்ப சைக்கிளை அழுத்திக் கொண்டு

நான் விளங்காமல் ”அம்மை எங்கே?வீட்டில் இல்லையா?””

அவன் ஒருகணம் சைக்கிளை நிறுத்தி என்னைத் திரும்பப் பார்த்து ”ஐயோ ”இல்லியே ”என்று வெடித்தழுதான் ”

அம்மையின் கடைசி கணங்களில் என்னை அவளிடம் காட்டவேண்டும் என்று அவன் நினைத்ததாய் பின்னால் சொன்னான்

” உன்னை அவ கிட்ட காமிக்கனும்னு நினைச்சேன்.காமிச்சா எல்லாம் சரியாயிடும்னு ஒரு தோணல் ”

ஆனால் எதுவும் சரியாகவில்லை அம்மையின் முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை . ரொம்பக் கோரமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்

ஆனால் என்னால் அம்மாவை மன்னிக்கவே முடியவில்லை.அம்மா ஏனப்படி செய்தாள் ?என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக எப்படி அவளுக்கு எப்படி மனம் வந்தது?என்ன மனத் துயரம் என்றால் என்ன ?எனக்காக அவள் அதை எல்லாம் சகித்துக் கொண்டு இருந்திருக்கக் கூடாதா ?அவளுக்கு தான் என்பதுதானே முக்கியமாய்ப் போயிற்று ?

”அம்மா நான் உன்னை வெறுக்கிறேன் ”என்று எத்தனையோ இரவுகள் எழுந்து கத்தியிருக்கிறேன் ‘நான் உன்னை மறந்து போவேன்”என்று அலறுவேன்.”நீ என்னை மறந்து போனது போல’

நாராயணன் குட்டி எழுந்து என்னை அனைத்துக் கொள்வான் ”அப்படில்லாம் பேச கூடாது உங்கம்மாவுக்குப் பிடிச்ச பூவே நீ தாண்டே ”

”பொய்.பிறகு ஏன் அவ அப்படி செய்தா?””

நாராயணன் குட்டி தத்தளிப்பான் ”பின்னால உனக்குப் புரியும்.இப்பப் படு அம்மையை வெறுக்காம ‘

ஆனால் எனக்குப் பின்னாலும் புரியவில்லை

யாருமே அதைச் சொல்லவில்லை பேச மறுத்தார்கள். வளர்ந்த பிறகு கூட மாமா அதைப் பற்றிப் பேச விரும்பியதில்லை பெரியப்பா அதில் சம்பந்தப் பட்டிருப்பது மட்டும் தெரிந்தது .அல்லது எனக்குப் புரிந்தது .நான் நம்ப மறுத்தேன்

ஆனால் இப்போது எதற்கு இந்த ஊர்ருக்கு வந்திருக்கிறேன் ?அந்த கேசவன் சொன்னது போல வாக்களிக்கப் பட்ட சொத்து காரணமா ?அல்லது அல்லது நான் இங்கு வந்தது அம்மாவைத் திரும்பவும் மீட்டேடுக்கவா ?
அம்மா அம்மா ஏன் இறந்து போனாய் என்னை விட்டு ?

பழைய கேரளபாணி ஓடும் மரமும் சேர்ந்து கட்டப் பட்ட ஓட்டு வீடு எங்களது . நடுவில் யாரோ கொஞ்சம் புதுப்பிக்க முயன்று கைவிட்டிருப்பது தெரிந்தது அப்பாவின் உறவினர்கள் யாரோ அங்கு சில காலம் இருந்து பிறகு சில காரணங்களால் போய் விட்டதாக கேசவன் சொன்னார்

நடுவில் இருந்த நீண்ட சுவருக்கு அப்பால் பெரியப்பாவின் வீடு .என் கைகள் நடுங்கின .நீண்ட கூரை உள்ள தாழ்வாரம் உள்ள வீடு தாழ்வாரத்தில் உள்ள ஈசி சேரில் முன்பு போலவே பெரியப்பா கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தார்

தாத்தாவுக்கு இளையதாரத்து மகன் பெரியப்பா.தாத்தா நெடுநாட்கள் குழந்தை இல்லை என்று இன்னொரு மலையாளப் பெண்ணைக் கட்டிக் கொண்டார் கட்டிய மறுவருடமே பெரியப்பாவும் ஆறு மாத இடைவெளியில் அப்பாவும் பிறந்ததாக சொல்வார்கள்

அப்போதே இரண்டு வீட்டுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது தாத்தா இறந்த பிறகும் வேறு அது தொடர்ந்தது .நடுவில் கொஞ்சநாள் பாண்டி -மலையாளி சண்டையாகவும் அது ஆனது ஒரே ஒரு தடவை நான் அந்த ஆச்சியைப் பார்த்திருக்கிறேன் நினைவிருக்கிறது .மஞ்சள் நிறத்தில் ஒரு பூசணிப் பழம் போல இருப்பாள் செம்பருத்தி செடிக்கருகில் நின்று கொண்டிருந்த என்னை சுவரின் அடுத்த பக்கம் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் நான் சிரித்ததும் சட்டென்று கீழே துப்பி விட்டு உள்ளே போய் விட்டார் .

அப்பாவுக்கு கல்யாணம் ஆகும் முன்ப பெரியப்பாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது ஆனால் கல்யாணம் ஆன மூன்றாம் மாதமே பெரியப்பாவைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் வீட்டுக்கு தெங்கு பறிக்கவரும் நாடாருடன் ஓடிப் போய் விட்டதாகச் சொல்வார்கள் .அவர்களைத் தேடி பெரியப்பா வெறியுடன் பாண்டி ,வடகேரளம் ,கர்நாடகா என்று அலைந்தார் என்று சொல்வார்கள் அவர்களைப் பிடிக்கவே முடியவில்லை சிலர் அவர் அவர்களைக் கொல்லூர் பக்கம் எங்கோ கண்டு வெட்டிப் புதைத்து விட்டதாகவும் சொல்வார்கள்

பெரியப்பா தமிழ்நாடு போலீசில் இருந்தார் .ஆனால் அவருக்கு தமிழர்கள் மேல் ஒரு இகழ்ச்சி இருந்தது.திருநெல்வேலியில் லூர்து நாதன் கலவரத்தின் போது அவர் நெல்லையில் பணிபுரிந்தார் அப்போது அவர் மிக முரட்டுத் தனமாக நடந்து கொண்டார் என்பார்கள் .” நட்டல் எலும்பு இல்லாத எரப்பாளிகள் ”என்றவர் அடிக்கடி சொல்வார் .எப்போதும் அவர் காலையில் நானும் அம்மாவும் ஆற்றுக்குக் குளிக்கப் போய் விட்டு வரும் வேளைகளில் காக்கி திருவுசருடன் தாழ்வாரத்தில் ஷூவத் துடைத்தபடி இதே போல உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்

அப்போது எல்லாம் அவர் கண்கள் எங்களைப் பின் தொடர்வதைப் பர்த்திருக்கிறேன் .ஒருதடவை ”என்ன இருந்தாலும் பாண்டிக் காரிங்க குண்டி மாதிரி நம்ம ஸ்திரீகளிடம் இல்லை ”என்று உள்ளே யாரிடமோ சிரித்தவாறே சொன்னார்

அம்மா என்னை இறுக்க அணைத்தபடியே வீட்டுக்குள் வேகமாய் இழுத்துச் சென்றுவிட்டாள்

அப்பாவுடன் அவர் பேசுவதே இல்லை.அல்லது எதையாவது ஏவும் தொனியில் பேசுவார்.அப்பாவுக்கு அவர் மேல் அச்சம் இருந்தது .அவருக்கு எதன் மீதுதான் அச்சம் இல்லை ?

ஒரு தடவை ஹோட்டலில் தினம் தினம் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் போன ஒரு சட்டாம்பியிடம் அடிவாங்கி கிழிந்த சட்டையிடனும் உதட்டுடனும் வந்தார் என்ன ஏது என்று யாரிடமும் சொல்லாமல் முகட்டைப் பார்த்தவாறே ஒருவாரம் ஹோட்டலுக்குப் போகாமல் படுத்துக் கிடந்தார் ஒருவாரம் கழித்து விபரம் தெரிந்துகொண்ட பெரியப்பா வாசலில் இருந்தவாறே ”உனக்கேத்துக்குடே வேஷ்டியும் மீசையும் ?ராத்திரியான பொண்டாட்டி குன்னையை மோந்து பார்த்துகிட்டே கிடந்தா மட்டும் ஆம்பிள்ளையா?”என்று துப்பினார் ”என்னைக் கண்டோ?ஒரு பய தெருவில எதிர்த்து ஒரு பார்வை பார்ப்பானா?அப்படி ஜீவிக்கனும்டே.இதுவென்ன ஜீவிதம்.செருப்புக் கீழே தேயற பீ போல”

அப்பா சுருங்கிப் போனார். அதன்பிறகுதான் அவர் நிறைய குடிக்க ஆரம்பித்தார் அவர் கண்கள் எப்போதும் பேசும் நபருக்குப் பின்னால் யாரையோ பார்ப்பது போல அலைய ஆரம்பித்தன

அம்மா அவரை எவ்வளவோ நிலைப்படுத்த முயற்சித்தாள்

ஒருதடவை அவரை குடிக்கிற இடத்தில் யாரோ அடித்துவிட்டார்கள் நினைவின்றி கிடந்தவரை யாரோ தூக்கி வந்து வீட்டு முற்றத்தில் போட்டார்கள்

”ஏய் குட்டி ..இத உண்ட பர்த்தாவு.பொறுக்கிக்கோ ”

அவர் உடம்பெல்லாம் அடிபட்டிருந்தது. சட்டையெல்லாம் சிறுநீர் நாற்றம். முகம் கன்னி இருந்தது அப்பாவை அப்படியே கிணற்றடிக்குக் கூட்டிப் போய் நாராயணன் குட்டி உதவியுடம் அம்மை குளிப்பாட்டி வீட்டுக்குள் தூக்கிப் போனாள் எல்லாவற்றையும் வாசலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் கண்களை அப்பா ஒரு கணம் பார்த்து அதிர்ந்து மீண்டார.பெரியப்பா சரேலென்று எழுந்து ”தூ.”என்று காறித் துப்பியவாறு உள்ளே போனார்

கிருஷ்ணன்

அன்றிரவு உள் அறையில் அப்பா வலி தாங்காது முனகிக் கொண்டே இருந்தார் அவன் அந்த முனகலைக் கேட்டவாறே படுத்துக் கொண்டிருந்தான்.ஒரு அடிபட்ட மிருகத்தின் முனகல் போலிருந்தது அது .மெல்ல அதைக் கேட்டவாறே அவன் தூங்கிப் போனான் நடுவில் எப்போதோ விழித்த போது கட்டிலில் அப்பா படுத்திருப்பதும் அம்மா அவர் கால்களை அழுதவண்ணம் முத்தமிட்டுக் கொண்டிருப்பதும் பூ விளக்கு வெளிச்சத்தில் மெலிதாய்த் தெரிந்தது .அவர் தனது நடுங்கும் கைகளால் அவள் தலையை வருடியவன்னமே தாழ்ந்த குரலில் எதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களிடையே அந்தரங்கமான தருணம் என அதைத்தான் அவன் சொல்வான் .ஏனோ கண்ணீர் கசிய அவன் அதை அங்கிருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்

அதற்கு அடுத்த வாரம்தான் அப்பா திடீரென்று காணமல் போனார் .வழக்கம் போல ஒரு நாள் ஹோட்டலுக்குப் போகிறேன் என்று சொல்லிப் போனவர் வரவே இல்லை நாராயணன் குட்டி எங்கெங்கோ தேடித் பார்த்தான்.ஹோட்டல் ஸ்தம்பித்து நின்றுபோனது நாராயனன்குட்டிக்கு அதன் காரியங்கள் பிடிபடவில்லை அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்பாவை பெரிதாக மதிக்கவில்லை என்று ஒருநாள் மனம் வருந்திச் சொன்னான்.அவர்கள் அவரை தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கிறார்கள்.ஒரு ஓநாய்க் கூட்டத்துக்கு நடுவே ஒரு ஆடு போல அவர் இருந்து வந்திருக்கிறார் என்று அவன் சொன்னான்.அம்மா அதை உதடு துடிக்கக் கேட்டவாறு அமர்ந்திருந்தாள் .ஒரு பலவீனமான தருணத்தில் அம்மா முதன்முறையாக பெரியப்பா வீட்டுப் படியேறி அப்பாவைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டாள்

பெரியப்பா இகழ்ச்சியுடன் ”அவனொரு பொட்டன் .தானா திரிச்சி வருவான்.”என்றார் .”பிறகு திரும்பி ”அவனுக்கு நின்னை வச்சு ஜீவிக்கத் தெரியலை .பட்டி கையில கிட்டின தெங்கு போல.வரெல்லிங்கில் பூர்வ புண்யம்னு விடு .உன்னிட ஜீவிதத்தை ஓர்த்து கரயண்டாம்.இவிட ஆள் உண்டு”

அம்மா விடுவிடுவென்று ஓடி வந்துவிட்டாள் .அன்றிரவு முழுவதும் அவள் உடல் அதிர்ந்து கொண்டே இருந்தது .

நாராயணன்குட்டி மிக அரிதாகக் கோபமடைந்து ”ஏட்டத்தி அவிட ஏன் போய் நின்னது?அவனொரு மனுசனே அல்ல .என்னிடம் ஒரு வார்த்தை மின்டாம.ச்சேஏட்டத்திக்குத் தன்னோட சுயம் மனசிலாகணும் .தேவ ஸ்திரீகள் ஒருபோதும் இன்னொரு கால் சென்னு தாழறது ”என்று கத்தினான்

அதன்பிறகு பெரியப்பாவின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது .முன்பு இல்லாதவகையில் அவர் அம்மாவை வழியில் காணும் போது எல்லாம் பேச முயற்சித்தார்.ஒரு தடவை கிருஷ்ணனை அழைத்து ”இந்தா உன்னோட அம்மைக்க நாட்டில இருந்து லாலா பலகாரம் .அவ கிட்டே கொடு”என்று கொடுத்தார்.அம்மை அதை தூர எறிந்துவிட்டாள்

ஒருநாள் இரவு .ஆடி மழை அடைக்கப் பெய்து கொண்டிருந்தது .குளிர் ஒரு ரகசியம் போல எல்லாவற்றையும் போர்த்தி இருந்தது .நாராயணன் குட்டி மார்த்தாண்டத்தில் ஹோட்டலிலேயே தங்கிவிட்டான் அம்மா கொஞ்சநேரம் தணிந்த குரலில் தேவாரம் படித்துக் கொண்டிருந்தாள் .அந்த ஒலி குளிரைக் குறைப்பதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது. பிறகு விளக்கின் திரியைக் குறைத்துவிட்டு அவனருகில் வந்து படுத்தாள் அவள் உடம்பில் இருந்து நாகலிங்க பூவின் வாசமடித்தது ”இந்தப் பூவை இனித் தொடாதேம்மா ”என்றான்

”ஏம்டா?இந்த வாசனை பிடிக்கலையா?நல்ல வாசம்டா ”

”இல்லே ராத்திரி எல்லாம் ஆத்துல இருந்து ஏறி பாம்பு பாம்பா வீட்டுக்குள்ள வருகிற மாதிரி கனவில வருது’
அவள் ”ச்சீ.உனது கற்பனையும் நீயும் .தூங்கு”என்று அவனை அணைத்துக் கொண்டாள்

மரக் கூரையின் மீது மழை தட்டும் ஓசையைக் கேட்டவாறே அவர்கள் கண்மூடும் நேரத்தில் முன்கதவின் வளையத்தை யாரோ இழுத்துத் தட்டும் ஓசை கேட்டது

அம்மா அலுப்புடன் எழுந்து ”நாராயணன் குட்டியா இருக்கும்.அவர் கிட்டே காபிப் பொடி வாங்கித் தரச் சொல்லி கேட்டிருந்தேன்.காலைல காபி இல்லேன்னா தலை வலிக்குது ..வாங்கிட்டு வந்திருப்பார் ஆமா இந்நேரம் வண்டி எது ?”‘என்று ஒரு பூவிளக்கை ஏற்றிக் கொண்டு போனாள்

கிருஷ்ணன் படுக்கையில் கிடந்தவாறே மழை பொழியும் நாடு முற்றத்தை சுற்றிக் கொண்டு அம்மா போய் ஒரு கையில் விளக்குடன் கதவைத் திறப்பதைப் பார்த்தான் ஒருநிமிடம் அவள் கண்களில் திகைப்புடன் பின்வாங்குவதைப் பார்த்தான் பிறகு சட்டென்று கதவை அடைத்து அடி தண்டாவைப் போடுவதைப் பார்த்தான் .அம்மா ஏறக்குறைய திரும்பி அவனை நோக்கி ஓடி வந்தாள் .கிருஷ்ணன் எழுந்து என்ன என்றதற்கு அம்மா பதில் சொல்லவில்லை

”கிருஷ்ணா இன்னிக்கு நீ தூங்கக் கூடாது சரியா?”‘என்றால் பிறகு அப்படியே சரிந்து உட்கார்ந்து முழங்கல்களைக் கட்டிக் கொண்டாள் .அவள் உடல் அதிர்வதில் இருந்து அவள் அழுகிறாள் என்று தெரிந்தது .கிருஷ்ணன் எழுந்து சற்றே சுற்றிப் பக்கவாட்டு அறைக்குப் போய்ச் சாவித் துளை வழியே வெளியே பார்த்தான் .தாழ்வாரத்தில் பெரியப்பா தனது காக்கி ட்ரவுசரும் முண்டா பனியனுமாக உலவிக் கொண்டிருந்தார் அவர் கண்கள் சிவந்திருந்தன.பீடியை இழுத்து இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தார்.சற்று நேரத்துக்கொரு தடவை திரும்பி வந்து கதவு நாராங்கியை எழுப்பித் தட்டிக் கொண்டிருந்தார்.மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது கிருஷ்ணன் திரும்பி வந்து சற்று நேரம் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.இப்போது அவள் உடம்பிலிருந்து நாகலிங்கப் பூவின் மணம் அதிகமாக எழும்பி வருவது போலிருந்தது .ஏனோ அந்த மணம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று தோன்றியது அந்தப் பூவின் அபாரமான நெடி பாம்புகளை இழுத்துவரும் என்று நாராயணன் குட்டி சொல்வதுண்டு .எதோ நினைத்தார் போல் பூஜை அறைக்கு சென்று அந்தப் பூவை எடுத்துக் கொண்டுபோய் நாடு முற்றத்த்தில் விழுந்து கொண்டிருந்த மழைத் தண்ணீரில் விட்டான்.அது சுழித்துக் கொண்டு மடை வழியாக வெளியே போனது.பிறகு மறுபடியும் சாவித்துளை வழியே வெளியே பார்த்தான் .பெரியப்பா போயிருந்தார்

ஒரு மாதம் கழித்து அப்பாவை யாரோ குருவாயூரில் யானைத் தாவளத்தில் யானைப் பாகர்களுக்கு எடுபிடி வேலை செய்துகொண்டு இருப்பதாக சொல்லி நாராயணன்குட்டி அழைத்துவந்தான் வரும்போதே அவர் போதையில்தான் வந்தார்.வரும்போதே ‘இடத்தோட்டு வலத்தோட்டு கால் குத்தி இரி..எழி ”என்று உரக்கப் பிதற்றிக் கொண்டே வந்தார்.எல்லாம் யானைகளைப் பழக்கும் சொற்கள் என்று நாராயணன் குட்டி சொன்னான்

நாராயண குட்டி ஏறக்குறைய அவரைத் தூக்கிக் கொண்டு வந்தான்.சரியாக வாசல் ஏறும்போது பெரியப்பா வெளியே டூட்டிக்குப் போவதற்காய் வெளியே வந்தார்.அப்பாவைப் பார்த்ததும் நின்று ஒரு கணம் ”எடே இப்போ இங்கோட்டு வந்ததன்ன ?பொண்டாட்டி குன்னைக்க மணம் ஓர்மை வந்தோ ?”என்றார் அப்பாவின் கண்கள் மிக அபூர்வமாய் எழுந்து அவரை நோக்கின. ஒருவேளை உள்ளிறங்கி இருந்த மதுவாய் இருக்கக் கூடும்.சட்டென்று சன்னதம் வந்தது போல ”இடத்தோட்டு”என்று கத்தினார்.”பின்னோட்டு !”பெரியப்பா ஒருகணம் அஞ்சிப் பின்வாங்குவதை கிருஷ்ணன் கண்டான் அப்ப்பாவுக்கு பெரியப்பா அஞ்சிய ஒரே தருணம்

அதன்பிறகு அப்பா அடிக்கடி காணாமல் போவதும் பின் வருவதுமாக இருந்தார்

ஆட்டோ சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளுத்து மெலிந்த ஒரு அம்மா வந்தார் மலையாள சேலையும் நெற்றியில் நீறும் அணிந்திருந்தாள்

”கிருஷ்ணன் அல்லே?வரு ”

கிருஷ்ணன் தயங்கினான் அவர் புன்னகைத்து ”நான் வலியம்மை.நீ என்னைப் பார்த்ததில்லை ”என்றார்
கிருஷ்ணன் குழம்பினான்

இது எந்த வலியம்மை ?

அவள் புரிந்துகொண்டது போல உள்ளே ”கேசவா ”என்றார்

கேசவன் உள்ளிருந்து முகத்தை துடைத்துக் கொண்டே வந்து ”ஹா ..வரணும் வரணும் ”என்றார் .பிறகு தாழ்ந்த குரலில் ”உங்க பழைய வீட்டை சுத்தம் பண்ணி வச்சிருக்கேன் அங்கே தங்கலாமா ?..அல்லது ..தொட்டு அடுத்து என்னோட வீடு .அங்கே தங்கலாமா ?”

லலிதா பழைய வீட்டில் தங்க விரும்பவில்லை என்பதை கையைப் பிடித்து இழுத்து உணர்த்தினாள்
கிருஷ்ணனுக்குமே அது தயக்கமாய் இருந்தது

கேசவனின் வீடுபழைய வீடு திருத்தப் பட்டு நவீனமாக்கப் பட்டிருந்தது .வாசப் படியின் மீது பெரிய புன்னகையுடன் நாராயாணன் குட்டியின் போட்டோ இருந்தது.கிருஷ்ணன் அதன் முன்பு சற்று நேரம் நின்றான்.கேசவன் பின்னால் வந்து ”ஓர்மைகள் மரிக்குமோ என்று பாடினார் மெல்லிதாக அதற்குள் கேசவன் குட்டியின் மனைவி வந்து ”வரணும் ”என்று லலிதாவவின் கையைப் பிடித்து இழுத்துப் போனாள்

அவர்களுக்கு தனி அறை தரப் பட்டது .விஜய் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தான் அதுவே பயமாக இருந்தது.அவனுக்கு பெரிய உடல்கேடுகள் வருவதற்கு முன்பெல்லாம் அப்படித்தான் இருப்பான் .அவனைக் கிடத்திவிட்டு லலிதா கிட்ட வந்து ”என்ன ரொம்ப அமைதியிகிட்டீங்க.கவலைப் படாதீங்கெல்லாம் சரியாயிடும் .அதான் வைத்தியர் சொல்றாரே .சீக்கிரமா இந்த சொத்து விவகாரமும் முடிச்சிட்டா நமக்கு என்ன கவலை ?””

கிருஷ்ணன் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தான் .அவன் மனம் அவள் சொலும் விபரங்களிலேயே இல்லை.ஊருக்கு வந்ததும் சட்டென்று அம்மாவின் எண்ணங்கள் நீரில் அழுத்தப் பட்ட பந்து மீண்டும் மேலே வருவது போல வரத் துவங்கி இருந்தன அது அவனுக்கு மிகுந்த அசவுகர்யத்தைத் தந்தது. பெரியப்பாவின் கண்களில் இன்னமும் தெரிந்த விலகல் அச்சமூட்டியது

என்ன நடக்கிறது இங்கே ?நான் இங்கு என்ன செய்கிறேன் ?

இரவுணவு முடிந்ததும் கேசவன் அறைக்கு வந்து ”கொஞ்சம் வெளியே போகலாமா ?””என்றார்


நான்

இரவு ஒரு பெரிய பனித்திரை போல பூமியின் மீது இறங்கி இருந்தது.இவ்வளவு குளிர் அனுபவித்து நாளாயிற்று.கர்க்கடக மாசத்தில் இந்த பகுதிகளில் மழைக் குளிர் தலையைத் துளைத்துக் கொண்டுஇரங்கும்,ஓடும் மரமும் ஓடும் அந்த வீடு மட்டப்பா போட்ட மற்ற வீடுகளை விட குளிருக்கும் வெயிலுக்கும் இதமாகவே இருக்கும் எனினும் குளிர் இருக்கத்தான் செய்யும்.அம்மா ஆடிக் கஞ்சி என்று தினமும் ஒன்று தருவாள்.தொற்று நோய்கள் தீண்டாதிருக்க வழக்கம்.”இப்போ இங்கேயும் எல்லோரும் ஓட்ஸ் porridge தான் ”என்று சிரித்தார் கேசவன்.

சுவர்க் கோழிகள் கூட்டு சேர்ந்துகொண்டு ஒரு பெரிய பில்ஹார்மொனிக் குழு போல இசைத்துக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு பூ மிக அண்மையில் பூத்திருந்தது ”கேசவன் மூச்சை எழுத்துக் கொண்டு ‘நிஷா கந்தி!”என்றார். .பிறகு அவர் சுருக்கமான சொற்களால் பெரியப்பாவின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னார்.உம் கொட்டியவாறே கதை கேட்கும் குழந்தைகள் போல சீரிகைப் பூச்சிகளின் சத்த மட்டும் விட்டுவிட்டு எங்களைத் தொடர்ந்தது

நாங்கள் போனபிறகு பெரியப்பா அருமனையிளிருந்து இப்போதிருக்கும் வலியம்மையைக் கட்டிக் கொண்டார்.அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தாள் .வத்சலா என்றழைக்கப் பட்ட அந்த வத்சு எனது அம்மையின் சிறு அச்சு என்று கேசவன் சொன்னார் .நான் திடுக்கிட்டு ”அது எப்படி சாத்தியம் ?”என்றேன்.”எனது அம்மாவை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பே இல்லை.”

கேசவன் சிரித்து ”.எனது அப்பா உங்கள் அம்மையைச் சொல்லி சொல்லி எங்களைப் பார்க்க வைத்திருக்கிறார்”என்றார்

எனக்கு அந்த அவதானம் சற்று அசூயையை அளித்தது.சம்பந்தமே இல்லாது எதோ உளறுகிறார் என்று நினைத்தேன்.

நாராயணன் குட்டியின் மனைவி நான் பிறப்பதற்கு முன்பே அவள் தாயின் ஊருக்குப் போய்விட்டாள் .குட்டி அம்மையை ஏறக்குறைய ஆராதிப்பது போல நடந்துகொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று கேள்வி.சண்டை என்றில்லை . மாதத்துக்கொரு முறை குட்டி அங்கு சென்று அவர்களின் கைக் கார்யத்துக்குக் காசு கொடுத்துவிட்டு வருவார் .அம்மை அவர்களைப் பற்றி அவ்வப்போது விசாரிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.ஒருதடவை அம்மா குட்டியிடம் ”குட்டி போய்க் குடும்பத்தோட இருக்கணும் ”என்றதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை. கேசவனை நான் பார்த்த நினைவே இல்லை.அவர் என்று அம்மையைக் கண்டார் என்பதும் சந்தேகமாகவே இருந்தது ஆனால் அவர் எதனால் இருவரையும் சம்பந்தப் படுத்திக் கொண்டார் என்று தெரிந்த பொழுது நடுங்கிப் போனேன்.

வத்சலா இருக்கும் இடம் எல்லாம் ஒளி இருந்தது.காலைவெயிலில் பொலியும் மலர் போலவே அவள் எப்போதும் இருந்தாள் .நாராயண குட்டி மட்டுமல்ல அந்த வீட்டுக்கு வருகிற எல்லோருமே அவள் அவளது கொச்சம்மையைப் போல இருப்பதாக சொனார்கள் ”அனந்தராமன் அதை விரும்பவில்லை.ஒருதடவை அவ்விதம் சொன்ன ஒரு கூடைக் காரியை மிகக் கடுமையாகக் கண்டித்தார் ”

”அப்படியே ஆசாரிக்க தீயில இட்ட சொர்ணம் மாதிரில்லா மின்னுரா”.என்பார் நாராயண குட்டி ”அப்பா அவளுக்க பூசாரியாவும் ஆகிப் போனார்”என்றார் கேசவன்.”ஆனா அப்பா சொன்னதில உண்மை உண்டும்.அவோ மனுசப் பெண்ணே இல்லை.என்னைவிட பத்து வயசு கிட்ட சின்னவ அவ.ஆனா என்னால அவ கண்ணைப் பார்க்கவே முடிஞ்சதில்லை .நான் கொஞ்சம் தமிழ் படிச்சிருக்கேன்.சிலப்பதிகாரம்.படிச்சப்ப வத்சலாவுக்கு கொஞ்சம் கண்ணகிக்க சாயல் உண்டு ன்னு தோணிருக்கு.உங்க அம்மைக்கும் அந்த சாயல் உண்டும்பார் அப்பா.கண்ணகியோட கண்ணு.பதிமூணு வயசில கோவலனோட கல்யாணம் ஆகிப் போறஅன்னிக்கு இருந்த கண்ணு.ரொம்ப சுத்தமான ஒரு பொருள்.அவ.நாம அழுக்குத் துணி.அப்படிங்கிற மாதிரி.ஒருதடவை ஒரே ஒரு தடவை அவளோட வெறும் தோளைப் பார்த்தேன். உயிர் போறாப்ல ஆயிடுச்சு.பரிசுத்த நிர்வாணம்.சொன்னா சிரிப்பா இருக்கும் உனக்கு.எனக்குக் காய்ச்சல் வந்திடுச்சு”

உண்மையிலேயே நான் சிரித்தேன்.”நெசம்மாவே உங்க அப்பாவோட புள்ளதான் நீங்க.”

”வத்சு பிறந்தப்புறம் அனந்தராமனே ஒரு பூசாரியாப் போனார் தெரியுமா அவர் மூஞ்சில எப்பவுமே இருக்கற இளக்காரம் ஆங்காரம் போயிடுச்சு.ஒரு கர்வச் சிரி தான் இருந்தது.இப்போ.எங்களுக்கு எல்லாம் ஆத்தாமையாக் கூட இருந்தது.இந்தாளுக்கு இப்படி ஒரு பொண்ணா ?கோட்டி நாய் கையல கிடைச்ச பொருள் போல..”என்றார்.”ஆனா பாரு.தெங்கு எப்பவுமே நாய்ங்க கைய்லத்தான் கிடைக்குது.அதுவும் கோட்டி நாய்ங்க கையில.அது எதுவும் விதியோ என்னவோ.வத்சலா வளர்ந்து பெரிசாகி அருமனை ஸ்கூலுக்குப் போனா.அவ வயசுக்கு வந்த அன்னிக்கு இங்க பெரிய ஒரு உத்சவமே நடத்தினாரு உங்க பெரியப்பா.வழக்கமா இங்கே அப்படிப் பண்றதில்லை.அது ஒரு பாண்டிப் பழக்கம்.இருந்தாலும் அனந்தராமன் அதைப் பண்ணார் .வத்சலாவுக்கு படிப்பு அவ்வளவு சரியா வரலை.எல்லாத்திலயும் ஆவரேஜ்தான்.. ஆனா மத்த விசயங்கள்ல சுட்டி.அவளுக்கு விளையாட்டுல கூட ஆர்வம் இருந்தது .ஒருபக்கம் முழுப் பெண்மை.இன்னொருபக்கம் கொஞ்சம் அச்சுறுத்தும் பௌருஷம்.ரெண்டுமே அவ கிட்டே இருந்தது.அவளுக்கு கோபம் வரும்போது கண்ணு லேசாக விரிஞ்சு தாடை சதுரமாகும் பொது கொடுங்களூர் பகவதி மாதிரிதான் இருக்கும்..நீ கொடுங்களூர் போயிருக்கியா”

நான் போகலை என்று தலையசைத்தேன்

”போகணும் என்றார் .பிறகு நின்று பையிலிருந்து எடுத்து எதையோ வாயில் போட்டு அதக்கிக் கொண்டார் .புகையிலை.எனக்கு சட்டென்று நாராயனன்குட்டியின் நினைவு வந்தது.அவரும் புகையிலை போடுவார்.கும்பகோணம் புகையிலை .அதன் பன்னீர் வாசனை சட்டென்று என்னை அமைதியிழக்க வைத்தது ”எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு சார்”என்றேன்.

அவர் நின்று ”அப்போ போயிடலாமா ..நாளைக்குப் பேசிக்கலாம்..மறந்தே போயிட்டேன்.ரொம்ப தூரப் பிரயாணம்”

திரும்பும்போதுதான் நான் அந்த இடத்தைக் கவனித்தேன்.ஆலமூடு.அம்மை என்னை, நான் அம்மையை கடைசியாகப் பார்த்த இடம்.

சீரிகைப் பூச்சிகள் எங்களைத் தொடர்வதை நிறுத்தி இருந்தன

ஆலமரத்தின் விழுதுகள் மெல்ல அசைந்து எங்களைத் தொடுவது போல நீண்டன

முதுகு சொடுக்கியது நான் சற்றே பதட்டத்துடன் ”போவோம்”என்றேன்

நாங்கள் திரும்பி வீட்டுக்கு வந்தோம்.கேசவனின் மனைவி நிஷாகந்தியின் மணத்தோடு புன்னகைத்தவாறே வந்து கதவைத் திறந்தாள்.

”அவங்க எப்பவோ உறங்கியாச்சு”

எனக்கு ஒருகணம் பொறாமை அடிவயிற்றிலிருந்து ஒரு கேவல் போல எழுந்தது எவ்வளவு நிம்மதியான நிதானமான வாழ்க்கை இவர்களுடையது.பூசாரிகளின் வாழ்க்கை.தொழுபவர்களின் வாழ்க்கை.அவர்கள் தொழுகிற தெய்வங்களின் வாழ்க்கை எவ்வளவு தனிமையானது உக்கிரமானது அலைக்கழிப்புக்கு உள்ளானது என்று அவர்கள் அறிவார்களா ?

அறையில் கொசு வலைக்குள்ளே விஜயும் லலிதாவும் உறங்கிக் கொண்டிருந்தார்கள் சத்தம் கேட்டு அவள் ஒருகண்ணை மட்டும் சுருக்கித் திறந்து ”இந்த பேனை ஆப் பண்ணிடுங்க.ஜன்னலையும் சாத்துங்க எப்படி குளிருது இங்கே! தவிர எதோ கடுமையான ஒரு நெடி அடிக்குது இங்கே . ”

எனக்கு எந்த நெடியும் அடிக்கவில்லை

விஜயின் நெஞ்சு பெரிய சத்தத்தோடு எழுந்து எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தது.அவனுக்கு வீங்கிய இதயமும் கூட இருந்தது ஆகவே ஒவ்வொரு மூச்சும் அவனுக்கு ஒரு பிரயாசைதான்

இவனுக்கு எப்படி குணமாகக் கூடும் ? விசுவாசம் வேணும் விசுவாசக் குறைவு பாவம் என்று வைத்தியர் மகன் சொன்னது நினைவு வந்தது

ஒருகணம் அவன் சீக்கிரமே இறந்துவிட்டால் நல்லது என்று தீவிரமாக தோன்றியது.நான் அந்த எண்ணத்தின் சுயநலத்தை கொடூரத்தை எண்ணித் திடுக்கிட்டேன் மனம் கசந்தது

பெருமூச்சுடன் ஜன்னல் பக்கம் போனேன்.நிலவொளியில் எனது வீடும் பெரியப்பாவின் வீடும் உறைந்த ஓவியங்கள் போலத் தெரிந்தன.முனைகளில் பனி சொட்டும் ஓவியங்கள் ஒரு பெரிய மௌனம்.யாரோ சக்கரத்தை நிறுத்திவிட்டார் போல.யாரோ நான் எதோ பேச எதுவோ செய்யக் காத்திருந்தாற்போல..

நான் திரும்பவந்து விஜயை முத்தமிட்டுவிட்டு படுக்கையில் படுத்தேன் .எழுந்தபோது மறுநாள் உச்சி ஆகியிருந்தது

வீட்டில் யாரையும் காணவில்லை.மதுவுண்டவன் போல உறங்கியிருக்கிறேன்.தள்ளாடி அவிழ்ந்துகிடந்த வேஷ்டியை முடிந்துகொண்டு வெளியே வந்தேன். பின்னால் தோட்டத்தில் சத்தம் கேட்டது. அருவி போல பொழியும் ஒளியில் கேசவன் எதையோ கொத்திக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து ”..ஹ.முழிச்சோ?”என்றார் .” அவங்க எல்லோரும் கோயில் போயிருக்காங்க..இன்னிக்கு ஆடி ஒடுக்கத்து வெள்ளி விசேசமா இருக்கும் .”என்றார் ”உங்க வலியம்மையோட.”

நான் தயங்கி ”பெரியப்பா கோயிலுக்குப் போறதில்லையா..”

கேசவன் சிரித்து ”அது ஒரு யட்சி கோவில்.அவர் கிட்ட நெருங்க மாட்டார் ”என்றார் ”நான் நேத்து கதை முழுச்சாச் சொல்லலே இல்லியா…அது இருக்கட்டும்.நீ போய் பல்லு விளக்கி வா..நல்ல ஒன்னாம்தரம் கேரளத்துச் சாயா தராம்.”

அடுப்பு மூட்டி அவரே ஒரு பெரிய போணியில் சாயா போட்டு எடுத்து வந்தார் . உடம்பைத் துடைத்துக் கொண்டே ”வல்லாத விசர்ப்பு.இன்னிக்கும் மழை உண்டுன்னு தோணுது ”

சாயா உண்மையிலே நன்றாக இருந்தது

பிறகு அவர் வத்சலாவின் மீதி சரித்திரத்தைச் சொன்னார்

வத்சலா அருமனை மேனேஜ்மன்ட் பள்ளியில் படித்தாள்படிப்பு சுமார்தான்.ஆனால் பள்ளி சார்பாக நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டாள் .தடகளம் ,கோக்கோ என்ற இரண்டிலுமே அவள் பிரகாசித்தாள்.அனந்தராமனுக்கு அவளது விளையாட்டு ஆர்வங்கள் மீது கர்வம் இருந்தது ”பாண்டி ஸ்திரீ அல்ல என் பெண்.அவளுக்கு நட்டல் எலும்புண்டு.அவளை நான் போலீஸிலோ ராணுவத்திலோ சேர்ப்பேன் ”என்று சொல்லிக் கொண்டிருந்தார் .நிறைய கோக்கோ போட்டிகளுக்கு அவளைக் காணவென்றே அவர் போயிருக்கிறார் அந்த மாதிரி ஒரு போட்டியில்தான் வத்சலா அந்தக் அந்தக் காணிப் பையனைச் சந்தித்திருக்க வேண்டும் அவன் அவள் பள்ளியில் படிக்கவில்லை பெரும்பாலும் நாயர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே படிக்கிற பள்ளி அது.பத்து காணியில் அவர்களுக்கு என்றே ஒரு சிறப்புப் பள்ளி இருந்தது அதிலிருந்து வந்த பையன் .நான் அவனை ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன் வத்சலாவுக்கு நேர் எதிர் நிறம்.எண்ணைக் கருப்பு.கண்ணின் வெள்ளைகள் மட்டுமே சங்கு வெள்ளை.ஆனால் மார்புப் படங்கள் விரிந்து தட்டையாக எழுதியது போல இருந்தது பெரிய உயரம் இல்லை முக லட்சணமும் கூட இல்லை.மாடன் சாமி மாதிரி ஒரு மாட்டுச் சாயல் கொண்ட முகம்.

வத்சலா அவனிடம் என்ன கண்டாள் தெரியவில்லை .காணிகள் மந்திரவாதத்தில் பேர் பெற்றவர்கள் அவன் அவளை எதோ இடுமருந்து தின்னக் கொடுத்து மயக்கிவிட்டான் என்று சொன்னார்கள் எனக்குவிசுவாசம் இல்லை.ஸ்திரிகளின் மனம் பற்றிச் சொல்ல முடியாது .அவர்கள் எதன்மீது மீது படருவர்கள் என்று சொல்லமுடியாது .வெகுசீக்கிரமே அவர்கள் பழக்கம் பள்ளி முழுவதும் பேசப்படும் காதல் காவியமாகிவிட்டது பள்ளியிலிருந்து தப்பித்து அவள் அவனுடன் வனப் பகுதிகளில் உலவுவதாக சொன்னார்கள் ஒருதடவை அவர்கள் இருவரும் ஆடை இன்றி சுனையூற்று ஒன்றில் குளித்துக் கொண்டிருந்ததாக கிழங்கு கொண்டு வருகிற கிழவி வந்து சொன்னாள் .அப்போது அனந்த ராமன் தூத்துக்குடியில் இருந்தார்.அடிக்கடி ஊருக்கு வரமுடியாத பணி நெருக்கடி வலியம்மை வாசல் விட்டு வெளியே இறந்காதவள்.ஆகவே ஆரம்பத்திலேயே தடுக்க முடியவில்லை .மேலும் விஷயம் தெரிந்தால் அவர் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் யாரும் சொல்லத் துணியவில்லை ஆனால் பள்ளி நேரத்தில் வத்சலாவும் அவனும் பேச்சிப்பாறை அணையில் சுற்றுவதை நேரில் பார்த்துவிட்டு பள்ளி தாளாளர் அனந்தராமனிடம் சொல்லிவிட்டார் அவர் அனந்தராமனின் நண்பர்

அனந்தராமன் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை வீட்டிற்கு வந்த அவளிடம் விசாரித்தார் வத்சலா பயப்படவில்லை ஆம் என்று நெஞ்சு நிமிர்ந்து சொன்னாள் .தான் அவனுடன் தான் அவன் வசிக்கும் மலைக் காட்டில் வசிக்கப் போவதாகச் சொன்னாள் .அனந்தராமன் ஒன்றும் சொல்லவில்லை.அவளை பள்ளிக்குப் போகவேண்டாம் என்று இல்செறித்து வைத்தார் வத்சலா அமைதியாகவே இருந்தாள் .அந்த நாட்களில் ஒருநாள் அறையில் அவள் பாட்டுப் பாடிக் கொண்டு இருப்பதைக் கூடக் கேட்டிருக்கிறேன்.காணிகள் பாடும் மலைப்பாட்டு . மூன்றாம் நாள் இரவில்அந்த பையன் அவளைத் தேடி வீட்டுக்கே வந்துவிட்டான் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்த அனந்தராமன் மகள் அறையில் சத்தம் கேட்டு உள்ளே போனார் அங்கே அவள் படுக்கையில் அந்தக் காணிப் பையன் இருந்தான் அனந்தராமன் வெறி பிடித்தது போல ஆகிவிட்டார் அவனை கட்டிவைத்து அடி அடி என்று அடித்தார் .யார் கேட்கவில்லை வத்சலா குறுக்கே விழுந்து பார்த்தாள் அவளை இழுத்துத் தள்ளிவிட்டு மறுபடி மறுபடி அவன் ரத்தம் கக்கும்வரை அடித்தார் யாராலும் அவரைக் கட்டுப் படுத்த முடியவில்லை ஒரு கட்டத்தில் உள்ளிருந்து துப்பாக்கியை எடுத்துவந்து அவனைச் சுட ஆயத்தமானார் .சுட்டிருப்பார் .வத்சலா மட்டும் அதை செய்திருக்காவிடில்.”என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்

நான்அவள் என்ன செய்தாள் என்பது போல அவரைப் பார்த்தேன்

அவர் என் கண்களைப் பார்க்காமல் விலகி ”நான் அதைப் பார்த்தேன்.அந்தக் காட்சி எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது அனந்தராமன் துப்பாக்கியை லோட் செய்துகொண்டிருக்க–வத்சலா சட்டென்று விலகி உள்ளே போனாள் இரண்டே நிமிடம் திகுதிகுவென்று எரிகிற சொக்கப் பானை போல நடந்து வெளியே வந்தாள் .ஆமாம் நிதானமாக நடந்து !நடந்துவந்து அனந்தராமனின் குறுக்கே வந்து நின்றாள் ஒரு எரிகிற யாட்சியை போல.ஐயோ!”என்று அவர் கண்களை மூடிக் கொண்டார் ”அந்தக் காட்சியை நான் சாகும்வரை மறக்கமாட்டேன்.படபடவென்று அவள் எலும்புகள் வெடிக்கிற ஓசை கூட எனக்குக் கேட்டது .மெழுகு உருகுவது போல அவள் ஊன் உருகி சொத் சொத் என்ற சத்தத்துடன் அவள் காலடியில் விழ விழ அவள் நடந்துவந்தாள்.அந்த காட்சியை நான் எப்படி விவரிப்பேன்!ஆமாம்.வத்சலா அந்தக் காணிப் பையனுக்காக தன்னை எரித்துக் கொண்டாள் !”

நான் அதிர்ந்துபோய் அப்படியே அமர்ந்திருந்தேன் .

”இதெல்லாம் உண்மையா ”

கேசவன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தார் உடனே பேசவில்லை.கைநடுங்க தனது மடியிலிருந்து பிரித்து கொஞ்சம் புகையிலைப் போட்டுக்கொண்டார்.பிறகு மெல்ல வசம் அடைந்து ”பின்னே?உனது பெரியப்பா மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்டார் ஆனால் அப்போதுகூட அவர் உடைந்து போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நட்டல் எலும்பு இன்னும் முறியவில்லை .ஊரே உறைந்து போன சமயத்தில் கூட அடியந்திர வேலைகளை அவரே முன் நின்று செய்தார் .ஆனால் அது முறிந்த தினம் வத்சலாவின் பதினாறாம் நாள் விசேசத்தில்.அன்று வீடு முழுவதும் சுண்ணம் அடித்து அவளது அறையைச் சுத்தம் செய்தார்கள் அவளது படுக்கை முதற்கொண்டு பழகிய பொருட்கள் எல்லாம் எடுத்து ஆற்றில் விடப்பட்டன அவளது பெட்டியில் இருந்த பொருட்களைச் சுத்தம் செய்தபோதுதான் அந்தப் படம் அவர் கண்களில் பட்டது அது ஒரு பழைய படம்.அவளுக்கு எப்படியோ கிடைத்திருக்கிறது அதை ஏனோ அவள் தனது பெட்டியில் வைத்திருக்கிறாள் அதை அவர் கண்டார் அவர் நட்டல் முறிந்தது அப்போதுதான் ”

என்றார் அவர்.பிறகு திரும்பி என் கண்களை பார்த்து ”அது உனது அம்மாவின் படம் !”என்றார்

இம்முறை நான் வசம் இழந்தேன்.”என்ன!’என்றேன்.

”ஆம்.உனது அம்மையின் படம்.பொளிந்துபோன உனது வீட்டுக்குள் இருந்து அவள் அதை கண்டு எடுத்திருக்கவேண்டும்.அவள் ஏனதை வைத்துக் கொண்டிருந்தாள் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.அன்றிலிருந்து தான் அவருக்கு இந்த எரிவு நோய் வந்தது .பகல்களில் பிரச்னம் இல்லை.இரவானால் உடம்பெங்கும் எரியுதேஎன்று கத்த ஆரம்பித்துவிடுவார் இரவெல்லாம் குடம் குடமாய் அவர் மீது தண்ணீரை ஊற்றுவோம் .அப்படியும் அவர் உடம்பில் கொப்புளங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன எல்லா இடமும் போய்ப் பார்த்தார் எல்லா வைத்தியமும் பண்ணிப் பார்த்தார் சரியாகவில்லை ஒருதடவை யாரோ சொல்லி தக்கலை பக்கம் ஒரு அய்யரிடம் போய் பிரஸ்னம் பார்க்கப் போனார். நானும் கூடப் போனேன்.களம் வரைந்து சோழியை வீசியதுமே அய்யர் ‘மகாபாவி ‘என்று சொல்லி எழுந்துவிட்டார்.போகணும் நீ இப்போ இறங்கின்னு அனுப்பி கதவைச் சாத்தி விட்டார் ‘

நான் நடுங்கி ”ஏன் ?”என்றேன் ஆனால் உண்மையில் அதற்கான பதிலை அறிந்தே இருந்தேன்

அனந்தராமன் காவூரிலிருந்து ஒரு மிகப் பெரிய மந்திரவாதக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சேல நம்பூதிரியைக் கொண்டுவந்தார் அவர்கள் ஒருகாலத்தில் முஸ்லிமாக மாறி திரும்ப நம்பூதிரி ஆனவர்கள் மற்ற நம்ப்பூதிரிக்காமர் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் ஆகவே அதர்வண வேதத்தில் இறங்கி மந்திரவாதத்தில் செயல் ஆனார்கள் .நம்பூதிரி வந்த அன்றைக்கே கண்டுபிடித்துவிட்டார.இங்கு ரெண்டு யட்சிகள் இருக்கிறார்கள் அவர்கள் இருக்கிறவரை உன்னால் உறங்க முடியாது .அவர்களைப் பிடித்துக் கட்டலாம்.”என்று முயற்சி செய்தார்.

ஒரு பெரிய ஹோம குண்டம் வளர்த்து அதற்கான வேலைகளைச் செய்தார் முதலில் விக்னேச பூஜையிலேயே தடங்கல்.உனது வலியம்மைக்கு தீட்டாகி விட்டது .இதில ஆச்சர்யம் என்னன்னா அது அவளுக்கு வருவது நின்று ரெண்டு கொல்லம் ஆயிருந்தது.நின்றுபோய்விட்டது என்று அவள் நினைத்திருந்தாள்.ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று போனார்.வரவே இல்லை. உறக்கத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துவிட்டார் அதன்பின்பு காவூர் இல்லத்திலிருந்து யாரும் வர மறுத்துவிட்டார்கள இறப்பதற்கு முந்தின வாரம் முழுக்க நம்பூதிரிக்கு துர்க் கனவுகள் வந்துகொண்டிருந்தன.ஒரு நாள் நிலைவிளக்கு சரிந்து விழுந்தது என்று அவர்கள் சொன்னார்கள் நீ போய் அந்த யட்சியின் காலில் விழுந்து அழு அவள் உன்னை மன்னித்தால் உன் புண்ணியம்.”என்று சொல்லிவிட்டார்கள் .அதன்பிறகுதான் அனந்தராமனுக்கு பயம் வந்தது வலியம்மையின் வற்புறுத்தலும் ஒரு காரணம் வத்சலா இறந்தபின்பு வலியம்மை உடைந்து துரும்பாகிவிட்டாள் ஆனால் அதன்பிறகுதான் அவளுக்கு எதிர்த்துப் பேசக் கூடிய துணிவு வந்தது ஆனால் அதுகூட காரணமல்ல.ஒரு இரவு உடம்பெல்லாம் எரிகிறது என்று அவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னலுக்கு வெளியே நின்றுகொண்டு அறைக்குள் பார்த்துக் கொண்டிருந்த உன் அம்மாவை அவர் நேரில் கண்டாள் ”

நான் ”என்ன!”என்றேன் ”என்ன!”என்று திரும்பவும் சொல்லிக் கொண்டே இருந்தேன் ”இதெல்லாம் கட்டுக்கதைகள். குற்ற உணர்வினால் விளைந்த உங்களது பிரமைகள்”என்று கத்தினேன். பிறகு குரல் நடுங்க ”என் அம்மையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது .அவள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள் அல்ல”

கேசவன் சற்று கோபமுற்று ” உனக்கு என்னடே ஸ்திரீகள் பற்றி தெரியும் ?உங்கம்மை உன்னிடம் காட்டினது ஒரு அம்மைக்க முகம்.அவ தன்னோட கொச்சுகிட்ட எப்பவும் காண்பிக்கிற முகம் கோவலன் ஜீவிச்சிருக்கிற வரை கண்ணகி ஒரு அனிச்சக் கொடி .அவ அவன்கிட்டே அவ பின்னால பாண்டியனுக்கும் ஆசாரிக்கமார்க்கும் மதுரைக்கும் காமிச்ச முகத்தை கோவலன்கிட்ட ஒரு நொடி காமிச்சிருந்தாலும் அவன் உயிர் தரிச்சு இருந்திருப்பானா ? எல்லா ஸ்திரீகமார்க்கும் உள்ளே உள்ள முகம் அது அந்த முகத்தை அவ ஒருபோதும் தனக்கு பிரியமானவங்களுக்குக் காமிக்க மாட்டா…அது ஒரு நேர்க்கு அம்மைக்க நிர்வாணம்.கொச்சறிய நிக்க மாட்டா”’

நான் இன்னும் நம்பாதது போல அப்படியே நின்றிருந்தேன்

அவர் சட்டென்று எழுந்து என் கண்களை உற்றுப்பார்த்து ”நான் கண்டேன்னு சொன்னா நம்புவியாடே ?அல்லது அதுவும் என் பிரமைன்னு சொல்வியா ?””

இவர் என்ன சொல்கிறார் ?அம்மை அமைதியில்லாது பேய் போலத் திரிவதாகச் சொல்கிறாரா?

நான் அந்த எண்ணமே குமட்டி அங்கேயே வாந்தி எடுத்தேன்.மனம் முழவு போல அதிர்ந்துகொண்டே இருந்தது
ஒருகணம் எல்லா பெண்கள் மேலும் அசூயையும் அச்சமும் எழுந்தது

ஏனிப்படி இருக்கிறார்கள்?என்று கூடத் தோன்றியது பெரியப்பாவின் மீது ஒருகணம் பரிவுகூடத் தோன்றியது.
அவர் புரிந்துகொண்டது போல சொன்னார் ”உன் அம்மாவை வெறுக்காதே!”என்றார் ”ஆமாம்.நானும் வலியம்மையைப் போல ஒருநாள் நிலவொளியில் ஒரு சித்திரம் போல அசையாது கூந்தல் மட்டும் பறக்க உனது வீட்டு வாதிலில் நின்றுகொண்டிருந்த உன் அம்மையைக் கண்டேன்.என்ன ஒரு சௌந்தர்யம்.இப்படியொரு சௌந்தர்யத்தை மனுஷன் கண்டதில்லை என்றே சொல்வேன்.மனுஷன் காணக் கூடாத சௌந்தர்யம் அது.அதைக் காண முயன்றதுதான் அனந்தராமனொட தெட்டு.நான் கண்டபோது அவள் உன்னிடம் சொல்லச் சொன்ன செய்தி இதுதான் உன் அம்மாவை வெறுக்க வேண்டாம் என்று உன்னிடம் சொல்லச் சொன்னாள் அவள்தான் உன் மகனை பரக்குன்று வைத்தியரிடம் காண்பிக்கச் சொன்னாள் உண்மையில் அவரிடமும் போய்ச் சொல்லியிருக்கிறாள் .ஒருநாள் அவரே என்னிடம் கேட்டார் . இந்த காந்திமதையம்மைக்க மகன் எங்கிருக்கான் ?அவனை இங்கு கூட்டி வாருமே அவ சொப்பனத்தில வந்து கொஞ்சநாளா எது எதுவோ சொல்றா..”என்றார்

நான் விதிர்த்து அவரைப் பார்த்தேன்.எல்லாம் இப்போது ஒவ்வொன்றாய்ப் புரிவது போல இருந்தது

”அவள்தான் உன்னுடைய பணப் பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் சொன்னாள் உன் சொத்து உன்னிடம் போய்ச் சேரவேண்டும் என்றும் சொன்னாள் ”என்றவர் நீண்ட பெருமூச்சுவிட்டு ”நான் உன்னை அதுக்கோப்புரம்தான் தேட ஆரமிச்சேன் ரெண்டுவருஷம்.உங்க அம்மை என்னைத் தூங்கவே விடலை இப்போ எல்லாம் நேராச்சு….நாளைக்கு மறு நாள் கச்சேரிக்குப் போய் உன் மேல எல்லா சொத்துக்களையும் மாத்திட எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு ”என்றார் ”மறுநா வாவுபலி.ஆடி அமாவாசை.நீ உங்க அம்மைக்குத் தர்ப்பணம் கொடுத்து கொல்லங்கள் ஆச்சு.இல்லையா ?”

ஆம்.நான் அவள் மீதான வெறுப்பில் அதைச் செய்வதே இல்லை

நான் உடைந்து அழ ஆரம்பித்தேன்

நிறுத்தவே முடியாத அழுகை.சட்டென்று ஆடி திருகப்பட்டு அம்மை முற்றிலும் புதியவள் போல நினைவுகளில் எழுந்து வர ஆரம்பித்தாள் . தொட்டுவிடலாம் போல அத்தனை உயிருடன்.என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.அம்மா !அம்மா!என்று தேம்பினேன் ”அம்மா .நான் இப்போது உன்னை வெறுக்கவில்லை .இப்போது உன்னை எனக்குப் புரிகிறது .ஒரு தடவையாவவது உன்னைக் காண விரும்புகிறேன் .மீண்டும் ஒரே ஒரு தடவையாவது ……


கிருஷ்ணன்

அழுதுகொண்டிருந்த கிருஷ்ணனையே கேசவன் பார்த்தார். பின்னர் அவனை எழுப்பி “வா, உனக்க அம்மையைப் பார்ப்போம்” என்று கூட்டிப் போனார்.

கிருஷ்ணன் “என்ன!” என்றான். அவர் “சும்மா வாடே.உனக்க அம்மையைப் பார்ப்போம்”என்றார்.

அவன் கனவில் நடப்பவன் போல எழுந்து அவருடன் போனான்.

அவர்கள் பெரியப்பாவின் வீட்டைக் கடந்துபோனார்கள்.

அவர் வாசம் பிடித்துக்கொண்டு எதையோ உற்றுக் கேட்பவர் போல நின்றுகொண்டிருந்தார். கூன் விழுந்து காற்றில் குழைந்து ஆடும் ஒரு சருகைப் போல.

அவர் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். ஒருகணம் புன்னகை போலவும் அழுவது போலவும் அவர் முகம் தளர்ந்தது. தயங்கி நின்ற கிருஷ்ணனை தட்டி கேசவன் ”பொறவு”என்று தள்ளினார். ஏறக்குறைய ரப்பர்மரச் சரிவில் அவர்கள் ஓடினார்கள். எங்கோ குலவைசத்தம் கேட்டது.திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல மழைத் துளிகள் மண் மீது விழுந்தன.

அயினி மரத்தின் அடியில் ஒரு சிறிய கோயில்.

மரத்தில் ஒரு கருத்த ஆடு கட்டப்பட்டிருந்தது.

வெளியே சிலர் பொங்கல் விட்டுக் கொண்டிருந்தார்கள். லலிதாவும் வலியம்மையும் கூட இருந்தார்கள் விஜயை கேசவனின் மனைவி மடியில் கிடத்தியவாறு அருகில் இருந்தாள்.புகை சுருள் சுருளாகக் கிளம்பி வானில் கலந்துகொண்டிருந்தது.லலிதா முன்கேசத்தை விலக்கியவாறு பொங்கல்பானையில் கிளறிக் கொண்டிருப்பதை கிருஷ்ணன் பார்த்தான்.

உள்ளே கருவறையில் தீப ஒளியில் ஒரு சிறிய பெண்சிற்பம் நின்றுகொண்டிருந்தது. பூஜை நடந்துகொண்டிருந்தது.

பக்கவாட்டில் இன்னுமொரு சிறிய அறை பூட்டப்பட்டிருக்க இருட்டாக இருந்தது. அவன் பார்ப்பதை கவனித்து “அது கொச்சம்மை. காணிமாராக்கும் பூஜை. பூஜைக்குண்டான காணி உச்சி தீர்ந்தபிறகுதான் வரும்” என்றாள் ஒரு நடுத்தரவயதுப் பெண் பெருமிதத்துடன். அவள் நெற்றியில் கருத்த மசியை திலகம் போல் இட்டிருந்தாள்.

உள்ளிருந்து மணியோசை நின்றது. அய்யர் ஆரத்தித் தட்டுடன் வந்து கேசவனைப் பார்த்தார். எல்லோருக்கும பூவும் களபமும் குங்குமமும் கொடுத்தார். பிறகு கிருஷ்ணனை புதியவன் எனக் கண்டுகொண்டு புன்னகைத்தார். “தீப்பாய்ஞ்ச அம்மன். துடி உள்ள தெய்வம்” என்றார். ”பிறகு தட்டிலிருந்து ஒரு பூவை எடுத்து அவன் கையிலும் கொடுத்தார். “இந்த அம்மனுக்க இதுதான் பூஜா புஷ்பம்” ‘என்றார்.

கிருஷ்ணன் கையை விரித்துப் பார்த்தான்.

நாகலிங்கப்பூ.

நிமிர்ந்து மீண்டும் கருவறையில் நின்றிருந்த சிற்பத்தை கூர்ந்து பார்த்தான்.

அம்மா.

முந்தைய கட்டுரைபோகன்
அடுத்த கட்டுரைஒழிமுறி – இன்னொரு விருது