வடகிழக்கு:கடிதங்கள்

அன்பின் ஜெ.மோ,

சில நாட்கள் முன்பு நண்பர் ஒருவர்  இந்திய தேசிய அமைப்பில்  தமிழகம் பீகார், உபி போன்ற வடமாநிலங்களை subsidise செய்து கொண்டிருக்கிறது, இப்படி இல்லாவிட்டால் நாம் இன்னும் முன்னேறலாம் என்ற  ரீதியில் பேசினார்..  இன்னொரு நண்பர் நீங்கள் சாப்பிடும் துவரம்பருப்பு முழுதும் வடமாநிலங்களில் இருந்து வருகிறது என்பதை நினைவூட்டினார்.  நான் தனித்தமிழ் தேசிய வாதம் (அல்லது எந்த பிராந்திய தேசியவாதமுமே)  இந்தியாவில் நடைமுறையில் அழிவுகளையே உண்டாக்கும் என்று சொன்னேன்.. தர்க்கம் நீண்டது.

அதிகார உறுதிக்காகவும், சுயநல வியாபார நோக்கங்களுக்காகவும் ஐரோப்பிய  யூனியன் (EU) என்ற கருதுகோள் முன்வைக்கப் படுகிறது. இதில் உள்ள தேசங்களுக்கிடையேயான சமீபகால  ரத்தக்களறிகளும், வேற்றுமைகளும்  எல்லாம் இதில் நீர்த்துப் போவதாகக் காட்டப் படுகிறது;  இதில் எந்த வரலாற்று ”முரண்”களையும், ”சதி”களையும் காணாத நமது அறிவுஜீவிகள்,  வரலாறு புகமுடியாத  காலத்திய ஆரிய திராவிட இனவாதம் முதல் இன்றைய நதிநீர்ப் பங்கீடுகள் வரை எல்லாக் காரணங்களுக்காகவும் நாம் சண்டையிடுவதற்கு வரலாற்று “நியாயங்கள்” இருப்பதாக பிரசாரம் செய்கிறார்கள்..

உங்கள்  கட்டுரையில் நிதர்சனங்களை மறுக்காமல், அதே சமயம் இந்திய தேசியத்திற்கான ஒரு வரையறையை அளித்திருக்கிறீர்கள்.  எந்த “இஸமும்” இவைகளை நேர்மையாக  மறுக்க முடியாது என்பதே உண்மை.  உங்கள் சிந்தனைத் தெளிவு  எழுத்தில் வெளிப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது..  மேலே சொன்னது போல் ஒரு விவாதம் இன்னொரு முறை வந்தால்  உங்கள் கட்டுரை தான் பிரம்மாஸ்திரம் !

// சமகால அரசியல் பொருளியல் தேவைகள். ஒரு நிலப்பகுதியின் மக்கள் தங்களை அரசியல் ரீதியாக காத்துக்கொள்ளவும், பொருளியல் ரீதியாக வளர்த்துக்கொள்ளவும் ஒரு தேசியமாக திரள்வதன் தேவை இருக்குமென்றால் அவர்கள் ஒரு தேசியமே //

ஆயிரம் ஆண்டுகள் முன்பு கூட இந்தத் தேவைகள் இருந்திருக்கின்றன…

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி…

என்று இதனை அழகாகப் பதிவு செய்த சங்கப் புலவனின் கவி தரிசனம் இந்தக் கருத்தியலுக்கு மிக அருகில் வருகிறது.. இல்லையா?

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

 

அன்புள்ள ஜடாயு,

வடகிழக்கு அல்ல எந்த ஒரு இந்திய நிலப்பகுதியும் இந்தியாவில் இருந்து பிரியவேண்டும் என்ற கோரிக்கை அம்மக்களால் தன்னிச்சையாக எழுப்பட்டதல்ல என்பதே நாம் அவற்றை கூர்ந்து நோக்கும்போது காணக்கிடைப்பது. அவை அதிகார இச்சை கொண்ட ஒரு சிறுபான்மையினரால்  அன்னிய அரசியல் சக்திகளின் தூன்டலுடன் மட்டுமே முன்வைக்கபப்டுகின்றன. அவை அந்நிலத்தின் மக்களை பிரித்து அகதிப்பிரவாகங்களை உருவாக்கி அழிவையே எஞ்சச்செய்யும்.

ஆனால் மக்கள் செத்தாலும் தங்கள் முற்போக்கு முகமூடிகள் இருந்தால்போதும் என நம்பும் அறிவுஜீவிகள் இதைப்பற்றி கவலையே கொள்வதில்லை

ஜெ

 

அன்புள்ள ஜெ,

வடபிராந்தியம் பற்றி உங்களது கருத்து ஆவேசமாய் சில ஓத்துக்கொள்ள வேண்டிய உண்மைகளை புறந்தள்ள

முயற்சிக்கிறது. இது தேவையற்ற பிரிவினை, நல்லவற்றை விட அதீத திமைகளை மட்டுமே கொடுக்கும், மிஸனரிகளாலும் சில பிரிவினை வாத ஜனநாயக விரோத மார்க்சிஸ்ட் குழுமத்தின் துர்போதனைகளாலும் மட்டுமே பிரிவினை விதைக்கப்படுகிறது என்பதில் பெருமளவு உண்மையிருப்பினும்,

அதுமட்டுமே முழுக்காரணமாகிவிடமுடியாது.

இந்து மதவாதகளும், தேசிய அரசியல் கட்சிகளும் கூட இதில் பொறுப்பேற்க வேண்டும். எத்தனை தேசிய கட்சிகள் மும்பை,குஜராத், ராஜஸ்தானில்

காட்டுகிற அக்கறையை வடகிழக்குப்பகுதியில் காட்டத்தயாராயிருந்தன. இருக்கின்றன. எத்தனைமுறை சங்கராச்சாரியார்களும் மற்ற இந்து தலைவர்களும்

அந்த பகுதி மக்களை இணைக்க முயற்சித்தனர்.

மும்பையில் ஒரு தேசிய நீரோட்டத்தில் நம்பிக்கையுள்ள வைணவ மடாதிபதி, பேச்சை கேட்க நேரிட்டபோது அவரே மேடையில் சொன்னது. நாங்களேல்லாம் பணம்கொழிக்கும் லட்சுமி வாழும் இந்தப்பகுதிக்கு மட்டுமே வருகிறோம், இந்தியாவின் ஓவ்வொரு ரோடும் மதத்தலைவர்களால் இணைக்கப்படவேண்டும், அப்படி மதத்தலைவர்களால் பாதுகாக்கபடாதபகுதியில் ஆன்மிகபலமற்ற பகுதியில் மற்ற வைரஸ்கள் ஊடுருவதல் இயல்பானதுதான். முதலில் மதம், தேசிய அரசியல் தலைவர்கள் எல்லாரும் தங்களது ராடர் பார்வையை அப்பக்கம் செலுத்துவேண்டியது இன்றிமையாதது என்கிற கருத்தை அவர் அழுத்தமாக சொன்னார்.

பேசாமல் அங்குள்ள கடவுள்களை கொஞ்சம் பிரமோட் செய்தால் போதும் அந்த ஏரியா அடுத்த பத்திருபது வருடங்களில் இந்திய தேசிய நீரோட்டத்துடன் இணைந்துவிடும் என்று ஒருவர் சொன்னார். அது ஒரு ஜோக்குக்காக சொல்லப்பட்ட கருத்தாகயிருந்தாலும் அது அவ்வளவு மோசமான ஜ்டியாவாக இல்லை என்பது அரங்கத்திலிருந்த பலரின் கருத்தாகும்

மணி கெ.ஆர்
மும்பை

அன்புள்ள மணி

வடகிழக்கு இன்று அனுபவிக்கும் பொருளியல் வீழ்ச்சியை சுட்டிக்காட்டி அங்கே ஒரு பிரிவினை தேவை என்பவர்கள் அந்த வளர்ச்சிக்குறைவுக்குக் காரணமே அந்தப்பிரிவினைப் போராட்டம்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். அது தேசியப்போராட்டம் என்றால் அம்மக்களை அது திரட்டியிருக்க வேண்டும். ஆனால் அது அம்மக்களாஇ இனக்குழுக்களாக பிரிக்கவே செய்திருக்கிறது என்பதே நிதரிசனம்

ப்ரிவினை வாதத்தை கைவிட்ட பின் பஞ்சாப் அடைந்த பிரமிக்கத்தக்க வளார்ச்சியைந் எரில் கண்டால் நான் சொல்வதன் பொருள் புரியும். பிநிதிரன்வாலே காலத்தில் இருண்டு கிடந்த பஞ்சாப் இன்று பொருளியல் மையமாக வளார்ந்திருக்கிறது

ஏன் அந்த வாய்ப்பு வடகிழக்குக்கும் வரக்கூடாது? என்ன த்டை?

ஜெ

அன்பு நண்பரே நலமா, அமெரிக்காவில் இருப்பதாக சித்தார்த் சொன்னார். நலம் தானே.

சமீபத்தில் உங்களது தேசிய சுய நிர்ணயம் பற்றிய பதிவைப் படித்தேன்.   தனிதேசியம் என்பதில் மொழியும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது எனது கருத்து. அதைப் பற்றி உங்களின் முழுக்கட்டுரையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

இதைப்பற்றி விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

பின்குறிப்பு: உங்கள் பதிவை ஒரு சிலர் ஜல்லி அடித்திருக்கிறார் என சொல்கின்றனர். ஆனால் என்னைப் பொருத்தவரை கட்டுரையின் பல விசயங்களில் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.

மஞ்ச்சூர் ராஜா

 

அன்புள்ள மஞ்ச்சூர் ராஜா

வடகிழக்கு பிராந்தியத்தையே எடுத்துக்கொள்வோம். மொழி அடிப்படையில் பிரித்தால் அதை நூற்று எழுபது நாடுகளாக பிரிக்க வேண்டும்! சின்னஞ்சிறு மணிப்பூரிலேயே இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

மொழிவாதம் அதிகம் பேசப்படும் கர்நாடகத்தில் கன்னடம் ஒரு சிறுபான்மை மொழி. துளு, கொன்ங்கணி, மராட்டி, தெலுங்கு, உருது ஆகியவை சேர்ந்தால் கன்னடத்தை விட அதிகம். ஆகவேதான் உக்கிரமான கன்னட வெறி கனன்ட பகுதிகளில் குமுறுகிறது

இந்தியாவில் வங்கம் கேரளம் போன்ற சில பகுதிகளை தவிர எங்குமே ஒருமொழிப்பிராந்தியம் இல்லை. தமிழ் நாட்டில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரம் மராட்டி உருது பேசும் மக்கள் இருக்கிறார்கள். குடகு மொழி, படுக மொழி, நரிக்குறவர்களின் மொழி போல பத்துக்கும் மேல் சிறிய மொழிகள் உள்ளன. எந்த அடிபப்டையில் மொழி ஒரு தேசியத்தை உருவாக்கும் என்று சொல்கிறார்கள்?

நான் சொல்லும் வாதம் ஒன்றே. தேசியம் இயல்பாக உருவாகி வரக்கூடியதல்ல. மதம் , மொழி, இனம் எதுவாக இருந்தாலும்  அந்த அடையாளங்கள் உருவகித்துக்கொள்ளபப்டுவன மட்டுமே.  அப்படி ஒன்றை உருவகித்தால் உடனே அதில் இணையவே முடியாத இயற்கையான எதிரிகளையும் உருவகித்து விடுகிறீர்கள். தமிழ் தேசியம் என்ற ஒன்றை ஈழத்தில் பேசியதுமே முஸ்லீம்கள் அன்னியபப்ட்டு எதிரிகளாக ஆகிய நடைமுறை யதார்த்தம் நம் கண் முன்னால் இருக்கிறது

தேசியம் என்பது ஒரு சமூகம் தன்னை பொருளியல்- நிர்வாக வசதிக்காக ஒரு நாடாக திரட்டிக்கொள்ள வேண்டிய தேவையில் இருந்து எழுகிறது. ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் ஒரு தேசியமாக திரள்வதன் மூலம் மேலான வாழ்க்கையை அமைக்க முடியும் என்ற எண்ணத்தை அடைவதன் மூலம் உருவாவது அது. அதற்கு மதமோ இனமோ மொழியோ அடிப்படையாக அமைய முடியாது. அங்கே வாழும் அத்தனை மக்களையும் பிணைக்கும் பொது நோக்கம், பொது அடையாளமே உதவும்

இந்திய தேசிய உருவகம் அத்தனைய நவீன உருவகமாகவே இன்று உள்ளது. அதை உடைக்க விரும்புகிரவர்கள் முன்வைப்பது குறுகிய மொழி, இன தேசியம் அது ஃபாஸிஸத்துக்கு இட்டுசெல்லக்கூடியது அழிவையே அளிக்கக்கூடியது

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன், 

வட இந்திய எளிய மக்களின் நேசம் குறித்து நான் முழுமையாகவே உடன்படுகிறேன்.

நான் மும்பையிலும், தில்லியிலும் இந்தி தெரியாமல் தனியாகவே சுற்றி இருக்கிறேன். படிப்பறிவில்லாத மக்களிடையே வெறுப்பு இருந்தால் கூட அது ஒரு சிறிய நட்பார்ந்த புன்னகையில் மாறிவிடுகிறது. ஒரு டெல்லி ஆட்டோ டிரைவர், எனக்கு இந்தி தெரியாதா என்று வெறுப்புடன் கேட்டவர், சிறிது நேர என் அரைகுறை உரையாடலிலேயே நெருக்கமாகி விட்டார். தனக்கு ஆங்கிலம் தெரியாதது குறித்து என்னிடம் வருத்தத்துடன் சொல்லும் அளவு மாறி விட்டார்.

இதே போன்று பெங்களூரிலும், தமிழ் பேசினால் அலட்சியப்படுத்துவார்கள்; ஏமாற்றுவார்கள் என்றே என் நண்பர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், நான் கண்டக்டர் முதல் வழி கேட்பது வரை தமிழிலேயே பேசுகிறேன்; பதிலுக்கு அவர்கள் பேசும் கன்னடத்தைக் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும் போது வராத நெருக்கம், ஒரு இந்திய மொழியில் பேசும் போது வந்து விடுகிறது என்பதுதான் உண்மை.
தன்னுடைய தாய்மொழியில் ஒரு அன்னியனுடன் ஓரளவேனும் உரையாட முடிகிறது; அவனும் அதைத் தட்டுத் தடுமாறிப் புரிந்துகொள்கிறான் என்பது ஒரு படிப்பறிவில்லாத இந்தியனுக்குப் பெரும்பாலும் ஆனந்தத்தையே அளிக்கிறது.

————-

கடந்த ஆறு மாதங்களாக நன்றாகவே என் career-i சொதப்பிக் கொண்டிருக்கிறேன்… நடுவில் கல்யாணம் வேறு முடிந்துவிட்டது… வெகு நாட்கள் பதில் எழுதா விடினும், உங்கள் எழுத்துக்களைப் படிக்கத் தவறுவதில்லை. உங்கள் அமெரிக்கப் பயண்ம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரத்தன்

அன்புள்ள ரத்தன்
ஒற்றை வரியில் நீங்கள் சொன்னதையே நானும் சொல்வேன். ‘பிறன்’களை உருவாக்காமல் இருத்தல். மொழியால் இனத்தால் மதத்தால் நாம் பிறர்களை உருவகித்தால் அதுவே நம்மை மெல்லமெல்ல வெறுப்புக்கு அழிவுக்குக் கொண்டுசெல்லும்
ஜெ
தேசிய ஒருங்கினைப்புங்கிற பார்வையில உங்க கருத்த ஏத்துக்கரன். ஆனா வடகிழக்கு ஒருங்கிணைப்பு பத்திய உங்க கருத்துகள் கொஞ்சம் மிகை. நிஜத்துல எவ்வளவு ஒருங்கிணைப்பு நடந்திருக்கு? வடகிழக்கையும் கஷ்மிரையும் நம்ம தேசிய அரசு சினாவ மறிக்கிற மதில் செவுரால்ல நெனசிக்கிடிருக்கு. அங்கிருந்து பெட்ரோலும் டீயும் மூங்கிலும் எடுத்துகிட்டு நாம என்ன செஞ்சோம்? எத்தன தேசிய தொழில்சாளைகல அங்க ஆரம்பிச்சோம்? அங்க மனித வள மேம்பட்டுக்குனு நாம என்ன செஞ்சோம்? இருக்குற கொஞ்ச நஞ்ச வேலைகளையும் பிடுங்கற விதிமீறி வந்த வங்கதேச மக்களை தடுக்குறதுக்கு என்ன செஞ்சோம்?  இது எல்லாமே rhetorical. நிலவரம் உங்களுக்கே தெரியும். தும்ப விட்டுட்டு (ஆர்மிய அனுப்பி) வால பிடிச்சிகிட்டு அலையறோம். ஆர்மி பூந்த வீடு விளங்காமதான் போகும். 

வடகிழக்கு பூகோள ரீதியா பிரிஞ்சிருக்குங்கரத நீங்க மறுக்கிறதா கொஞ்சங்கூட நம்ப முடியல. என்ன கேட்டா, கன்யாகுமரியையும் வருசத்துல ரெண்டு தடவ டிரெயின அடிச்சிட்டு போரளவுக்கு வெள்ளம் வர்ர சிளிகுரியையும் கம்பேர் பண்ணுறதுதான் அபத்தம். இது சம்பந்தமா இன்னொரு anecdote-உம் சொல்லிடுறன். காலேஜ்ல என்னோட சில மணிப்பூர் மீசோ நண்பர்கள் படிச்சாங்க. புதுசா ஜாயின் பண்ண இவங்க போட்டிருந்த சட்டை, பேன்ட், வாட்ச், சூ-ல இருந்து தூக்கிட்டு வந்த டிரங்கு பெட்டி வரைக்கும் எல்லாமே made in china. அவங்ககிட்ட பேசினப்ப அங்க சில அத்தியாவசிய பொருட்கள்ளிருந்து நெறைய (பர்மா வழியா வந்த) சைனீஸ் வச்துக்கள்தான்னு சொன்னாங்க. ஒரு மருந்து வேணும்னா கூட கிழக்க பாக்குற மக்கள் கிட்ட ஒருங்கிணைப்ப எப்படி எடுத்துகிட்டு போவிங்க?

நவீன்

அன்புள்ள நவீன்

உங்கள் வாதமே எனக்கு புரியவில்லை. வடகிழக்குப் பகுதி பூகோள ரீதியாக வேறுபாடுகள் உள்ளது, அப்படியானால் அது தனிநாடா? அதைத்தான் நான் சொன்னேன். அப்படியானால் தனிநாடு எதுவுமே இங்கே சாத்தியம் இல்லை. மணிப்பூர் தனிநாடானால்கூட அதற்குள் மூன்று வேறுபட்ட நில அமைப்புகள் இருக்கும். தமிழ்நாட்டில் நான்கு வேறுபட்ட நில அமைப்புகள் இருக்கும். உலகில் ஒரேவகையான நில அமைப்பு கொண்ட இடங்கள்தான் ஒரே நாடாக உள்ளனவா என்ன?

வடகிழக்குக்கு ‘நாம்’ என்ன செய்யவேண்டும்? அவர்கள் இந்திய அமைப்புடன் இணைந்திருக்க, இந்தியா அடைந்த முன்னேற்த்த்தை தாங்களும் அடைய என்ன செய்தார்கள்? அன்னிய சக்திகள் ஊட்டிய பிரிவினைகோஷத்துக்குச் செவிசாய்த்தார்கள். தங்கள் இனக்குழுபேதங்களை அன்னிய சக்திகள் ஊட்டி வளர்ப்பதற்கு இடம் அளித்தார்கள். அதன் மூலம் தங்கள் நிலத்தில் வன்முறையை நிரந்தரமாக்கினார்கள். வன்முறை நிகழும் மண்ணில் எதுவுமே சாத்தியமல்ல. தொழிற்சாலை போகட்டும், மணிப்பூர் மேகாலயா பகுதிகளில் அங்கே இருந்த சந்தைகளையும் தோட்டங்களையும் ஆயுதமுனையால் மூடிக்கொண்டிருக்கிறார்கள் தீவிரவாதிகள்.

மக்கள் அந்த வன்முறைக்கு இடம் அளிப்பது வரை அவர்களுக்கு வறுமையே மிஞ்சும். அதற்கு அவர்கள் எவரையுமே குறை சொல்ல முடியாது.
இன்று சென்னையில் ஓட்டல்களில் மணிப்பூர் மக்கள் ஆயிரக்கணக்கில் வேலைபார்க்கிறார்கள். இங்கே அவர்கள் சம்பாதிப்பதுதான் அவர்களின் ஊருக்குச் சோறு போடுகிறது. தமிழ்நாட்டிலும் ஐம்பது வருடங்களாக பிரிவினைவாதம் உள்ளது. அதற்கு நம் மக்கள் செவிசாய்க்காமல் தொழிலிலும் உழைப்பிலும் கவனம் செலுத்தியமையால்தான் நாம் அவர்களுக்கு வேலை கொடுக்கிறோம். நம்மை விட பலமடங்கு வளமிக்க மண்ணாக மணிப்பூரும் மேகாலயாவும் இருந்தும்

இத்தனைக்குப் பின்னரும் அவர்களுக்கு அவர்களின் சொந்த நாடாக சென்னை இருக்கிறதே, ஆகவேதான் அவர்கள் இங்கே வர முடிகிறது.நம் வளர்ச்சியின் பங்கை அவர்களும் அடைய முடிகிறது. ஆகவேதான் இந்தியா ஒரு தேசியமாக இருக்கவேண்டும் என்கிறேன்
ஜெ

வடகிழக்கு பிரியவேண்டுமா?

தேசிய சுய நிர்ணயம்

இந்தியா:கடிதங்கள்

மலேசியா, மார்ச் 8, 2001

மலேசியா மறுபக்கம்

இந்தியா:கடிதங்கள்

அரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்

அரசியல்சரிநிலைகள்

அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

இந்தியா கடிதங்கள்

இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்

எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்

எனது இந்தியா:கடிதங்கள்

 

இந்தியா:கடிதங்கள்

 

எனது இந்தியாவைப்பற்றி….

எனது இந்தியா:கடிதங்கள்

 

எனது இந்தியா

 

 

 

 

முந்தைய கட்டுரைகாந்தி இன்னும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுகைப்படம் பதிவு