ஜெ. சைதன்யாவுக்கும் தமிழன்னைக்குமான உறவென்பது அவர்களுடைய சொந்த அன்னைக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவுக்கு நிகரானது .ஜெ. சைதன்யாவின் அதிகபட்ச சாத்தியம் என்ன என்பதை ஒரு படி மேலாகவே கற்பனைசெய்து மதிப்பிட்டு அதற்கேற்ற அதிகபட்ச கவனத்துடன் அனைத்தையும் அவர் ஒழுங்கு செய்தபோதிலும் அனேகமாக தினமும் எதிர்பாராத இடத்தில் ஜெ. சைதன்யாவைக் கண்டு தூக்கிவாரிப்போடுவதே இருவருக்கும் வழக்கமாக இருக்கிறது .
“ஏண்டி ஸ்டாண்டில வச்ச பாலில ரசத்தக் கலந்தே ?” .”அஜிதான் அம்மா சேர் போட்டுக் குடுத்தான்” .” அம்மா அவ பொய் சொல்றா . ஒக்கார சேர் போட்டு குடுப்பியாண்ணுதாம்மா கேட்டா” “எதுக்குடி பாப்பா அப்பிடி செஞ்சே?” . “இல்லப்பா அது டீ மாதிரி கறுப்பா இருக்குல்லே ..” . ” சனியன் !சனியன் !இவளுக்கு பயந்துட்டுதான் ஸ்டாண்டுல்மேலே ஒளிச்சு வச்சேன் ..” .” சரி விடு” . ” எங்க விடறது ? சாக்கடைல தான் விடணும் .ஒரு லிட்டர் பாலு …இவள வச்சுட்டு எனக்கு பைத்தியம்தான் பிடிக்கப் போவுது ”
ஜெ. சைதன்யாவின் தந்தைக்கு தமிழன்னை நேரடி அறிமுகம் என்பதால் அவ்வம்மையாரும் இவ்வாறு கதிகலங்குவதை அவர் பலமுறை கண்டதுண்டு .” எதுக்கு அப்பா அம்மா அழுவுறாங்க ?” . ” அழுவல்ல .திட்டறா..பாலில ரசத்த கலந்தா திட்டமாட்டாங்களா?” . “அதுக்கு ஏன் பைத்தியம் புடிக்கும்னு சொல்றாங்க? பைத்தியத்தப் போயி யாருக்காச்சும் புடிக்குமா? ”
சொற்களின் நேரடி முக்கியத்துவத்தைப் பெரிதும் அழுத்துவது ஜெ. சைதன்யாவின் மொழியியல் அணுகுமுறைகளில் முக்கியமானதாகும் . இதன்படி ‘ அப்ப நான் வரேன்’ , ‘ பத்திட்டு வருது ‘ போன்ற பல சொல்லாட்சிகள் வேறுமுறையில் பிரித்து அடுக்கப்பட்டு தமிழன்னை திகைப்பூண்டு மிதிக்கச் செய்யப்படுவாள். சொற்களுக்குக் குறுக்காக மறைந்து கிடக்கும் ரகசிய ஊடுவழிகளைக் கண்டுபிடிப்பதிலும் ஜெ. சைதன்யா அவர்கள் ஆழமான கவனத்தைக் காட்டுவதுண்டு . ” உனக்கு இது கெடயாது ” எனப்பட்ட போது ” கெடயும் ” என இவர் ஆணித்தரமாக பதிலளித்தது ஓர் உதாரணம் .இதேபோல பெயர்ச் சொற்களை எளிய முறையில் வினைச்சொற்களாக ஆக்குவதிலும் ஜெ சைதன்யா முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார்கள் ,” அம்மா ஃபோணின ஒடனே சட்டயப் போட்டு கௌம்பணுமாம் ” . ” அப்பா எப்ப பாத்தாலும் கம்பூட்ற்ற்ல டைப்பிட்டே இருக்காங்க ”
ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றின் சிறப்பியல்புக்கு ஏற்ப தனிப்பெயர் சூட்டுவது மொழியியலாளராக ஜெ சைதன்யா கண்டடைந்த புது வழியாகும் . தப் தப் என ஒலியெழுப்புவதால் செருப்பு ‘தப்பி’ ஆயிற்று. குட்டிநாய் ‘பௌவி’ . பூனையானது ‘மியா’ என்றும் ,புலி ‘டிவிமியா’ என்றும், பாடகி சௌம்யா ‘பாட்டுமியா’ என்றும் அழைக்கப்படலானார்கள். குதிரை அதன் வேகத்துக்கு ஏற்ப ‘குத் குத்’ என்று சொல்லப்பட்டது . ஒலியிசைவும் புதுச் சொற்களுக்கான ஆதாரமாகக் கொள்ளப்பட்டது .ஆர்வலர்களுக்காக எளிய பட்டியல் . மொக்கப்பை – மிளகாய் பொடி , தத்ததயம் – ரசம் சாதம் ,பப்புச்சா -பருப்புச்சாதம் , வின்னேச் -விக்னேஷ்…
சொல் என்பது ஒரு கருவியே என ஜெ சைதன்யா அறிவார் . பூட்டைத்திறக்க சாவி இல்லாதபோது கையில் உள்ள கம்பியையே வளைத்துப் பயன்படுத்துவது போலத்தான் சொற்களும் .உதாரணமாகக் கதவு என்ற சொல் கிடைக்காதபோது ‘வீடுமூடி’ என சொல்லியதுண்டு .’காக்காவோட மூஞ்சிக் கொம்பு’, ‘பசுமாட்டோட குஞ்சலம் ‘, ‘பாட்டு டப்பா ‘, போன்ற ஏராளமான சொற்களை இவர் உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கிறார் . இவரது தந்தையார் இவரிடம் பேசுவதற்கான எளிய வழியாக இதை அறிந்து அவரே பல சொல்லாட்சிகளை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது ‘தென்னைமரத்தோட றெக்கை ‘ , ‘உளுந்துவடையோட வாயி’ போன்றவை இவர் உருவாக்கிய சொல்லாட்சிகளில் முக்கியமானவை . இவ்வாறு இவர்கள்புத்தம் புது சொல்லாட்சிகளுடன் ஞான சம்வாதத்தில் ஈடுபடுகையில் அஞ்ஞானியான இவரது அன்னை ” கேட்டா மூளையே கொழம்பிடும் போல இருக்கு .ஆளவிடுங்க சாமீ ” என தப்பி ஓடுவதுண்டு என்பதையும் சொல்லியாக வேண்டும் .
ஜெ .சைதன்யா மொழியின் நுட்பமான சாத்தியங்களை எந்த அளவுக்கு பயன்படுத்துவதுண்டு என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் சான்றாகக் குறிப்பிடப்படுகிறது . ஒருமுறை இவரது தந்தையார் வீடு திரும்பும்போது அவர் வாங்கி வைத்திருந்த மைப்புட்டியை தரையில் கவிழ்த்துப் படம்வரைய முற்பட்டு நீலவண்ண மேனியுடன் பொலிந்த ஜெ. சைதன்யா அவர்களை அவர் காணநேர்ந்தது . குமுறியெழுந்த உணர்ச்சிகளை அடக்கியபிறகு இவரது தந்தை , தாழ்த்திய கண்களுடனும் சுண்டிய முகத்துடனும் காட்சிதந்த ஜெ.சைதன்யாவை முற்றிலும் உதாசீனம் செய்து சட்டையைக் கழற்றுவது , முகம் கால்கை கழுவுவது ,டீபோட முற்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார் .அவர் போகுமிடங்களிலெல்லாம் ஜெ. சைதன்யா அவர்கள் குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுவர்மூலை கதவிடுக்கு முதலிய இடங்களில் ஒண்டியவராகக் காணப்படலானார் .பிற்பாடு இவரது தந்தை இவரை ஏறிட்டும் பார்க்காமல் தன் மேஜையிலே அமர்ந்து எழுத முற்படவே இவர் மெதுவாக அருகே வந்து நின்று ,பின்பு மேலும் நெருங்கிச் சென்று, இறுதியில் மெல்லத் தொட்டபடி நின்று , அதன் பிறகும் கவனிப்பு பெறாமையால் கம்மிய குரலில் “அப்பா” என்று அழைத்து ,” இந்த இங்கூ.. என்னை பூசிடுச்சு” என்று தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினார்கள்.
ஜெ. சைதன்யா தூங்குவதற்கு இவரது குட்டித்தொப்பையை இவரது தந்தை மெதுவாகத் தட்டிக் கொடுக்கவேண்டிய அவசியம் உள்ளது . அப்படித் தட்டும் வேகம் மெதுவாக சமனமடைய வேண்டும் . அப்போது தன் அலைகளும் மெல்ல அடங்கி அடித்தளம் தெரிய வருவதை இவரது தந்தை உணர்ந்திருக்கிறார் . அத்தருணத்தில் திடீரென தமிழன்னையை அவர் குட்டித்தொப்பைகளும் குட்டிக் கிரீடங்களும் கொண்ட நண்டும் சிண்டுமான ஏராளமான குட்டித் தமிழ்களின் அன்னையாகக் கண்டடைந்தார் .நீண்டகாலமாக மேற்படி அம்மையார் தமிழன்னை என அழைக்கப்படுவதன் சூட்சுமம் குறித்து இவருக்கிருந்த ஐயமும் இவ்வாறாக விலகப்பெற்றது.
ஜெ. சைதன்யா அவர்கள் பள்ளிக்குச் சென்று எலிக்கேஜியிலே மாட்டிக் கொண்டு மெல்ல சமனப்பட்டு சூழ்நிலைகளை நிதானிக்க ஆரம்பித்த பிறகுதான் மொழியின் பிற சாத்தியக் கூறுகள் குறித்த போதத்தை அடைந்தார்கள் .கோடுகளுக்கும் ஒலிக்கும் இடையே உள்ள மிகப் பயங்கரமான மர்மத்தொடர்பை இவர் அறிய நேர்ந்தமை இவரை பெரும் கொந்தளிப்புக்கு ஆளாக்கி, பலவாரங்களுக்கு நிற்கவோ உட்காரவோ படுக்கவோ முடியாதபடி மாற்றியது . “அப்பா இப்பிடி ஒரு கோடு போட்டுக்கோ. போட்டிட்டியா? இப்பிடி இன்னோரு கோடு போடு. போட்டிட்டியா ? சரி . இனிமே மொள்ள இப்பிடி ஒரு சின்ன கோடு போடு . ஆங் , அப்ப்டித்தான் .பாத்தியா ? ஏ !” .ஜெ. சைதன்யா அவர்கள் தாளமுடியாத பரவசத்துடன் எம்பிக் குதித்து நடனமிட்டு சுழன்றுவந்து ” ஏ!” என வீரிட்டார் .”பாத்தியா ஏ வந்திருக்கு! இன்னொரு தடவ சொல்லட்டா?”
கோடுகள் ஒலிகளாகும் விந்தையில் ஆழ்ந்து இவர் கையில் கிடைத்த அனைத்தாலும் சமதளமான அனைத்து இடங்களிலும் அவ்வொலிகளைப் பொறித்து வைக்க முற்பட்டவே இவரது தந்தை அறைச்சுவர்களெல்லாம் தன்னை நோக்கிக் கூக்குரலிடும் உணர்வினைப் பெற்றார் .அதன் பிறகு அவர் தன்னுடைய நூல்களைத் திறந்து பார்க்கையில் அவற்றில் தங்கள் அர்த்தங்கள் மூலம் ஒரு சமான பிரபஞ்சத்தை உருவாக்கியிருந்த எழுத்துக்கள் செங்கற்களாக இடிந்துவிழும் மாளிகைகள் நகரங்கள் போல சிதறி ,தேனீக்கள் போல சுற்றிப்பறப்பதையும் ஈசல்களாக இறகுதிர்த்துத் தரைமுழுக்க ஊர்வதையும் கண்டார் .
ஜெ .சைதன்யா மொழியின் மாபெரும் விந்தைகளை ஆவேசமாக உள்வாங்கத் தலைப்பட்டார் .மூன்று எழுத்துக்களைப் போட்டால் அது மென்முடியும் நீள்வாலும் உள்ள பூனையாக ஆகி மியாவ் என்றது . நான்கு எழுத்தில் மரம் எழுந்து காற்றில் ஆடியது . ஜெ. சைதன்யா ஆதுர அபிமானத்துடன் ” எளுத்து ” என இழுத்துக் கூறி இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது பிரபஞ்சத்தை எழுத்தாக மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டார் .தன் ஞானவேகம் காரணமாக அவர் எல்லா எல்லைகளையும் மீறிச் சென்று பல்லாயிரம் புதுஎழுத்துக்களை உருவாக்கினார் . “இது என்ன பாப்பா?” என்ற வினாவுக்கு , “சில சமயம் நமக்கு முறுக்கு திங்கணும்போல இருக்கில்லே அதான்” என அருவ உணர்ச்சிகளுக்கும்கூட எழுத்துவடிவங்களை உருவாக்கிக் காட்டினார்.
இதன் பிறகுதான் ஜெ. சைதன்யா மானுடத்தின் மாபெரும் விந்தையைக் கண்டடைந்தார் , தன் கைகால்கள், குட்டித்தொப்பை ,பசி, ஆசை, அழுகை அனைத்துடனும் தன்னை ஒரு எழுத்தடையாளமாக மாற்றிவிட முடியுமென உணர்ந்தபிறகு இவர் இரவுபகலாகத் தன்னைப் பிரபஞ்சம் முழுக்கப் பொறித்துவைக்க முனைந்தார் . நகரத்தொடங்கிய காலம் முதலே ஜெ. சைதன்யா தாண்ட விரும்பிய எல்லை அவரது உடல்தான் . தான் விரும்பிய இடத்துக்கெல்லாம் தன் உடல் போக முடியாது என ஜெ.சைதன்யா அவர்கள் எத்தனை வலித்து எவ்வளவு அழுது அறிந்திருக்கிறார்! .உடல் ஒரே இடத்தில்தான் ஒருசமயம் இருக்க முடியுமென்ற பிற்போக்குத்தனமான பிரபஞ்ச விதியையும் மிக்க மனக்கசப்புடன் அவர் உணர நேர்ந்தது .இப்போது அவரால் ஒரே சமயம் பல இடங்களில் திகழ முடிந்ததைக் கண்டு பேரானந்தம் கொண்டார் .”பாத்தியா அப்பா எவ்ளோ சைன்யா ! மூ…ணு சைன்யா ” . மூன்று என்பது முடிவின்மையைக் குறிக்கும் பூடக எண்.
வரிவடிவத்துக்கு வந்த பிறகு தன் பெயர் முழுமைபெற்றதை அறிந்த ஜெ. சைதன்யா அவர்கள் இவரதுதந்தையாரின் நண்பர் சரவணன் என்பவர் இவரிடம் பெயர் என்ன என்று கேட்ட போது ” ஜெ புள்ளி சைன்யா ” என்று சொன்னதன் பிறகு இவர் பெயர் அவ்வாறே பொதுவாக வழங்கப்படலாயிற்று .சுருக்கமாக ஜெ புள்ளி என்றும். இவரது தந்தையார் ” கேட்டியா , ஒம் பொண்ணு பெரிய புள்ளி ஆயிட்டா” என்ற போது தாயார் ” ஆமா புள்ளி வச்சாச்சு , இனிமே கோலம் போட வேண்டியதுதானே ” என்றாள் .
ஜெ.சைதன்யா அவர்கள் படுக்கும்போது துணைக்குப் போட்டுக் கொள்ளும் அவரது அம்மாவின் புடவையைப் போல மொழியை — சுருட்டி கசக்கி ,இழுத்து ,நனைத்து –பயன்படுத்துவது அவரது அம்மாவுக்கு ஏற்புடையதாக இல்லை ” நாலு வயசாச்சு ,,இப்பவும் தத்தக்க புத்தக்காண்ணு பேசிட்டு …. அப்புறம் அப்பிடியே வாய் பழகிடும் .” என்றபோது இவரது தந்தையார் ” ஆமா, நீகூட உன்னோட சித்தியை சிச்சிம்ம்மாண்ணு தானே இப்பகூட சொல்றே ?” என்று கேட்டு தீவிரமாக முறைக்கப்பட்டார்கள் . ஜெ.சைதன்யா தினமும் காலையில் இவ்வாறுதான் கட்டாய மொழிப்பயிற்சிக்கு ஆளாக்கப் பட்டார். ” ட்ரெஸ் – சொல்லு ” . ” டெஜ் . அம்மா எனக்கு எண்ணைக்கும்மா பர்த்டே வரும்? ” . ” வரும் வரும் , ஓழுங்கா சொல்லுடி . ட்ரெஸ் . ட் – ரெ- ஸ்ஸ” : சொல்லு பாக்கலாம் …”
ஜெ.சைதன்யா அவர்கள் ஓடும் பஜ்ஜில் தாவி ஏறுவது குறித்துப் பேச ஆரம்பிக்கும் போது கிள்ளு விழவே அழுதபடி சோகக் குரலில் ” நீ கெட்ட அம்மா” என்றார் .” அத மட்டும் சொல்லு தெளிவா …” .” விடு அருணா .அவ மொள்ள தானே பேசிடுவா” .”தானே எப்பிடி பேச முடியும் ? நீங்க சும்மா இருங்க . சொல்லுடி , சைக்கிள் ” . ” ஜவிக்கிள் . நான் பெரீய பொண்ணா ஆனா ஜவிக்கிள் ஓட்டுவேன் தெரிமா?”
ஓய்ந்துபோன இவரது தாயார் “இவ கிட்ட ஒண்ணுமே நடக்கிறதில்ல . அவன்லாம் எப்பிடி பச்ச பாவமா இருந்தான். இவ அம்மிக்கல்லு மாதிரி கெட்டி .ஒண்ணு சொன்னா கேக்கிறதில்ல .அவ நினைக்கிறதத்தான் சொல்லுவா….அப்பிடி ஒரு சுபாவம் ” என்று சொல்ல இவரது தந்தையார் ” இன்னொண்ணு வந்தா இது தங்கக் கம்பியாயிடுது.. ” என்றார்.”ஆங் , ஆசதான்” என்று நொடித்துவிட்டு ” பாப்பூ , கண்ணூல்ல , அம்மாவோட சப்பி பேக்கில இருந்து டிப்பன் பாச் எடுத்து ஜமயலறையில போடுவியாம் . நீ சொன்னபேச்சு கேக்கிற என் ஜெல்ல நாயுட்டிதானே?” என்றார்
”உன் பேச்சு கூட இப்பல்லாம் ரொம்ப மெருகேறியிருக்கு அருணா ” என இவரது தந்தையார் மகிழ்ந்துபோய் சொன்னார் . அதை தொடர்ந்து கன்னித் தூய்மை , சீரிளமைத்திறம் என்றெல்லாம் இவர் தமிழன்னையைப்பற்றித் தீவிரமாக யோசிக்க முற்பட்டார்.