புறப்பாடு II – 11, தோன்றல்

சிறுவயதில் நான் ஒரு கனவுகண்டேன். களமெழுத்துப்பாட்டில் கரிமணல் செம்மணல் நீலமணல் சேர்த்து மண்ணில் கோலமாகப்போட்டு வரையப்படும் நாககாளி வடிவம் புள்ளுவர்கள் குடம்தட்டிப்பாட்டு பாடி முடித்து முடியவிழ்த்து ஆட ஆரம்பித்ததும் கலைய ஆரம்பிக்கும். புள்ளுவத்தி தன் கூந்தலாலேயே வண்ணக்கோலத்தை கலைப்பாள். புள்ளுவர் கமுகுப்பூக்குலையால் கலைப்பார். சிலசமயம் பெரும் காற்றுவந்து அப்படியே ஓவியத்தை சுருட்டி அகற்றிச்செல்லும். அப்படி கண்முன் வண்ணமணல்துகள்களாக மாறி மறைந்த ஓர் நாககாளி நீலமும் சிவப்பும் கறுப்பும் வெளுப்புமாக மணல்துளிகள் காற்றிலேறி ஒன்றாகி இணைந்து கண்களில் உயிர் ஊறி எழுந்தாள்.

சித்ரா அச்சகத்தின் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டிருந்தபோது அந்தக் கனவை நினைவுகூர்ந்தேன். அச்சகங்களில் புத்தகங்கள் தயாராவதும் அப்படித்தான் என்று பட்டது. சிறுவயதுமுதலே புத்தகங்களுடன் வாழ்ந்தவன். எங்கள் வீடே எங்குபார்த்தாலும் புத்தகங்களாக இருக்கும். ஆனால் அதை எங்கோ எவரோ அச்சுகோர்க்கிறார்கள் அச்சுயந்திரத்தில் ஓட்டுகிறார்கள் என்று என் அகம் உணர்ந்ததேயில்லை. வெறும் ஈயஎழுத்துக்களாக இருப்பவை சேர்ந்து சொற்களாகி சொற்றொடர்களாகி நூலாகி கட்டுண்டு வெளியே செல்லும் அற்புதம் எத்தனை முறைபார்த்தாலும் என்னை பிரமிப்பிலாழ்த்தியது.

சித்ரா அச்சகத்தில் அன்று சில புராணநூல்கள்தான் அச்சாகிக்கொண்டிருந்தன. சைவசித்தாந்தச்சுருக்கம், அறுபத்துமூவர் கதை, திருமூலர் வாழ்க்கை, பன்னிரு சித்தர் வரலாறு, தாயுமானவர் அருளிய சைவஞானம். சாதாரண வாசகர்களுக்காகப் போடப்படும் பெரிய எழுத்து சிறிய நூல்கள். சைவக்கோயில்கள் முன்னால் போட்டு விற்பார்கள் போல. அட்டைகளும் அங்கேயே அச்சாயின. நான்கு வண்ணங்கள் கொண்ட அட்டைகளில் திரும்பத்திரும்ப ஒரு நடராஜர் படத்தின் கட்டையச்சு பயன்படுத்தப்பட்டது. அச்சக உரிமையாளர் அதை பாரம்பரியச் சொத்தாகப் பெற்றிருக்கலாம் என்று நினைப்பேன்

ஜோலார்பேட்டையில் இறங்குவதற்கு பதினைந்து நிமிடம் முன்புகூட அங்கே இறங்கும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஊருக்குத்தான் திரும்பிச்சென்றுகொண்டிருந்தேன். டிக்கெட் மதுரைவரைக்கும் இருந்தது. ஆனால் ஜோலார்பேட்டையைக் கண்டதும் இறங்கத்தோன்றியது. காரணங்கள் ஏதுமில்லை. அந்த ஊர் எனக்கு ஏதோ வகையில் வேண்டிய ஒன்று என்ற பிரமை. ரயில்போனபிறகு ரயில் நிலையம் வெறிச்சிட்டது எனக்கு மனதுக்கு இதமாக இருந்தது. அப்பாடா என்ற நிம்மதியுடன் பெஞ்சில் அமர்ந்துவிட்டேன்.

குளிக்காமல் முகம்கழுவாமல் மூன்று நாட்கள் பயணம். ரயில் வாரங்கலில் ஒரு பகல் முழுக்க நின்றது. அதன்பின் ரேணிகுண்டாவில் நான்குமணிநேரம். முடிவில்லாமல் அது வந்துகொண்டே இருந்தது. ஜோலார்பேட்டைக்கு கொஞ்சம் முன்னால் ஒருவர் ‘லே தமிள்நாடு வந்தாச்சுலே’ என்றார்.

ரயில் முழுக்க பரபரப்பு. எல்லாரும் சன்னல்களிலும் வாசல்களிலும் குழுமினார்கள். நான் வாசலுக்குச் சென்றபோது பத்துபேருக்குமேல் அதில் பிதுங்கி நின்றிருந்தனர். ‘லே வெளியெ விளுந்து சாவாதீங்கலே’ என்றார் கிழவர்.

‘மாமா, விளுந்தாலும் தமிள்நாடுல்லா?’

‘வக்காளி, தமிள்நாட்டுல சோறில்லேண்ணுதானேலே பஞ்சம்பொளைக்கப்போனே? பேசவந்துட்டான்’

தமிழ்நாடு என்று அடையாளம் காண ஏதுமில்லை. ஒரே நிலம். வறண்டபாறைகள் எழுந்த திசைகள். ஆனால் ஒரு சிறிய நிலையத்தில் முதல் தமிழ் எழுத்துக்கள் தெரிந்ததும் மொத்தக்கூட்டமும் ‘ஓ’ என்று கூச்சலிட்டது.

‘என்னமோ எம்ஜியார் கத்தியோட வாறதக் கண்டதுமாதிரித்தான்’ என்றார் கிழவர். ஆனால் அவரும் அங்கேதான் நின்றிருந்தார். அவர் முகமும் மலர்ந்துதான் இருந்தது.

‘மாமா மனுசனுக்கு சொப்பனம் காண ஒரு மண்ணு வேணுமில்லா?’

ஜோலார்பேட்டை என்ற பேரே எனக்குப்பிடித்திருந்தது. ஜோர் என்ற வார்த்தையின் ஏதோ ஒரு வகை நீளவடிவம் அது என்பதுபோல. நின்றுகொண்டிருந்த ஒரு ரயிலில் ஏறி காலைக்கடனைக் கழித்தேன். தண்டவாளம் நடுவே உயரமான சரியாக மூடப்படாத ஒரு குழாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்தது. அதில் நின்று குளித்தேன். உடைகளை மாற்றிக்கொண்டு மேம்பாலம் வழியாக நடந்தபோது சென்னை ரயிலை பார்த்தேன். அங்கே நின்று மூச்சிரைத்துக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று ஏறிக்கொண்டேன். டிக்கெட் எடுக்கவில்லை. கேட்டால் மதுரை ரயில் என நினைத்து தவறாக ஏறிவிட்டதாகச் சொல்லிக்கொள்ளலாம்.

சென்னையில் எங்கே செல்வதென்று ரயிலிலேயே முடிவுசெய்திருந்தேன். எங்களூரில் அச்சுதன் ஆசானின் மகன் நாராயணன் சென்னையில் ரயில்பெட்டித்தொழிற்சாலையில் வேலைபார்த்தார் என்று தெரியும். அந்த இடம் பெரம்பூர் என்றும் நினைவில் இருந்தது. மதியம் வந்திறங்கியவன் மாலைக்குள் ஏராளமானவர்கள் வழியாக நாராயணன் அண்ணனின் குவார்ட்டர்ஸை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் நாராயணன் அண்ணன் இல்லை. அவர் ஊருக்குச் சென்றிருந்தார். அவரது நண்பர்கள் இருவர்தான் இருந்தனர். சில கேள்விகள் கேட்டபின் அவர்கள் என்னை அங்கே தங்கும்படிச் சொன்னார்கள். இரண்டுநாட்களில் நாராயணன் அண்ணன் வந்துவிடுவார் என்றார்கள்.

பகலில் பெரம்பூரைச் சுற்றிவரும்போதுதான் சித்ரா அச்சகத்தைப் பார்த்தேன். தொடர்ந்து அச்சகங்கள் கண்ணில் பட்டாலும்கூட மனதில் பதியவில்லை. அச்சக வாசலில் ‘பிழைதிருத்துநர் தேவை. ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் விண்ணப்பிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைத் தாண்டிச்சென்றபின் திரும்பிவந்தேன். சிலநிமிடங்கள் வாசலில் தயங்கி நின்றபின் உள்ளே சென்றேன்.

சிவகுருநாதபிள்ளை உள்ளே இருந்தார். வழக்கம்போல வந்ததுமே சட்டையைக் கழற்றி நாற்காலிக்குப்பின்னால் போட்டிருந்தார். அதன்மீது அங்கவஸ்திரம். கன்னங்கரிய குண்டு உடலும் வழுக்கைத்தலையும் கொண்டவர். மீசை இல்லாததனால் பெரிய மூக்கு புடைத்துத் தெரியும். வேட்டியை தொடைவரை சுருட்டி வைத்து கால்களை ஆட்டியபடி மேஜைக்குப்பின் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். முன்னால் வெள்ளிச்செல்லம் திறந்திருந்தது. அதில் விதவிதமான வாசனைப்பொருட்கள். நிதானமாக ஒரு ரசாயன ஆய்வைச்செய்யும் விஞ்ஞானியின் கவனத்துடன் பாக்கை நறுக்கி வெற்றிலையில் வைத்துக்கொண்டிருந்தார். சுட்டுவிரலில் தொட்ட சுண்ணாம்புடன் என்னை நோக்கி ஏறிட்டு ‘யாரு?’ என்றார்.

‘புரூஃப் பாக்க ஆளுவேணும்னு…’

’ஆமாம் வேண்டும்’

‘நான் பாப்பேன்’

‘தம்பி, நாங்கள் இங்கே சைவசித்தாந்த நூல்களை மட்டும்தான் வெளியிடுகிறோம். அவற்றை சாதாரணமாக பிழைதிருத்த இயலாது. நல்ல ஆழ்ந்த தமிழறிவும் சைவத்தில் அறிமுகமும் தேவை…’

‘எனக்கு தமிழ் தெரியும்’

‘என்ன படித்திருக்கிறீர்?’

‘பி காம்..முடிக்கலை’

‘தம்பி அதாவது…’

‘நான் நல்லாவே தமிழ் தெரிஞ்சவன்…சங்க இலக்கியம் கம்பராமாயணம் எல்லாம் பாடம் கேட்டிருக்கேன்…சைவசித்தாந்த அறிமுகமும் உண்டு’

‘ஓ…’ என்று சந்தேகமாகப் பார்த்தபின் ஒரு தாள்கட்டை நீக்கி ‘சரி இதை மெய்ப்பு பார்த்துத் தாரும், பார்க்கிறேன்’

அது சிவஞானசித்தியாரின் ஓர் உரையின் பதினாறுபக்கம். கடுமையான மொழிநடை. நான் பிழைதிருத்தி வைத்தேன். அவர் அதை எடுத்துப்பார்த்தார். ‘தம்பிக்கு பிழையே கண்ணில் படவில்லையே…இதோ இவை எல்லாமே பிழைதான்…’ என்று சிவந்த பேனாவால் அடையாளமிட்டுக்கொண்டே போனார். ‘ஒற்றுக்குறை உங்கள் பார்வைக்கே வரவில்லையே.’ கூர்ந்து நோக்கி ’இவையெல்லாம் பிழைகளே அல்ல. என் தம்பி ஏற்கனவே பிழைதிருத்திய படிகள் இவை. ஏன் இவற்றை திருத்தினீர்?’

நான் எட்டிப்பார்த்து ‘அது சிவம் இல்ல சீவம்தான்’ என்றேன் ‘அந்த இடத்திலே சீவம்னுதான் வரும். உயிர்க்குலங்களை சைவத்தில் அப்படிச் சொல்றாங்க. மூலத்தில சீவம்னு இருந்ததை தப்புன்னு நினைச்சு யாரோ சிவம்னு திருத்திட்டாங்க’

அவர் நோக்கி ‘சரிதான்…’ என்றார். பின்னர் உரக்க ‘ சிவமெல்லாம் ஆன்மா உடையதென்றாலும் ஆன்மாவெல்லாம் சிவமாகாதென்பர் ஆன்றவிந்தோர்…’ என வாசித்து ‘அடச்சீ, வெட்டிப்பய…ஏண்டி இத அவந்தானா திருத்தினான்?’ என்றார்.

அச்சுகோர்த்துக்கொண்டிருந்த ஐம்பது வயதான பெண்மணி ‘எது?’ என்றாள்.

‘கட்டேல போக…ஏண்டி இது ….இந்த சிவஞானசித்தி’

‘ஆமா…போனவாரம் முச்சூடும் ஒக்காந்து பாத்தாரே’

’அவன் கண்ணிலே கொள்ளிய வெக்க… வக்காளி, இனி இந்தப்பக்கமா வந்து புக்கு கிக்கு தொட்டான்னாக்க செருப்பாலே அடிப்பேன்னு சொல்லு…’ என்றபின் என்னை நோக்கி ‘என் தம்பிதான்…தமிழாசிரியன் வேறு…என்ன சொல்ல’ என்றார்.

‘எழுத்துப்பிழை எல்லாம் சரியாகத்தான் பாத்திருக்கார்’

‘தம்பி என்ன செய்கிறீர்கள்?’

‘இப்ப சும்மாதான் இருக்கேன்…ஊரவிட்டு இங்க வந்துட்டேன். வேலைதேடுறேன்…’

‘எந்த ஊர்?’

‘நாகர்கோயில்’

‘எப்படி தமிழும் சைவமும் படித்தீர்கள்?’

நான் என் தமிழய்யா பற்றிச் சொன்னேன்.

‘அடாடா…தமிழுக்கு கத்தோலிக்கர்களின் கொடை மிகப்பெரிது…தம்பி இன்னும்கூட நெல்லையிலும் குமரியிலும் அந்தக் கவிராயர்மரபு இருப்பதால்தான் தமிழ் வாழ்கிறது…நீங்கள் இங்கேயே வேலைபார்க்கலாம்’

எனக்கு அன்றையதேவைக்கு அதிகமாகவே அவர் சம்பளம் கொடுத்தார். மாதம் முந்நூறு ரூபாய். நான் அச்சகத்திலேயே இரவு தங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னார். பையை எடுத்துக்கொண்டுவந்து அச்சகத்தில் குடியேறினேன். குளிர்காலமானாலும் சென்னையில் இரவு பன்னிரண்டுமணிவரை பயங்கரமாக வேர்க்கும். மொட்டைமாடிக்குச் சென்று படுத்துக்கொள்வேன். நள்ளிரவில் தானாகவே விழிப்பு வந்ததும் கீழே வந்து இருபெஞ்சுகளை சேர்த்துப்போட்டு படுப்பேன்.

அச்சகம் முழுக்க இரவில் பெருச்சாளிகள் ஓடிக்கொண்டிருக்கும். வெளியே ஓடிய சாக்கடையும் அச்சகக் கட்டிடத் தரையும் ஏறத்தாழ ஒரே உயரம். பெருச்சாளிகள் நிறைய வளைபோட்டு வைத்திருந்தன. ’அடைச்சா அதுங்க வேறு வளையத் தோண்டும். அப்டியே போனா ஊட்டையே தோண்டிரும்…சர்த்தான் உடு’ என்றார் சிவகுருநாதபிள்ளை.

நான்கு பெண்கள் அங்கே அச்சுகோர்த்தார்கள். திருமணமாகாத இளம்பெண்கள் எல்லாருமே. தாவணிபோட்டு ஒற்றைச்சடை கட்டி பிளாஸ்டிக் வளையல்களும் பாசிமணி மாலைகளும் போட்ட, கன்னம் ஒட்டிய, மெலிந்த பெண்கள். வள்ளியும், கஜலட்சுமியும் சேர்ந்து ஒரேசைக்கிளில் வருவார்கள். மாரிச்செல்வி கையில் தூக்குவாளியுடன் தனியாக நடந்து வருவாள். போகும்போது மட்டும் மாரிச்செல்வி பஸ் ஏறிச் செல்வாள்.

சிவகுருநாதபிள்ளையின் மனைவி உமாக்காவும் அச்சுகோர்ப்பார். மற்றபெண்களெல்லாம் எட்டரைக்கே வந்துவிடுவார்கள். ஒன்பது மணிக்கு சிவகுருநாதபிள்ளை குடையுடன் காவடிகட்டி தண்ணீர்குடம் தூக்கிவருபவர் போல இருபக்கமும் ஆடியபடி தோல்பையுடன் நடந்துவருவார். பன்னிரண்டுமணிவாக்கில் உமாக்கா அவருக்கு பித்தளை அடுக்குப்பாத்திரத்தில் சாப்பாட்டுடன் வியர்த்து வழிந்தபடி பெரிய உடலை அசக்கி அசக்கி வந்துசேர்வாள். அவள் நடப்பதற்கான விசை கைகளை அசைப்பதில்தான் வருகிறது என்று தோன்றும். வந்ததும் அவருக்குப் பரிமாறிவிட்டு அச்சுகோக்க வந்தாளென்றால் அச்சகம் மூடுவதுவரை பரபரவென்று வேலைபார்ப்பாள். அவள் வந்தபின்புதான் உண்மையில் வேலை நடக்கும்.

நான் ஏழுமணிக்கெல்லாம் எழுந்து குளித்து காத்திருப்பேன். பெண்கள் வந்தபின்பு வெளியே சென்று பக்கத்துக் கடையில் இட்லி சாப்பிட்டு நாளிதழ்களும் வாங்கிக்கொண்டு வருவேன். பெண்கள் வந்தாலும் எழுத்துருக்களை எடுத்து வைப்பது, பெட்டிகளை அடுக்குவது என்று எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். கூடவே பேசிக்கொண்டும் இருப்பார்கள். நான்குபேரும் சந்தித்த கணம் முதல் ஆரம்பிக்கும் இடைவெளியில்லாத பேச்சு மாலையில் கிளம்புவதுவரை நீடிக்கும். சினிமாதான் அதிகமும். கொஞ்சம் குடும்பச்சண்டைகள். நால்வரில் மூவர் ரஜினிகாந்த் ரசிகர்கள். ஒருத்தி கமல் ரசிகை.

உமாக்காவுக்கு ஏனோ ஜெய்கணேஷைத்தான் பிடிக்கும். ‘அது யாருங்கக்கா?’ என்று ஒரு பெண் ஒருமுறை கேட்டுவிட்டாள் என்று பயங்கரமாகக் கோபப்பட்டாள். ஜெய்கணேஷ் அவள் ஒரு தொடர்கதை படத்தில் அற்புதமாக நடித்திருப்பார் என்றாள்:

‘அது ஒரு வெட்டி கதாபாத்திரமில்லியா?’

‘என்ன வெட்டி? அவன் ஒருத்தனுக்குத்தான் அதிலே கொஞ்சமாச்சும் மனசாட்சீண்ணு ஒண்ணு இருந்திச்சு’

பெண்களின் பேச்சொலி அச்சகத்தின் தட் தடார் ஒலிக்குள் ஒரு கசகசப்பாக கேட்டுக்கொண்டே இருக்கும். சிரிப்புகள் வசைகள். மிக அபூர்வமாக குரல்கள் தாழ்ந்து கிசுகிசுவென்று பேச ஆரம்பிப்பார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் சிவந்து, பழுத்த இரும்பு தேய்ப்புபெட்டி மாதிரி இருக்கும். கண் ஓட்டைகள் வழியாக செங்கனல் தெரியும். அப்போது வேலைநின்றுவிடும். சிவகுநாதபிள்ளை சத்தம்போட்டதும் கலைந்து திரும்ப வேலைக்கு மீள்வார்கள். சிலகணங்கள் கழித்து ஒவ்வொருவராக பெருமூச்சு விடுவார்கள்.

கம்பாசிட்டர் வடிவேலு ராயபுரத்தில் இருந்து சைக்கிளிலேயே வருவார். பஞ்சுபோன்ற தலையும் மெலிந்த உடலும் கூனும் கொண்ட மனிதர். இரு கன்னங்களும் கட்டைவிரலால் குத்தி அழுத்தியதுபோல குழிந்திருக்கும். அடிக்கடி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே சென்று மாதுளைமரத்தடியில் வெளிச்சுவரை ஒட்டி குனிந்து நின்று பீடியை ஆழமாக இழுப்பார். அப்போது துயரமான எதையோ நினைவுகூர்பவர் போலிருப்பார். ‘நான்லாம் அந்தக்காலத்திலே டிரெடில்ல மிதிச்சு மிதிச்சு வந்தவன் தம்பி…இப்பல்லாம் கரெண்டு வந்துபோச்சு” என்பார்.

நான் அவரிடம் ஜெயகாந்தனின் டிரெடில் கதையைச் சொன்னேன். நாளெல்லாம் நடந்துகொண்டிருந்தாலும் எங்கேயுமே போகாமல் நின்ற இடத்திலேயே செத்துப்போன கம்பாசிட்டரின் கதை. வடிவேலுவுக்கு கதை புரியவில்லை. ‘சர்த்தான் நமக்கு ஆயிரம் கதை இருக்கே’ என்று சொல்லிவிட்டார்.

உமாக்கா தூரத்தில் அச்சுகோர்த்தபடி ‘ஜெயகாந்தன் அச்சாபீஸ்ல வேலைசெஞ்சிருக்கார் தெரியுமா?’ என்றாள்.

‘அப்டியா?’

‘அவரோட வாழ்க்கைய துக்ளக்கிலே எழுதினார்ல…அதில சொல்லியிருந்தார்’ என்றாள் ‘நாங்க அந்தக்காலத்திலே இருந்த வீட்டுக்கு அந்தப்பக்கம்தான் ஜெயகாந்தன் வீடு. வாக்கிங் போறத நெறையவாட்டி பாத்திருக்க்கேன்’

ஒரேநாளில் சிவகுருநாதபிள்ளை என்னிடம் அச்சுத்தமிழ் பேசுவதை விட்டுவிட்டார். வக்காளி என்பதை அரைப்புள்ளி போலப் பயன்படுத்திப் பேசப்படும் அவரது பேச்சு எந்த ஊர்ச்சாயல் என்று என்னால் கணிக்கமுடியவில்லை. வந்தினு போயினு என்பார். ஆனால் சென்னைத்தமிழும் அல்ல. பின்னர் தெரிந்துகொண்டேன், அவர் கடலூர் பக்கம். உமாவுக்கு மதுரை. அவர்களுக்கு இருபெண்கள். இருவரும் இரட்டையர். இரண்டுபேரும் பத்தாம்வகுப்பு படித்தார்கள்.

அச்சகத்தின் முக்கியமான மனிதனாக நான் மாறுவதற்கு ஐந்துநாட்கள் கூட ஆகவில்லை. அங்கே அச்சிடப்படும் நூல்களைப்பற்றி கொஞ்சமேனும் தெரிந்தவர் சிவகுருநாதபிள்ளைதான். ஆனால் அவருக்கே கொஞ்சம் முன்னேபின்னேதான் ஞானம். அந்த எல்லை தெரியாதபடி கவனமாக நின்று ஆடுவார். தூயதமிழ் அவருக்கு நன்றாகவே கைகொடுத்தது. ஒரு புலவர் படிமம் அவருக்கு வந்தது. ’அவரு கடலாக்குமே’ என்று தாள்போடவந்த நாராயணசாமி சொன்னார்.

என்னால் சைவநூல்களை ஆரம்பம் முதல் கடைசிவரை படிக்கவும் பிழையிருந்தால் கண்டுபிடிக்கவும் முடிகிறது என்பதை சிவகுருநாதபிள்ளை பலமுறை சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘நெசம்மாவே உனுக்கு அல்லாம் புரியுது, என்ன?’ என்பார். நான் புன்னகை செய்வேன்.

புத்தகங்களின் கடைசிப்பிரதி நான் சொல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று பிள்ளைவாள் ஆணையிட்டுவிட்டார். அத்துடன் அச்சகத்தின் நிர்ணாயக சக்தியாக நான் ஆனேன். உண்மையில் அச்சகம் வடிவேலுவையும் உமாக்காவையும் நம்பித்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் என்னை அவர்களெல்லாம் மிகுந்த பணிவுடன் நடத்தினார்கள்.

அச்சுகோக்கும் பெண்களுக்கு நான் வயதில் மிக இளையவன். அவர்கள் நால்வருக்குமே முப்பதை ஒட்டியவயது. அவர்கள் சம்பாதிக்கும் வரை அவர்களுக்கு வீட்டில் திருமணம் செய்துவைக்கமாட்டார்கள் என்றார் சிவகுருநாதபிள்ளை. ‘ஆனா சம்பாரிக்கலேண்ணா எவனும் திரும்பிப்பாக்கமாட்டான்’ அவர் சொல்லவருவதென்ன என்று எனக்கு புரியவில்லை. வாயைத்திறந்து பேசாமல் பார்த்தேன்.

கொஞ்சநாளிலேயே எனக்கு சைவம் சலித்துவிட்டது. பசுபதிபாசம் என்ற அடிப்படைகளைத்தான் திரும்பத்திரும்ப எல்லா நூல்களும் சொல்லின. அதிகபட்சம் ஒரு கட்டுரை. அதுதான் பலநூறு நூல்களாக திரும்பத்திரும்ப அச்சிடப்பட்டு விற்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒன்று, அதைவாசிக்கிறவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அல்லது அவர்கள் வாசிப்பதே இல்லை.

‘இதைச் சொல்றீங்கதம்பி…வாகடம், போகர்னு புக்கு போடுவான் பாத்திருக்கீங்களா? ஒரு நாப்பது பச்சிலமருந்து. அவ்ளோதான். நூறுவருசமா அதைத்தான் திருப்பித்திருப்பி போட்டுனே இருக்கான். நம்மாளும் அஞ்சணா அஞ்சுரூவாண்ணு குடுத்து சந்தையிலே வாங்கினே இருக்கான்….’என்றார் புத்தகம் வாங்கவந்த பச்சியப்பன். அவர் ஆசிரியர். உபதொழிலாக புத்தகவியாபாரம். புத்தகங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி பஸ்சில் ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை கிளம்பினாரென்றால் சனி ஞாயிறுகளில் கோயில்களில் போட்டுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவார். முந்தைய விற்பனைக்கான வசூலும் நடக்கும். அவரும், நாராயணனும், ராஜமாணிக்கமும் மட்டும்தான் சிவகுருநாதபிள்ளையிடம் புத்தகம் வாங்கினார்கள்.

‘இன்னும் ஒரு அம்பது வருசம் இந்த சித்தமருத்துவ புக்கெல்லாம் இதே சீரா போவும்…நம்மாளு வாங்குவான்’

‘ஏன்?’ என்றேன்.

‘எவன் படிக்கிறான்? படிச்சாலும் அந்த மருந்த செஞ்சிர முடியுமா? வலமாப்போற வேம்போட வேரும் வெட்டிவேர் குருத்தும் மூத்தகளுகு முட்டையோடே நலமா அரைச்சு நாற்களஞ்சு வேம்பெண்ணை நாலில் ஒண்ணாக்கிண்ணூ சும்மா அடிச்சி உட்டா எவனால அதையெல்லாம் போட்டு மருந்தரைக்க முடியும்? பேசாம உள்ளூர் மாட்டாசுபத்திரியிலே போனா அவன் ஊசியக்கீசிய போட்டு மாட்ட காப்பாத்துறான்…’

’பின்ன எதுக்கு இத வாங்குறானுக?’என்றேன்.

‘தம்பி, இத வாங்குறவனுகள்லாம் கிராமங்களிலே இருக்கிற செலபேருதான். ஊரிலே கொஞ்சம் விசயம்தெரிஞ்ச ஆளுண்ணு அவனுக்கொரு பேரு இருக்கும். இந்தமாதிரி நாலஞ்சு புக்கு படிச்சு மனப்பாடமா எடுத்துவிட்டான்னா டீக்கடையாண்ட ஒரு மருவாதி…வேற என்ன?’

‘சைவபுக்கும் அப்டித்தான் வாங்குறானுகளா?’ என்றேன்.

‘பின்ன? எந்த ஊரிலயும் ஒண்ணுரெண்டாளு சைவசித்தாந்தப்பளம்னு பேரோட கெடக்கும். களுத்தில கொட்ட, மடியில விபூதி. கொஞ்சம் ஐவேசும் இருந்தா ஊரிலே மருவாதி தன்னால வரும்…அய்யயோ அவாள் சைவப்புலியாக்குமே. ஒடம்பெல்லாம் கோடுகோடா இருக்குமே. சிவபூசை பண்ணாம பச்சைத்தண்ணி பானம் பண்ணமாட்டார்னு ஊரிலே பதறுவானுக. நம்ம மாமா ஒருத்தர் இப்டித்தான் திருப்பாதிரிப்புலியூருலே போயி பளைய ஞானியார் சாமிகளாண்ட தீட்சை வாங்கினு வந்தார். பத்துநாப்பது வருசம் மனுஷன் ஊரையே போட்டு ஆட்டிவச்சார். அத்தைக்கு எந்நேரமும் மொட்டைவசவு. தீட்டு ,ஆசாரம், பூசை அது இதூண்ணு இம்சை.. எவனாம் சிக்கினான்னா ஒடனே எடுத்துடறது…இதே பசுபதிபாசம்தான். பெத்தபுள்ளிங்க மேலே பாசமில்ல. பசுபதிபாசம் மிச்சம்….’

‘சும்மா சொல்வது பிழை’ என்றார் சிவகுருநாத பிள்ளை ‘இது அவசரயுகம். சைவத்தை எளிமையாக அறிமுகம் செய்யக்கூடிய நூல்கள் இவை….பெரிய நூல்களைப்படிப்பவர்கள்கூட–’

’மண்ணாங்கட்டி…’ என்றார் பச்சியப்பன் ‘ஊரூராபோற எனக்குத்தெரியாதா? இதைவிட நல்லாபோற புக்கு என்னது தெரியுமா? காமசாஸ்திரம். எளுவத்திரண்டு பொஸிசன். சந்தைசந்தையா போட்டு விக்கிறானுக. காஞ்ச தென்னமட்டை கணக்கா இருக்கவனுக எல்லாம் பைசா குடுத்து வாங்கிட்டுப்போறானுக. கூடப்போற பெஞ்சாதியப்பாத்தா காஞ்ச வாளமட்டை…அவ என்னத்த பொசிசன் எடுக்கப்போறா?….எளுவத்திரண்டு பொசிசன்….’

‘தேவையில்லாமல் பேசவேண்டாம்’ என்றார் சிவகுருநாத பிள்ளை. முகம் நன்றாகவே சிவந்துவிட்டது.

‘சரிதான் நான் எதுக்கு பேசுறேன்? அவனுக்கு எளுவத்திரண்டு பொசிசன் இருக்கு. சைவத்திலே அறுவத்துமூணு நாயன்மாருதானே? அதான் அந்தபுக்கு ஆயிரம் வித்தா சைவம் அம்பது விக்குது…பேசாம இந்த சைவம் அசைவமெல்லாம் ஏறக்கட்டிட்டு நாலு நல்ல புக்கப்போட்டு காசுபாரும்ணு சொன்னா கேக்கமாட்டாரு…’

’ஊட்ல பொட்டக்குட்டிகள பெத்துவச்சிருக்கேன்யா..’ என்றார் சிவகுருநாத பிள்ளை.

‘அதான் நானும் சொல்றேன்…ரெண்டு பொட்டக்குட்டிக இருக்கே? கையிலே என்ன வச்சிருக்கீர்?’

‘அதுக்காக?’

’நான் என்ன சொல்ல….என்னப்பா வடிவேலு எப்ப முடிப்பே?

‘கட்டிவச்சாச்சு…’

வடிவேலு என்னைப்பார்த்து புன்னகைசெய்துவிட்டு போனார். சிவகுருநாத பிள்ளை தலைகுனிந்து அச்சிட்ட தாள்களையே பார்த்துக்கொண்டிருந்தார். வடிவேலு சென்றபின் என்னிடம் ‘நீ அவன் சவகாசம் அதிகம் வெச்சுக்காதே… படுக்காளிப்பய…என்ன சொல்லினு போறான், பாத்தியா?’ என்றார்.

‘ம்’

‘முப்பது வருசம் முன்னாடி எங்க அப்பா இந்த பிரஸ்ஸ எங்கிட்ட குடுக்கிறப்ப டேய் இது தொளிலுல்ல, சரஸ்வதி சேவை…சரஸ்வதி உன்னைய பாத்துப்பாடான்னு சொன்னாரு…அப்பல்லாம் டிரெடில் மிசின்தான்…வடிவேலுவும் அப்பாவும் மட்டும்தான் வேலைக்கு. அப்பா காலத்திலே அச்சடிச்ச பெரியபுராணம் வசனம் இப்பவும் வீட்டிலே இருக்கு…ஒருநாள் கொண்டுவந்து காட்டுறேன், பாரு. ஒத்த ஒரு அச்சுத்தப்பு இருக்காது…சரஸ்வதிபூசையிலே வைக்கணுமானா அந்தமாதிரி புக்கை வைக்கணும்.. இவன் என்ன கண்டான்? கண்ணெடுத்து ஒரு புக்கை வாசிச்சிருப்பானா? புக்கைவிக்கிறதும் பொகையிலை விக்கிறதும் அவனுக்கு ஒண்ணுதான்’

ஆனால் எனக்கு இரண்டுவாரத்திலேயே தெரிந்துவிட்டது, சிவகுருநாத பிள்ளையின் அச்சகத்தொழில் தரைதட்டி நின்றுவிட்டிருந்தது என்று. அவர் அச்சிட்டுக்கொண்டிருந்த நூல்களெல்லாம் அவரது அப்பாகாலத்தில் ரொக்கப்பணம் கொடுத்து தமிழாசிரியர்களைக்கொண்டு எழுதி வாங்கியவை. அவரது அப்பாவே நாலைந்து நூல்களை எழுதியிருந்தார். எல்லாமே மற்ற புத்தகங்களைப்பார்த்து எழுதப்பட்டவை. அரைநூற்றாண்டுக்கும் மேலாக அதேநூல்கள் அப்படியே திரும்பத்திரும்ப அச்சிடப்பட்டன.

புதியநூல்களுக்கு நான் ஒரு வழி கண்டுபிடித்தேன். நாலைந்து நூல்களில் இருந்து பகுதிகளை எடுத்து ஒன்றாகத் தொகுத்து எழுதி ஒரு புத்தகமாக ஆக்கினேன். சிவகுருநாத பிள்ளை கொஞ்சம் சந்தேகத்துடன்தான் அதை பச்சியப்பனுக்குக் காட்டினார். அவர் உற்சாகமாக ‘புதுபுக்கா…பாப்பம்’ என்று நூறுபிரதிகள் சேர்த்து வாங்கிக்கொண்டார். சிவகுருநாத பிள்ளை முகம் மலர்ந்துவிட்டது.

அதன்பின் நான் அப்படி எட்டு புதிய நூல்களை உருவாக்கினேன். ஒருகட்டத்தில் ஏன் பார்த்து எழுதவேண்டும் என்று தோன்றியது. நானே சொந்தமாக ‘சைவசித்தாந்த சிந்தாமணி’ என்று ஒரு நூலை எழுதினேன். எண்பது பக்கம். பசுபதிபாசம்தான். கூடவே கொஞ்சம் புதியகதைகளையும் சேர்த்திருந்தேன். ‘சைவக்குருமணி’ உலகநாதபிள்ளை என்று எனக்கு பெயர் சூட்டிக்கொண்டேன்.

சிவகுருநாத பிள்ளைக்கு பயம். ’எவனாவது ஏதாவது சொல்லிரப்போறானுக’ என்று புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப்புத்தகம் ஐநூறுபிரதி ஒருமாதத்தில் விற்றுத்தீர்ந்தது. சைவக்குருமணி உலகநாதபிள்ளை மேலும் எட்டு நூல்களை எழுதினார். ‘கைவல்யயாத்திரை’ ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.

சிவகுருநாத பிள்ளை கொஞ்சம் மனத்தெளிவு கொண்டவராக ஆனார். ’எல்லாரும் இப்டித்தான் புக்க எளுதுறானுகபோல?’ என்றார்.

’நான் முழுசா படிச்சுட்டுதானே எழுதறேன்?’

‘இல்ல, சைவம் படிச்சு தெளியணும்னா அதுக்கு ஒரு வயசு வேணும்னு சொல்லுவாங்க’

‘அது வருசத்துக்கு அஞ்சு வரி படிச்சா…நான் தினமும் படிக்கிறவன்’

சிவகுருநாத பிள்ளை மேலே சர்ச்சை செய்யவில்லை. நான் எழுதிய ’சைவ சூடாமணி’ நூலில் அரிஸ்டாடில் மேற்கோள் இருந்ததை சுட்டிக்காட்டி ‘இது எப்டி சைவத்திலே?’ என்று ஒருநாள் கேட்டார்.

‘உலகம் முழுக்க இருக்கிற எல்லா ஞானமும் சைவம்தானே?’ என்றேன்.

‘ஆமாமா’ என்று அவர் ஒத்துக்கொண்டார்.

சித்ரா அச்சகத்தின் கட்டிடம் சிவகுருநாத பிள்ளையின் அப்பா இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னால் வாடகைக்கு எடுத்தது. அருகேயுள்ள ஏதோ முப்பாத்தம்மனுக்குச் சொந்தமானது. பின்பக்கம் சுவர் பிளந்து நின்றிருந்தது. இன்னும் நாலைந்து பெருச்சாளிகள் நினைத்தால் சரித்துவிடலாம். அவர் வைத்திருந்த இயந்திரங்கள் அவர் உமாக்காவை கல்யாணம்செய்துகொண்டபோது கிடைத்த சீதனத்தில் வாங்கியவை. எழுத்துருக்களை மாற்றும்படி பச்சியப்பனோ நாராயணனோ கத்த ஆரம்பித்தபிறகுதான் அவரும் உமாக்காவும் அமர்ந்து அதற்கான காசுபற்றி கணக்குபோடுவார்கள். அப்போதுகூட மொத்த எழுத்துக்களையும் மாற்றுவதில்லை. க,ச மாதிரி அதிகமாக பயன்படும் எழுத்துக்களைத்தான் மாற்றுவார்கள். திடீரென்று புத்தகங்களில் சில எழுத்துக்கள் பளிச்சென்று தென்பட ஆரம்பிக்கும்.

நான் சிவகுருநாத பிள்ளையிடம் ‘நாம வேற மாதிரி புக்கு போடலாமே’ என்றேன் ‘சமையல் மாதிரி’

‘அதுக்கெல்லாம் வேற மார்க்கெட் இருக்கே…’ என்றார் அவர். ’மணிமேகலைக்காரன் அடிச்சு குமிச்சுடறானே. நம்ம வேவாரம் கோயிலை நம்பித்தானே’

நான் பச்சியப்பனிடம் பேசிவிட்டு ‘சிவ பூசைகளுக்கான சிறப்புச் சமையல்கள்’ என்ற நூலை எழுதினேன். நினைவுக்குவந்த எல்லா சமையல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதிய அந்தநூல் நன்றாகப்போகிறது என்றார் பச்சியப்பன் மகிழ்ச்சியாக. ‘சிவபூசை மூலிகைகள்’ ’சிவபூசைக்கான பூக்களும் பலன்களும்’ என ஒருமாதத்தில் எட்டு நூல்களை எழுதினேன். எல்லாமே அபிதானசிந்தாமணியில் இருந்து பார்த்து எழுதியவை.

‘கொஞ்சம் வேறமாதிரி புக்குகள்கூட போகும்’ என்றார் பச்சியப்பன். ‘ஜோசியம், மந்திரதந்திரம் இந்தமாதிரி’

‘அதெல்லாம் எதுக்கு? ‘ என்றார் சிவகுருநாத பிள்ளை ‘மந்திரமாவது நீறுன்னு சொல்லி வளர்ந்த வாயி’

‘அந்த வாயிலே சோறுபோகணுமானா மந்திரம்தான் வேணும்…’ என்றார் பச்சியப்பன் ‘நீ எளுது தம்பி…இந்தாள் போடலேன்னா நான் வேற பிரஸ்சிலே சொல்லி அச்சடிக்கிறேன்’

உமாக்கா என்னிடம் எழுதச்சொன்னாள். நான் ‘வர்ம அடிமுறை’ ‘மலையாளத்து மாந்த்ரீகம்’ ஆகிய இரு நூல்களை எழுதினேன். அச்சில் வந்த என்னுடைய முதல் புனைவுநூல்கள் அவையே. என் பெயர்கள் பெருகின. சங்கரப்பிள்ளை ஆசான், ஆளூர் அச்சுதன், துர்க்கைதாசன். பச்சியப்பன் வாரம் இருமுறை வர ஆரம்பித்தார். அவரது மகனும் வந்து சரக்கு எடுத்துச்செல்வார்.

அச்சகம் கொஞ்சம் தெளிவடைந்தது. இருந்த கடன்களை அடைக்கமுடிந்தது என்றாள் உமாக்கா. புதிய எழுத்துருக்கள் வாங்கப்பட்டன. எந்திரத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்டன. உமாக்கா ஒரு சீட்டில் சேர்ந்திருக்கிறாள் என்று என்னிடம் வடிவேலு சொன்னார். ’நல்ல காசு ஓட்டம் இப்ப….இப்டியேபோனா வேற நல்ல மிசின் வாங்கிடலாம்’

எனக்கு சிவகுருநாத பிள்ளை நூறுரூபாய் சம்பளம் ஏற்றிக்கொடுத்தார். அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. வாரம் இரண்டுமுறை பஸ்ஸில் ஏறிச்சென்று உயர்தர திரையரங்கில் மெத்தைநாற்காலியில் அமர்ந்து ஆங்கிலப்படம் பார்த்து நல்ல ஓட்டலில் நல்ல சிற்றுண்டி சாப்பிட்டு திரும்பியபிறகும் என்னிடம் காசு மிச்சமிருந்தது. அதை ஊகித்தறிந்த வடிவேல் சாயங்காலம் டீ குடிக்க சிவகுருநாத பிள்ளை வெளியே செல்லும் நேரம் பார்த்து என்னிடம் கடன்கேட்டு பெற ஆரம்பித்தார். அவர் ஏழுமணிக்கு திரும்பிச் செல்லும்போது வழியிலேயே குடித்துவிட்டுச் செல்வதை நான் பலமுறை பார்த்திருந்தேன். வாங்கிய பணத்தை அவர் திரும்பத்தருவதுமில்லை. ஆனால் என்னால் ஒருவர் கேட்டால் இல்லை என்று சொல்லமுடியாது.

உமாக்கா காலையிலே வர ஆரம்பித்தாள். கிறிஸ்டினா என்ற புதிய பெண் அச்சுகோக்க சேர்த்துக்கொள்ளப்பட்டாள். அச்சகத்தில் சிலசமயம் இரவு பத்துமணிவரைக்கும்கூட வேலை நடந்தது. கட்டுகட்டாக நூல்கள் வெளியே சென்றன.

சிவகுருநாத பிள்ளை பிள்ளை மட்டும் எப்போதும் ஏதோ தப்பு நடக்கிறது என்ற பாவனையில் இருந்தார். புத்தகம் என்ற ஒன்றை சமகாலத்தில் உயிரோடிருக்கும் ஒருவர், அதிலும் நரைதிரை இல்லாத ஒருவர், எழுதமுடியுமென அவரால் ஏற்கமுடியவில்லை. அதில் ஏதோ மோசடி இருக்கிறது என்று தோன்றிக்கொண்டிருந்தது அவருக்கு.

‘இதிலே ஏதாவது தப்பு இருந்தா?’ என்று ஒருமுறை என்னிடம் கேட்டார்.

‘தப்புல்லாம் இல்ல…பாத்துத்தான் எழுதியிருக்கு’ என்று திடமாகச் சொன்னதும் பேசாமலானார்.

சித்ரா அச்சகத்தின் எல்லா புத்தகங்களும் நியூஸ்பிரிண்டில்தான் அச்சிடப்பட்டன. நியூஸ்பிரிண்ட்டுக்கு அன்றெல்லாம் அரசுக்கட்டுப்பாடு இருந்தது. அதை ஊடுருவ டம்மி நாளிதழ்களை சிலர் நடத்திவந்தனர். தினம் இருநூறு பிரதி அச்சிட்டு கோப்புகளுக்கு அனுப்பிவிடுவார்கள். அரசு கோட்டாவில் கிடைக்கும் நியூஸ்பிரிண்டை கறுப்புச்சந்தையில் விற்பார்கள். எங்களுக்கு நியூஸ்பிரிண்ட் தி.மு.க.காரரான எழிலரசன் என்ற மயில்சாமி நடத்திய தினஞாயிறு என்ற இதழிலிருந்து வந்தது. ஏராளமான அச்சகங்கள் அதை நம்பி இருந்தன.

காலையில் வடிவேலு தாள் இல்லை என்று சொல்லிவிட்டார். சிவகுருநாத பிள்ளை திகைத்து பேசாமல் அமர்ந்துவிட்டார். அவரது அச்சகவாழ்க்கையில் அப்படி ஒரு நிலையை அவர் சந்தித்ததே இல்லை. உமாக்காதான் நிலைமையைப்புரிந்துகொண்டு முன்வந்தார். மாலைக்குள் பச்சியப்பனின் பையனுக்கு கட்டு கொடுக்கவேண்டும். தொலைபேசியில் பேசியபோது தினஞாயிறு அச்சகத்தில் தாள் இல்லை என்றார்கள். பச்சியப்பனுக்கே தொலைபேசியில் செய்திசொல்லி வழிகேட்டாள் உமாக்கா.

பச்சியப்பன் சொன்னார் என்று நான் ஐந்து தெரு தள்ளி இருந்த ஓர் அச்சகத்துக்குச் சென்றேன். மெரினா அச்சகம் சாலையில் இருந்து பிரிந்துசென்ற ஒரு சந்துக்குள் இருந்தது. அதன் மேஜையில் முன்வழுக்கையுடன் குள்ளமான, சிவப்பான மனிதர் அமர்ந்திருந்தார். அவர்தான் உரிமையாளர் என்று நினைத்தேன். ஆனால் அச்சகம் ஒரு கிறித்தவப்பெண்ணுக்குச் சொந்தமானது, அவள்தான் அதை நடத்திவந்தாள் என்றும் அந்த மனிதர் அந்தப் பெண்மணியின் காதலர் என்றும் பின்பு தெரிந்துகொண்டேன்.

பச்சியப்பன் அனுப்பினார் என்று சொன்னதும் உற்சாகமாக என்னை அமரச் சொன்னார். காகிதம் கிடைக்குமா என்று கேட்டேன். தன்னால் முடிவெடுக்கமுடியாது, ரோசம்மாவிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். நான் அவசரம் என்றேன். யோசித்துவிட்டு ’நான் வேணுமானா போய் சொல்லிப்பாக்கிறேன்’ என்றார்

அவர் வெளியே சென்றதும் நான் மேஜைமேல் இருந்த அச்சுத்தாள் மடிப்புகளை எடுத்து அனிச்சையாக பிழைதிருத்த ஆரம்பித்தேன். நாலைந்து சொற்றொடர்களுக்குப்பின் சட்டென்று எழுந்துவிட்டேன். யாரும் பார்க்கவில்லை என்று அமர்ந்தேன். மூச்சுத்திணறியது. எழுத்துக்களைப் பார்க்கமுடியாமல் பார்வை அலையடித்தது. அது ஒரு பாலுணர்ச்சிக்கதை. நான் வாசித்தபக்கத்தில் ஒருவன் இரண்டுபெண்களிடம் உறவுகொண்டபடி இருந்தான்.

படபடப்புடன் அந்த அச்சகத்தைப்பார்த்தேன். பதினைந்து இளம்பெண்கள் அச்சுகோர்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு கம்பாசிட்டர்கள் வேலைசெய்ய நான்கு யந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. மேஜைமேல் அந்த நூலின் பிற பக்கங்கள் இருந்தன.

முன்வழுக்கை மனிதர் சைக்கிளை வைக்கும் ஒலி கேட்டு நூலை திரும்ப வைத்தேன்.அவர் உள்ளே வந்து வியர்வைக்கு சட்டையை மேலே தூக்கி விட்டபின் அமர்ந்தார். ’காலம்பர பத்துமணி ஆகல்ல. அதுக்குள்ள வெயில்…என்ன சாப்பிடறேள்?’

‘பேப்பர்?’

‘அதுகுடுத்திடறேன்…சொல்லிட்டாங்க’

‘வெலை?’

‘வெலையெல்லாம் இல்ல…ஒருவாரத்துக்குள்ள பேப்பராவே குடுத்திருங்கோ….ஏன்னா வெலைக்கு வித்த விஷயம் நமக்கு சப்ளை பண்றவனுக்குத்தெரிஞ்சா அவன் எகிறிண்டுடுவான்…’

நான் யோசித்து, துணிந்து ‘இது…இந்த புக்கு’ என்றேன்.

‘இங்க இதான் அதிகமும் போடுறோம்…நல்லா போகுது’ என்றார் ‘பச்சியப்பன்கூட இங்கதான் வாங்கிண்டிருக்கார்’

நான் பெண்களைப்பார்த்தபின் ‘இவங்களா கம்போஸ் பண்றாங்க?’ என்றேன்.

‘அவங்கள்லாம் படிக்க மாட்டாங்க தம்பி…அப்டியே கம்போஸ் பண்ணிடுவாங்க’

அவர் சொல்வது எனக்குப்புரிந்தது. அச்சுகோப்பவர்கள் எதையும் வாசிப்பதில்லை. வாசித்தால் சித்ரா அச்சகத்தில் அவர்கள் சைவ அறிஞர்களாக அறியப்பட்டிருக்கவேண்டும். மொத்த நூலும் இடவலமாகத் திரும்பிய எழுத்துக்களாக அவர்கள் வழியாகக் கடந்துசெல்கிறது. ஒரு தடம்கூட இல்லாமல்.

‘இத எழுதுறது யாரு?’

‘நான்தான். நான் கொஞ்சம் கதைகிதை எழுதுவேன்…’

‘இதெல்லாம் எப்டி?’

’சும்மா மூர்மார்க்கெட்டு போயி எதாவது இந்தமாதிரி புக்கா வாங்கி அப்டியே தமிழ்ல எழுதிடறதுதான்’

சித்ரா அச்சகத்துக்கு வந்தபின்னர் அச்சுகோக்கும் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். எழுத்தறிவே இல்லாமல் வாழ்வதைவிட கொடுமையானது அது என்று தோன்றியது. நாளெல்லாம் எழுத்தில், இலக்கியத்தில் வாழ்க்கை. ஆனால் ஆனால் எந்த அறிவும் இல்லை. சுட்டசட்டி சட்டுவங்கள்.

விற்பவர்களும் அப்படித்தான். சென்னையில் பல இடங்களில் நியூ செஞ்சுரி புத்தகநிலையத்தின் வண்டிகள் நிற்கும். கையில் காசிருந்தால் உடனே ஏறிவிடுவேன். அதிகநேரம் நிற்பவனாதலாலும் என்னுடைய பரட்டைத்தோற்றத்தாலும் சந்தேகப்பட்டு உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள் விற்பனையாளர்கள். சிலசமயம் உள்ளே வந்து அருகே நிற்பார்கள்.

‘யூரி பாலாயன் எழுதின நாவல் ஏதாவது இருக்கா?’

‘இருக்கும் தேடிப்பாருங்க’

‘இல்ல…பாத்துட்டேன்..உங்க ஸ்டோரிலே இருக்கா?’

‘இல்லீங்க…தலைப்பு எல்லாம் ஞாபகம் வச்சுக்கிடறதில்ல…நீங்களே பாத்துக்கிடுங்க’

சிவந்த அட்டைபோட்ட கனத்த லெனின் ஸ்டாலின் நூல்கள். மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு. மூலதனம் ஆங்கிலப்பதிப்பு நான்கு பெரும் நூல்களாக. காகிதவாசனையே வேறுமாதிரி இருந்தது. முகர்ந்து முகர்ந்து திரும்ப வைத்தேன். அங்கேயே நின்றுகொண்டிருக்கவேண்டும் என்று தோன்றியது.கையிலுள்ள அத்தனை காசுக்கும் அனைத்துநூல்களையும் வாங்கிவிடவேண்டும் என்று. என்ன ஒரு வடிவமைப்பு. புத்தகங்கள் அல்ல அவை, குண்டுகுண்டு குழந்தைகள் அவை.

உள்ளே ஏறிவந்த இருவர் நாலைந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டார்கள். தலைப்புகளை ஓரக்கண்ணால் பார்த்தேன். ‘பொதுவுடைமைதான் என்ன?’ ‘புரட்சியின் இடிமுழக்கம்’ ‘நூறுபூக்கள் மலரட்டும்’. அந்த ஆட்களைப்பார்த்தேன். சிறிய கட்டம்போட்ட வெளிர்நிறச் சட்டை, பாண்ட், வாட்ச். மெல்லிய தொப்பை. அரசூழியர்கள். ஒருவர் ஒரு நூலை பிரித்துப்பார்த்து ஏதோ சொல்ல இன்னொருவர் ‘அதானே அப்பவே சொன்னேன் தோழர்?’ என்று விளக்கமளிக்க அவர்கள் நடந்து விலகிச்சென்றார்கள்.

திரும்ப நடந்தபோது மனம் சோர்ந்திருந்தது. பிரம்மாண்டமான கட்டிடங்கள், கிறுக்குபிடித்த யந்திரம்போல இயக்கத்திலிருக்கும் நகரம். கன்னிமாரா ஓட்டல் வழியாக வந்துகொண்டிருந்தபோது முதல்முறையாக அதை ஏறிட்டுப்பார்த்தேன். மதிலுக்கு அப்பால் என்னவென்றே தெரியவில்லை. வெளியே நின்று என்னைப்போலவே நாலைந்து பஞ்சைப்பராரிகள் அந்த ஓட்டலைப் பார்த்துக்கொண்டிருந்தனர். செத்தகாலேஜ் உயிர்காலேஜ் பார்க்க கொண்டுவரப்பட்டவர்களாக இருக்கும். சொந்தக்காரர்கள் ஓட்டலின் அருமையை சொல்கிறார்கள். ஏதோ அந்தப்பெருமைக்கு தாங்களும் உரிமையாளர்கள் போல.

ஒரு பெரிய கண்டசா கார் மெல்ல வெளிவந்தது. மிதப்பதுபோல சாலையில் சென்றது. அதனுள் இருப்பவர்களைத் தெரியவில்லை. திரும்பி நடக்கும்போதே திட்டம் உருவாகிவிட்டது. நேராக மெரினா அச்சகம் சென்றேன். முன்வழுக்கை இருந்தார். ஓர் அதிதீவிர இந்துத்துவ பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். நான் அதை பலவருடம் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். என் கட்டுரைகள் சில அதில் வெளிவந்துமிருந்தன.

‘என்ன ?” என்றார். ‘இப்ப எங்களுக்கே தாள் பத்தலை’

‘அதுக்காக இல்லை’ என்றேன் ’நான் அன்னிக்குப் பாத்தேனே அந்தமாதிரி புக்கு ஒண்ணு எளுதிக்குடுத்தா என்ன குடுப்பீங்க?’

அவர் சற்று திகைத்துவிட்டார். கண்களில் உடனே ஒரு தந்திரம் வந்தது ‘அப்டிக்கேட்டா…’

‘நான் நல்லாவே எழுதுவேன்…அங்க எல்லா புக்கும் நான் எழுதுறதுதான்’

’பச்சியப்பன் சொன்னாரு…ஒரு எரநூறு…’

‘ஆயிரம் ரூபாய்னா சொல்லுங்க…எழுதிக்குடுக்கறேன்’

‘ஆயிரமா? ஆயிரம்னா…’

’சரி பரவாயில்ல…ஆயிரம்னா எழுதறேன்’ என்றேன்.

எழப்போனவனை அவர் கையாட்டி அமரச்சொன்னார் ‘என்ன அவசரம்…பேசுவோமே? அஞ்ஞூறு போட்டுக்குவோம்”

‘ஆயிரம்னா மட்டும்தான்’

ஆயிரத்துக்கே ஒப்புக்கொண்டார். ‘நூத்தம்பது அச்சுப்பக்கத்துக்கு கொறையக்கூடாது….வாசிக்கிறாப்ல கதை இருக்கணும்…’

‘சரி…’

மொட்டைமாடியில் படுத்திருக்கும்போது என்ன எழுதுவதென்று தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட எழுத்து எதையும் வாசித்ததுமில்லை. மறுநாள் மூர்மார்க்கெட் சென்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தாலென்ன என்று தோன்றியது. அடுத்த கணம் இது என்ன கிறுக்குத்தனம் என்றும் தோன்றியது. இல்லை இது எனக்குத்தேவை. இந்தப் பணத்துடன் கன்னிமாராவுக்குள் நுழைந்து ஒருநாள் தங்கவேண்டும். பிரபுக்களைப்போல ஒருநாள் வாழவேண்டும். மனிதனாக நான் எவருக்கும் குறைந்தவனல்ல என்று எனக்கே தெரியவரும். நான் அங்கே வாழ்வதில்லை என்றால் அதற்குக் காரணம் அது எனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காகத்தான்.

ஆமாம், நான். நான் போவது அனுபவத்துக்காக மட்டும்தான். அதை நான் எழுதுவேன். எழுதுவதற்காகத்தான். திரும்பி வரும்போது அங்கே ஒரு குண்டு வைத்துவிட்டு வந்தாலென்ன? குண்டு தயாரிப்பதைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கமுடியும். அதை ஒரு பெரிய பெட்டியில் கொண்டுசென்று இரவிலேயே இணைத்துவிடவேண்டும். அந்த ஓட்டலின் முகப்பில் அதை வைத்து கொளுத்தி….ஆனால் நான் அங்கிருந்து வந்தபின் அது வெடிக்கும்படி எப்படி அமைப்பது? ஒருகட்டத்தில் கற்பனை முன்னகரவில்லை.

கண்களை மூடிக்கொண்டே படுத்திருந்தேன். ஒரு கதை எழுதவேண்டும். பாலுறவுபற்றி. எப்படி? இவற்றை எல்லாம் யார் வாசிக்கிறார்கள்? யார், சைவசித்தாந்தமும் வாகடமும் மாந்திரீகமும் வாசிப்பவர்களைப்போல சிலர்தான். இவர்களும் எதையும் செய்யப்போவதில்லை. வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் செய்யவே முடியாதவற்றைத்தான் வாசிக்கிறார்கள். நடக்கவே முடியாததைத்தான் விரும்புகிறார்கள்.

உலகம் முழுக்க இல்லாதவற்றைப்பற்றித்தான் எழுதிக்குவிக்கப்படுகின்றன. அச்சகங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. காகிதங்கள் புத்தகங்களாக உருமாறுகின்றன. சொற்கள் இடவல எழுத்துக்களை பிடித்து தங்களை நோக்கித்திருப்பிக்கொண்டே இருக்கின்றன….ஆனால் சிலசமயம் நடந்துவிடுகிறது. கனவுகள் பலிக்காவிட்டாலும் கெட்டகனவுகள் பலித்துவிடும் என்று என் பாட்டி சொல்வாள்…

தூங்கிவிட்டேன். நள்ளிரவின் குளிரில் பாயை எடுத்து இடுக்கிக்கொண்டு கீழே வந்தபோது எழுதவேண்டியது மனதில் வந்துவிட்டது. உடனே சீராகக் கிழிக்கப்பட்ட நியூஸ்பிரிண்ட் தாளில் பென்சிலால் வேகமாக எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்தாலே எழுத்து பெருகி வருவது எனக்கு எப்போதுமே வழக்கம். சிலநிமிடங்களுக்குள் கதை நடக்கும் இடத்தை, மனிதர்களை கண்முன் காண ஆரம்பித்தேன்.

விடிந்தபோது பாதி எழுதிவிட்டிருந்தேன். விட்ட இடம் பற்றிய நினைப்புடன் படுத்துத் தூங்கி அச்சுகோக்கும் பெண்கள் வந்தபோதுதான் எழுந்தேன். காலைஉணவுக்குப்பின் மீண்டும் எழுதினேன். மதியம் தூங்கியபின் மீண்டும் எழுதி பின்னிரவில் நிறுத்தினேன். மீண்டும் மறுநாள் காலையில் எழுதி மதியம் நாவலை முடித்துவிட்டேன். பதினைந்து அத்தியாயங்கள்.

ஒருவன் சென்னையில் மாடியறை ஒன்றில் வாழ்கிறான். நிரந்தர வேலை கிடையாது. அவ்வப்போது எதையாவது செய்து ஏதாவது சாப்பிட்டு இருந்துகொண்டிருக்கிறான். அவனுடைய அறை அறையே அல்ல. கள்ளிப்பெட்டிமரத்தால் சுவர்கள் அமைத்த ஒரு இடுக்கு. அதனுள் அவனுடைய சிறிய கட்டிலும் ஒரு கள்ளிப்பெட்டியும் வைக்குமளவுக்குத்தான் இடம்.

அவனால் எவரையும் நேரில் பார்த்துப் பேசமுடியாது. எதையுமே கண்களைத் தூக்கிப்பார்க்கும் தைரியமில்லை. சாலையில் தலைகுனிந்துதான் நடப்பான். அவன் வெளியுலகை தைரியமாகப் பார்ப்பது அவன் அறையின் சுவரில் உள்ள விரிசல்கள் வழியாகத்தான். மணிக்கணக்கில் அதன்வழியாக வெளியே சாலையையும் மக்களையும் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுடைய ஒரே ஆனந்தம் அதுதான்.

ஒருநாள் மறுபக்கம் விரிசல் வழியாகப்பார்ப்பவன் அங்கே ஒரு வீட்டில் குடிவந்திருக்கும் பெண்ணைப்பார்க்கிறான். அவள் திருமணமாகி குழந்தைகளுடன் அங்கே வசிக்கிறாள். அவன் அவளைப் பார்க்க ஆரம்பிக்கிறான். நுட்பமாக கவனமாக பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவளுடைய உடலை, குளிக்கும்போது நிர்வாணத்தை. ஒருகட்டத்தில் விதவிதமாகக் கற்பனைசெய்ய ஆரம்பிக்கிறான். அவனுடைய கற்பனைகளில் அவளுடன் உறவுகொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இக்கட்டுகளைத் தாண்டி அந்த உறவு நிகழ்கிறது. அதுதான் நாவல்.

நாவலின் முடிவில் அவனுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. உதவி இயக்குநராக. இருபதுநாள் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் தன் வீட்டுக்குத் திரும்பி வருகிறான். இருட்டிலேயே படுத்துக்கொள்கிறான். கதவை யாரோ சுரண்டுகிறார்கள். திறக்கிறான், அவள்தான். அவன் பிரமித்து நிற்கிறான். ‘நீ பார்ப்பது எனக்குத் தெரியும்…நீ வருவதற்காகக் காத்திருந்தேன்…என்னால் தாளமுடியவில்லை’ என்கிறாள்.

அவளுடன் அன்றிரவெல்லாம் அவன் உறவாடுகிறான். காலையில் அவன் தூங்கி கண்விழிக்கையில் கதவு திறந்திருக்கிறது. அவள் சூடியிருந்த முல்லைச்சரத்தின் வாசனை அறையில் எஞ்சியிருக்கிறது. பல்தேய்த்துக்கொண்டிருக்கும்போது பார்க்கிறான், அவள் வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்கள் எங்கே என்று கூட்டிப்பெருக்கவரும் கிழவியிடம் கேட்கிறான். பத்துநாட்களுக்கு முன்னால் அந்தப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறாள்.

கதையை என் முன்னாலேயெ முன்வழுக்கைக்காரர் வாசித்தார் ‘பிரம்மாதம்….நீங்க நன்னா எழுதறேள்…சீரியஸாக்கூட எழுதலாமே’ என்றார்.

‘சீரியஸான்னா?’

‘சீரியஸான்னா…தி.ஜானகிராமன் மாதிரி?’

‘நீங்க அதெல்லாம் படிப்பீங்களா?’என்றேன்.

‘படிப்பேனா? உசிராக்கும். நான் நேர்லே போய் பாத்து பேசியிருக்கேன்’ என்றார் அவர்.

‘இங்கதான் இருக்காரா?’

‘நாசமாப்போச்சு….போனமாசம்தான் செத்துப்போனார்…’என்றார்.

‘அய்யோ’

‘அநியாயம்…ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே அவருக்கு ஒரு குட்டி ஊசிய தப்பா போட்டுட்டா…அப்டியே போய்ட்டார்…என்னத்தைச் சொல்ல..கு.ப.ராவ பட்டினிபோட்டு கொன்னாச்சு.. இந்தமட்டுக்கும் இவர அறுபதுவயசு வரை விட்டுவச்சிருந்தோமே’

நான் சட்டென்று ஒரு கூச்சத்தை அடைந்தேன். ‘இல்ல…இது’ என் நாவலை இழுத்தேன்.

‘ஏன்?’

‘இல்ல…நீங்க இலக்கியமெல்லாம் வாசிப்பீங்கன்னு தெரியாது’

‘அதுக்கென்ன? எல்லாம் எழுத்துதானே?’

ஆயிரம்ரூபாயை அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டார். நான் ரூபாயுடன் திரும்பியபோது அதை அப்படியே தூக்கி எங்காவது வீசிவிடவேண்டும் என்று நினைத்தேன். நூறுரூபாய்ச்சுருள்கள். அவை கனமாக சட்டைப்பையில் தொங்கின. அச்சகம் வந்ததும் அதை ஒளித்துவைத்துவிட்டேன்.

பிறகு அந்த ரூபாயை நான் எடுக்கவேயில்லை. அதைப்பற்றி நினைக்க என் அகம் விரும்பவில்லை. ஆகவே அதை மறந்துவிட்டேன். மெரினா அச்சகம் பக்கம் நடமாடவுமில்லை. பன்னிரண்டுநாட்கள் கழித்து ஒரு சந்தர்ப்பத்தில் பணத்தை எடுக்கநேர்ந்தது.

கிறிஸ்டினாவின் அப்பா வேலைமுடிந்து சைக்கிளில் சாலைவழியாக வந்துகொண்டிருந்தபோது யாரோ லாரிக்காரன் அடித்துப்போட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். அவர் இரண்டுமணிநேரம் அங்கேயே கிடந்து போலீஸாரால் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலையில் செய்தி கிடைத்ததும் அச்சகத்தை மூடிவிட்டு எல்லாரும் பஸ் ஏறி ராயப்பேட்டை சென்றோம்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியின் வார்டுகளுக்குள் நாய்கள் நடமாடின. படுக்கைகளின் நடுவே தரையில்கூட நோயாளிகள் படுத்திருந்தார்கள். வெளியே திண்ணைகளில் கூட தூண்களில் குளூக்கோஸ் புட்டிகளைத் தொங்கவிட்டு நோயாளிகளை படுக்கவைத்திருந்தார்கள். சத்தமும் நெரிசலும் குப்பையும் எச்சிலுமாக பெரிய சந்தைபோலிருந்தது. கிறிஸ்டினாவும் அவள் தங்கை ரெஜினாவும் இருப்பதை நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்.

எங்களைக் கண்டதும் கிறிஸ்டினா கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அப்பாவுக்கு நிறைய எலும்புகள் முறிந்திருந்தன. ஏராளமான ரத்தம் வீணாகிவிட்டிருந்தது. ஆனால் அவரை அங்கே கொண்டுவந்துபோட்டு கட்டுபோட்டு பொதுவான சில ஊசிகள் போட்டதைத் தவிர எந்த மருத்துவமும் அதுவரைக்கும் செய்யவில்லை. டாக்டர் என எவரும் வந்து பார்க்கவில்லை. கிறிஸ்டினாவின் அம்மா மௌனமாக மாறி மாறி எங்களைப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது. அவள் மனச்சிக்கல் கொண்டவள் என கிறிஸ்டினா பிறகு சொன்னாள்.

‘எங்கப்பா போனா எங்களுக்கு யாருமில்லே…எங்கப்பா போனா நாங்க உசிரோட இருக்கமாட்டோம்’ என்று கிறிஸ்டினா கதற ரெஜினா அக்காவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

‘இருடீ..இப்ப என்ன ஆச்சு..ஏங்க டாக்டரைத்தான் போய் பாக்கிறது…’

நானும் சிவகுருநாத பிள்ளையும் டாக்டரைப் போய்பார்த்தோம். அவர் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். ‘என்ன பண்ணச் சொல்றீங்க? இங்க என்ன பண்ணணுமோ அதைப்பண்ணியாச்சு…எலும்ப கட்டியிருக்கு. புண்ண வச்சு கட்டியாச்சு. ஆண்டிபயாட்டிக் குடுத்தாச்சு…இனிமே வெளியேதான் மருந்து வாங்கணும்…’

நான் ‘அவங்க கிட்ட பணமில்ல’ என்றேன்.

‘அப்ப பாப்பம்’

’இங்கேயே வைச்சு பாருங்க டாக்டர்….’ என்றேன் ‘வேணுமானா–’

அவர் என்னைப்பாராமல் ’ஒரு ரெண்டாயிரம் ரூபா ஆயிரும்’ என்றார்.

‘ரெண்டாயிரம் குடுத்திடறோம்’

‘இப்பவே குடுக்கணும்;’

‘ஒருமணிநேரத்திலே குடுத்திடறேன்…’

டாக்டரை விட்டு வந்ததும் சிவகுருநாத பிள்ளை ‘சத்தியமா எங்கிட்ட சல்லிப்பைசா இல்ல…’ என்றார். நான் ஏதோ சொல்ல வருவதற்குள் ’இப்ப கொஞ்சம் காசு வருதுதான். ஆனா கடன் ஏகப்பட்டது இருக்கு…ஒண்ணொண்ணா இப்பதான் அடைக்கிறேன்…’ என்றார்.

நான் பேசாமல் நடந்தேன்

‘அஞ்சோ பத்தோ குடுத்திடலாம்…’ பின்பு ‘ஒரு நூறு ரூவா வேணுமானா என் கணக்குலே’ என்றார்.

நான் பஸ்ஸைப்பிடித்து அச்சகம் சென்று பணத்தை எடுத்துக்கொண்டேன். மெரினா அச்சகம் போய் மேலும் ஆயிரத்தைநூறு ரூபாய் வாங்கிக்கொண்டேன். டாக்டரை அவரது அறைக்குள் சென்று கண்டு இரண்டாயிரத்தைக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் அப்பாவை உள்ளே கொண்டுசென்றார்கள். கிறிஸ்டினாவின் கையில் ஐநூறு ரூபாயைக் கொடுத்தேன்.

திரும்ப பஸ் ஏறும்போது உமாக்கா ‘நான் ஒரு முந்நூறு கொண்டாந்திருந்தேண்டா’ என்றாள் ‘அப்றமா ஒரு எரநூறு குடுக்கிறேன். அதுக்கு தெரியாம கொண்டுபோயிக்குடு’ என்ன?

அன்று இரவு அச்சகத்தில் நானும் சிவகுருநாத பிள்ளையும் உமாக்காவும் இருந்தோம். சிவகுருநாத பிள்ளை என்னிடம் ‘அந்தப் பணம் ஏது? உண்மையச் சொல்லிடணும்…’ என்றார்.

நான் உமாக்காவைப் பார்த்தேன்

‘சொல்லு’

‘உமாக்கா அந்தப்பக்கம் போகட்டும், சொல்றேன்’

‘அவ இருக்கட்டும், சொல்லு’

நான் உமாக்காவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். மெல்லியகுரலில் ‘மெரினா பிரஸிலே குடுத்த பணம்’

’எதுக்கு?’

‘புக்கு எழுத’

‘என்ன புக்கு’

‘செக்ஸ் புக்கு’

சிவகுருநாதபிள்ளை உமாக்காவைப் பார்த்தார். வாய் திறந்திருந்தது.

’சரிதான் அவன் என்னமோ எழுதறான். சம்பாரிக்கறான்… நமக்கு என்ன ?’ என்றாள் உமாக்கா.

‘நமக்கு என்னவா? டீ இது நம்ம பிரஸ்ஸு…ரிஷிமாதிரி எங்கப்பா இங்க இருந்திருகார்…இந்தக்கபோதி…இவன்…’ சட்டென்று கூவியபடி எழுந்தார் ‘டேய் வெளியேபோ’

‘இந்தாருங்க..’

‘வாயமூடுடீ…எனக்கு என்ன அந்த நாறத்தொழில் பண்ணத் தெரியாமலா இருக்கு? மானமா பொழைக்கிறவண்டீ…டேய் நாயே, வெளியே போறியா இல்லியா?’

நான் என் பையை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட்டேன். நேராக மெரினா அச்சகம் சென்றேன். அங்கேயே தங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டார் முன்வழுக்கை. ஆனால் மறுநாளே கிளம்பி வேறு ஒரு அச்சகத்தில் சேர்ந்துவிட்டேன்.

மெரினாவுக்காக நான் பாலுறவுக்கதை எழுதவில்லை. என்னால் மேற்கொண்டு அதை எழுதமுடியவில்லை. பதிலுக்கு மூன்று சமையல்நூல்களும் இரண்டு துப்பறியும் நாவல்களும் எழுதிக்கொடுத்தேன்.

இரண்டுவாரம் கழித்து நான் சாப்பிட்டுவிட்டு வரும்போது தெருவில் உமாக்காவை பார்த்தேன். தலையில் முந்தானையைப்போட்டுக்கொண்டு அசைந்து அசைந்து நடந்துகொண்டிருந்தாள். இரட்டைமூக்குத்தியைக் கண்டதும் மனம் திடுக்கிட்டது. சந்துவழியாகச் செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் என்னைப்பார்த்துவிட்டு ஒதுங்கி நின்றாள். நான் அருகே சென்றேன்.

‘நல்லா இருக்கியாப்பா?’ என்றாள்.

‘ம்’ என்றேன்.

‘அந்த வேதக்காரக்குட்டியோட அப்பா பொழைச்சுகிட்டார்…எல்லாம் உம்புண்ணியம்’ என்றாள்.

‘நான் தெரியாம…’

‘அது ஒண்ணும் தப்பு இல்ல….’ என்றாள் ‘சும்மா தப்புசரீண்ணு சித்தாந்தம் பேசீட்டிருந்தா ஒருமாதிரி ஒலந்து வைக்கோலாத்தான் போவணும்….’

நான் திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்.

‘அவுங்க அப்பா அந்தமாதிரி மனுஷன்…இவரையும் அப்டியே வளத்துட்டார். சித்தாந்தம்லாம் அவங்க பாத்துக்கிடட்டும். மனுஷனப்பத்தி எழுதினாத்தானே கதை? நீ உன் பாட்டுக்கு ஜெயகாந்தன் மாதிரி தோணினத எழுது… தப்போசரியோ அதெல்லாம் மத்தவங்க கவல…”

‘இல்லக்கா இது…இது வந்து…’

‘சின்னப்பயதானே நீ…இப்ப இப்டி தோணிச்சு எழுதினே. தோணினத அப்டியே எழுதிக்கிட்டிரு… ’ அடுக்கை கைமாற்றி ‘வரட்டா…வெயிலு கொளுத்துது’ என்றாள். போகும்போது என் தலைமேல் லேசாக கையை வைத்துவிட்டுப் போனாள்.

முந்தைய கட்டுரைஎன்ன பிரயோசனம்?
அடுத்த கட்டுரைசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?