கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளருக்கு

வணக்கம்!

எங்கள் பகுதியில் ஊருக்கு ஒரே ஒரு செல்வந்தர் இருந்த கால கட்டமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் ஆணவம், பெருமை, எல்லாமும் மரணப் படுக்கையிலயே வீழ்ச்சி அடைவதைப் பார்க்க எல்லாருமே காத்திருந்தார்கள். பிணம் வீழ்ந்ததும் விமர்சனங்கள் ஆரம்பிக்கும். கவுண்டச்சியின் மனம் வேறொன்றாக இயங்கி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் மகன் போயிருக்காவிட்டால் அந்த முகம் யாருக்கும் தெரிந்திருக்காத ஒன்றாகவே இருந்து மறைந்திருக்கும். வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிப்பதுதானே இலக்கியம்? அந்த வன்மை முகம் கவுண்டரை பழிவாங்கும் முகமா? பெண்கள், கணவனிடம் கனிவை எதிர்ப்பார்ப்பது காலம் காலமாக தொடரும் நிறைவேறாத கனவா? எனக்கு முத்துப் பெருவட்டரின் முகம்தான் நினைவுக்கு வந்தது! மகன் எனக்கு ஆனந்தனை நினைவு படுத்தினான். பொதுவாக எல்லாராலும் (நானே கூட, கல்லூரியில் படித்தபோது மற்றவர்கள் கிண்டல் செய்ததால்) இகழப்படும் எங்கள் பகுதி பேச்சு வழக்கை எழுதியதற்கு நன்றி!

நன்றி

தண்டா

அன்புள்ள தண்டபாணி,

அப்போது அந்த மொழியைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அதிலுள்ள நீட்டல்களை, வளைவுகளை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழினி பதிப்பகம் வெளியீடாக வந்த உங்களது “எழுதும் கலை” எனும் நூலை
வாசிக்க நேர்ந்தது. அதில் ஒரு திறனாய்வாளராக பல நாவல்களை படிக்க
செய்துள்ளீர்கள். அவையெல்லாம் 2000ம் ஆண்டுக்கு முற்பட்ட படைப்புகளாகவே
உள்ளன. 2000ஆம் ஆண்டிற்கு பிறகாக வந்த சிறந்த படைப்புகளை பரிந்துரை செய்ய
முடியுமா?

(குறைந்தது பத்து நாவல்களையாவது பரிந்துரைக்கவும்)

இப்படிக்கு,
வினோத் கோவிந்தராஜ்

அன்புள்ள வினோத்

200த்துக்குப்பின்னால் வந்த முக்கியமான நாவல்களைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். உயிர்மை வெளியீடாக வந்த புதியகாலம் என்ற நூலில் அக்கட்டுரைகள் உள்ளன

நீங்கள் சொன்னதுபோல பட்டியலை புதுப்பிக்கவேண்டும். செய்கிறேன்

ஜெ

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் விஜயரெங்கன். என் வயது 31. மனைவி, 1 வயது மகன் உள்ளனர். சமீபத்தில், பார்த்த வேலையை விட்டுவிட்டு வேறொரு நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் பெற்றுவிடுவேன்.மதுரையில் வசிக்கிறேன்.

எதேச்சையாக தங்களின் தளத்திற்கு வந்த நான் இன்று தவறாமல் உங்கள் தளத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்றால் என்வரையில் நான் அறிந்தது நீங்கள் மிகச்சாதாரணமாய் தாண்டிச்செல்லும் வணிக இதழ்களில் உள்ளதைத்தான். உங்கள் தளத்திற்கு வந்த பிறகுதான் இலக்கிய வாசிப்பினில் அடியெடுத்துவைத்திருக்கிறேன். ‘தங்களின் நவீன தமிழிலக்கிய அறிமுகம்’, ‘எழுதும் கலை’ ஆகிய புத்தகங்கள் எனக்கு நல்லதொரு அறிமுகமாக அமைந்தது. தங்களின் தளத்தில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்து முடித்திருக்கிறேன். ‘ரப்பர்’ புத்தகமாக வாங்கிப் படித்து முடித்திருக்கிறேன். அவை என்னுள் ஏற்படுத்திய மாற்றம் மிகப்பெரிது. ஒவ்வொன்றைப் பற்றியும் தங்களுக்கு எழுத மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறேன்.

அன்புடன்,
தா.விஜயரெங்கன்.

அன்புள்ள விஜயரெங்கன்

நன்றி

இலக்கிய அறிமுகம் என்பது தொடர்ந்து வாசிப்பதன் வழியாக விவாதிப்பதன் வழியாக நம் ரசனை கூர்மையடைவதை ஒட்டியே உள்ளது. அதன் வழியாக நாம் நம்முடைய அளவீடுகளை அடைகிறோம். அதுவே இலக்கியவாசகனாக நம்மை ஆக்குகிறது

தொடக்கம் போலவே வளர்ச்சியும் சீராக அமைய வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகுமரி உலா – 5
அடுத்த கட்டுரைகுமரி உலா – 6