அன்புள்ள ஜெயமோகன்,
விஷ்ணுபுரம் படித்தேன். முதல் முறை. அனுபவத்தை பகிர வேண்டும் என்று தோன்றியது.
ஸ்ரீ பாதம் பகுதியில் வரும் சில நீண்ட வர்ணனைகளை கவனமாக படிக்க முடியவில்லை. கதை ஆர்வமே காரணம். தினம் 30 பக்கங்களாக படிக்கும்போது, அது சிரமமாக உள்ளது. இரண்டாவது முறை பொறுமையாக படிக்க முடியும் என நினைக்கிறேன் .
ஸ்ரீ பாதத்தில் வரும் கதாபாத்திரங்கள் சித்தரிப்பு பிடித்திருந்தது. ஆழ்வாரும், பாண்டியனும் பற்றிய சித்திரம் எனக்கு புதிது.
கௌஸ்துபம் பகுதியை முழுமையாக படிக்க முடிந்தது. தர்க்க விவாதங்களை அனுபவிக்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும். அந்தத் தேடலின் சிறு பகுதி ஒவ்வொரு மனிதனுக்கும். எனக்கும் இருப்பதாலோ என்னவோ!
மத தத்துவங்கள், மக்களை ஏமாற்றும் தந்திரம் என்ற பிம்பமே எனக்குள் இருந்தது. உங்கள் நாவலை படித்த பின், அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாக படிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது . உணவுக் கூட அத்தியாயம் தாறுமாறு.
மணிமுடி பகுதியில், எப்படி நிஜ வரலாறு காவிய சித்திரமாக மாறுகிறது என்ற அவதானிப்பு பிடித்திருந்தது.
ஃபாண்டஸி novel என்றாலும், சாத்தியக்கூறுக்குள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பட்டது. கோவிலின் பிரம்மாண்டம் பற்றிய சில வர்ணனைகளை மனம் ஏற்கவில்லை (இங்கிருந்து போனவர்களால் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவில் நினைவுக்கு வருகிறது என்றாலும்) . வேததத்தன் பற்றிய கடைசி அத்தியாயமும் மனதிற்கு ஒட்டவில்லை.
(இணையத்தின் பலம் அது தரும் இணைப்பு. அது தொந்தரவாக ஆகக் கூடாது என நினைகிறேன். அதனால் சுருக்கமாகவே எழுதியிருக்கிறேன்)
அன்புடன் ,
அருண்.
அன்புள்ள அருண்,
விஷ்ணுபுரம் வாசிக்கும் முதற்கட்ட வாசகனுக்கிருக்கும் சிக்கல்கள் பெரும்பாலும் இவையெல்லாம்தான். வர்ணனைகளை வாசிக்காவிட்டால் இந்நாவல் அளிக்கும் கனவுநிகர் அனுபவம் இல்லாமல் கதையோட்டமாகவே சுருங்கிவிடும். அப்படி சீராக நகரும் உத்வேகம் மிக்க கதை இதில் இல்லை. இரண்டாம்பகுதியில் உள்ள தத்துவப்பகுதிகளை இந்நாவலின் வாழ்க்கைச்சித்திரத்துடன் இணைத்துத்தான் வாசிக்கவேண்டும். ஆகவே பிடித்தபகுதிகள் பிடிக்காத பகுதிகள் படித்த பகுதிகள் படிக்காத பகுதிகள் என ஒரு மனச்சித்திரம் உருவாகிறது. ஒட்டுமொத்தமாக நாவல் மனதில் பிறப்பதில்லை. இந்நாவல் ஒரு கனவுதான். கெட்டகனவும் நல்லகனவும் கலந்த ஒரு கனவு என்று சொல்லலாம்.
ஜெ