அறமும் வாசகர்களும்

அன்பின் ஜெயமோகன்,

உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க வைக்கிறது.

சமூகத்தில் பாழ் போன அற நிலைகளை வாசிக்கும் தருணம் ஏதோ ஒரு கோபம் ஏற்படவே செய்தது. அது சமூகத்தின் மீதான கோபமா அல்லது எனது மீதான கோபமா எனவும் சிந்திக்க வைக்கிறது.

நீங்கள் இக்கதைகளில் சொல்லி இருக்கும் அனைத்து நபர்களும் எனக்கு புதிய அறிமுகமே. முதல் கதையான அறம் என்னை கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க கூறும் டாக்டர் கே அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.

தாய்லாந்தில் ஒரு முறை யானை சவாரி செய்திருக்கின்றேன். யானை மண்டையில் இரும்புக் கோலில் அடித்து ஓட்டினான் பாகன். அச்சமயம் என் மனம் பக்கென்று போனது. இனி யானை சவாரி கூடாது என்றே நினைத்தேன். யானை டாக்டர் கதையை வாசித்த போதுமிகவும் வேதனை அடைந்தேன். அக்கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதக் கதைகளை வாசித்து முடித்தேன்.

பூமேடை இராமையா போன்ற சமூக நல விரும்பிகளை சமுதாயம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறது. இனிப்புச் சாறை சுமந்த சக்கைகளாகவே அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். கிடைத்த இனிப்புக்காகவேனும் அவர்கள் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. குழு சார்ந்த அதிகாரவர்க்கமே தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் எனும் பொது மனநிலையே இதற்குக் காரணம் என கருதுகிறேன்.

நான் மலேசிய குடியுரிமை இலாக்காவில் அதிகாரியாக பணி புரிகிறேன். உலகம்யாவையும் எனும் கதை எனது பணிக்கு முற்றிலும் உடன்படாத ஒன்று. கேரி யார் என்பதையும் அவர் உருவாக்கிய உலகக் குடிமகன் கடவுச் சான்றையும் தேடிப் பிடித்து அறிந்து கொண்டேன். ஒரே உலகம் ஒரே குடிமக்கள் எனும் சாத்தியம் சற்றே சிந்திக்க வைக்கிறது. இனம் மற்றும் மதம் எனும் பொய்கள் மனித மனதில் இருந்து வடிந்தாலன்றி அது நடப்பதற்கில்லை. எனது பணியிட தோழர்களிடம் கேரியின் கதையை பகிர்ந்து கொண்ட சமயம் அவருக்கு யூதன் எனும் அடையாளத்தை குத்தினார்கள். ஒரே இஸ்ரேல் எனும் கொள்கையை உதாரணப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தேன். கேரியின் நெடும் போராட்ட கதையை விளக்கஇயலாது என உணர்ந்து அமைதியானேன். உலகமயமாக்கல் எனும் கேட்பாடு உலகை நம் கண் முன் விரித்துப் போட்டிருந்தாலும் மனமெனும் தனி தேசம் சுலபத்தில் அகன்றுவிடுவதன்று.

உங்கள் படைப்பிற்கு நன்றி.

அன்புடன்,
விக்னேஷ்வரன் அடைக்கலம்.

அன்புக்குரிய விக்னேஷ்வரன்,

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

உண்மைதான். நான் அறம் கடிதங்களுக்கான எதிர்வினைகளில் முக்கியமாகக் கண்டது அக்கதைகளின் நாயகர்கள் முன்வைக்கும் மானுட அறத்துக்குச் சற்றும் பொருந்தாத இனமொழிமதக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் வாசகர்களில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறார்கள். கெத்தேல் சாகிப் என்ன இருந்தாலும் ஒரு முஸ்லீம்தானே, அது அவர்களின் வணிக உத்தியாக ஏன் இருக்கக்கூடாது என்று எழுதியவர்கள் உண்டு. அவர் முஸ்லீம் என்பதனாலேயே அக்கதை பல இஸ்லாமிய இதழ்களில் மறுபிரசுரம் ஆகியது. அதைப்போல டாக்டர் கே ஒரு பிராமணர் என்பதனாலேயே அச்சாதியைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டார். ஏற்பும் மறுப்பும் அந்தத் தளத்திலேயே நடந்தன. அறம் பேசும் மனிதர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு அன்னியமானவர்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 9, காலரூபம்
அடுத்த கட்டுரைசத்யம் சிவம் சுந்தரம்