அனந்தமூர்த்தியின் அரசியல்

சார்,

இலக்கியம் என்பதே ஒரு அரசியல் செயல்பாடுதான் எனும்போதும், இலக்கியவாதிகள் நேரடி அரசியல் பேசுவதும் ஈடு படுவதும் எத்தனை சரி என்று தெரியவில்லை. ஒருவேளை மற்றவர் எல்லோருக்கும் இருக்கும் அதே விதிதானே இவருக்கும் என்று சொல்லக்கூடும். ஆனால் ஒரு இலக்கியவாதியின் அடிப்படை அறத்தை சமரசம் செய்துகொள்ளாமல் தற்கால நேரடி அரசியலில் ஈடுபட முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் சமரங்களின் வழியேயே இலக்கையும் அடையமுடியும் என்றும் படிக்கிறேன். அப்படி தன்னறத்தை சமரசம் செய்துகொள்ளும் இலக்கியவாதிகளை எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.

ஞான பீட விருது பெற்ற இலக்கியவாதி, அரசியல் கட்சி சார்பாக வெளிப்படையாக பேசுவதும், மற்ற அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால் தான் தேர்தலில் நிற்கிறேன் என்று வேண்டுவதும் எனக்கு மிகவும் சங்கடமளிக்கிறது. இது இலக்கியவாதிகள் குறித்து நானே கட்டியெழுப்பிக்கொண்ட பிம்பம் மட்டுமே எனும்போதும் இதற்கு ஏதாவது காரணம் இருக்கமுடியுமா?

நன்றி

ஆர்

[அரசியல் சர்ச்சை ஆகக்கூடாதென்பதனால் என் பெயர் வேண்டாம்]

ஆர்,

இலக்கியவாதி ஒரு குறிப்பிட்ட தன்மையுடன்தான் இருந்தாகவேண்டும் என நம்மால் சொல்லமுடியாது. அரசியல் சார்ந்த படைப்பாளிகள் உண்டு, அரசியல்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள் உண்டு. அரசியலை இலக்கியத்துக்குள் கொண்டு வராத மேதைகள் உண்டு, அரசியலை மட்டுமே எழுதிய மேதைகளும் உண்டு

சில படைப்பாளிகள் அடிப்படையிலேயே அரசியலை மையமாகக் கொண்டவர்கள். அரசியலில் இருந்து தொடங்கியவர்கள். அனந்தமூர்த்தி அவர்களில் ஒருவர்.

அனந்தமூர்த்தியின் இலக்கியவாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் இது புரியும். பதினேழுவயதில், பள்ளிப்பருவத்திலேயே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஷிமோகா மாவட்டத்தில் லோகியா மரபைச்சேர்ந்த சோஷலிஸ்டுகள் நிகழ்த்திய நில உரிமைப்போராட்டங்கள்தான் அவரது பொதுவாழ்க்கையின் தொடக்கம். அதிலிருந்தே அவர் இலக்கியத்துக்குள் வந்தார். அதுவும் மேலும் இருபதாண்டுக்காலம் கழித்து.

ஆரம்பத்தில் லோகியாவின்மீது பெரும் ஈடுபாட்டுடன், நேரு எதிர்ப்பாளராக இருந்த அனந்தமூர்த்தி பின்னர் காங்கிரஸ்கட்சியில் ஈடுபாடு கொண்டார். அவரது தலைமுறையைச் சேர்ந்த பல சோஷலிஸ்டுகள் காங்கிரஸின் சோஷலிசத்தாலேயே நிறைவுகொள்ள ஆரம்பித்தனர். அவர்களில் அவரும் ஒருவர்.

அனந்தமூர்த்தியின் அரசியல் சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்து உருவாகி வந்த ஜனதாக்கட்சி, லோக்தள் போன்றவற்றிலும் காங்கிரஸிலுமாக ஊசலாடுவதாகவே இருந்து வந்துள்ளது.

அனேகமாக எல்லா சோஷலிஸ்டுகளும் இந்த ஊசலாட்டம் கொண்டவர்கள்தான்.ஆனால் அனைவருக்குமே மாறாத அரசியல் என்பது இந்துத்துவ எதிர்ப்பு. அனந்தமூர்த்தி அவரது அடிப்படை கொள்கையிலும் நம்பிக்கையிலும் மரபுஎதிர்ப்பு, மதஎதிர்ப்பு கொண்டவர். ஆன்மீகமறுப்பு நோக்கு கொண்ட உலகியல்தத்துவமே அவரது சாரம். அவற்றை அவர் லோகியாவிடமிருந்தும், எம்.என்.ராயிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்

ஆகவே இன்று அவர் பாரதிய ஜனதாவுக்கு, குறிப்பாக மோடிக்கு அளிக்கும் கடும் எதிர்ப்பு மிக இயல்பானது. அவர் அரைநூற்றாண்டாக முன்வைத்துவரும் அரசியல் அது. அவர் அதை திட்டவட்டமாக முன்வைப்பது அவரது தனித்தன்மைக்கு மிக உகந்தது.

நான் அனந்தமூர்த்தியை இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக நினைப்பது அவரது இந்த அரசியலை அவர் கலைநேர்த்தியுடன் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார் என்பதனால்தான். நவீனத்துவ அழகியலின் மிகச்சிறந்த இந்திய மாதிரிகள் என அவரது சம்ஸ்காரா . ஹடசிராத்தா, அவஸ்தே , பாரதிபுரம் ஆகிய நாவல்களைச் சொல்லமுடியும். கச்சிதமான வடிவமும், உணர்வெழுச்சி இல்லாத கறாரான நடையும், மனிதனின் சாராம்சமான மனஎழுச்சிகள் மீதான அவநம்பிக்கையும், மரபு மறுப்பு நோக்கும் கொண்ட அழகிய படைப்புகள் அவை.

ஓர் எழுத்தாளரை நாம் அவரது அரசியல்நிலைப்பாட்டை அல்லது பிற செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. இலக்கியம் அதன் வெளிப்பாட்டினால்தான் முக்கியமானதாக ஆகிறது. அனந்தமூர்த்திக்கு நேர் எதிரான அரசியல் கொண்ட, பாரதிய ஜனதாக்கட்சியின் ஆதரவாளரான, எஸ்.எல்.பைரப்பாவும் என் நோக்கில் மாபெரும் படைப்பாளியே. [பைரப்பா அரசியல் பேசுகிறார் என்று கண்டிப்பவர்கள் அனந்தமூர்த்தியை நியாயத்தின் குரல் என்று கொண்டாடுகிறார்கள்!]

வாழ்க்கை நோக்குகள் சீக்கிரம் காலாவதியாகும். அரசியல் வெறும் வரலாறாக மாறும். பாரதிய ஜனதாக்கட்சியும் காங்கிரஸும் எல்லாம் வெறும் நினவுகளாக மங்குவார்கள். ஆனால் படைப்பு அன்றுமிருக்கும். அது மனிதவாழ்க்கையை , எந்த அளவுக்கு நுட்பமாகவும் முழுமையாகவும் அணுகியிருக்கிறது என்பதுதான் அதன் முக்கியத்துவத்தை உருவாக்கும். ஆகவேதான் இலக்கியத்தில் பாசிசத்தை ஆதரித்த போர்ஹேஸும் இடதுசாரிகளை ஆதரித்த மார்க்யூஸும் ஒரே முக்கியத்துவத்தை அடைகிறார்கள்

ஜெ

நன்றி ஜெ. இதுபோன்ற ஒரு துறையில் வல்லவர் வேறொரு துறையில் கருத்து சொல்லும்போது அவரை எந்த துறையில் வைத்து புரிந்துகொள்வது என்று வந்த குழப்பமே. என் நண்பர்களோடு உரையாடும்போது அவர்கள் கொதித்தெழுந்தனர். பிரச்சனை புரிகிறது. அரசியல்வாதியாக அவர் தெரிவித்த அரசியல் கருத்தை இலக்கியவாதியின் கருத்தாக எடுத்துக்கொண்டது அடிப்படை பிரச்சனை. இலக்கியவாதிகள் அவர்களது மதிப்பீட்டில் உயர்ந்து தான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஒரு நிம்மதி.

வந்தனங்கள்,
ஆர்


காந்தி அனந்தமூர்த்தி

அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா

பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 3, பாம்பணை