சென்னைக்கு சென்ற இருபதுவருடங்களாக வருடம் மூன்றுமுறைக்குக் குறையாமல் வந்துகொண்டிருக்கிறேன். திரைப்படங்களில் ஈடுபட ஆரம்பித்த பிறகு அது மாதம் தோறும் என ஆகிவிட்டிருக்கிறது. சென்னையில் என் மனதுக்கு உகந்த பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சென்னைவருவதென்பது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சியும்கூட என்பதனால் பெரும்பாலும் என் சென்னை வருகைகள் கொண்டாட்டங்களாகவே இருந்து வருகின்றன.
ஆனாலும் சென்னையை எனக்குப் பிடிப்பதில்லை. சென்னையின் இரைச்சல், தூசு ,வெயில், கட்டுப்பாடில்லாத வேகம் எல்லாமே எனக்கு பீதியூட்டுகின்றன. சென்னை ஒரு மாபெரும் இயந்திரம் போன்றது. எனக்கு பொதுவாக இயந்திரங்களையே பயம். ஆனால் என் நண்பர்களுக்கு சென்னைமேல் பெரும் மோகம். ஷாஜி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் ‘ஷாஜிசென்னை’ என்ற புனைபெயரையே வைத்திருக்கிறார். கேரளத்தில் பிறந்த ஊரை அடைமொழியாக வைத்துக் கொள்வதுதான் மரபு. ”சென்னை என்னை ஆளாக்கிய நகரம். எனக்கு வாழ்வளிப்பது. இது இல்லாமல் நான் இல்லை.இதுவே என் ஊர்” என்று ஷாஜி சொல்வார். எஸ்.ராமகிருஷ்ணன் பல மண் கண்டவர். ஆனாலும் சென்னைமேல் அவருக்குக் காதல். சென்னையில் சுற்றுவதே அவரது முக்கியக் கேளிக்கை. இப்போது சென்னையில் ஒரு சொந்த ஃப்ளாட் வாங்கியதும் அவருக்கு ஏற்பட்ட நிறைவை கவனித்தேன். வசந்தபாலன் ‘வெயில்’ பொழியும் விருதுநகரை கனவு காணலாம், அவரது மனம் விரும்பும் ஊர் சென்னைதான்.
வாழ்க்கையை தேடுபவர்களுக்கு மாநகரம் வாய்ப்புகளின் பெருவெளியாக தோன்றுகிறது. சாதனையாளர்களுக்கு அது சவால்களின் பரப்பாக தோன்றுகிறது. சமீபத்தில் பாவலர் விருது விழாவில் பாரதிராஜாவிடம் பேசியபோது ”என்னது, நாகர்கோயிலிலேயே இருக்கிறீர்களா?” என்றார். ”ஆமாம். அங்கிருந்து வரும் நோக்கமும் இல்லை” என்றேன். சிரித்தார். நாகர்கோயிலின் மலைகள், தீராப்பசுமை, அதிவேகக்காற்று என் வாழ்க்கையின் பகுதியாக ஆகிவிட்டிருக்கின்றன. ஆரல்வாய்மொழி தாண்டினாலே அன்னிய ஊர்தான் எனக்கு. மறுபக்கம் களியிக்காவிளை தாண்டினால் அன்னியதேசம்.
ஆனால் சென்னையை ஒரு நேசத்துடன் பார்க்கச்செய்த ஒரு நூலை சமீபத்தில் படித்தேன். அசோகமித்திரன் எழுதிய ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற சிறு நூல். தன் பதின்பருவத்தில் சென்னைக்கு வந்தவர் அசோகமித்திரன். ஹைதராபாதில் தந்தையை இழந்து ஆதரவில்லாமல் வாழ்க்கையைத் தேடி வந்தார். சினிமாவில் வேலைபார்த்தார். அலைந்தார். அல்லலுற்றார். எழுத்தாளரானார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் கண்ட சென்னை மீது அவருக்கு இருக்கும் பிரியம் அளவற்றது. சென்னையின் ‘வம்சகதைப் பாடகர்’ அவர். அவரது எழுத்துக்கள் சென்னையின் கீழ்மத்தியதர மக்களின் வாழ்க்கையின் ஏராளமான சித்திரங்களை அளிப்பவை. தான் கண்டு வளர்ந்த சென்னையை தனக்கே உரிய மெல்லிய அங்கதத்துடன் விவரிக்கிறார் அசோகமித்திரன் இந்நூலில். சென்னை தி.நகர் அருகே தாமோதர ரெட்டி சாலையில் அவர் குடியிருந்தார். சிலமுறை அவரை அவரது வீட்டில் சென்று கண்டிருக்கிறேன். பின்னர் அந்த அப்பழையவீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகியது. அவர் இடம் மாறி புறநகரில் மடிப்பாக்கத்துக்குச் சென்றார். திநகர் நடேசன் பூங்காவில்தான் அவர் நெடுங்காலமாக அமர்ந்து தன் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவரது வீட்டில் எழுத இடமில்லாமல் அலைந்து யாரோ சொன்னார்கள் என்று அகத்தியர்கோயிலுக்குப் போய் சரிவராமல் திரும்பும் வழியில் நடேசன் பூங்காவைக் கண்டதை அவர் குறிப்பிடுகிறார்.
அசோகமித்திரன் விவரிப்பது ஒரு மாற்றத்தை. ஐம்பது வருடம் முன்பு அவர் கண்ட சென்னைநகரம் நெரிசல் குறைந்த நடுத்தரவற்க மக்கள் வாழ்ந்த அமைதியான மைலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளும் ஏரிகள் நிறைந்த கைவிடபப்ட்ட புறநகர்களும் கொண்டது. இன்று நகரின் மையம் நெரிசலால் திணறுகிறது. புறநகர்களில் தனி பெருநகர்கள் உருவாகியிருக்கின்றன. இந்த மாற்றத்தின் சித்திரத்தை அவர் தாவித்தாவி சொல்லிச் செல்வது மிகுந்த ஈர்ப்புடன் வாசிக்கச் செய்வதாக உள்ளது. ”ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9 ஆம் எண் வீட்டை ஒட்டி ஒரு வெற்றிலைபாக்குக் கடை…” என்ற வர்ணனை இன்றைய இளைஞருக்கு மூச்சை நிறுத்தச் செய்வதாக இருக்கலாம். ”இப்போது பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் அப்போது ஒரு குளம் இருந்தது. ஆமை இருந்தது என்று சொல்வார்கள்… குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் நாட்களில் பொதுகூட்டம் நடக்கும்…” மேற்குமாம்பலம் அன்று கைவிடப்பட்ட காட்டுப்பகுதி. அரைவயிற்று புரோகிதர்களும் சில்லறை ஊழியர்களும் வாழும் இடம். அன்றெல்ல்லாம் அங்கே எங்குபார்த்தாலும் யானைக்கால் நோயாளிகள். காரணம் மேற்குமாம்பலமே ஒரு மாபெரும் சாக்கடை நீர்த்தேக்கம்போல. ஒரு உணவு விடுதி கூட கிடையாது. கடைகள் கிடையாது. எதற்கும் ரயில்வே கேட்டை தாண்டித்தான் வரவேண்டும். அதை மூடினால் பலமணிநேரம் திறக்க மாட்டார்கள். அங்கே ஒரு வைத்தியர் கூட கிடையாது. கார்கள் கிடையாது. வண்டிகள் போகாது, காரணம் ரயில்வே கேட். மின்சாரம் சில வீடுகளுக்குத்தான். தண்ணீர் இல்லை. கிணற்றுநீர் பழுப்பாக இருக்கும். சில வீடுகளில் நல்ல தண்ணீர் இருக்கும். அங்கே போய் தண்ணீரை கேட்டுவாங்கி கொண்டுவரவேண்டும். இன்றைய மேற்குமாம்பலத்தை அசோகமித்திரன் ” செல்வவளம் கொழிப்பதாகவும் ஜொலிப்பதாகவும் இல்லாமலிருக்கலாம் ஆனால் இந்திய நகர வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தெரியும் இடமாக இன்று இருக்கிறது. சென்னை நகரில் ஒரு நல்ல எடுத்துக்காட்டுப் பேட்டையாக அதைச் சொல்லலாம்’ என்று சொல்கிறார். அசோகமித்திரனின் நடை இந்நூலை மிகுந்த வாசிப்பனுபவம் அளிப்பதாக ஆக்குகிறது. ”ராயப்பேட்டையில் ராயர்கள் கிடையாது…” என்று ஒரு கட்டுரை தொடங்குகிறது. ”பம்மல் சம்பந்த முதலியார் ஒதெல்லோ நாடகத்தை தமிழாக்கம் செய்தார். அதன் பின் பலர் ஒதெல்லோவாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் கூட ஒரு படத்தில் ஒதெல்லோவாக வந்து பயமுறுத்துவார்’ போன்று போகிற போக்கில் உதிரும் நக்கல்கள். ஆழ்வார்பேட்டையில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள், பெரம்பூர் அருகே குமரன்குன்றத்தில் இன்றுமிருக்கும் ஜமீந்தார் இல்லத்து இடிபாடுகள் என வந்துகொண்டே இருக்கும் தகவல்கள் இந்நூலின் முக்கியமான கூறுகள்.
சென்னையை தனக்கென ஒரு கலாச்சார தனித்தன்மை இல்லாத மானுடக்க்குவியல் என்று என்னைபோன்றவர்கள் எண்ணுவது தவிர்க்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் நீண்ட மரபின் சின்னங்களை தொடர்ந்து சொல்லிச் செல்கிறார். அறியாத புராதனமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சமாதிகள். தொல்வரலாறு கொண்ட பல ஊர்கள் இணைந்து இணைந்து சென்னை உருவாகியிருக்கும் சித்திரம் வியப்பூட்டுகிறது. அசோகமித்திரன் முதலில் செல்லும்போது திருவான்மியூர் குக்கிராமமாக இருக்கிறது. நடந்து மட்டுமே செல்ல முடியும். அக்ரஹாரம் மட்டும்தான் இருக்கிறது. இன்று அது ஒரு பெருநகர் பகுதி. புரசைவாக்கத்தில் தான் படித்த பப்ரீஷியஸ் பள்ளிக்கு வரும் ஆர்.கெ.நாராயணனின் சித்திரம், ஒன்வே அறிமுகமானபோது போலீஸில் கைதாகும் அசோகமித்திரன் போல பல நுண்ணிய சித்திரங்கள் அடங்கியது இந்நூல். நாடகங்கள் நடந்த ஒத்தைவாடை அரங்கம், ரீகல் ராக்ஸி போன்ற பல திரையரங்குகள் என இது காட்டும் சித்திரங்கள் ஒரு நாவலுக்கு உரியவை.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ சென்னை உருவாகும் காலத்தை பின்புலமாகக் கொண்டது. மொத்த சென்னையையும் உள்ளடக்கி ,அதன் வரலாற்றுடன் விரியும் ஒரு பெருநாவலை எவரேனும் எழுதினால் அது ஒரு பெரும் செவ்வியல் ஆக்கமாக அமையக்கூடும். சென்னையை நேசிக்கச் செய்கிறது இந்தச் சிறிய நூல் [கவிதா பதிப்பகம். விலை ரூ 40]