புறப்பாடு II – 3, பாம்பணை

வட இந்தியாவில் ரயில்நிலையங்களை விட்டால் தூங்குவதற்கு இடமே இல்லை. அங்கே உள்ள கோயில்கள் சற்றுப்பெரிய டீக்கடை பாய்லர்கள் என்றுதான் எனக்குத்தோன்றும். உட்கார்ந்து கால்நீட்ட முடியும் என்றால் அங்கே ஒருவர் கடைபோட்டிருப்பார். சைக்கிள்ரிக்ஷாக்காரர்கள் அதன் பின்னிருக்கை முதல் கைப்பிடிக்கம்பி வரை ஒரு பலகையைப்போட்டு அதில் படுத்திருப்பார்கள். லாரிகளில் இருந்து பெற்ற பழைய தார்ப்பாயை வெட்டி சிறிய போர்வைகளாக ஆக்கி அதைக்கொண்டு போர்த்தியிருக்க வெளியே கடும் பனியும் மழையும் எல்லாம் கொட்டிக்கொண்டிருக்கும். அந்தச்சிறிய பலகைகளில் தூங்க அவர்களுக்கு தூக்கத்திற்குள்ளும் பெரும் சமநிலை தேவைப்பட்டிருக்கும்.

ரயில்நிலையங்கள் பிரம்மாண்டமானவை. மாதவராவ் சிந்தியா ரயில்வே அமைச்சராக இருந்தபோது வட இந்திய ரயில்நிலையங்களை எல்லாம் சலவைக்கல் போட்டு உருண்ட பெரிய தூண்களுடன் எடுத்துக்கட்டிவிட்டிருந்தார். பனியில் தெருக்களும் சுவர்களும் உலோகப்பரப்புகள் அனைத்தும் சில்லிட்டு விரைத்திருக்கையில் சலவைக்கல் தரை மெல்லிய வெதுவெதுப்புடன் இருப்பது ஓர் ஆச்சரியம். அதன் மேல் விரித்துக்கொள்ள ஏதும் தேவையில்லை. பையை தலைக்கு வைத்துக்கொண்டு கால்நீட்ட முடிந்தால்போதும். காலைநீட்டக்கூட வேண்டியதில்லை. அமரமுடிந்தாலே போதும், எப்படியோ சற்று காலை நீட்டிவிட முடியும்.

ஆனால் அதுவே கடினம். குவாலியரிலும் ஜான்சியிலும் ரயிலகம் எத்தனை பிரம்மாண்டமானதோ அதைவிட பெரியது அங்கே அந்தியுறங்க வரும் கிராமவாசிகளின் கூட்டம். பலவகையான மூட்டைமுடிச்சுகள். அந்த ஊர் மக்கள் பெட்டிகளை அனேகமாகப் பயன்படுத்துவதில்லை. அழுக்கால் வண்ணம் மங்கிய துணிகளை விரித்து பொருட்களை அதில் பரப்பி நான்குமூலைகளையும் பிடித்துச்சேர்த்துக் கட்டி அப்படியே தூக்கி தலையில் வைத்துக்கொள்வார்கள். அதற்குள் நாலைந்து நாட்களுக்குரிய உலர்ந்த சப்பாத்திகளும் தேவையென்றால் மீண்டும் சுட்டுக்கொள்வதற்கான கோதுமை மாவும் இருக்கும். அலுமினியச்சட்டிகள் சந்தைகளில் வாங்கப்பட்ட பொருட்கள்… பெரும்பாலானவர்கள் உப்பு வாங்கி பாலிதீன் தாளில் சுற்றிக்கட்டியிருப்பார்கள். புகையிலைச்சுருள்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள். புதியதுணிகளைக்கூட இறுக்கமாக முறுக்கி சுருட்டி பந்துகளாக ஆக்கியிருப்பார்கள்.

ஆரம்பத்தில் அது ஆச்சரியமாக இருந்தது. பின்பு தோன்றியது நம்மூரில் நாம் அனைத்தையும் சதுரங்களாக ஆக்குகிறோம். காரணம் நாம் வைத்திருக்கும் பெட்டி சதுரமானது. இவர்கள் அனைத்தையும் உருண்டையாக்குகிறார்கள். காரணம் இவர்களின் மூட்டை உருண்டையானது. பல இடங்களில் இவர்களின் வீடுகளே வட்டவடிவமானவை. கூம்புகள் போல. ஆமாம், அவர்கள் நீண்டு படுப்பதில்லை. சுருண்டுதான் படுக்கிறார்கள்.

எங்கும் அந்த மூட்டையை போடுவார்கள். எந்த இடத்திலும் தோளில் போட்டிருக்கும் கம்பிளியை விரித்து படுத்துக்கொள்வார்கள். கம்பிளிகள் அவற்றின் கருமையை இழந்து அவர்களின் ஒட்டகங்கள் , கழுதைகளின் செஞ்சாம்பல்நிறத்தை அடைந்திருக்கும். ஆனால் அதுவும் சந்துசந்தாக ஆறு ஓடும் நிலத்தைச்சேர்ந்த என்னுடைய தயக்கமாக இருக்கலாம். இந்த வறண்ட நிலங்கள் முழுக்கவே புழுதிக்கடல். புழுதியலைகளுக்குள் புழுதியாலான வீடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள். புழுதியில்லாமல் இருந்த கணமே வாழ்க்கையில் இருந்திருக்காது. சப்பாத்தியில் கூட புழுதி கலந்திருக்கும். அவர்கள் புழுதியை ஏன் தவிர்க்கவேண்டும்?

ஆனால் அவர்கள் நடுவே படுப்பது சற்றுச் சிரமமானது. பாலைநில மக்கள். குளிரை அறிந்தவர்கள். அவர்கள் சிறிய காட்டுயிர்கள்போல கொத்துக்கொத்தாகவே வாழ்கிறார்கள். அவர்களைத் தனியாகப்பார்க்கவே முடியாது. ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள். மாறிமாறி கைவீசி வசைபாடுவார்கள். ஆனால் எழுந்து விலகிச்செல்வதேயில்லை. ரயில்நிலையத்தின் தரையில் படுக்கும்போது ஆணும்பெண்ணும் குழந்தைகளும் கிழவர்களும் ஒருவரோடொருவர் உடல் ஒட்டி கைகால்களால் அணைத்துக்கொண்டு மேலே போடப்பட்ட கனத்த கம்பிளிக்குள் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.

இடைவெளி தேடி கால்களை இடுக்குகள் வழியாகத் தூக்கிவைத்து நான் நடந்தேன். மிகப்பெரிய நடைமேடை. அதன் விளிம்பில் ரயில்பிடிக்கச்செல்பவர்கள் ரயிலுக்காக ஓடினார்கள். மூட்டைகளுடன் வந்திறங்கி சுமைதூக்கிகளுடன் பேரம்பேசினார்கள். அடியில் கனல் எரியும் தூக்குவாளியை ஒருகையால் சுமந்து, மறுகையால் ரயில்பெட்டியை தட்டியபடி, சாய் சாய் என்று கூவியபடி செல்பவர்களிடம் மண்கிண்ணங்களில் டீ வாங்கி குடித்தார்கள். பான்பராக்கை மென்று தண்டவாளங்களில் நீட்டித் துப்பினார்கள். அவர்களுக்கு அருகே சுவரில் இருந்து நடைமேடையில் பாதிவரை முற்றிலும் வேறு உலகம். பல கிராமங்கள் அங்கே பரவி விரிந்து கிடந்தன.

குளிர் நடுக்கிக்கொண்டிருந்தது. அக்டோபர்தான் ஆகியிருந்தது. ஆனால் நான் நாகர்கோயில் குளிருக்கு அப்பால் குளிரை அறிந்தவனே அல்ல.என்னிடம் குளிருக்கான உடைகளும் இல்லை. பைக்குள் ஒரு சங்குமார்க் லுங்கி மட்டுமே இருந்தது. லினன் கலந்தது. போர்த்திக்கொண்டு நின்றால் தோளைவிட்டு நழுவியபடியே இருக்கும். ஆனால் ஓரளவு குளிர்தாங்கும். நின்றுகொண்டிருந்தால்தான் குளிர். உடல் காற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. படுத்துக்கொண்டால் உடலை நன்றாகச் சுருட்டிக்கொள்ளமுடியும். என்னுடைய வெப்பத்தை நானே வைத்துக்கொள்ளமுடியும்.

எங்கே காலை வைப்பதென்று பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறுவயதில் நாங்கள் விளையாடும் ஒரு விளையாட்டு மொத்தத் தீக்குச்சியையும் குப்புறக்கொட்டி ஒரு குச்சிகூட அசையாமல் ஒவ்வொன்றாக எடுப்பது. அந்த விளையாட்டின் கவனம். எவரையும் அசைக்கக்கூடாது. கால் எவர் மீதும் பட்டுவிடக்கூடாது.வாரங்கல் நிலையத்தில் கால் ஒருவன் மீது பட்டதற்காக நான் ஓங்கி அறையப்பட்டிருக்கிறேன்.

ஊரில் இருந்து கிளம்பியதும் திருவட்டாறு வரை நடந்தே சென்றேன். மாரியம்மன் கோயில் திண்ணையில் சோர்ந்து களைத்து அமர்ந்திருந்தேன். பசித்தது, தாகமெடுத்தது. என் கண்முன்னால் எனக்குச் சம்பந்தமில்லாத உலகம் ஓடிக்கொண்டிருந்தது. செந்நிறமான பேருந்துகள் புகை விட்டு உலோகமுனகல்களுடன் சென்றன. சைக்கிளில் யாரோ எதையோ கூவி விற்றுக்கொண்டு சென்றனர். இரு மீன்காரிகள் காலிக்கூடையுடன் வெற்றிலை வாயால் சிரித்தபடி சென்றனர். யாரோ சிலர். ஏதோ சில. எனக்கு குமட்டல் இருந்துகொண்டே இருந்தது. பசியில் அப்படி குமட்டுமென்று நான் அறிந்திருக்கவில்லை

என்னசெய்வதென்று யோசித்துச் சலித்த தருணத்தில் திருவட்டாறு கேசவனின் வாட்ச் கடை நினைவுக்கு வந்தது. அங்கேதான் என்னுடைய வாட்சை அண்ணா சரிசெய்யக் கொடுத்திருந்தார். வெள்ளிநிற முள்வட்டம் கொண்ட எச்.எம்.டி வாட்ச் அக்காலத்தில் கொஞ்சம் விலை அதிகமானதுதான். மழையில் உள்ளே தண்ணீர் புகுந்துவிட்டது. அதை திரும்பி வாங்கவே இல்லை. எழுந்து கேசவனின் கடைக்குச் சென்று வாட்சை வாங்கிக்கொண்டேன். அண்ணா வந்து பணம் தருவார் என்று சொன்னபோது அவன் மறுபேச்சு பேசவில்லை. வாட்ச் கையில் வந்ததுமே நான் செல்லவேண்டிய நெடுந்தூரம் நினைவில் விரிந்துவிட்டது. காசி, கங்கை, இமயமலை.

வாட்சை வெண்ணைக்கடை ராமக்கோனாரிடம் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்க முடிந்தது. தேங்காயைக்குலுக்குவது போல நாலைந்து தடவை காதில் வைத்து ஆட்டிப்பார்த்துவிட்டு அவர் வாங்கிக்கொண்டார். காசு தந்தபின் ‘ஒரிஜினலாக்குமா?’ என்று கேட்டார். நான் தலையசைத்தேன். தாணுஆசாரி கடையில்சென்று கண்ணாடிப்பெட்டியில் மிச்சமாகக் கிடந்த காலையில் சுட்ட தோசைகளில் நான்கை வாங்கி நீர்த்த தேங்காய்ச்சட்டினியுடன் சாப்பிட்டேன்.

இருட்டிவந்தது. எங்கே செல்வது என்று குழப்பமாகவே இருந்தது. ஆதிகேசவன் கோயிலில் காவல்காரர் பரமண்ணன் தெரிந்தவர். அச்சுவண்ணன் அதைவிடக்குறைவாகத் தெரிந்தவர். ஆகவே கோயிலுக்கே செல்லத் தீர்மானித்தேன். கோயில்நடைசாத்த இரவு ஒன்பது மணி ஆகும். அதுவரை படிக்கட்டுகளிலேயே அமர்ந்திருந்தேன். ஆற்றிலிருந்து வந்த காற்றில் இருந்த நீராவியின் வெக்கையை முன்பக்கமும் கோயிலின் நடை வழியாக வந்த குளிர்காற்றை பின்பக்கமும் உணர்ந்தேன்.

நடைசாத்தும் ஒற்றை மணி ஓசை. பெருமாளை உள்ளே வைத்து போற்றி வாசலைப்பூட்டுகிறார். அவரது பேச்சொலி. பின்பு அவரும் அவரது மகனும் என்னைத்தாண்டி இறங்கிச்சென்றார்கள். நான் எழுந்து உள்ளே சென்றேன். பரமண்ணன் மடைப்பள்ளி , அலுவலகம் என ஒவ்வொரு வாசலாக மூடிக்கொண்டிருந்தார்

’வாடே…என்ன கோயிலிலே களவாங்க வந்தது மாதிரி பம்முதே?’

’அண்ணா நான் இங்க ராத்திரி தங்குதேன்’

’ஏன்? பொடிநடையாப்போனா உனக்க வீட்டுக்குப்போயி அந்திக்கஞ்சி குடிக்கிலாமே’

என் மூளை ஒரடி முன்னால் பாய்ந்தது. ‘பரிச்சையிலே தோத்துட்டேன்’

‘சாவுகதுக்கொண்ணும் ஐடியா இல்லல்லா?’

‘இல்லண்ணா…இப்பம் போனா பிரச்சினையாக்கும்….நாளைக்கு சமாதானமாட்டு போறேன்’

‘செரி கிடந்துக்க…’ என்றார் அண்ணா ‘சோறு தின்னியாடே?’

‘தோசை தின்னேன்’

‘இங்க உண்டக்கட்டி உண்டு….வேணுமானா தாறேன்’

‘வேண்டாம்ணா’

முகப்பில் அலங்கார மண்டபத்தில்தான் படுக்கை. அங்கே ஏற்கனவே இரண்டுபேர் படுப்பதற்காக வந்திருந்தார்கள். கோபாலகிருஷ்ணன், வீரபத்ரன் சிலைகளுக்குப்பின்பக்கம் கோரைப்பாய்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து உதறி விரித்து மரக்கட்டைத்தலையணைகளைப்போட்டார்கள்.

அலங்கார மண்டபம் வரைக்குமான எல்லா கதவுகளையும் அண்ணா மூடினார். பித்தளைக் குமிழ் வைத்த கனத்த கதவுகள். பெரிய சாவிகள்.

‘தாழ்க்கோலை எடுக்குகதுக்கே ஆளுவேணுமே’ என்றேன்

‘மக்கா இது மகாராஜா காலத்து தாக்கோலாக்கும். அப்பம்லாம் தாக்கோலுக பெரிசாக்கும்’

’கதவுகளும் நின்னு ஒளைக்கும்லா? என்றார் தெற்றுப்பல் ஆசாமி

அவர்கள் சிரித்தார்கள்.

நான் ஒரு பாயைப்போட்டு படுத்துக்கொண்டேன். காலை நீட்டிக்கொண்டபோது முதுகில் ஒரு நிம்மதி. கீழிருந்து குளிர்ந்த காற்று ஏறிவந்து தழுவி கடந்துசென்றது. பாசிமணம் கொண்ட காற்று.

‘இங்கிண அதிகம் எடமில்ல பாத்துக்க. காலம்பற வாளைவெட்ட போறவன் செகண்ட்ஷோ சினிமா பாத்துட்டு வாறவன் எல்லாம் இங்கதான் வந்து கட்டைகளை சாய்ப்பானுக. காலம்பற பாத்தா சாளைமீன் அடுக்கினமாதிரி கிடந்து உறங்குவானுக’

‘மனுஷ்யபுத்திரனு தலைசாய்க்கான் மண்ணில் இடமில்லா….ஆஆ மண்ணில் இடமில்லா’ என்று ஒல்லி ஆசாமி பாடினார். ‘ஹாவ்’ என்று கொட்டாவிவிட்டார்.

என் தலைக்குமேல் வீரபத்ரனின் கால் தூக்கி நின்றது. இரண்டாள் உயரமான கரிய சிலைகள் எல்லாம் என்னைக்குனிந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன். செத்தநாய்க்குச் சுற்றும் கூடி நின்று வேடிக்கைபார்ப்பவர்கள் போல அவர்கள் கல்விழிகளால் என்னைப்பார்த்தனர்.

‘என்ன பார்வ?’

‘இல்ல வீரபத்ரரு மிதிப்பாரோண்ணு தோணுதே’

‘பாவங்கள எல்லாரும் சவிட்டுவானுக….’ என்றார் இருளில் இருந்து ஒல்லி. ‘வே, இந்த ஊரிலே கால்நீட்டி கிடக்குததுக்கு வீட்டிலே எடமுள்ள எம்பிடு ஆளுகவே இருக்காஹ? இந்நா அப்பூட்டன் வாழைத்தோட்டத்திலே ஏறுமாடம் கெட்டியிருக்கான். நாலடி நீளம். லே, இதில எப்டிலே ராத்திரி காவல்கெடப்பே, கால நீட்டாண்டாமாலேண்ணு கேட்டப்பம் சொல்லுதான் , அண்ணா எனக்க குடிலும் இந்த நீளம்தானேண்ணு…என்ன சொல்லுகது?’

’அந்நா கெடக்கானே அம்பதடிக்கு நீட்டி விரிச்சு….ஆதிகேசவனுக்க கெடப்பாக்கும் கெடப்பு. ஊரில ஒருத்தன் அப்பிடிக் கெடந்தா போரும்வே’

அவர்கள் பேசிக்கொண்டே இருக்க நான் தூங்கிவிட்டேன். என்னை யாரோ மிதித்தார்கள். அதிர்ந்து கண்விழித்தேன். கால்தூக்கி நின்றிருந்த வீரபத்ரன்தான்.

சிலகணங்கள் கழித்துத்தான் என்னைச்சுற்றி நிறையபேர் கிடப்பதை உணர்ந்தேன்.யார்யாரோ கால்களும் கைகளும் பின்னி தூங்கிக்கொண்டிருந்தனர்

இருளுக்குள் ஒரு கிழவரின் குரல் ‘கர்ப்பகிருஹம்னா என்னடே? அம்மைவயிறாக்கும். அங்கிணயாக்கும் ஆதிகேசபவன் கெடக்குதது…அவனுக்க அந்த கெடப்பாக்கும் இந்த யுகம். ஒரு யுகம் தாண்டினாக்க அவன் அப்டியே திரிஞ்சு கெடப்பான்…கேட்டீராவே?’

‘நீரு திரிஞ்சு கிடந்து எனக்கமேல கைய போட்டா அடிச்சு ஒடிச்சிருவேன் பாத்துக்கிடும்’

‘ஆதிகேசவன் கெடக்கப்பட்டது மூணடுக்கா மடங்கின காலத்திலயாக்கும். காலரூபனாக்கும் ஆதிசேஷன்…’

‘இங்கிண நானும் ஒருக்கா பாம்புக்க மீத்த கெடந்திட்டுண்டு…கேறி வந்துபோட்டு. காலம்பற பாத்தா ஒப்பரம் கெடக்கு… பின்ன சாரையானதுகொண்டு நான் சாவல்ல’

‘உம்ம கிட்ட சொன்னேன் பாத்துக்கிடும்…போயில இருக்காவே?’

நான் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலை யாரோ தட்டினார்கள். திடுக்கிட்டு எழுந்தேன். ஒருவர் இரு கைகளையும் ஊன்றி என்னருகே வந்தார்

‘அந்தால நீங்கி கிட மக்கா…அண்ணன் நடுவ சாய்க்கேன்’

‘வே போயில இருக்காவெ?’

மீண்டும் தூக்கத்தின் ஆழம். சேறால் ஆன ஓர் அறை. நெளிந்து சுருங்கும் சுவர்கள். நெளிந்துகொண்டிருக்கும் கட்டில். உயிருள்ள கட்டில். மீண்டும் யாரோ காலை அசைத்தார்கள்

‘இல்லமக்கா…உறங்கு கேட்டியா? நான் வாளைக்கு வெள்ளம்கோரப்போவணும்’ என ஒருவர் எழுந்து சென்றார்.

மீண்டும் யாரோ காலை பிடித்து இழுத்தனர். ஆத்திரத்துடன் கண் விழித்தே.ன். ’டேய்…எந்திரி…இது பிரம்ம முகூர்த்தமாக்கும்…இதுக்குமேலே இங்க கிடக்கமுடியாது…டேய்’

ஒவ்வொருவராக எழுந்தனர். தூக்கம் எஞ்சிய கண்கள், உடல்கள். வியர்வை வாசனை, எச்சில்வாசனை, சிறுநீர் வாசனை. ‘லேய் நெல்சா. லே, எந்திரிலே’

அன்று காலை கோயிலிலேயே கட்டிச்சோறு சாப்பிட்டுவிட்டு கன்யாகுமரி சென்றேன். செல்வதற்கு விசேஷ காரணம் ஒன்றும் இல்லை. அந்த ஊர்தான் முதலில் ஞாபகம் வந்தது. ஒருநாள் பகலும் இரவும் அங்கே சுற்றிக்கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டியது காசிக்கும் இயமமலைக்கும்தான் என்று தோன்றியது.

திருவனந்தபுரத்திலிருந்துதான் அன்றெல்லாம் வட இந்தியா செல்ல ரயில் இருந்தது. நான்குவருடம் முன்னால் துறவியாகி வடதிசை சென்ற பிரேமன் அண்ணன் திருவனந்தபுரம்வழியாகச் சென்றதாகவே சொன்னார்கள்

கன்யாகுமரியில் திருவனந்தபுரம் பேருந்தில் ஏறினேன். ஆனால் ஏதோ தோன்றி பாறசாலையில் இறங்கிவிட்டேன். கோயில்வரைக்கும் சென்றேன். ஆளில்லாத பிராகாரங்களில் சுற்றி வந்தேன். எதற்காக இறங்கினேன் என்று தெரியவில்லை. மீண்டும் பேருந்தில் ஏறி திருவனந்தபுரம் வந்தேன்.

மக்கள்நடுவே இருக்கவேண்டும் என்று தோன்றியது. தனித்த இடங்கள் அச்சமூட்டின. சாலை பஜாரில் சைக்கிள்களும் கூடைக்காரிகளும் சுமைதூக்கியவர்களும் சாமான்கள் வாங்கவந்தவர்களும் இடித்து முட்டி மோதினார்கள். பத்மநாபசாமி கோயில் முதல் காந்தளூர் கோயில்வரை நடந்தேன். திரும்பநடந்தேன். மதியவெயிலில் வியர்வை வழிய வழிய. பின்பு களைந்து அமர்ந்து ஒரு தட்டுகடையில் பிளாஸ்டிக் தட்டில் சோறும் தேங்காய்க்குழம்பும் சாப்பிட்டேன்

ரயில்நிலையம் வந்தேன். கார்கள் வந்து நிற்க உயர்தர உடையணிந்தவர்கள் இறங்கினர். பெட்டிகளுடன் உள்ளே சென்றனர். பளபளப்பான சருமம் கொண்ட பெண்கள். தொந்திகளும் தாடைகளும் தொங்கும் ஆண்கள். மழுங்கலான ஒலிபெருக்கிக் குரல். நடுவே பிரம்மாண்டமான இரும்புக்கோபுரமொன்று இடிந்து சரிவதுபோல ரயில் ஒன்று வந்து நின்றது. நூற்றுக்கணக்கான உலோகக்கிரீச்சிடல்கள். உலோக விம்மல்கள். உலோகப்பெருமூச்சுகள்.

அந்த ஒலிகள் என்னை அச்சுறுத்தின. என்னால் ஒரு ரயிலில் ஏறிக்கொள்ளமுடியுமா என்றே தெரியவில்லை. ரயிலுக்கு டிக்கெட் கொடுக்குமிடத்திற்குச் சென்றேன். வார இதழ்களை வாசித்துக்கொண்டு வரிசையில் நின்றார்கள். நானும் வரிசையில் நின்றேன். நகம் கடித்து உரித்து கைநுனிகள் சதைத்துண்டுகளாக ஆகிவிட்டிருந்தன. கால்மாற்றி நின்றேன். கூண்டுக்கு முன் சென்றபோது மொத்த மூச்சும் உள்ளே இறங்கிவிட்டிருந்தது.

‘எந்தா வேண்டே?’

என்னால் பேசமுடியவில்லை.’

’ஏது ஸதலத்தேக்கா டிக்கட்?’

‘செவிகேட்டூடே? ஊமையாணோ?’

சட்டென்று திரும்பி வேகமாக ஓடி வெளியே சென்றேன். பின்பக்கம் மெல்லிய சிரிப்பைக் கேட்டேன்.

மனம் படபடக்க தம்பானூர் பேருந்துநிலையத்தில் சுற்றிவந்தேன். ஏதாவது சினிமாவுக்குச் செல்லலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் என்னிடம் இருந்த பணம் குறைவு, அது அதிகநாள் தங்காது என்ற அச்சமும் எழுந்தது. பேருந்துநிலையத்தைச் சுற்றி வந்தேன். வெளியே இறங்கி பட்டம் வழியாக மிருகக்காட்சிசாலைக்குச் சென்றேன். அங்கே புல்வெளியில் அமர்ந்திருந்தேன். மெல்ல மெல்ல நகரம் இருட்டியது. விளக்குகள் மின்னி மின்னி எரிய ஆரம்பித்தன. முகவிளக்குகள் சீறி விழிக்க கார்கள் தெருக்களில் உறுமிச்சென்றன.

மாலையில் பத்மநாபசாமி கோயிலுக்குச் சென்றேன். பத்மதீர்த்தம் குளத்தில் முகம் கழுவிவிட்டு உள்ளே சென்று சுற்றிவந்தேன்.இந்த மாபெரும் நகரத்திலும் நட்டநடுவே ஒரு தெய்வம் நீட்டிப்படுத்திருக்கிறது. வண்டிகளும் மனிதர்களும் கால்நடைகளும் அலையும் நகரில் அசையாமல் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக படுத்திருக்கும் ஓர் உருவம். தொலைவில் நின்று அனந்தபத்மநாபனைப் பார்த்தேன். கன்னங்கரிய உருவம். அதன்முன் வைக்கப்பட்ட விளக்குகள் மட்டுமே தெரிந்தன.

இரவின் ஒலிகள் அடங்குவதன் அச்சத்தை நான் உணர்ந்த முதல்தருணம் அதுதான். வண்டிகளின் ஓசைகள் ஓய்ந்தன. நாய்க்குரைப்புகள் எழுந்து கேட்க ஆரம்பித்தன. தெருக்களில் அதுவரை இல்லாத அசைவுகள். பத்மதீர்த்தக்கரையில் அத்தனை பெருச்சாளிகள் சாலையைக் கடக்குமென நான் அறிந்திருக்கவில்லை. கிழக்குக்கோட்டை பேருந்துநிலையம் காலியாகக் கிடந்தது. விளக்குகள் அணைக்கப்பட்ட சில பேருந்துகள் முகக்கண்ணாடியில் தெருவிளக்குகளைப்பிரதிபலித்தபடி அசைவிழந்து நின்றன. அசைவுகளே இல்லாத வண்டிச்சக்கரங்கள் ஏன் அத்தனை அமைதியின்மையை உருவாக்குகின்றன?

சாலையோரமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். எந்தக்கடைக்கும் வராந்தா இல்லை. இருந்த ஒட்டுத்திண்ணைகளில் மோட்டார்கள் , பலவகை இரும்புச்சாமான்கள் போடப்பட்டு சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்தன. கிருபா திரையரங்குக்கு அருகே ஒரு திண்ணை சற்றே அகலமாக இருந்தது. அதில் நான் அமர்ந்த கணமே சிறிய இரும்பு வாசலுக்கு அப்பாலிருந்து கையில் நீளமான பிரம்புடன் காக்கிச்சட்டை அணிந்த மெலிந்த மனிதர் ஒருவர் வெளியே வந்தார்.

‘ஆராணு? …டா’

‘இல்ல சும்மா…இவிடே’

‘இவிடே இரிக்கான் பாடில்லா…ம்ம் போ…பொய்க்கோ ’

நான் பேருந்துநிலையம் வரும்போது மெல்லிய தூறலாக மழை ஆரம்பித்திருந்தது. தெருவிளக்குகளின் மஞ்சள்நிற ஒளியில் தூசுபோல மழை இறங்கியது. தம்பானூர் பேருந்துநிலையத்தில் இரண்டு டீக்கடைகள் சிவந்த மின்விளக்கு ஒளிக்கு கீழே இயங்கிக்கொண்டிருந்தன. பாய்லரின் ஆவியும் புகையும் மேலே எழுந்து ஒளியில் நனைந்து மின்னி மறைந்தன. டீக்கடை அருகே இருவர் சுருட்டிய தினசரியுடன் நின்றனர். மூட்டைகளும் பெட்டிகளுமாக சிலர் அமர்ந்திருந்தனர். பெஞ்சுகளில் எல்லாம் மனிதர்கள் பெட்டிகளை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஒரே ஒரு பேருந்து நெற்றியில் விளக்குடன் உதறிக்கொண்டிருந்தது. அப்பால் இருளுக்குள் பேருந்துகளின் கண்ணாடிகள் நீர்ப்பரப்புகள் போல இருளுக்குள் மெல்லிய ஒளியுடன் தெரிந்தன.

பேருந்துநிலையம் வழியாக நடந்தேன். பெரும்பாலான இடங்கள் நனைந்திருந்தன. மிதிபட்டு மிதிபட்டு சேறு படர்ந்த சொரசொரப்பான சிமிண்ட்தரை. சுவரோரமாக எஞ்சிய ஈரமில்லா இடங்களில் மனிதர்கள் படுத்திருந்தனர். சுருண்டு ஒடுங்கி சப்பி நசுங்கிய உடல்கள். இவ்வளவு இடமே எனக்குப்போதும் என்று சொல்பவை போல. இவ்வளவு இடத்தையாவது கொடுங்கள் என்று யாரிடமோ மன்றாடுபவை போல. அந்த உடல்கள் எப்போதுமே அப்படித்தான் இருக்குமா? நிரந்தரமாகவே ஒரு மன்னிப்புகோரும் பாவனை அவர்களிடம் இருந்துகொண்டிருக்குமா?

ஒரு சந்தில் நான் அமர்ந்துகொண்டேன். என்னிடம் துணியோ பையோ ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் என் கைகளை பாரமாக உணர்ந்தேன். முழங்கால்மீது அவற்றை வைத்துக்கொண்டேன். சுருண்டு அமர்ந்தவன் அதேவாக்கில் மெல்லச்சரிந்து படுத்தேன். தரையின் சில்லிப்பு உடலை அணுகியது. நரம்புகளில் ஊடுருவி குருதியைக் குளிரச்செய்து எங்கும் பரவியது. இன்னும் சற்று நேரத்தில் உடலின் வெம்மை மண்ணில் பரவிவிடும். இந்தக்குளிர் குறைந்துவிடும். ஆனால் மண் பூமியின் ஆழத்தில் இருந்து மொத்தக்குளிரையும் திரட்டி என்னுள் செலுத்திக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் நான் நடுங்க ஆரம்பித்தேன். எழுந்து அமர்ந்து பார்த்தபோது சுவரில் ‘மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்களி’ன் நூறாவதுநாள் போஸ்டரைக் கண்டேன். பீங்கான் முகத்துடன் மோகன்லால் சிரித்துக்கொண்டிருந்தார். அதை சுவரிலிருந்து பெரும்பாலும் பிய்த்தெடுக்க முடிந்தது. பின்பக்கம் பசையும் சுண்ணாம்புமாக கெட்டியாகவே தெரிந்தது. அதைவிரித்துப்படுத்தபோது குளிரில் விரைத்த தோள்கள் இதமான வெம்மையை உணர்ந்தன. என் பிரக்ஞையில் இருந்து ஒவ்வொன்றாக உதிர்ந்தன. எனக்குக் கீழே தரை உயிருள்ள ஒரு தசைப்பரப்பு போல அசைவதாகப் பட்டது. பாம்புமீது படுத்திருப்பது அவ்வளவு சுகமாகவா இருந்திருக்கும்?

காலில் சுளீரென்ற அடி விழ எழுந்து அமர்ந்து நடுநடுங்கினேன். ‘டேய்…இதெந்து சத்ரமா…ஓடுடா…எரப்பாளி’

இரண்டு கான்ஸ்டபிள்கள் லத்தியால் படுத்திருந்தவர்களை ஓங்கி ஓங்கி அறைந்து எழுப்பிக்கொண்டிருந்தனர். ‘எழிக்கெடா நாயே..டா’

அறைகள் எலும்பிலும் சதையிலும் விழும் ஒலி. தூக்கத்தில் திடுக்கிடுபவர்களின் அலறல். நான் எழுந்து நின்று மார்பில் கையை கட்டிக்கொண்டேன்.

’டா…ஓடிக்கோ’ கான்ஸ்டபிள்கள் அடித்துக்கொண்டே சென்றார்கள். அப்போதுதான் அந்த இருண்ட சந்துகளுக்குள் அத்தனைபேர் தூங்கிக்கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அடிபட்டு எழுந்தவர்கள் மேலும் அடிக்கு தப்பி விலகிச் சென்றார்கள். காகிதங்களையும் துணிகளையும் பொறுக்கிக்கொண்டு ஈரத்தில் நடந்து அப்பால் நின்று கான்ஸ்டபிள்களைப் பார்த்தனர். பின்பு புதிய இடங்களில் அவற்றை விரித்து படுக்க ஆரம்பித்தனர்.

நான் என்ன செய்வதென்று அறியாமல் அங்கே நின்றேன். எல்லாரும் படுத்துவிட்டார்கள். என் கால்கள் கடுத்தன. தூக்கம் வந்து தலையை தண்ணீர் நிறைந்த தவலை போல உணரச்செய்தது. தண்ணீர் ஒருபக்கமாகத் தளும்பி தலையைச் சரித்து சுவரில் முட்டியது. அப்படியே படுத்துக்கொண்டேன். எலிகள் என் கால்களை கவ்வுவதுபோல உணர்ந்தேன். எலிகள் என்னை இழுத்துச்சென்றன. இருண்ட சந்துகள். சாக்கடைப்பொந்துகள்.

மீண்டும் தோளில் சுளீரென்று அடி விழுந்தது. எழுந்து அப்படியே அமர்ந்திருந்தேன். என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘டேய் எரப்பாளி….போடா…எணீற்று போடா’

தாறுமாறாக அடிகள் விழுந்தன. அடிபட்டவர்கள் அப்படியே உடலைச்சுருட்டிக்கொண்டு சிலகணங்கள் அசைவில்லாமல் அமர்ந்து அந்த வலியை அனுபவித்தனர். அசைவில்லாமல் அதை வாங்கிக்கொள்வது மட்டுமே அவர்கள் அறிந்த ஒரே தற்காப்பு. பின்னர் எழுந்து ஓடி விலகிச்சென்றனர். நான் எழுந்து சென்று ஒரு பெஞ்சுக்கு அப்பால் சென்றேன். அடித்த காவலர்கள் எந்த முகத்தையும் பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் கடமையை பற்றின்றிச் செய்பவர்கள் போல அடித்து எழுப்பிக்கொண்டே சென்றார்கள்.

மீண்டும் அனைவரும் கலைந்து தூங்க ஆரம்பித்தபோது என்னால் படுக்கமுடியவில்லை. நான் சற்று அப்பால் சென்று குந்தி அமர்ந்துகொண்டேன். தூக்கம் வருமென நினைக்கவில்லை. ஆனால் அடுத்த அடி தலையில் விழுந்தபோது நான் தூக்கத்திலிருந்துதான் விழித்தேன்.

அதிகாலையில் போலீஸ்காரர்களுடன் இரண்டு துப்புரவுப்பணியாளர்களும் சேர்த்து தூங்கியவர்களை அடித்து எழுப்பினார்கள். காலால் உதைத்தும் எச்சில்துப்பியும் வசைபாடினார்கள். துப்புரவுப்பணியாளர் பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் குளிர்ந்த நீரைக்கொண்டுவந்து தரையில் ஊற்றினார். மொத்த பேருந்துநிலையமும் ஈரமாகியது. தாள்களும் சாக்குப்பைகளும் பாலிதீன்காகிதங்களுமாக உறங்கியவர்கள் எழுந்து சென்றார்கள். அது அங்கே ஒவ்வொருநாளும் நிகழக்கூடியதென்று தெரிந்தது. அதனூடாக தூங்குவதற்கான எல்லா பயிற்சியும் அவர்களுக்கிருந்தது. ஆனால் அவர்களின் கண்கள் பீளையடிந்து மட்கியவை போலிருந்தன. கண்கள் சேற்றில் ஆழப்புதைந்த கூழாங்கற்கள் போல. சேறு சுருங்கி கூழாங்கல்லை உள்வாங்கியிருப்பதுபோல. நூறுபேருக்குக் குறையாத கூட்டம். ஆனால் ஒவ்வொருவராகவே வந்தார்கள். ஒவ்வொருவராகவே சென்றார்கள்.

அன்றிரவு நான் ரயில்நிலையத்திற்குப் படுக்கச்சென்றேன். கடைசி ரயில் பதினொன்றரைக்குச் சென்றது. ரயில்நிலையம் அடங்கியதும் நான் ஒரு பெஞ்சுக்குப்பின்னால் படுக்கப்போனேன். என்னை தொலைவிலிருந்தே ஒரு காவலர் கவனித்துக்கொண்டிருந்தார்போல. படுத்ததுமே அடி விழுந்தது. ‘ஓடுடா தெண்டி…போ…போய் பஸ்ஸ்டாண்டில் செந்நு கிட…போடா’

பேருந்துநிலையத்துக்குச் செல்லாமல் நான் நகரில் சுற்றியலைந்தேன். எந்நேரமும் சாரல்மழை பெய்யும் நகரம் பிரம்மாண்டமான ஒழுகும்கூரை கொண்ட வீடுபோலிருந்தது. சட்டிகள் பானைகள் பாத்திரங்கள் என அனைத்தையும் தூக்கி மழைத்தாரைக்கு வைத்தது போல கட்டிடங்கள். ஈரமான பாசிபிடித்துக்கறுத்த சுவர்கள். ஈரம்பளபளக்கும் சாலைகள். ஈரத்தில் நடுங்கி கால்தூக்கி ஒண்டி நிற்கும் தெருநாய்கள். ஈரம் வழிய மரங்களுக்கு கீழே நின்று உடல் சிலிர்க்கும் பசுக்கள்.

திரையரங்குக்கு அப்பால் பாலம் மேலேறியது. அப்படியென்றால் பாலத்துக்கு அடியில் நனையாத இடமிருக்கும், அங்கே எப்படிச் செல்வதென்று தெரியவில்லை. ரயில்வேயின் இரும்புவேலியைப்பார்த்துக்கொண்டு நடந்தேன். ஓர் இடத்தில் இடைவெளி தெரிந்தது. உள்ளே புகுந்துவிட்டேன். பல்வேறு இரும்புச்சாமான்கள் மழையில் புல்லடர்வின் உள்ளே துருப்பிடித்துக்கிடந்தன. பாலிதீன்குப்பைகள். சிக்னலின் கம்பிகள் இறுகிச்சென்றன.

பாலத்தின் அடியில் இருட்டுதான். நான் மெல்ல உள்ளே சென்றதுமே அங்கே ஆட்கள் படுத்திருப்பதை உணர்ந்துகொண்டேன். என் கால்கள் ஒரு மென்சதையை மிதித்தன. மிதிபட்ட உருவம் எழுந்து தலைமயிரை அள்ளிச்செருகியபடி ‘ஆரு?’ என்றது

நான் பேசாமல் நின்றேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவள் முந்தானைபோல போட்டிருந்த துண்டை சரியாக அமைத்துக்கொண்டு ‘ரெண்டு ரூவாய்க்கு ஒத்தபைசா குறையாது…இருக்குண்ணா குடுத்திட்டு இரு’ என்றாள்

நான் மெல்ல ‘நான்…நான் படுக்க வந்தேன்’

‘செரி படும்வே…பைசா இருக்கா?’

‘நான் படுக்க இடம்தேடி வந்தேன்…மழையிலே’

அவள் என்னை கூர்ந்து பார்த்தாள். ‘எந்த ஊரு?’

‘வெளியூரு’

‘சிக்கு அடிச்சீராவே?’

‘இல்ல…ஊரவிட்டு ஓடி வந்ததாக்கும்….பஸ் ஸ்டான்டிலே கெடக்க விடுதானுக இல்ல’

‘நல்ல கத…இங்கிண கெடக்க விடுதானுகளாக்கும்…’ என்றாள் . வாய்நாற்றத்துடன் கொட்டாவி விட்டு ‘அந்தால கெடவும்வே’ என்றபின் படுத்துக்கொண்டாள்

புழுதிவாடை. சிறுநீர் வீச்சம். மட்கிய துணிகளுக்கே உரிய நாற்றம். ஆனால் புழுதி மெல்லிய வெம்மையுடன் இருந்தது. ஈரமில்லை. ஈரமில்லாத ஓர் இடம். நான் சிறிய இடைவெளியில் அமர்ந்தேன். கால்களை மெல்ல நீட்ட முயன்றேன். அங்கே ஒரு சதை மிதிபட்டது

அவன் எழுந்து ‘ஆருவே?’ என்றான்

அவள் ‘நம்மாளுதான்…’ என்றாள்

அவன் இருட்டுக்குள் என்னை கூர்ந்து கவனிக்க முயன்றான். ஆனால் சரிதான் என்று திரும்பப் படுத்துக்கொண்டான்.

நான் அந்த இடத்தை மனதுக்குள் வரைந்துகொள்ள முயன்றேன். மேலே ஏதோ லாரி இரைந்தபடி சென்றது. ஆனால் அங்கே வெளிச்சமில்லை. ரயில்நிலையம் வெகுதூரத்தில் வரிசையான விளக்குகளாகத் தெரிந்தது . சூடு போட்டுக் காய்ந்த தழும்புபோல தண்டவாளம் பளபளத்தது

காலை யாரோ பிடித்து இழுத்தபோது விழித்துக்கொண்டேன். இரண்டுபேர் ஒவ்வொரு காலாகப்பிடித்து அசைத்து அழைத்துக்கொண்டிருந்தார்கள் ‘லே…ஆருலே….டேய் கணாரா…டேய் கணாரன் அல்லேடா?’

எனக்குக் கீழே படுத்திருந்தவன் இரு கால்களும் இல்லாதவன்போல. அவனை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். நான் இருட்டில் மெல்ல மெல்ல உருண்டு சுவர் ஓரமாகச் சென்றுவிட்டேன். அங்கே துணிமூட்டைகள்தான் இருந்தன.

‘மோலாளி ,முடியல மோலாளி….ரத்தப்போக்கு இருக்கு மோலாளி’ என்றான் கணாரன்

‘டே, அவனோடு எந்தரு வர்த்தமானம்…தூக்குடே’

இருவரும் கணாரனை அப்படியே தூக்கினார்கள். அவன் கால்கள் இரு சிறிய கைகள் போல தொங்குவது நிழலாகத் தெரிந்தன.

’மோலாளி வேண்டாம் மோலாளி…உறங்க விடுங்க மோலாளி’

அவர்கள் அவனை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றார்கள். என் நடுக்கம் ஓய்வதற்காகக் காத்திருந்தேன். வாயால் மூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் கவனித்தேன். அங்கே மேலும் மூன்றுபேர் இருந்தார்கள். ஆணா பெண்ணா தெரியவில்லை. கண்கள் மட்டும் கருங்கல்சில்லிகள் போல மின்னிக்கொண்டிருந்தன.

நான் எழுந்துசெல்வதா என்று யோசித்தேன். ஆனால் வெளியே அவர்கள் கணாரனுடன் இருந்தார்கள். வினோதமான சத்தங்கள். படீர் படீரென அடிக்கிறார்கள். ‘டா…இவிட நில்லுடா’

’மோலாளி…அய்யோ ஆ’ பிடித்து தள்ளும் ஒலி. அடிகள். விதவிதமான குழறல்கள். கால்கள் மண்ணில் மிதிபடும் சத்தம். மூர்க்கமான ஒரு மல்யுத்தம் சத்தமில்லாமல் நடப்பது போல.

என்னருகே இருந்தவள் ஒரு சிறுமி . ‘மூணுசீட்டு மலத்துகவனுகளாக்கும்… நாறவெள்ளம் அடிச்சா இங்கிணதான் வருவானுக’ என்றாள்.

உள்ளே ஒருபெண் வந்தாள். அவள்தான் என்னை முதலில் பார்த்தவள் என்று தோன்றியது. வந்ததுமே படுத்து சுருண்டு தூங்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் கணாரனைக் கொண்டு வந்து போட்டார்கள். மூட்டை விழுவதுபோல அவன் விழுந்த ஒலி கேட்டது ‘அம்மே என்றெ அம்மே…அம்மே’

‘டே அனத்தாம கெடப்பியா? மனுசன உறங்க விடாம…சவத்து மூதி’

’அம்மே….அம்மே’ என அவன் மெல்லிய குரலில் அழுதுகொண்டிருந்தான்.

ஒருவன் தனிமையில் அழும்போது எவரிடம் முறையிடுகிறான் என்று எனக்கு புரிந்ததே இல்லை. தனிமையில் நான் முழுமையான நிராதரவை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவனுடைய அழுகையைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். சில கணங்களில் ஒரு பெரிய கல்லைத்தூக்கி அவன் தலையில் போட்டுக்கொன்றுவிடவேண்டும் என்று தோன்றியது.

லாரிகள் என் தலைமேல் சென்றுகொண்டே இருந்தன. ஒரு பெரிய உலோக ஓசை கேட்டது. எங்கோ ஒரு நாய் அடிபட்டு கதறியது. என் கண்கள் மேல் ஒளி விழுந்தது. நான் விழித்து ஆனால் அசையாமல் படுத்திருந்தேன்.

‘கல்லு…டீ கல்லு உண்டோடி…’

அவள் எழுந்து ‘ஆரு ராமனா?’ என்றாள்

‘பார்ட்டி நிக்குந்நு… சந்தைக்காரனானு…’

‘வராம்’

‘மூநாளு வேணும்….’

‘அம்மிணி உண்டு…பின்ன மற்றவள் உண்டு’

‘கையும் காலும் இல்லாத்தவளு வேண்டா’

‘அவளே உள்ளூ’

‘ச்சே’ என்றான் அவன் மீண்டும் டார்ச்சைச் சுழற்றியபடி. என்னை நோக்கி விளக்கு நின்றது

‘அதாரு…ஆணா பெண்ணா?’

‘அதொரு தீனக்கார பையனா…தலைக்கு சுகமில்ல’

அவர்கள் சென்றார்கள். மீண்டும் அப்பகுதி இருண்டது. நான் எழுந்து சென்றுவிட ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் எழமுடியுமென தோன்றவில்லை. இரண்டுநாட்கள் தூங்கவில்லை. தூக்கம் சேர்ந்து சேர்ந்து என் மயிர்க்கால்களில் நகநுனிகளில் தூக்கம் தேங்கி ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது.

மீண்டும் ஓசைகள் இம்முறை நான்குபேர். அவர்கள் குச்சிகளால் தரையில் கிடந்தவர்களை அடித்து அடித்து எழுப்பினார்கள். ஒருவன் அப்பால் நின்று பீடி இழுத்தான். நான் அமர்ந்தவாறே பின்னால் நகர்ந்தேன். பாலத்துக்கு மறுபக்கம் பள்ளமாக இருந்தது. அதில் இறங்கி விட்டேன். கீழே நொதித்த சாக்கடை. அதனருகே சிமிண்ட் தூண் அதன்பின் நின்றுகொண்டேன்

‘மோலாளி…வேண்டாம் மோலாளீ’

‘இது மற்றவனா மாதவா’

‘எல்லாற்றினெயும் எடுக்கடே’

‘மோலாளி…வய்ய மோலாளி…செத்திருவேன் மோலாளி’

அவர்கள் அங்கிருந்த அனைவரையும் கொண்டு சென்றார்கள் . ‘மோலாளி ஒந்நு கண்ணடைச்சோட்டே மோலாளி…’

ஆனால் அதன்பின்னும் ஒரு சிறுமி எஞ்சுவதை மூட்டைகளுக்குள் கண்டேன். அவள் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு உணர்ந்தேன். சிறுமி அல்ல. கிழவியாகக்கூட இருக்கலம். ஒட்டியகன்னங்கள் சூம்பிப்போன உடல்.

‘கண்ணடைச்சு காலுநீட்டி உறங்கணுமானா சீவன் போகணும்’ என்றாள்

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். பெரிய ஒலியுடன் ஒரு லாரி கடந்துசென்றது.

‘என்ன சொல்லுகியோ? நான் கண்ணடைச்சு உறங்கின ஓர்மையே இல்ல’

‘நல்ல ஒரு பாம்பு கிட்டினா அதுக்குமேலே கிடந்து உறங்கிலாம்’ என்றேன்

‘பாயா?’

‘பாம்பு….அதுக்கு வெஷமுண்டு இல்லா?’

அவள் என்னை புரிந்துகொண்டு ‘ஓ… தலைக்கு வட்டாக்கும் இல்லியா?’ என்றாள்

கல்லு வந்து எதுவுமே பேசாமல் அப்படியே படுத்து அக்கணமே தூங்கிவிட்டாள். நான் சாக்கடை ஓரமாக அமர்ந்திருந்தேன். மூன்றுபேர் திரும்பி வந்தார்கள்

‘மொண்டி எங்க?’

‘அங்கிண போட்டுட்டு போனாவ…நம்மால தூக்க முடியுமா?’

இருட்டுக்குள் இருந்து ஒரு பறவை சிறகடித்து பாலத்தடி வழியாக கடந்து சென்றது. வௌவாலாக இருக்கும். அத்தனை பேரும் தூங்க ஆரம்பித்தனர்.

நான் காலை நீட்டலாமா என யோசித்தேன். நீட்டினால் உருண்டு சாக்கடைக்குள் விழுந்துவிடுவேன். ஆனால் காலை நீட்டாமல் தூங்கினால் நாளைக்காலை நடக்கமுடியாது. காலை நீட்டி-

சற்றே என் எண்ணங்கள் தேய்ந்த கணத்தில் உரத்த குரலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது ‘ சாந்தாகாரம் புஜங்க சயனம் பத்மநாபம் சுரேசம்…’

நான் மறுநாள் ரயிலேறிவிட்டேன். பின்பு ரயில் என் சொந்தக்கிராமம் போல ஆகியது. இரும்பு ஒலிக்காத இரவுகள் இல்லை. நகரங்களினூடாக கோயில்களினூடாக ஆற்றங்கரைகளினூடாக. காலைநீட்டாமல் தூங்கப்பழகிக்கொண்டேன். அமர்ந்தும் நின்றும்கூட தூங்கமுடியும். முடிந்தவரை குறைவான இடத்தை எடுத்துக்கொண்டு அதற்காக உலகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே உறங்குபவனாக ஆனேன்.

குவாலியர் மகாராஜா இந்த சலவைக்கல் ரயிலகத்துக்குப் பதிலாக ஒரு மாபெரும் கொட்டகையை கட்டியிருக்கலாம். அத்தனைபேரும் நீட்டி விரித்துப் படுத்துக்கொள்ளும்படியாக. இந்த சிறிய இடத்தில் ரயில்வேயின் நூற்றுக்கணக்கான பெட்டிகள், இறக்கிப்போடப்பட்ட சரக்குப்பொதிகள், இரும்புவண்டிகள், ஓடும்செருப்புக்கால்கள் நடுவே வாணலியில் இட்டு வதக்கியதனால் நீரிழந்து சுருங்கிச் சுருண்டது போன்ற மனித உடல்கள்.

ஒரு பெண் சற்றே விலகிக் கொண்டாள். அங்கே அவர்களின் கனத்த கம்பிளியும் சற்று விலகியிருந்தது. அங்கே அமர்ந்துகொண்டால் போதும் மெதுவாக என் இடத்தை எடுத்துக்கொள்ளலாம். என் உடலே சிறிது. என் உடலில் பாதி இடம்கூட எனக்குத்தேவை இல்லை. போபாலில் இருந்து நான்குநாட்களாக அரைத்தூக்கத்தில் ரயிலில் இறங்கி ஏறி கக்கூஸ் அருகே அமர்ந்தும் நின்றும் வந்திருந்தேன். அரை இரவுக்கு தூங்கினால் போதும். தூக்கம், அந்த வார்த்தையையே நினைக்கக்கூடாது. அதன் பின் உடலும் மூளையும் ஒரு அடிகூட முன்னால் எடுத்துவைக்காது.

கால்களை நீட்டிக்கொண்டேன். ஆனால் எச்சரிக்கையாக இருந்தும் அது அவள் மேல் பட்டுவிட்டது. அவள் விழித்து ‘கியா?’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை.எனக்கு இந்தி ஒரு சொல்கூட தெரியாது.

அவள் என்னை கூர்ந்து பார்த்தாள். ஒட்டிய முகம். செம்புழுதியாலானதுபோன்ற மூக்கும் வாயும் கன்னங்களும் எல்லாம் சுருக்கங்கள். கன்னங்களில் குத்தப்பட்ட பச்சைகூட சுருங்கியிருந்தது. மூக்கில் அலுமினிய வளையம். அவள் புன்னகைத்து மேலும் விலகி இடம் விட்டாள். என்னிடம் அவள் படுத்துக்கொள்ளச் சொல்கிறாள் என புரிந்தது

புன்னகையில் பதில் சொல்லிவிட்டு என் கால்களை அந்த இடைவெளியில் வைத்தேன். முதுகை வைக்க இடமிருந்தது. முதுகு தரையை அறிந்ததும் அத்தனை நரம்புகளும் அவிழ்ந்தன. கட்டுவிட்ட சுள்ளிமூட்டை போல நான் கலைந்து தரையில் பரவினேன்.

அரைமணிநேரத்தில் என் காலில் அடிவிழுந்தது. ‘சாலா…உட்டோவ்ரே….உட்டோவ்…’

முந்தைய கட்டுரைஅனந்தமூர்த்தியின் அரசியல்
அடுத்த கட்டுரைஆறு மெழுகுவர்த்திகள்- உண்மையா?