புறப்பாடு II – 2, எள்

மூடிய அறைக்குள் மண்ணெண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பழையபாணி விளக்கு. பித்தளையாலானது. ஒயின்கோப்பை போன்ற ஒற்றைக் காலுக்கு மேலே சங்குபோன்ற எண்ணைக்குடுவை. மேலே ஒரு திரி. அதில் கருநிறக்கூந்தல் விரித்து நின்றாடும் செந்நிற யட்சிபோல சுடர். பகல்முழுக்க அந்த கரும்புகை வெளியேறிக்கொண்டே இருந்தது. இருட்டு கெட்டியாகி ஒரு சரடாக ஆனதுபோல. அந்தச்சரடு மேலே மச்சின் மரக்கூரைப் பரப்பில் படிந்து விழுதுகளாக மாறித் தொங்கியது. இருட்டைக் கடைந்து எடுத்த வெண்ணை

தீயில் இருந்து அவ்வளவு இருட்டு வெளியேற முடியுமா? அத்தனை இருட்டையும் வெளியேற்றித்தான் அது ஒளிவிடுகிறதா? நான் எழுதுவதை நிறுத்தி மேலே பார்த்தேன். தேனடை போல தொங்கியது கரி. அறைக்குள் எல்லா கதவுகளையும் மூடி சன்னல்களை இறுக்கியடைத்து தன்னந்தனிமையில் அமர்ந்து எழுத ஆரம்பித்து ஒருமாதத்துக்கும் மேலாகிறது.

வெளியே பகல் எரிந்து அணைந்தது. இரவு குளிர்ந்து சொட்டி அடங்கியது. விடியற்காலையில் அம்மா வந்து கதவைத்தட்டும்போது அஞ்சிநடுங்கி எழுந்து அறைச்சுவரை ஒட்டியபடி நிற்பேன்.

‘என்னடா? டேய் ? என்ன செய்யுது உனக்கு?’

‘ஒண்ணுமில்லை’ என் உதடுகள் எந்நேரமும் உலர்ந்து ஒட்டியிருந்தன. எச்சிலை விழுங்க மூச்சைக்கொடுத்து உந்தவேண்டியிருந்தது. உடம்பு உச்ச அழுத்த நீர் ஓடும் ரப்பர்குழாய்போல எந்நேரமும் அதிர்ந்தது. கைவிரல்கள் நடுங்கின. உதடு நடுங்கியது. மூச்சு நடுங்கியது. சொற்கள் நடுங்கின. எண்ணங்கள் நடுங்கிக்கொண்டிருந்தன

அம்மா எனக்குத் துணைவருவாள். தோட்டத்தில் கட்டப்பட்ட ஓலைப்புரைக்குள் நான் மலம் கழிக்கும்போது ஓலைக்குமேல் அவள் தலை தெரிந்துகொண்டிருக்கவேண்டும். கொல்லைப்பக்கத்தில் பல்தேய்க்கும்போது அவள் அருகே இருக்கவேண்டும். ஓடிப்போய் அறையைச் சாத்திக்கொள்வேன். கதவுகளின் இடுக்குவழியாக பகலின் ஒளி உள்ளே நுழையும் பழைய சாக்குகளை விரித்து அதை மூடுவேன். சன்னலிடுக்குகளில் காகிதங்களை வைத்து அடைப்பேன். அத்தனைக்குப்பின்னும் நான் வெட்டவெளியில் நிர்வாணமாக நின்றிருப்பதான உணர்வு என் உடலில் எஞ்சியிருந்தது.

முதல் ஒருவாரம் தாண்டியதும் அம்மா கவலைப்பட ஆரம்பித்தாள். அக்கரையில் இருந்து வைத்தியரான பெரியப்பா வந்து என்னை பார்த்தார். ‘வெயிலுபடாத கல்லுத்தேரை மாதிரியில்லா இருக்கான். டே,உனக்கு என்ன செய்யுது?’

நான் அவரை வெறுமே பார்த்தேன். அவரது தலைக்குப்பின்னால் சுவர் திரைபோல நெளிந்தது.

‘உறக்கம் உண்டா?’என்றார் பெரியப்பா அம்மாவிடம்

’உறங்குதான்….ஆனால் அதுக்கொரு சிட்டை இல்லை. பகலிலே கிடந்து உறங்குதான். ராத்திரி நேரமெல்லாம் வெளக்கும் வச்சு முழிச்சு இருக்கான்…’

‘சாப்பாடு?’

’ருசியில்ல…கொண்டுவச்சா திம்பான்’

‘நரம்புதீனமாக்கும். ஆலிலைமாதிரி நாடிகள் நடுங்கிட்டிருக்கு. ஜீவசக்தி காத்தில தீபம் மாதிரி படபடக்குது….’

’அய்யோ’

’பயமில்லை. எளம்பிள்ளையில்லா… நல்ல நஸ்யமும் தைலமும் எழுதித்தாறேன். போட்டுக்குடு….உக்ர மனக்ஷோபம் இருக்கு….‘

’அந்தப்பாவிப்பெய அவனும் செத்து இவனையும் கொண்டுட்டுப்போறதுக்கு நிக்கானே’ என்றாள் தங்கம்மா பின்னால் நின்று
‘ஏட்டி நீ உன் சோலியப்பாரு….ஆமா, கொண்டு போறான்…குடுக்காஹ’ அம்மா சீறினாள்

தைலம் பச்சை நிறத்தில் மயில்துத்தம் வெந்த வாசனையுடன் இருந்தது. அதை அம்மா தலையில் பொத்தி அரக்கித்தேய்ப்பாள். நஸ்யம் குருமிளகு பொடித்ததுபோல. அதை மூக்கில் வைத்து ’இழுடா’ என்பாள்.
அதை இழுத்ததும் சில கணங்கள் மூக்கிலும் தலையிலும் உள்ள எல்லா தசைகளும் திகைத்து நிற்கும். அதன்பின் ஓர் உலுக்கல். தும்மல்கள் கைத்துப்பாக்கி வெடிப்பதுபோல வந்தபடியே இருக்கும். அரைமணிநேரம் கழித்து மூக்குவழி துல்லியமாக திறந்திருப்பதை உணரலாம். மூச்சை இழுக்க இழுக்க நுரையீரல் சுகமாக நிறையும்.

அம்மா என்னை கொல்லைப்பக்கம் அமரச்செய்து இளம்வெந்நீரை அள்ளி அள்ளி விட்டு குளிப்பாட்டுவாள். உடம்புக்கு பயறுப்பொடி. மஞ்சளும் சந்தனமும் சேர்த்து அரைத்தது. தலைக்கு சிகைக்காய். குளித்து தலைதுவட்டியதுமே தூக்கம் வந்து சொக்கும். வாய் குளற ஆரம்பிக்குமளவுக்கு தூக்கம்.

’சாப்பிட்டுட்டுப்படு…சாப்பிடாம படுக்கக்கிடாது…இந்தா ஒரு நிமிஷம்’

நெய் விட்டு பிசைந்த சோறு. அதில் தேய்ங்காய் சுட்டு அரைத்த மணமுள்ள குழம்பு. சாப்பிட ஆரம்பித்தால் அதை நிறுத்துவதில்லை. சோறு சென்றபடியே இருக்கும். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என்னில் நான் இருப்பதில்லை

’போரும் மக்கா…போயிப் படு’

சென்று படுப்பேன். கட்டில் விரிந்து மெத்தென்று என்னை கைநீட்டி அழைப்பதுபோலத் தோன்றும். உடலை இதமாக பரப்பி மச்சைப்பார்த்துக் கிடக்கும்போது கீழே மென்மையாக இளம்சூடாக திரவம்போல தூக்கம், அப்படியே தூக்கத்தில் விழுந்து விழுந்து சென்றபடியே இருப்பேன்.

சட்டென்று ஒரு குரல் ‘டேய் எனக்குச் சோறு?’

‘எதுக்குடா தென்னைமரத்திலே கேறி இருக்கே?”

‘கீழே வரமுடியாதுல்லா?’

‘அங்க எப்டிடே இருக்கே?’

‘டேய் எனக்கு பசிக்குது…சோறு எங்கடா?’

சோறு. எவ்வளவு சோறு. மலைமலையாக. வெண்மணல் குவியலாக. உருட்டி உருட்டி உண்கிறான். சோறு அவன் வழியாக எங்கோ சென்றுகொண்டே இருக்கிறது. தட்டு காலியாகிவிட்டது. என்னை அவன் திரும்பிப்பார்த்தான். ‘டேய் சோறு எங்கடா?’

‘இப்பம் சோறுதானேடா தின்னே மயிரே?’

‘சோறு கொண்டாடா…டேய் சோறு….சோறுடா…’

விழித்துக்கொண்டு உடல் அதிர இருட்டுக்குள் கிடப்பேன். சட்டென்று பாய்ந்தெழுந்து விளக்கை ஏற்றுவேன். அறைக்குள் ஏதாவது இடுக்கு திறந்திருக்கிறதா என்று பார்ப்பேன். இல்லை. கருக்குழி போன்ற அறை.

மூச்சு வாங்கியபடி அமர்ந்திருப்பேன். அறைக்கு வெளியே ஓசையே இல்லாமல் ஒரு இருப்பை உணரமுடியும். சுவர் ஒரு மெல்லிய தோல்படலம். அதற்கப்பால் நிற்கிறான். விரலால் அழுத்தித் தொட்டால் அந்தப்பக்கம் அவன் உடலில் அது படக்கூடும்

மெல்லிய ஒலி. மரத்தில் இருந்து சுள்ளி விழுந்திருக்கலாம். என் உடல் காற்று பட்ட சுடர்போல அலைபாய்ந்து துடித்து மெல்ல சமநிலை கொள்கிறது.

பின்னர் எழுத ஆரம்பித்தேன். விஜியின் பழைய நோட்டுப்புத்தகம் மேஜைக்குள் இருந்தது. பேனாவை தேடி எடுத்து எழுதினேன். சோறு. சோற்றின் மலைகள். சோற்றாலான வீடுகள். சோறு ஒழுகும் ஓடைகள். ‘டேய் சோறுடா…பசிக்குதுடா மயிரே’

ராதாகிருஷ்ணனுக்கு அவ்வளவு பசி இருந்திருக்கிறது என்று அதுவரை நான் அறிந்திருக்கவில்லை. எந்நேரமும் எதையாவது தின்னும் வேகத்துடன் இருப்பான். ‘டேய், மேலயட்சி கோயிலிலே ஆலும்வீட்டு வழிபாடு. இப்பம்தான் கொதும்பும் அரிசியும் போயிருக்கு….’ என்று அப்பக்கமாக புல்பறிக்கச் செல்வான். கரடி எஸ்டேட்டில் நுழைந்து கொஞ்சம் ஒட்டுகறை ரப்பரை பொறுக்கி புல்லுடன் போட்டுக்கொண்டு வந்து அணைஞ்சபெருமாள் கடையில் போட்டு இரண்டு வடையும் டீயும் சாப்பிடுவான்.

காட்டுக்குள் சென்றால் அவன் கண்ணுக்கு தீனியாகவே தென்படும். ’கொக்குமுட்டை நல்லதாக்கும் கேட்டியா? சின்னதா இருந்தாலும் திங்கலாம்’ அன்னாசிச்செடியின் ஓலையின் அடியில் உள்ள வெண்குருத்தை பிடுங்கி கடித்துத் தின்பான். விடலிப்பனையின் ஓலைக்குருத்தை மென்று சக்கையைத் துப்புவான். உதிர்ந்து கிடக்கும் பனம்பழங்களை சருகு கூட்டி சுட்டுத்தின்பான். குளத்தில் மீனைப்பிடித்து சேற்றால் பொதிந்து சுட்டு சேற்றை உதிர்த்துவிட்டு தின்று வாயிலிருந்து முள்ளை உருவுவான். கெணிக்கோல் வைத்து கொக்கையும் கௌதாரியையும் பிடித்து இறகுகளைப் பிய்த்துவிட்டு சுள்ளிகூட்டி சுட்டு தின்பான்.

அம்மாவுக்குத்தெரியும். அவன் வந்ததுமே ‘டேய், பளஞ்சி இருக்கு குடிக்கியா?’

‘வேண்டாம் மாமி…இந்நா இப்பம்தான் கஞ்சி குடிச்சேன்’

‘டேய் குடிடே’

பேசாமல் அமர்ந்து சாப்பிட ஆரம்பிப்பான். கும்பா நிறைய பழையது. தொட்டுக்கொள்ள வெறும் மாங்காய் ஊறுகாய். சாப்பிட்டு எழுந்ததும் அவனே வேலை எதையாவது ஆரம்பிப்பான்.’மாமி பெரிய எருமைக்கு கழுத்துக்கயிறு மாத்தணும்லா?’
இரவில் பெருவட்டர்களின் தென்னந்தோப்புகளில் ஏறுவோம். தேங்காயை செங்குத்தாக பாறையில் அறைந்தால் பிளந்து வழிவிடும். உரித்து உடைத்து தின்பான். இரண்டு தேங்காய்களைக்கூட அவனால் தின்ன முடியும். மட்டையை கவனமாக ஆற்றில் ஒழுக்கி விட்டுவிடவேண்டும். காலையிலேயே பெருவட்டரின் தோப்புக்குச் சென்று புல்பறிக்கவும் வேண்டும். கால்தடங்கள் கிடப்பதை நியாயப்படுத்த.

வீட்டுக்கு வந்து கதவைத்தட்டியபோது கையில் சிமினியுடன் அம்மாதான் திறந்தாள். ‘டேய் என்னடா?’
உள்ளே சென்று குப்புற கட்டிலில் விழுந்தேன். உலகம் ரீ என்ற ஒலியுடன் என்னைச்சுற்றிச் சுழன்றது. பிரம்மாண்டமான இசைத்தட்டு போல சுழலும் இரவின் மையத்தில் கிடந்தேன்.

’என்னடா? டேய்…என்ன ஆச்சு அவனுக்கு?’

விக்கினேன். ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அதற்குள் கார் திரும்பி வந்த ஒளி எங்கள் வீட்டையும் வருடிச்சென்றது. கதறல்கள் எழுந்தன. பந்தங்களுடன் ஆட்கள் ஓடிச்சென்றார்கள்.

விழித்துக்கிடந்தேன். நிழல்கள் தலைகீழாக என் மச்சின் மீது ஆடிக்கொண்டிருந்தன. விதவிதமான நிழல்கள்.
வீட்டில் யாருமே இல்லை. ஊரே அங்கே சென்று கூடியிருந்தது. இரவின் ஓசைகள் எல்லாம் அடங்கி ஊரையே ஆழமான நீருக்குள் மூழ்கடித்து வைத்தது போன்ற அமைதி. அழுந்திமயங்கிய ஓசைகள், குரல்கள் எங்கோ கேட்டன. சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தேன். தலைசுழன்று குமட்டிக்கொண்டு வந்தது. சுவரைப்பிடித்துக்கொண்டு ஒரு கணம் நின்றேன். கண்களைமூடியபோது நின்ற நிலம் பறப்பதை உணர்ந்தேன்.

பின்பு வெளியே சென்று மாமரத்தடியில் மரத்தடியைப்பிடித்துக்கொண்டு நின்றேன். தென்னைமரம் காற்றில் ஓலைகளை வீசியது. மெல்லிய கிசுகிசுப்பு ‘டேய் ஜெயா…டேய்’ நான் தலைதூக்கவில்லை .’டேய்…டேய்’

உடல் குளிர்ந்து சிலிர்த்தது. மறுகணம் அந்த மரமே என் மேல் விழும் என சருமம் உணர்ந்தது போல. ஆனால் நிமிரவில்லை. ‘டேய் பசிக்குதுடா’

ஓடிச்சென்று கதவைமூடிக்கொண்டேன். சன்னல்களை மூடினேன். இடுக்குகளை விரிசல்களை மூடினேன். கட்டிலில் போர்த்திக்கொண்டு படுத்தேன். கதவின் சிறிய துளை வழியாக வெளியே இருந்து ஒளிவந்து எதிர்ச்சுவரில் விழுந்தது. தலைகீழாக ஒரு தென்னை மரம். ஓலைகளை வேர்களாக பரப்பி மொட்டை நுனியுடன் நின்றது அது. இல்லை, அது வேறு. ஓலைகள் அல்ல ரோமவட்டம்.

மாலையில் அம்மா வந்து கதவைத்திறந்து எட்டிப்பார்த்தாள்.

‘செதையேத்துறதுக்கு முன்னால கொச்சன் ஒண்ணு காணுகது நல்லதுல்லா?’

‘அவன் கண்டது போரும்…நீ போடி’

சிதையின் சாம்பல் வாசனை. ஆற்றுக்கரையில்தான் குழி எடுத்திருப்பார்கள். எட்டடி நீளம் மூன்றடி அகலம் ஆறடி ஆழம் கொண்ட குழி. அதுதான் கணக்கு. கீழிருந்தே நெருக்கமாக தேங்காய்நார்மட்டைகளை அடுக்குவார்கள். அதன்மேல் ஒரே ஒரு அடுக்கு மட்டும் நல்ல கறையுள்ள மாமர விறகு. அதன்மேல் வைக்கோல் பரப்பிய மென்படுக்கை. அவர்களின் தோட்டம் ஆற்றில் இறங்குமிடம் எங்கள் வீட்டுக்கு தெற்கேதான்.

நள்ளிரவில் கொண்டு வைத்திருப்பார்கள். மெல்லிய வைக்கோல் படுக்கைமீது.மெதுவாக சரித்துப்பரப்பி மேலே தென்னைஓலைச்சருகும் வைக்கோலும் கலந்து மூடுவார்கள். இரவின் குளிருக்கு இதமாகத்தான் இருக்கும். அதன் மீது மண்ணைக்குழைத்து மூடி மூன்று சிறு துவாரங்கள் மட்டும் விட்டுவிடுவார்கள்.

‘எதுக்குடே மூணு துவாரம்?’

’தீய வைக்கிறதுக்கு ஒண்ணு….கேசு அம்மாவன் வாயால காத்துவிடுகதுக்கு ஒண்ணு….கீழ்வாயால காத்து விடுகதுக்கு இன்னொண்ணு….மாமா கீழ ஓட்டை இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கணும்லா?’

‘ஏண்டே?’ என்றார் வெடக்கு ராமன்

‘கேசு அம்மாவன் நமக்கு நல்ல வேண்டப்பட்டவராக்கும்…கீழ் சுவாசம் கொஞ்சம் கனம்’

’ச்சீ…நாறி… உனக்கெல்லாம் சாவுண்ணா சிரிப்பாக்கும்….டேய் உன் தந்தையானை இதேமாதிரி கதம்பையும் தொண்டும் அடுக்கி ஏற்றி கெடத்தினவன் நானாக்கும்’

முதலில் தீக்கொழுந்துகள். தேங்காய்மட்டையில் தீ தொற்றிக்கொண்டதும் தீ அணைந்து கரும்புகை. வெம்மை ஏறியதும் பின்பு புகை இல்லை. செந்நிறக் கங்குகளினாலான படுக்கை. ‘நல்ல சிவப்பு வீராளிப்பட்டு விரிச்சிட்ட கட்டிலு மாதிரியாக்கும் அம்மணி… ரோகமும் தீனமும் வலியும் துக்கமும் கவலையும் கண்ணீரும் எல்லாம் அப்படியே உருகி எரிஞ்சு வானத்துல கேறிரும்’ என்றார் வெடக்கு ராமன். அவர்தான் ஊரின் மூத்த நாவிதர். ‘ஆயிரம் துக்கம் வச்சாலும் மனுஷனுக்கு அந்த ஒரு யோகத்த ஆண்டவன் மிச்சம் வச்சிருக்கான்…என்ன நான் சொல்லுகது?’

சட்டென்று எழுந்து அமர்ந்தேன். கோரைக்காட்டு அம்முக்குட்டி தூக்கில் தொங்கி இறந்தபோது அவள் எரிய ஆரம்பிப்பது வரை நானும் கூடவே இருந்தேன். வெடக்கன் புதிய பனையோலை கடவத்தில் இருந்து பலவகையான பொருட்களை எடுத்துப்பரப்பினார். அவளைப்போர்த்துவதற்கான புதிய துணி. மலர்மாலைகள். புதிய கலத்தில் புதிய நெல். வெற்றிலை பாக்கு.

‘டேய் அது என்னத்துக்கு?’ என்றேன்

வெடக்கன் ஒரு மூன்றுகண் கொட்டாங்கச்சியை எடுத்து சிதையின் இடப்பக்கம் விரித்த வாழையிலையில் வைத்தார். மஞ்சள்பையை திறந்து அதிலிருந்து இருகைகளாலும் மூன்றுமுறை எள்ளை அள்ளி குவித்து வைத்தார். கரியபளபளப்புடன் திரவம்போல அவர் கையில் இருந்து வழிந்தது அது.

‘வெடக்கண்ணா அது என்னத்துக்காக்கும்?’

‘பிள்ளே, செத்தவ ஆயுசு தெகையாமல்லா போனா? மேலே போறதுக்கு குறே காலமாகும்லா? அது வரை இங்கதான் சுத்திச்சுத்தி வருவா பாத்துக்கிடுங்க… ஆன்மாவுக்கு நல்ல பசியிருக்கும்ணாக்கும் மூப்பிலான்மாரு சொல்லியிருக்கது….பசிச்சு தேடி செதையச் சுத்திச்சுத்தி வருவா…. வாறப்ப இந்த எள்ளை பாப்பா. பசி தாங்காம இதை இந்த ஓட்டைச்சிரட்டையிலே வாரி எடுத்து தின்னப்பாப்பா…. நயம் எள்ளுல்லா? ஓட்டையில ஓடி அம்பிடும் கீள போயிரும். சிரட்டை நிறையாது. நிறையாச்சிரட்டைய வாயில வைக்க அவளுக்கும் மனசு வராது. இங்கியே இருந்து ராப்பகலா மாசக்கணக்கா வருசக்கணக்கா சிரட்டைய நிறைக்கப்பாத்துக்கிட்டே இருப்பா…’

‘மூத்த பேயிமாருகிட்ட கேட்டா வெரலு வச்சு ஓட்டைய அடைக்க சொல்லமாட்டாவளா?’ என்றேன்

‘சிரிப்பாக்கும் இல்லியா? எளம்புள்ளையளுக்கு சீவிதமும் மரணமும் எல்லாம் சிரிப்பாக்கும்….பிள்ளே, மனுஷ உடம்பு இந்தா இந்தமாதிரி ஓட்டையுள்ள சிரட்டையில்லா? பத்து எளுபது வருசம் நாம சோத்த வாரி இதிலேயில்லா போடுகோம்? ஒன்பது ஓட்டையுள்ள ஓடல்லோ உமையொரு பாகனே? நின்பதம் அணைகையில் இரந்திடும் ஓடல்லோ உமையொரு பாகனே?’

’டேய்….எதுக்குடா கரையுதே?’

’ம்ம் ம்ம்’ என்று ராதாகிருஷ்ணன் விம்மினான். தலையில் கட்டிய துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
‘பிள்ளே போகணும்…மயானத்திலே கண்ணீருக்கு இடமில்லை. சுடலைமாடனுக்கு கண்ணீரைக்கண்டா கலியிளகும்….போகணும்’

போகும் வழியில் ‘டேய் எதுக்குடா?‘

‘அந்த எள்ளை அவ எம்பிடுநாள்டா அள்ளுவா? பாவம்தானே?’

‘போடா மயிரே’

எழுந்து கதவை மெல்லத்திறந்து வெளியே சென்றேன். குளிர்த்துளிகள் மரங்களில் இருந்து மெல்லிய தாளத்துடன் சொட்டிக்கொண்டிருந்தன. இலையசைவுகள் இல்லாமல் மரங்கள் குளிரை குடித்துக்கொண்டு நின்றன. முற்றத்தில் ஒரு வேட்டியை விரித்ததுபோல இளம்பிறையின் வெளிச்சம்

தோட்டத்தில் இறங்கிச்சென்றேன். ஒற்றையடிப்பாதையில் விழுந்துகிடந்த சருகுகள் வெள்ளியாலானவை போலிருந்தன. மெல்லியஓடை போல சத்தமே இல்லாமல் ஒரு சாரை வழியைக் கடந்துசென்றது. ஆற்றின் நீராவியை உணர முடிந்தது. நீரின் மெல்லிய களகளம் கேட்டது. அதன்பின் நான் தென்னை ஓலைகளின் அடியில் நெருப்பின் செம்மையைக் கண்டேன். பலாவின் இலைகளின் அடியில் தென்னைத்தடிகளின் மறுபக்கம் செம்மை மின்னிப்படர்ந்திருந்தது

சரிவில் இறங்கியபோது செந்நிறம் ஒளிக்குமிழியிட்டு மெல்ல வெடித்து ததும்பிக்கொண்டிருந்த நீள்சதுரத்தைப் பார்த்துவிட்டேன். அது ஒரு வாய்போலிருந்தது. அடக்கமாட்டாமல் சில விம்மல்கள். விசும்பல்கள். அதற்குள் அவன் இல்லை. நெருப்பு அவனை உள்ளே இழுத்து மூழ்கடித்துவிட்டிருந்தது.

அருகே சென்றேன். மெல்லிய காற்றோட்டம் அதனருகே இருந்தது. அந்தக்குழி ஒரு கண்ணாக மாறியது. காற்றசைவில் அது என் வருகையை உணர்ந்ததுபோல நெருப்பில் ஒரு சலனம். உடலைக்குளிரச்செய்த ஆற்றங்கரைக் காற்று. சீண்டப்பட்ட நாய்போல சிதைக்குழி மெல்லச் சீறியது.

அங்கே வாழையிலையில் கண்ணன்சிரட்டை கிடந்தது. அதனருகே எள்ளின் குவியல். பாதி அள்ளி மறுபக்கம் குவிக்கப்பட்டதுபோல தோன்றியது. இல்லை மூட்டைப்பூச்சிகள் போல எள் அதுவே திரண்டு கொட்டாங்கச்சித்துளை வழியாக மறுபக்கம் சென்றுகொண்டிருக்கிறதா? அவன் சற்றுமுன் எழுந்து விலகிவிட்டானா? அங்கே மரங்களின் மறைவில் நின்று என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறானா?

என்னை பின்னாலேயே வந்து எடுத்துக்கொண்டு வந்து கிடத்திவிட்டார்கள். கண் விழித்ததும் திடுக்கிட்டு எழுந்து ‘எள்ளு’ என்றேன்.

‘என்னடா?’ என்றாள் அம்மா

‘எள்ளு…நெறைய எள்ளு….ஆனைமலை மாதிரி எள்ளு’

‘பேசாம படு’

வாய் கசக்க உடல் உதறிக்கொள்ள எழுந்தமர்ந்து எழுத ஆரம்பித்தேன். எழுதிக்குவித்த பக்களை கீழே அடுக்கி வைத்திருந்தேன். எழுத எழுத பொங்கி வந்துகொண்டே இருந்தது. எழுதியவை சிறு துளியாக எஞ்ச எழுதாதவை கடலாக அலையடித்தன. இன்னும் இன்னும் என அகத்தின் வேகம் உந்த கைகள் சோர்ந்து மேஜைமேல் தலைவைத்து படுத்துக்கொள்வேன். எவரோ தொட்டதுபோல சருமம் சிலிர்க்க திடுக்கிட்டு எழுந்து உடனே எழுத ஆரம்பிப்பேன். எரிந்து எரிந்து கரிவிட்டுக் கரிவிட்டு… எத்தனை இருட்டு.

அப்பா கதவைத்திறந்து உள்ளே வந்தார். ‘டீ இந்த நாயி உள்ள என்ன செய்யுதான்? இவன இங்க பழுக்கிறதுக்கு உறைபோட்டு வச்சிருக்கா? கதவைத்திறடா நாறி’

நான் எழுந்து சுவரோடு சாய்ந்து நின்று நடுநடுங்கினேன். சிறுநீர் வரும் உணர்வு வர கைகளால் வேட்டியைச் சேர்த்து பிடித்துக்கொண்டேன்.

அப்பா கதவுகளை தடால் படாரென்று திறந்தார் சன்னல்களை எல்லாம் திறந்து வைத்தார். எல்லா மதகுகளில் இருந்தும் ஒளி பீரிட்டு அறையை நிறைத்துச் சுழன்று மச்சில் முட்டியது. கண்களை மூடிக்கொண்டேன். இடுக்குகள் வழியாக கண்ணீர் கொட்டியது

‘இனிமே இந்த வீட்டிலே கதவுகளை மூடி வச்சா வெட்டி பொலிபோட்டிருவேன்… நாடகமா ஆடுதே? நாயே?’

அப்பா சென்றபின்னும் கண்களைத் திறக்கமுடியவில்லை. இரண்டுமுறை திறந்து பார்த்தபோது கூச்சம் தாளாமல் கண்ணிமைகள் அதிர்ந்து மூடிக்கொண்டன. சுவரை நோக்கி திரும்பி நின்றுகொண்டேன். பின்னர் கண்களைத் திறந்து சுவரைப்பார்த்தேன்

திரும்பி வந்து மேஜைமுன் அமர்ந்தேன். கண்ணீர் உலர்ந்த கண்களும் கன்னங்களும் ஒட்டின. குமட்டல் இருந்துகொண்டே இருந்தாலும் உடலின் அதிர்வு குறைந்திருந்தது. என் முன் அடுக்கடுக்காகத் தாள்கள். நீலமையில் எழுதப்பட்டவை.
பேனாவை எடுத்து ஒருமுறை உதறிவிட்டு தாளில் வைத்ததுமே கை தானாக எழுத ஆரம்பித்தது. துணுக்குற்று நிறுத்திக்கொண்டேன். எழுதியதை வாசித்தேன். மிக நன்றாகத் தெரிந்த ஒரு வாசகம். மீண்டும் பேனாவை வைத்ததும் குழியானைப்பூச்சி மண்ணில் அரைவட்டம் போடுவதுபோல அதையே எழுதியது என் கை.

பரபரப்புடன் நான் எழுதிக்குவித்த தாள்களை எடுத்துப்பார்த்தேன். நூற்றுக்கணக்கான பக்கங்கள். எல்லாமே ஒரே சொற்றொடர். அச்சம் தாளாமல் நெஞ்சைப்பிடித்துக்கொண்டேன். நான் எழுதியவை தானா? அல்லது அறைக்குள் புகுந்து என் பின்னல் நின்று என் கைகளைப்பற்றி வேறு எவரேனும் எழுதுகிறார்களா?

பாய்ந்து அறையைவிட்டு வெளியே வந்தேன். வராந்தவில் ஓடி முற்றத்திற்குத் தாவினேன். வெளிறிய நிறத்தில் எரிந்துகொண்டிருந்தன வைக்கோல்போரும், தொழுவத்துக்கூரையும், செம்மண் முற்றமும். பாய்ந்து முற்றத்தைத் தாண்டி நின்றேன். பின்னர் மூச்சிரைக்க திரும்பிவந்து கொடியில் கிடந்த சட்டையை எடுத்துபோட்டுக்கொண்டேன். கோயில் முற்றத்தில் இறங்கி கோயில் மதிலைச்சுற்றிக்கொண்டு மறுபக்கம் சென்றேன். குருவிக்காடு சாலைக்குச் செல்லும் மண்பாதையில் மூச்சிரைக்க நடந்தேன்

‘ஏன் மலையாளத்துச்சாமி, அப்பிடி என்னவாக்கும் எளுதினிய?’ என்றார் சாமிக்கண்ணுபாவா

கோயில்முன் நின்றிருந்தேன். உள்ளே கருவறைக்குள் ஒற்றைவிளக்கின் சுடர் எரிய ,அலங்காரமே இல்லாத வெற்று லிங்கம் கரிய மொழமொழப்புடன் பள்ளத்தில் அமர்ந்திருந்தது. அதன்மேல் கரிய குடுவை தொங்கியது. அதிலிருந்து மெல்லிய கண்ணாடிச்சரடு போல தைலதாரை லிங்கத்தின் தலைநடுவே தொட்டு ஓசையே இல்லாமல் வழிந்து பரவி இறங்கிக்கொண்டிருந்தது.

அர்ச்சகரோ கோயில்பணியாளர்களோ எவரும் இல்லை. மடைப்பள்ளியில் அரிசிவேகும் வாசனை. பரதேசிகளுக்கு அன்னம் கிடைக்க இன்னும் ஒருமணிநேரமாவது ஆகும்.

நான் பாவாவிடம் ‘அது என்னவாக்கும் தைலம்?’ என்றேன்

‘நல்லெண்ணையும் தண்ணியும் கலந்து வைப்பாஹ….’ பாவா சொன்னார். ‘இந்த அய்யனைக்கேட்டா சாமியக் குளுரவைக்கிறேன்னு சொல்லுவான். அவன் என்ன கண்டான்? சோத்துப்பாப்பான்.திரிபுரமெரித்த கனலை அணைக்க இவனோட நல்லெண்ணைக்கு குளிருண்டா என்ன?‘

‘பின்ன?’

‘சாமி இது மகாகாலமுல்லா? குறையாத குடுவையிலே இருந்து நிறையாத குடுவைக்கு சத்தமில்லாம போய்ட்டே இருக்கு… லிங்கத்துக்கு அதுல்ல அபிஷேகம்? அவன் காலாதீத மகாகாலனல்லோ…’

நான் அந்த ஓசையற்ற வழிவை பிரமித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

’சரி, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சாமி…என்னவாக்கும் எளுதினிய? சித்தாந்தமா?’

‘நல்லெண்ணைன்னா? எள்ளு அரைச்சு புழிஞ்சு எடுக்கிறதுல்ல?’ என்றேன்

‘ஆமா, பின்ன? சரிதான் நீங்க எப்ப கேட்டதுக்கு பதில் சொன்னிய? அய்யன் அங்கிண என்ன எளவெடுக்குறான்? சட்டுன்னு சாதத்த சட்டியில போட்டா சாமிக சோலியப்பாப்பம்ல?’ என்றார் பாவா

‘என்ன சோலி?’

‘சிவசோலிதான், வேறென்ன?’ என்றார் பாவா ‘சிந்தையடக்கிச் சும்மா இருத்தலே சுகம் பராபரமே’

முந்தைய கட்டுரைதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை, கடிதங்கள்