வாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்

பல்கலைநகர் என்பது அமெரிக்காவின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்று. ஒரு நாகரீகம் அதன் சிறப்புடன் இருக்கையில் அங்கே பெரும் கல்விநகரங்கள் உருவாகும் என்பது வரலாறு. தட்சசிலா பல்கலைக்கழகமும் நாலந்தா பல்கலைகழகமும் அத்தகையவை. நாலந்தாவின் இடிபாடுகள் வழியாகச் செல்லும்போது அந்த கல்விநகரின் விரிவும் மகத்துவமும் நம் நெஞ்சை நிறைக்கும். தமிழ்நாட்டில் காஞ்சியும் கும்பகோணமும் கல்விநகரங்கள். காஞ்சியின் கடிகை பல்கலையில் இருந்தே இன்றும் உலகமெங்கும் பேசபப்டும் பிற்கால பௌத்த சிந்தனைகள் உதயமாகிவந்தன.
கன்யாகுமரி மாவட்டம் அதன் நிலவளத்தால் எக்காலத்திலும் பண்பாடு மிக்கதாகவே இருந்திருக்கிறது. இந்தச் சிறிய நிலப்பகுதியில் இரு புராதன பல்கலைகள் இருந்துள்ளன. அருமனை அருகே உள்ள சிதறால் மலை கிமு ஒன்றாம்நூற்றாண்டு முதல் நாநூறு வருடக் காலம் சமணப் பல்கலைகழகமாக இருந்துள்ளது. அங்கே இருக்கும் பிராமி மொழி கல்வெட்டு அந்தப் பல்கலைகழகத்துக்கு குறத்தியறையார் என்ற அரசி அளித்த கொடைகளை விவரிக்கிறது. அங்கே முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மூவாயிரம் மாணவர்களும் கற்றிருக்கிறார்கள்.

அதேபோல இரணியல் அருகே உள்ள பார்த்திபசேகரபுரம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஐந்து நூற்றாண்டுக்காலம் முக்கியமாந வைதீகப் பல்கலை கழகமாக இருந்தது.  அந்த பல்கலைகழகம் அழிந்தபின்னரும் பலநூறு வருடங்கள் அதன் செல்வாக்கு நீடித்தது. மகாகவி பாரவி எழுதிய நாடகங்களில் இன்று எஞ்சியிருக்கும் முத்ரா ராட்சஸம் மாளவிகாக்கினிமித்ரம் ஆகிய இரு நாடகங்களும் இங்கேதான் கண்டடையப்பட்டன.

 

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் சிறப்பான பல்கலைகழகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பல்கலைகள் தொழில்நுட்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவை. அவற்றின் பெயர்களை நாம் அறிஞர்களுடன் இணைத்து கேள்விப்பட்டிருப்போம்.  அமெரிக்கப் பல்கலை வளாகங்களைப் பார்க்கும் ஆவல் எனக்கு இருந்தது. ஒரு கல்விச்சாலைக்குள் இருக்கும் மனநிலையை உணர்வதே முக்கியமான நோக்கம்.
ஜூலை பதினாறாம் தேதி காலை பாஸ்டன் பாலா என்னைக்கொண்டு சென்று பாஸ்டன் நகர் மையத்தில் விட்டார். அங்கே எம்.ஐ.டி மாணவரான மாதவன் காத்திருந்தார். அவர் என்னை பேருந்தில் ஹார்வார்ட் பல்கலைக்கு அழைத்துச் சென்றார். எம்.ஐ.டி – ஹார்வார்ட் என பொதுவாக அழைக்கப்படும் பல்கலைக்கழகப் பிராந்தியம் பாஸ்டன் நகருக்கு அருகே உள்ளது. — நதியின் கரையில் இருக்கும் இப்பகுதி கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது. மாசாசுசெட்ஸ் மாநிலம் முன்பு நியூ இங்கிலாந்து என்றழைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பெரும்பாலான ஊர்களுக்கு  இங்கிலாந்தின் ஊப்பெயர்கள் உள்ளன. 

1635 முதல் பியூரிட்டன் கிறித்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாஸ்டன் லத்தீன் பள்ளி முதலே பாஸ்டன் ஒரு முக்கியமான கல்விநகரமாக அறியப்படுகிறது. கேம்ப்ரிட்ஜ் என்று அழைக்கப்பட்ட பகுதியில் 1637ல் ஹார்வார்ட் பல்கலை நிறுவப்பட்டது. கிட்டத்தட்ட 117 கல்விநிறுவனங்கள் இங்கே உள்ளன என்று சொன்னார்கள். மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆ·ப் டெக்னாலஜி உலகப்புகழ்பெற்றது. ட·ப்ட்ஸ் பல்கலை, மெட்போர்ட் பல்கலை , பாஸ்டன் பல்கலை, பாஸ்டன் கல்லூரி என்று எங்கு நோக்கினாலும் கல்விச்சாலைகளுக்கான அறிவிப்புகள் தென்பட்டன

எம் ஐ டி 1865 ல் நிலவியலாளரான வில்லியம் பார்ட்டன் ரோஜர்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. அவரே அதன் முதல்  தலைவராகவும் இருந்தார். இந்தக் கல்லூரி தொழில்கல்விக்காகவே உருவாக்கப்பட்டது. பின்னர் அனைத்து தொழில்நுட்பங்களுக்கான கல்லூரியாக மாறியது. இப்போது நிர்வாகவியல் கணிப்பொறியியல் இயற்பியல் பொறியியல் போன்ற கல்விகளுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாதவன் அங்கே நிர்வாகவியல் படிக்கிறார்.

ஒரு பல்கலைகழகத்தை பார்ப்பதென்பது அதற்குள் உலவுவதனால் சாத்தியமில்லைதான். அதன் பல்வேறு துறைகளை பார்க்கவேண்டும். அங்குள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்திக்க வேண்டும். அவை என் திட்டத்தில் இல்லை. அவற்றுக்கான ஏற்பாடுகளுடன் வரவும் இல்லை. என் நோக்கம் முதல்கட்ட மனப்பதிவுகளை உருவாக்கிக் கொள்வது மட்டுமே.

அகன்ற புல்வெளிகள்தான் இப்பல்கலைச் சூழலின் அழகு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இத்தகைய புல்வெளிகளை ஒருபோதும் இந்தியாவில் உருவாக்க இயலாது — உருவாக்கவும் கூடாது. ஒரு மாபெரும் காடு அளவுக்கே நீரைக் குடிப்பவை பசும்புல்வெளிகள். இளவெயிலில் பசும் சுடர் எழுந்த புல்வெளிகள் வழியாக மாணவர்களை பார்த்துக்கொண்டு நடப்பது அரிய அனுபவமாக இருந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மாணவர்கள். ஜப்பானியர், சீனர், இந்தியர், வெள்ளையர். கறுப்பர்கள் மிகமிக அபூர்வமாகவே கண்ணுக்குப் பட்டார்கள்.

மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக உற்சாகமாகப் பேசியபடியே சென்றார்கள். உருளைப்பலகைகளில் ஏறிக்கொண்டு பறப்பது போல தாண்டிச்சென்றார்கள். ஜப்பானியர்களில் கண்ணாடி போடாதவர்கள் மிகமிகக் குறைவாகவே இருந்தார்கள். பார்ட்டன் ரோஜர்ஸின் சிலை ஒன்று புல்வெளி நடுவே இருந்தது. அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

பல்வேறு ஐரோப்பிய பல்கலைகளின் கட்டிடங்களின் பாணியில் உருவாக்கப்பட்ட ஓங்கிய கட்டிடங்கள் வழியாக நடந்தேன். வழவழப்பான குளிர்ந்த பெரிய தூண்கள். நமது பிம்பம் கூடவே வரும் நீண்ட  வராந்தாக்கள்.  பிரம்மாண்டமான மையக்கட்டிடம் முன்னால் புல்வெளியில் நின்றபோது ஒரு கட்டிடம் அதன் முழு அழகுடன் விளங்குவது அது ஒரு கல்விச்சாலைக் கட்டிடமாகவோ ஆலயமாகவோ விளங்கும்போது மட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஏன் என்றால் இளம் வயதில் ஒரு வாசகனாக நாம் கல்விச்சாலை முன் வந்து நிற்கிறோம். கல்விச்சாலை நம் எதிர்காலமாக, நம் கனவுகளின் களமாக கண்முன் தெரிகிறது. அங்கே ஓர் ஓங்கிய கட்டிடம் இருப்பதென்பது ஒரு பெரும் வாக்குறுதி. பெரும் கட்டிடங்கள் உண்மையில் கருத்துக்களின், அல்லது உள்ளப்பிம்பங்களின் தூல வடிவம். அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் தெரிவிப்பதாகவே பெரும்பாலான கட்டிடங்கள் உள்ளன. ஆலயங்களாகவோ கல்விச்சாலையாகவோ கட்டிடங்கள் தெரியும்போது அவை நம்பிக்கையையும் கனவையும் விதைப்பவையாக உள்ளன.

கல்விச்சாலையில் உள்ள கட்டிடம் கல்வி என்ற அமைப்பின் பாரம்பரியத்தின் குறியீடாக ஆகிறது. சென்னைப் பல்கலை முன் நிற்கும்போதெல்லாம் நான் அங்கே கற்று புகழ்பெற்ற மனிதர்களின் வரிசையை, அங்கிருந்து வெளியான நூல்களை நினைப்பதுண்டு. அறுபடாமல் நீளும் ஒரு கல்விப்பாரம்பரியமே கல்லாலும் சிமிண்டாலும் எழுந்து நம் கண்முன் நிற்கிறது அங்கே.

ஒரு மாணவர் கல்விகற்று வெளியே செல்லும்போது அவர் மனதில் கல்விச்சாலை வாழ்க்கை சுருங்கிச் சுருங்கி  அக்கட்டிடத்தின் தோற்றமாக படிமம் ஆகிவிடுகிறது. நாம் பெரும்பாலும் நமது உத்வேகமான கல்விநாட்களின் நினைவாக அக்கல்விச்சாலையின் கட்டிடத்தையே எண்ணியிருப்போம். துரதிருஷ்டவசமாக நான்  ஓங்கிய கட்டிடம் கொண்ட எந்த கல்விச்சாலையிலும் கற்கவில்லை. என் மனதில் என் கல்விப்பருவம் எந்த வகையான பிம்பத்தையும் உருவாக்கவும் இல்லை. ஆனால் சுந்தர ராமசாமி அறுபது வருடம் நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளியின் சிவந்த ஓங்கிய கட்டிடத்தை நெஞ்சில் வைத்திருந்தார். அந்த வளாகம் குறித்து அவர் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்.

எம்.ஐ.டி அலுவலக வளாகத்தில் மாதவன் ஏதோ கடன் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவதை கண்டு ”ஒரு நிமிடம் சார்” என்று சென்றுவிட நான் மட்டும் தனியாக அங்கே நின்றிருந்தேன். சுவரில் நூற்றுக்கணக்கான சிறிய அறிவிப்புகள், விளம்பரங்கள், வேண்டுகோள்கள். திபெத் மாணவர்கள் திபெத்தின் சுதந்திரத்துக்காக வெளியிட்ட அறிவிப்பு, சோமாலியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருகூட்டத்தின் அறிவிப்பு என மாணவர்களின் அரசியல். ஒரு பெண் தனக்கு குறிப்பிட்ட சில தகவல்கள் தேவை என வெளியிட்ட வேண்டுகோள். பல்வேறு சிறிய பயணங்களுக்கான அறிவிக்கைகள்.  கணப்பருகாமை உரையாடல்களுக்கான அழைப்புகள். இசைக்க்குழுக்களின் விளம்பரங்கள். ஜப்பானிய தேனீர்விருந்து ஒன்றுக்கான தகவல் அறிக்கை….மாணவர்களின் உலகம்!

கல்லூரி என்ற அனுபவமே எனக்கு இல்லை. நான் மூன்றுவருடம் கல்லூரியில் படித்தாலும் எனக்குக் கல்லூரி கொஞ்சம் கூட பிடித்தமானதாக இருக்கவில்லை. பெரும்பாலான நாட்களை நான் கல்லூரி நூலகத்திலேயே கழித்தேன். வணிகவியல் மூன்றாம் வருடம் நான் மொத்தமே நாற்பத்தேழுநாள்தான் வகுப்புக்குப் போயிருந்தேன். அதனால் தேர்வே எழுதமுடியவில்லை. ஒருவேளை நல்ல கல்லூரி ஒன்றில் படித்திருந்தால், பிடித்தமான பாடத்தை கற்றிருந்தால் வேறு எங்காவது எப்படியாவது இருந்திருப்பேனா? தெரியவில்லை.

கேம்பிரிட்ஜ் என்னும் அப்பகுதி முழுக்கவே மாணவர்களின் உலகம். அவர்களின் இல்லங்கள்.  அவர்களுக்கான கடைகள். ஒரு புகையிலைக் கடை வாசலில் நின்றிருந்தபோது அதன் காட்சிப்பகுதியை கவனித்தேன். பதினேழாம் நூற்றாண்டு முதல் புகைப்பிடிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகளையும் பல்வேறு சிகெரெட் , சுருட்டு நிறுவனங்களின் ஆரம்பகால பிராண்டுகளையும் ,  அவற்றுக்கு செய்யப்பட்ட விளம்பரங்களையும் காட்சிகளாக வைத்திருந்தார்கள்.

ஒன்றைக் கவனித்தேன், சென்ற ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை புகைப்பிடிப்பது ஆண்களின் பழக்கமாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆண்மையுடன் மட்டுமே அது சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்ல்ப்ரோ நிறுவனத்தின் விளம்பரங்களில்  ‘பசுப்பயல்கள்’ தான் எப்போதும் தோற்றம் அளித்தார்கள். எப்போது அது பெண்களுக்குரியதாக ஆனது என கவனித்தேன். ஏனென்றால் ஹார்வார்டில் நான் கவனித்தது, பெண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்பதே.

அறுபதுகளை நினைவுறுத்தும் ஒரு விளம்பரத்தில் ஒரு பெண்ணும் ஆணும் சைக்கிள்களை ஒரு புல்வெளி அருகே நிறுத்திவிட்டு நிம்மதியாக புகைபிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது. ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லைகாண்’ என்ற வகையில்தான் சிகரெட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறதென தெரிந்துகொண்டேன்.

ஹார்வார்ட் சூழலில் நான் கவனித்த இன்னொரு விஷயம் ஏராளமான வீடிலிகள். beggers என்ற சொல்லுக்கு homeless என்ற சொல்லை கையாளும்போது அவருக்கு வீடு மட்டுமே இல்லை என்ற தொனி வந்துவிடுகிறது. பிச்சை எடுப்பது குற்றமாதலால் ‘எதுவும் உதவும்’ என்ற வரியுடன் கையில் ஓர் அட்டையை பிடித்த்படி நின்றுகொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வீடிலிகள் இல்லாத இடமில்லை என்றாலும் ஏன் கல்விச்சாலையில் அதிகம் என்று மாதவனிடம் கேட்டேன். ”இங்கே மாணவர்களுக்கான மலிவான உணவு விடுதிகள் உண்டு. மதுக்கடைகள் உண்டு…” என்றார்.

அந்த தெருக்களில் எங்கும் பல்வேறு வகையான புத்தகக்கடைகள். பழைய புத்தகங்கள் இங்கே கிடைப்பதைப்போல எங்கும் கிடைக்காது என்றார். நானும் அவரும் சில கடைகளில் புகுந்து துழாவி நூல்களை வாங்கினோம். பணம் கொடுக்க வேண்டியது அவர் என்பதனால் நான் குறைவாகவே நூல்களை தெரிவு செய்தேன். இருந்தாலும் பைநிறைய நூல்கள் கனத்தன.

மாலையில் பாஸ்டன் பாலா வந்து என்னை பெற்றுக்கொண்டார். மாலை அணையும் நேரத்தில் ரயிலில் வீடு திரும்பினேன். பாஸ்டனின்  குறுங்காடுகள் இருண்டு கொண்டிருந்தன. நம்மூர் காடுகள் ஒரு பெரும் கொண்டாட்டத்துடன் அணையும். பூச்சியொலி பறவையொலி மிருக ஒலி…இங்கே காடுகள் மாபெரும் கப்பல் ஒன்று கரிய கடலில் மூழ்குவது போல இருளில் அமிழ்கின்றன, மௌனமாக.

பாஸ்டன் பாலா வீட்டில் கோ.ராஜாராம் வந்திருந்தார். கனெடிக்கட்டில் இருந்து தினமும் பாஸ்டன் வந்துசெல்வதாகச் சொன்னார். அவரை நான் 1989ல் முதலில் பார்த்தேன். பெங்களூரில். அப்போது அவர் தமிழில் அதிகமாக கவனிக்கப்பட்ட கவிஞர்– விமரிசகர்களில் ஒருவர். பாரதி நூற்றாண்டை ஒட்டி அன்னம் வெளியிட்ட அன்னம் நவகவிதை வரிசையில் அவரது அலுமினியப்பறவைகள் என்ற தொகுதி வந்து பேசப்பட்டது. வங்கியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்

அக்காலத்தில் நான் எழுதிய ஹம்பி என்ற நீள்கவிதை அடங்கிய ’12 நீள்கவிதைகள்’ என்ற நூலுக்கு அவர் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். மகாலிங்கம் ,பாவண்ணனுடன் சென்று அவரை ஓர் ஓட்டலில் சந்தித்தேன். பின்பு அமெரிக்கா வந்தார். அப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்களைப்போல தொலைந்து போகாமல் திண்ணை என்னும் இணைய இதழை நடத்தி தொடர்ந்து தமிழ் அறிவுலகுக்கு பங்களிப்பாற்றுபவராகவே இருந்து வருகிறார்.

நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு ராஜாராம் அவரது விடுதிக்கு கிளம்பிச்சென்றார். நான் மேலே என் படுக்கையறைக்குச் சென்று எடுத்து வந்த நூல்களை மேலோட்டமாகப் புரட்டிப்பார்த்தேன். அதிகமும்  தத்துவ நூல்கள். விட்கென்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு ஒன்று. பெரிய நூல். அதை பதினைந்து பக்கம் படித்துவிட்டு தூங்கினேன். மனிதர்கள் பழகி விடும்போது மண் அன்னியமல்லாமல் ஆகிவிடும் விந்தையை எண்ணிக்கொண்டேன்.

[மேலும்]

 

 

 

முந்தைய கட்டுரைஹார்வார்ட் புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்ச் சமணம்