இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்

அன்பு ஜெயமோகன்,

அண்மையில் உங்கள் தளத்தில் “பஞ்சமும் ஆய்வுகளும்” என்னும் தலைப்புடன் கூடிய பதிவுகளைப் பார்த்தேன். இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:

“வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது! கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியதுண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்துக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).

மணி வேலுப்பிள்ளை

2013-09-08

முந்தைய கட்டுரைதரிசனம்
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 12