நூறுநிலங்களின் மலை – 12

மணாலி சண்டிகர் வழியில் உண்மையில் இரவு மிகுந்த சிக்கலுக்குள்ளானோம். மணாலியில் நாங்கள் தங்கவில்லை. மணாலிச் சாலையோரம் ஓர் திபெத்திய அம்மா கூடாரம் கட்டி உணவகம் அமைத்திருந்தார்கள். அங்கே காலைச்சாப்பாடு சாப்பிட்டோம். அங்கிருந்து இரவுணவு உண்பது வரை கிட்டத்தட்ட பதினாறு மணிநேரம் தொடர்ச்சியான பயணம்.

மலையிறங்கியபின் அந்த அம்மணியை நினைத்துக்கொண்டோம். அபாரமான சுறுசுறுப்பு. சமையல் பரிமாறுதல் கணக்குச் சொல்லுதல் எல்லாமே அவர்கள்தான். பாடிக்கொண்டே இருந்தார்கள். எங்கள் ஊர் கன்யாகுமரி என்று கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். டெல்லிக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற நிறைவு. கல்லைப்பிடித்துப்போட்டு மேஜையும் இருக்கைகளும் செய்யப்பட்டு மேலே கூடாரம் வேயப்பட்ட கடை. இருக்கையிலேயே படுக்கவும் செய்யலாம். சோளச்சப்பாத்தி, மாகி உணவு கிடைக்கும்.

குளிர்காலத்தில், அம்மணி சம்பாதித்த பணத்துடன் லடாக்கின் உள்கிராமத்துக்கு சென்றுவிடுவார்களாம். அங்கே மற்ற உயிர்களைப்போல அவரும் பனித்துயிலில் ஈடுபடவேண்டியதுதான். அதற்கு புத்தர் நாமங்களை ஜெபிப்பது என்று பெயர்.

பகலெல்லாம் இறங்கி மணாலி வந்து அதை புயல்போலத் தாண்டிச்சென்றோம். இமாச்சலப்பகுதி கேரளத்தை நினைவூட்டியது. இருபக்கமும் அடர்ந்த ஈரப்பசுமை. மழையை மட்டுமே கவனித்து கட்டப்பட்ட வீடுகள். மரத்தாலான ஒற்றை பால்கனி கொண்ட வீடுகள்தான் இமாச்சலின் பழையபாணி கட்டிடங்கள் என்று தெரிந்தது. பழைய பேருந்துகள் உறுமியபடி ஓடிக்கொண்டிருந்தன. கல்லூரிக்கும் டியூஷனுக்கும் கம்ப்யூட்டர் படிக்கவும், இளம்பெண்களும் பையன்களும் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். கேரளமேதான்.

சட்லெஜ் பியாஸ் இரு ஆறுகளும் மணாலி வழியாக குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. சாலையின் ஒரு பக்கம் பெருநீர்க்கொந்தளிப்புடன் கலங்கி ஓடிக்கொண்டிருந்தது பியாஸ் நதி. ரோடாங் கணவாய் அருகே உள்ள பியாஸ்குண்ட் என்ற சிறிய ஏரியில் உருவாகும் பியாஸ் நதியின் நூற்றுக்கணக்கான கிளைகளைத்தான் சாலையில் தாண்டி வந்திருந்தோம். பியாஸ் அங்கிருந்து பஞ்சாபுக்குள் சென்று பஞ்சாபின் ஐந்து பெரும் நதிகளில் ஒன்றாகி பஞ்சாபின் வண்டல்பெருவெளியை சமைக்கிறது.

சாலையோரத்தில் பியாஸ் மிகமிக ஆழத்தில் ஓடுகிறது. நதிக்கு மறுபக்கம் ஓங்கிய மலைகள். மலைகள் முழுக்க வீடுகள், தோட்டங்கள். கிராமங்களே கூட வானில் தொங்குவதுபோலத் தெரிந்தன. அங்கிருந்து மையச்சாலையான தேசிய நெடுஞ்சாலை 21-க்கு வர ஊர்மக்களே கயிற்றுவண்டி வழியை உருவாக்கியிருந்தார்கள். பெரிய இரும்புக்கயிற்றில் தொட்டி போல கட்டி அதில் சரக்குகளை ஏற்றி இந்தப்பக்கம் இருந்து இழுத்து எடுத்துக்கொள்கிறார்கள். ஆட்களும் ஒருவர் இருவராக அதில் வரமுடியும்.

சாலையோரமாக இருந்த மாபெரும் சிவன்கோயில் புதியதாகக் கட்டப்பட்டது. காளி சிலையும் நந்தி சிலையும் கான்கிரீட்டில் அபத்தமாக வார்க்கப்பட்டு சாலையருகே நின்றன. கோயிலுக்குப் பின்பக்கம் ஒரு தொங்குபாலம் மறுபக்கமுள்ள மலைக்கிராமம் நோக்கிச் சென்றது. அந்த இடத்தில் பியாஸின் அகலம் மிகமிகக்குறைவு.

நாங்கள் ஒருவழியாக மலையடிவாரத்தை அடையும்போது அந்தியாகிவிட்டது. எங்காவது தங்கலாமென்று நினைத்தால் வெறும் காடுதான் இருந்தது. அருகே எந்த ஊரில் தங்குமிடமிருக்கிறது என்று தெரியவில்லை. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. நல்லவேளையாக மலைப்பாதை அல்ல. இருந்தாலும் ஓட்டுநர் களைத்திருந்தார்.

காட்டுப்பாதையில் ஒருவர் கைகாட்டினார். அங்கே பழுதாகி நின்ற டிரக்கின் ஓட்டுநர். அவரை ஏற்றிக்கொண்டோம். அதன் டீசல் பைப் உடைந்துவிட்டது என்றார். அசோக் என்று பெயர் சொன்னார். அவர் செல்லவேண்டிய இடம் புல்லு. அதற்கு அப்பால் விடுதிகள் உண்டு என்றார். அவரை இறக்கிவிட்டுவிட்டு மேலும் இருபது கிமீ சென்றபிறகும் விடுதி அமையவில்லை.

ஒருவழியாக இரவு பத்துமணிக்கு ஒரு விடுதியை அமர்த்திக்கொண்டோம். எந்த ஊரென்பதே நினைவில் இல்லை. நாங்கள் மறுநாள் மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் டெல்லி விமானநிலையத்தில் இருந்தாகவேண்டும். ஆகவே அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்புவதென்று முடிவெடுத்தோம். படுத்து இளைப்பாற முடியவில்லை. காலையில் உச்சிமலை மாலையில் அடிவாரம் என்பதை உடல் அங்கீகரிக்க மறுத்தது.

கண்மூடித் தூங்க முற்பட்டால் பிம்பங்களின் கொந்தளிப்பு. மொட்டைமலைகளும் பனிப்பாலைகளும் அதற்குள் கனவுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பச்சைமலைச்சரிவுகள்தான் யதார்த்தமாக இருந்தன. மெல்ல தூங்கிவந்ததாகத்தான் தோன்றியது. கிருஷ்ணன் வந்து கதவைத்தட்டினார். ‘சார் மணி மூணரை…’

அதிகாலையில் தூக்கத்திலேயே சண்டிகரை தாண்டிச்சென்றோம். உக்கிரமான ரசாயன வாடை சண்டிகரின் தொழில்வளர்ச்சியை எங்களுக்கு உணர்த்தாமலில்லை. அதன்பின் பெருமழை வீற ஆரம்பித்தது. நடனமிடும் துடைப்பானின் வழியாக சாலையே ஒரு பெரிய ஆறுபோலத் தெரிந்தது. அதில் நீந்தும் மனிதக்கால்கள். கார் துடுப்புத்துழாவலில் நகர்வதுபோல முன்னால் சென்றது.

ஒரே வீச்சில் இமாச்சலப் பிரதேசத்தைத் தாண்டி பதினோரு மணிக்கெல்லாம் டெல்லி சுற்றுப்புறத்தை அடைந்தோம். டெல்லி விமானநிலையத்தை தேடிக்கண்டுபிடித்துச்செல்ல மேலும் ஒரு மணிநேரம். விமானநிலையத்திற்குள் பன்னிரண்டு மணிக்கு நுழைந்தோம். கெ.எஃப்.சி சென்று சைவ பர்கரும் கோக்கும் சாப்பிட்டோம்.

அன்று மாலை ஐந்துமணிக்கு கோவை. விமானநிலையத்துக்கு ஷிமோகா ரவியும் அரங்கசாமியும் வந்திருந்தார்கள். கோவையின் இதமான வெப்பநிலையைக்கூட மெல்லிய வெக்கையாக உணரும்படி உடல் மாறிவிட்டிருந்தது. வெளியே இறங்கி நின்றபோது பத்துநாட்கள் நீண்ட ஒரு பெரும் கனவிலிருந்து விழித்ததாகத் தோன்றியது.

[முற்றும்]

புகைப்படங்கள் அஜிதன்

முந்தைய கட்டுரைஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்
அடுத்த கட்டுரைலடாக்கின் தமிழ் முகங்கள்