தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட வேதாந்தம் என்ற சொல் பெரும்பாலான சாதாரணக் காதுகளுக்கு எதிர்மறையாகவே ஒலிப்பதைக் கவனித்திருக்கிரேன். அதற்குக் காரணம் ‘வரட்டுவேதாந்தம்’ என்ற சொல்லாட்சி. வேதாந்தியான நாராயணகுருவின் மாணவரும் வேதாந்தியுமான குமாரன் ஆசான் கூட வரட்டு வேதாந்தம் என்ற சொல்லாட்சியை கையாண்டிருக்கிறார். நடைமுறைக்குப் பயன்படாத உயர்தத்துவங்களை தர்க்கபூர்வமாக பேசுவது என்று இச்சொல்லுக்குப் பொருள்.
இந்தச் சொல்லாட்சி எப்போது உருவாகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். இந்திய தேசம் அதன் அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறி கஞ்சிக்குப் பறந்த ஒரு நீண்ட காலகட்டம் உண்டு. அன்று, பட்டினியால் பரிதவித்தலைந்த மக்களுக்கு இந்திய ஞானமரபின் தத்துவ உச்சங்கள் எப்படி பொருள்பட்டிருக்கும்? வரட்டு வேதாந்தம் என்பதில் உள்ள கசப்பு அப்போது உருவானதாகவே இருக்க வேண்டும்.
வேதாந்தம் நம் ஞான மரபில் ஆழமாக வேரூன்றியதாகையால் அது அத்தனை எளிதாக நம் சூழலில் இருந்து சென்றிருக்காது. பட்டினி கிடந்தும் வேதாந்தம் பேசியவர்கள் கண்டிப்பாக இருந்திருப்பார்கள். அவர்கள் இந்த வசைச்சொல்லால் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டு மறைந்திருப்பார்கள். இன்று வேதாந்தம் என்றால் என்ன என்ற எளிய அறிமுகம் உடைய மதப்பேச்சாளர்களை அல்லது மதச்சிந்தனையாளர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். வேதாந்தமே இந்து ஞானமரபின் உச்சம் என்ற போதிலும்கூட !
இன்று தென்னிந்தியாவில் அத்வைத வேதாந்தத்துக்கு என்று இரு பெரும் மடங்கள் உள்ளன. சிருங்கேரி சங்கர மடம் சங்கரரால் நிறுவபப்ட்டதென்று சொல்லப்படுகிறது. காஞ்சி சங்கர மடம் சிருங்கேரியின் கிளையாக உருவானது. வைஷ்ணவ வேதாந்தம் பேசும் இரு பெரும் மரபுகள் உள்ளன. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ராமானுஜ மடங்கள். கர்நாடகத்தில் மாத்வ மடங்கள்.
ஆனால் நானறிந்து எங்குமே வேதாந்தம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை. நம்முடைய பிரபலமான சைவ, வைணவ ஆசாரியர்களையும் பேச்சாளர்களையும் பார்க்கையில் அவர்கள் பக்தியை மட்டுமே பேசுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்கிறேன். மாபெரும் வேதாந்த நூலான கீதையைக்கூட சரணாகதியை மட்டுமே முன்வைக்கும் எளிய பக்திநூலாக விளக்கும் போக்குதான் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது.
வரட்டு வேதாந்தம் என்ற சொல்லால் இந்து ஞான மரபின் அறிவார்ந்த பகுதி ஒதுக்கப்பட்டபின்னர் எஞ்சியது இந்த லௌகீக பக்தி மட்டுமே. இன்று பேசப்படும் பக்தியின் கீழ்நிலை என்பது சடங்குகள் வழிபாடுகள் மூலம் கடவுளிடம் கோரிக்கை விடுப்பது. உச்சநிலை என்பது லௌகீகமான அனைத்தையும் உதறிவிட்டு கடவுளைச் சரண் அடைவது. இந்த இரு எல்லைக்குள் இன்று இந்து ஞானமரபு முழுமையாகவே நிறுத்தப்படுகிறது.
ஆனால் பக்தி என்பதேகூட இந்து மரபில் ஒரு முதல்படி மட்டுமே. பக்திக்கும் அப்பால் செல்லும் ஞான வழியையும் தியான வழியையும்தான் இந்து மரபு விரிவாகப்பேசியிருக்கிறது. வேதங்களையே கர்மகாண்டம் ஞான காண்டம் எனப்பிரித்து ஞானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மேலே சென்றது இந்து மரபு. வேதங்களின் இறுதியே வேதாந்தம்.
வேதாந்தம் இந்து சிந்தனையின் உச்சம். வேத அந்தம் என்ற சொல்லாட்சியே அதைத்தான் குறிக்கிறது. இந்து மெய்ஞானமரபின் தத்துவார்தமான சாரமாகச் சொல்லப்படும் முத்தத்துவம் [பிரஸ்தானத் திரயம்] வேதாந்தத்தை விவாதிக்கும் நூல்களே. கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம். வேதாந்தம்தான் பௌத்த சிந்தனைகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்ற மூல விசை. அத்வைதம் விசிஷ்டாத்வைதம் துவைதம் போன்ற பிற்கால வேதாந்த மரபுகளே இந்து மரபை மீட்டெடுத்த சக்திகள்.
இந்துமரபில் பக்திக்கும் ஞானத்துக்கும், சடங்குகளுக்கும் தத்துவத்துக்கும் இடையேயான முரணியக்கம் என்றும் உள்ளது. ஒன்று இன்னொன்றுக்கு எதிரானது என்று முதல் தோற்றத்தில் படும். ஒன்று இன்னொன்றை உருவாக்கும் முரணியக்கமே நடந்துகொண்டிருக்கிறதென்பது ஓரளவு அவதானித்தாலே தெரியவரும்.
கிபி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் பக்தி இயக்கம் உருவாக ஆரம்பித்தது. பௌத்த சமண மதங்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்துமரபு வெளிவந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த காலம் இது. பக்தி இயக்கமே அந்த மாற்றத்தை நிகழ்த்தியது. ஆனால் கூடவே இக்காலகட்டத்தில் உருவான பிற்கால வேதாந்த மரபுகளும் அதில் பங்களிப்பாற்றின. வேதாந்தமானது பௌத்த மெய்யியலை உள்ளிழுத்துக்கொண்டு அடைந்த அடுத்த கட்ட நகர்வு என பிற்கால வேதாந்தங்களைச் சொல்லலாம்.
ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஒருபக்கம் இந்தியாவில் உள்ள பலநூறு நாட்டார்வழிபாட்டு மரபுகளையும் சடங்குகளையும் ஏன் சிறுதெய்வங்களையும் உள்ளிழுந்த்துக்கொண்டு சைவ வைணவ மதங்கள் பேருவம் கொண்டெழுந்தன. பக்திமுறை அம்மதங்களை நிறுவும் அடித்தளமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் ஏராளமான பிற்கால வேதாந்தமரபுகளும் உருவாகி உயர்தத்துவதளத்தில் பௌத்தத்தை எதிர்கொண்டன.
கறாராக நோக்கினால் இந்த இரு போக்குகளும் ஒன்றை ஒன்று மறுப்பவை. ஒரு வேதாந்தியால் பக்தியை ஏற்க முடியாது. ஒரு பக்தனுக்கு அகம்பிரம்மாஸ்மி என்ற வரி இறைநிந்தனை அன்றி வேறல்ல. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு அபாரமான முரணியக்கத்தால் இவ்விரு போக்குகளும் ஒன்றை ஒன்று வலுவூட்டும் விதமாகவே செயல்பட்டன.
சைவ வைணவ மதங்களை நோக்கினால் இந்த அற்புதமான முரணியக்கத்தைக் காணலாம். அம்மதங்களின் ஒருநுனியில் பக்தி இயங்கிக்கொண்டிருக்கும். மறுநுனியில் தூய வேதாந்தம் ஒளிவிடும். பக்தி அளிக்கும் விவேகஞானம் ஒருவரை வேதாந்தம் நோக்கி கொண்டுசெல்லும். ஞானம் அளிக்கும் கனிவு ஒருவரை பக்தி நோக்கிக் கொண்டுசெல்லும்.
ஒவ்வொரு பக்தித்தோத்திரத்துக்குள்ளும் வேதாந்தமே பேசப்படும். ஒவ்வொரு வேதாந்த ஞானமும் பக்தியை ஒரு வழிமுறையாக அங்கீகரிப்பதாகவே இருக்கும். சமகாலம் வரை இந்த முரணியக்கத்தைக் காணலாம். ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு மாபெரும் பக்தர். உருவ வழிபாடு செய்தவர். வேதாந்தியும்கூட. அவரது முதல் மாணவரான விவேகான்ந்தர் தூய வேதாந்தி. ஆனால் பக்தியை ஏற்றுக்கொண்டவர்.
அதேபோலத்தான் நாராயணகுருவும். ‘அறிவில் அறிவாய் அமர்ந்திருத்தலை’ முக்தி என்று சொல்லும் நாராயணகுரு ‘ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என ஞானவழியைச் சொன்ன நாராயணகுரு சாரதா அஷ்டகமும் காளி நாடகமும் சுப்ரமணிய ஸ்துதியும் எழுதினார்.
அந்த முரணியக்கத்துக்குச் சிறந்த உதாரணம் அவரது பெரும்புகழ்பெற்ற தெய்வ தசகம் என்ற பத்து செய்யுட்கள். தன்னை வந்தடைந்த தன் மக்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப குரு எழுதிக்கொடுத்த ‘தெய்வ தசகம்’ என்ற பிரார்த்தனை ஒன்றும் பல லட்சம்பேரால் ஒவ்வொருநாளும் வீடுகளில் பாடப்படுகிறது. ‘தெய்வமே காத்துகொள்க எங்களை’ என்றாரம்பிக்கும் அந்த பிரார்த்தனை அதன் இறுதியில் ‘அறிவும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாகும்’ நிலையையே வரமெனக் கேட்கிறது. பக்தியின் நுனி வேதாந்தமாக நிற்கிறது!
பக்தி இயக்கத்தின் ஆகச்சிறந்த நூல்களில் எல்லாமே இந்த முரணியக்கத்தைக் காணலாம். வேதாந்தம் பக்தியை தன் ஒளிர்சிம்மாசனமாக ஆக்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் உள்ள இந்த கம்பராமாயணப்பாடல் என் காதில் விழுந்தது. பக்தி இயக்கத்தின் முதல் சிற்பிகளில் ஒருவரான கம்பன் எழுதும் வரி இது…
ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
[ஒன்று என்றால் ஒன்றுதான். பல என்றால் பல. அல்ல என்றால் அல்ல. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. உண்டு என்றால் உண்டு. இவற்றில் எது நலம் பயக்குமோ அதை நம்பி நம் வாழ்க்கை செல்கிறது. இதைவிட வேறென்ன வழி மானுடனுக்கு?]
எத்தனை மகத்தான பன்மைத்தரிசனம்! ‘ஒன்றே, இதுவே, பிறிதெல்லாம் பிழை’ என வாதிட்டு, அதன் விளைவாகச் செல்லுமிடமெல்லாம் பேரழிவை விதைத்த எத்தனையோ வழிகளுடன் ஒப்பிடுகையில் இந்நிலத்தின் கோடானுகோடி மக்கள், தொல்லினங்கள் மீதான வரலாற்றின் பெருங்கருணையே இந்த தரிசனமாக வந்தது என்றே படுகிறது.
பக்திநூல்களில் எல்லாம் இதே வேதாந்த தரிசனம் மீண்டும் மீண்டும் விளங்கிநிற்கிறது. ‘உருவென அருவென உளதென இலதென அருமறை இறுதியும் அறிவரு நிலையென’ [ உருவமாக அருவமாக உள்ளதாக இல்லாததாக வேத இறுதி அறிந்துரைக்கும் நிலையென] என்று திருவரங்கக் கலம்பகம் சொல்கிறது.
வேதாந்த தரிசனத்தை ஒற்றைவரியில் சொல்லப்போனால் ‘ஒன்றே அனைத்தும், அனைத்தும் அதுவே’ என கூறிவிடலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை, திட்டவட்டமான ஒரு வழிபாட்டு முறையை முன்வைக்கும் மதங்களும் வேதாந்தத்தில் சென்று முடிவதைக் காண்கிறோம். அதன் வழியாகத்தான் இந்திய ஞானமரபின் சாராம்சமான சமரசத்தன்மை, அணைத்து உள்ளிழுக்கும் தன்மை உருவாகி வருகிறது. வேதாந்தம் இந்திய பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் அளித்த கொடை அதுவே.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 13, 2009
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2
3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்