லே-மணாலி சாலை உலகிலேயே இரண்டாவது உயரமான சாலை என்று சொல்லப்படுகிறது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து இமாச்சலப்பிரதேசத்துக்குச் செல்லும் சாலை இது. தேசியநெடுஞ்சாலை 21 என இதை குறிப்பிடுகிறார்கள். சராசரியாக 13000 அடி உயரமுள்ளது இந்தச்சாலை. உச்ச உயரம் 17480 அடி. இந்த இடத்தை டாங்லாங் மலைக்கணவாய் என அழைக்கிறார்கள்.
மிகச்சிக்கலான , அபாயகரமான சாலை. கோடைகாலப்புழுதியைவிட குளிர்காலப்பனி உறுதியானது என்கிறார்கள். ஆனால் அதற்குள் இத்தகைய சாலைகளுக்கு பழகிவிட்டிருந்தோம். ஸன்ஸ்கர் சாலையில் சென்றபின் எதைப்பார்த்தாலும் இது பரவாயில்லை என்ற நிம்மதிதான் வந்தது.
இச்சாலையை நூற்றுக்கணக்கான சிறிய காட்டோடைகள் அறுத்து பள்ளத்திற்கு இறங்குகின்றன. குளிர்காலத்தில் இந்தப்பிரச்சினையும் இருக்காது போலும். இச்சாலை மோட்டார்சைக்கிளில் பயணம் செய்பவர்களின் வழக்கமான வழி. ஏராளமான வெள்ளைப்பயணிகளையும் இந்தியர்களையும் கண்டோம். சிலர் சைக்கிள்களில் கூட வந்திருந்தார்கள்.
[ சாலை விளிம்பு]
மலைப்பாதையில் இடிந்து சரிந்த இடங்களை சீர்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் பிகாரி கூலிப்பணியாளர்கள் அவ்வேலையைச் செய்கிறார்கள். குத்தகைத் தொழிலாளர்கள். பிகாரில் அவர்கள் இந்தக் குளிரையும் பனியையும் பார்த்திருக்க மாட்டார்கள். பீளைகூடிய கண்களும் வறண்ட உடல்களுமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
அருகே கட்டப்பட்ட கூடாரங்களில்தான் தங்கியிருக்கிறார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் கூட கண்ணுக்குப்பட்டனர். குடும்பம் குடும்பமாகக் கிளம்பி வந்துவிடுவார்களாக இருக்கும். எப்படி தாக்குப்பிடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இளவெயிலில் சில தொழிலாளர்கள் படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
சாலையில் சட்டென்று பனியைக் கண்டேன். சாலையோரமாக ஒரு வெண்பாறைபோல நீட்டி நின்றது. முதலில் அது பனி என்றே தெரியவில்லை. தெரிந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ஓடிச்சென்றோம். உண்மையில் தொடர்ந்து பனிமலைகளைப் பார்த்துவந்தாலும் நேரடியாக பனிமீது ஏறமுடியவில்லை. காரணம் செப்டெம்பர் என்பது லடாக்குக்கு உச்சகட்ட கோடைகாலம். சாலையோரங்களில் பனி கிடையாது. மலையிடுக்குப் பனிப்பாளங்களில் ஏற நினைப்பது தற்கொலைக்குச் சமம்.
பனிப்பாறை வெண்கல்லால் ஆனதுபோல இருந்தது. நண்பர்களுக்கு பனி அப்படி இருப்பதில் பெரிய வியப்பு. நானும் ஒருகாலத்தில் பனிப்பாறை என்றால் கண்ணாடிபோல, நம் குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே இருப்பதுபோல இருக்கும் என்றே நினைத்திருந்தேன். 1982-இல் முதல்முறையாக பனிக்கட்டியைப் பார்த்ததும் அது பனிதான் என்று நம்ப மிகவும் சிரமப்பட்டேன்.
[மலையின் பாதியில் சாலை ஓடும் தடத்தை கண்டுபிடிக்க முடிகிறதா?]
இரவெல்லாம் பொழியும் பனித்துகள்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து உருவாவது அந்தப்பாறை. பனித்திவலைகளுக்குள் காற்றும் மாட்டிக்கொள்கிறது. அது பனிப்பாளங்களுக்குள் சிறிய குமிழிகளாக ஆகி அடர்ந்திருக்கிறது. ஆகவே உறைந்த கண்ணாடிநுரைபோல பனிக்கட்டி மாறிவிடுகிறது. கையால் தொடும்போது சொரசொரப்பான மணற்பாறை என்ற எண்ணமே எழும்.
அதேபோல பனிப்பொழிவுள்ள இமயமலைப்பகுதிகளில் குவிந்துகிடக்கும் பனி பொருபொருவென்று இருக்கும். பழைய காலங்களில் கண்காட்சிகளில் பெரிய பனிக்கட்டிகளை அப்படி துருவி செந்நிறச்சாயமும் சாக்கரீனும் ஊற்றி தின்னத்தருவார்கள். காலைவைத்தால் அமுங்கி உள்ளே இழுக்கும் பனி அது. முழங்கால் உயரமான கம் பூட்டுக்குள்ளும் நுழைந்துவிடும்.
[நான் செதுக்கிய பனிபுத்தர்]
ஆனால் நீர்நிலைகள் மீது உருவாகும் பனிப்பாளம் இப்படி இருப்பதில்லை. அது கனமான கண்ணாடிப்பரப்பாகவே இருக்கும். இமயமலைப் பயணத்தில் அப்படிப்பட்ட பனிப்பாளம் மீது கால்வைத்தபோது அது உடைந்தமையால் காயம்பட்ட ஒருவரை கண்டிருக்கிறேன். பனிப்பாளத்தின் விளிம்பில் அவரது கால் வெட்டுப்பட்டுவிட்டது. ரத்தம் பெருகியது. அதற்கு இருவர் கட்டுபோட்டுக்கொண்டிருந்தார்கள். உறைநிலையைவிடத் தாழ்வாக வெப்பநிலை செல்லும்போது பனி கடுமை கொள்கிறது.
பனிக்கட்டி மீது தொற்றி ஏறிக்கொண்டோம். ஒரு கல்லை எடுத்து பனியைச் செதுக்கி ஒரு புடைப்புச்சிற்பம் செய்ய முயன்றேன். ஒரு புத்தரின் முகம். பனி சிதறல்களாகவே உடைந்தது. புத்தர் முகம் எனக்கு மட்டும்தான் தெளிவாகத் தெரிந்தது. மூக்கை உருவாக்கவே முடியவில்லை. சரிதான், லடாக்கில் மூக்குக்கு என்ன முக்கியத்துவம் என நினைத்துக்கொண்டேன்.
அப்போதுதான் மேலே பாறையில் இருந்து பனி விழுதுகள் தொங்குவதைக் கண்டோம். கண்ணாடிக்குழாய்கள் போல. மலைஊற்று துளித்து உறைந்த கூம்புகள். நான் பற்றி ஏறி ஒன்றை உடைத்தேன். கையில் உடை வாள் போல ஏந்திக்கொண்டேன். ஒளிவிடும் வாள்!
அஜிதனும் ஒரு உடைவாளை எடுத்துக்கொண்டான். நான் ஒரு கட்டாரியை எடுத்துக்கொண்டு காருக்குச் சென்றேன். தேவதேவன் இரண்டு பனிக்குறுவாட்களை எடுத்துக்கொண்டார். அப்பகுதியின் குளிரில் சிரிப்பு எங்கள் மூச்சுக்குள் பனிக்கட்டிகளைச் செருகியது. பனிக்கட்டிகளை கார் வரை கொண்டுசெல்வதற்குள் கைகள் உறைந்து உணர்விழந்தன.
காருக்குள் ஏறியபின்னரும் தேவதேவன் பனிக்கட்டிகளை கையிலேயே வைத்திருந்தார். ‘வெளியே போடுங்க சார். உள்ள தண்ணியாகுதுல்ல’ என்றார் கிருஷ்ணன். ‘ஆமா இல்ல?’ என்று வியந்தார் தேவதேவன்.
இச்சாலையின் உச்சி என்பது ரோடாங் கணவாய். [Rohtang Pass] வழக்கம்போல மூச்சுத்திணறச்செய்யும் உச்சி. அருகே பனிபடர்ந்த மலைகளின் கண்கூசும் வெண்ணிற ஒளி. ரோடாங் கணவாயில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று பார்த்தோம். சுற்றிலும் மௌனமலைகள். வானம் ஒளியுடன் கவிந்திருந்தது. மேகமே இல்லாத தூயநீலப்பரப்பு.
பனிக்காலத்தில் இக்கணவாய் முழுமையாகவே பனிப்பாளங்களால் மூடப்பட்டுவிடும். அக்டோபர் வரைக்கும்தான் இது பயணத்துக்கு உதவுமாம். மூச்சுத்திணறல் இருந்தது. ஒரு டீக்கடை இருந்தது. அங்கே காஷ்மீரி கஹ்வா கிடைத்தது. அது மூச்சுத்திணறலுக்கு மருந்து என்பது ஒரு தொன்மமாக இருப்பதனால் உண்மையிலேயே மூச்சுத்திணறல் குறைந்தது.
இளவெயிலில் சில மலையாளப் பையன்கள் அவர்கள் ஓட்டிவந்த பைக்குகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மாறி மாறி பைக்குகள் மீது சாய்ந்து நின்றுகொண்டு போஸ் கொடுத்தனர். அவர்களின் வாழ்க்கையில் அது ஒரு முக்கியமான தருணமாக இருக்கலாம்.
ரோடாங் கணவாய்க்கு கீழே இமயமலை குலு சமவெளியை நோக்கி இறங்குகிறது என்பது மரபு. ஆனால் குலுசமவெளி மேலும் வெகுதூரத்தில் இருந்தது. ஒரு முழுப்பகலும் பயணம்செய்து சென்று சேரவேண்டிய தூரம். அங்கிருந்து பார்க்கையில் காலடியில் அலையலையாகக் கிடந்த மலைகளைத்தான் காணமுடிந்தது. அத்தனை மலைகளையும் இறங்கவேண்டும்.
சுழன்று சுழன்று இறங்குவது என்பது காற்றில் ஓர் இறகு இறங்குவது போன்றதுதான். அல்லது செம்பருந்து இறங்குவதுபோல. இந்தமலையில் இருந்து காரில், மோட்டாரில், கிளைடரில் இறங்கிச்செல்லலாம். எதில் சென்றாலும் கற்பனையில் ஏறிக்கொள்ளாவிட்டால் இதை கண்டறிய முடியாது.
ரோடாங் கணவாயிலிருந்து குலு நோக்கி இறங்க ஆரம்பித்தோம். மணல்மேடுகள் போலவே தோற்றம் அளித்த பாறைகள் வந்தன. காற்று வழிந்தோடிய தடங்களைச் சுமந்தவை. விதவிதமான சிற்ப வடிவங்களாக மாறிக்கொண்டிருந்தன அவை. நீள்வரிகள், குகைகள், வாசல்கள், தூபிகள், ஊசிக்கோபுரங்கள், மணல்தூண்கள். அவற்றின் விசித்திரங்களுக்கு அளவேயில்லை.
ஆச்சரியம்தான். வந்திறங்கிய நாள் முதல் பார்த்துக்கொண்டே இருந்தபோதும்கூட இமயத்தின் மலைவடிவங்கள் ஒவ்வொரு கணமும் வியப்பிலாழ்த்தும் ஒரு புதுமையை முன்வைத்துக்கொண்டேதான் இருந்தன. ஒரு குகைவழி தோரணவாயில் போலவே இருந்தது. மலையின் கட்டை விரல் தூக்கி நிற்பதுபோல ஒரு பாறைக்குடைவு!
சாலையோரம் ஒரு பெரிய ஆற்றுப்படுகை தெரிய ஆரம்பித்தது. அது சந்த்ரா ஆறு. அந்தப்படுகைக்கு லாஹௌ படுகை என்று பெயர். காற்று மலையை அரித்து மணலாக்கி கொட்டிவைத்த மேடுகளை நீரோட்டம் அரித்து முந்நூறடி ஆழத்தில் வளைந்தோடியது. இருபக்கமும் மணற்கரை நீரோடிய வரலாற்றை பதிவுசெய்து வைத்துக்கொண்டு நின்றது.
அமெரிக்காவின் கிராண்ட் கான்யனின் சிறிய பதிப்பு. அதேபோல ஆறு வழித்தோடிய விளிம்பு நிலம். அதேபோன்ற செம்மண் சிலைகளாலான படுகை. அதில் வெயில் உருவாக்கும் ஒளிநிழல் கோலங்கள். இறங்கி கரையோரம் நின்றோம். எங்கோ ஒரு கணத்தில் வடிவம் என நாம் நினைப்பதை நோக்கி இந்த அவடிவங்களை இழுப்பதை நாம் விட்டு விடுகிறோம். நம் உள்ளமும் இத்தகைய மானுட அர்த்தத்துக்கு அப்பாற்பட்ட வடிவங்களாக ஆகிவிடுகிறது.
விதவிதமான பொருட்கள் மீது மணலால் ஆன போர்வையைப்போட்டு மூடியதுபோல என்று தோன்றியது. டிவி, குடம், மேஜை, நாற்காலிகள்….இதென்ன குழந்தைத்தனமான கற்பனை என்ற எண்ணம் மறு கணம் வந்தது. மீண்டும் மனம் வடிவங்களுக்காக ஏங்குகிறது. தியானத்தில் எல்லையின்மையை உதறி இகவுலகத்துக்கு பிடிவாதமாகத் திரும்பும் பிரக்ஞையைப்போல.
மணல் வழியின் ஆழத்தில் நீல ரேகை போல வளைந்து ஒளிவிட்டுக்கிடந்தது ஆறு. மரகதத்தால் ஆன ஒரு நெக்லஸ் என்று தோன்றியது. மதியவெயிலில் அதன் பச்சை இன்னும் ஆழ்ந்த வண்ணம் கொண்டிருந்தது.
மணாலி சாலையின் அற்புதம் என்பது இமயம் மெல்ல மாறுபட ஆரம்பிப்பதுதான். காஷ்மீரில் இருந்து நாங்கள் இமயத்தின் ஆழத்துக்குள் வந்திருந்தோம். மழைப்பசுமை உள்ள மலைச்சரிவுகளில் இருந்து மழைமறைவுப்பகுதியான உச்சிநிலம் நோக்கி. அந்தப்பயணம் நுப்ரா பாலைவனம் வரைக்கும் சென்றது. மேலும் சற்று சென்றிருந்தால் கோபி பாலைவனம்தான். நுப்ரா கோபி பாலையின் முந்தானை நுனி.
இப்போது மீண்டும் மலையின் வெளிவிளிம்பு நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தோம். பாலையில் இருந்து பசுமை நோக்கி. நிலம் நீர்க்களை கொண்டபடியே வந்தது. பச்சைப்புதர்ச்செடிகள் செறிந்த மலைச்சரிவுகள். மலைமடிப்புகளில் சிறிய காடுகள் பச்சைநீரோடை போல வழிந்து நின்றன. சில இடங்களில் மேற்குமலைத்தொடர்களில் எங்கோ பயணம்செய்யும் பிரமை ஏற்பட்டது.
மலைச்சரிவில் ஒரு ஓநாயைக் கண்டோம். மேலே இருந்து நம்பமுடியாத வேகத்தில் பாய்ந்து சரிவிறங்கி மறைந்தது. அஜிதன் காமிராவை எடுப்பதற்குள் அதன் வாலசைவு புதருக்குள் அமிழ்ந்துவிட்டது.
ஆனால் ஏமாற்றம் விரைவிலேயே மறைந்தது. மிக அபூர்வமானவை என்று அவன் சொன்ன பறவைகள் இரண்டை உடனடியாகக் கண்டோம். இமாலயச் செம்பருந்து [Golden Eagle] பூமியின் வடக்குப்பகுதியில் வாழக்கூடியது. இமாலயத்துக்கு கீழே அது இல்லை. மிக உயரத்தில் பறக்கக்கூடிய அந்தப்பறவையை நாங்கள் எங்களுக்கு மிக கீழே கண்டோம். நீரில் சுழலும் மீன்போல காற்றில் வட்டமிட்ட அதன் முதுகை பார்க்கமுடிந்தது.
இன்னும் சற்று நேரத்தில் இன்னும் பெரிய ஒரு பறவையைக் கண்டோம். தாடிப்பருந்து என்று சொல்லப்படும் லாம்மாகீர் [Lammergeier]. மிக உயரத்தில் பறக்கும் அந்தப்பறவை, பிற பறவைகள் மற்றும் மிருகங்கள் உண்டு மிச்சமிட்ட எலும்புகளைப் பொறுக்கிக்கொண்டு மிக உயரத்துக்குச் சென்று பாறைகள் மீது போடும். அவை உடைந்ததும் பொறுக்கி உள்ளே உள்ள மஜ்ஜையை உண்ணும்.
இதை நான் நேஷனல் ஜியாக்ரஃபிக் சானலின் நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். இந்தியாவில் வேறெங்கும் இந்தப்பறவை இல்லை. மிக அபூர்வமான இப்பறவையை குலு சமவெளிக்குமேல் சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் மிக அருகே காணமுடிந்தது.
‘செம்பருந்து செத்த மிருகங்களோட உடம்ப சாப்பிடணும். இந்த வெட்டவெளியிலே மிருகங்களே கம்மி.அது ரொம்பதூரம் பறக்கணும். செம்பருந்து தின்னுட்டு விட்டுட்டுப்போன எலும்ப லாம்மாகீர் சாப்பிடணும். அதனால அது இன்னும் பத்துமடங்கு பறக்கணும்’ என்றான் அஜிதன். லாம்மாகீர் இமயமலையின் சர்வேயர் போல என்று நினைத்துக்கொண்டேன்.
மலையிறங்க இறங்க ஆச்சரியங்கள். சாலையைக் கடந்துசென்ற ஒரு சிறிய வளைகொம்பு மான்கூட்டத்தைக் கண்டோம். ஹிமாலயன் ஐபெக்ஸ் [Ibex] என அழைக்கப்படும் இந்தச் சிறிய மான் மிக வெட்கம் கொண்டது. அதிகம் தென்படாது என்றார்கள். ஆனால் சர்வசாதாரணமாக எங்கள் வழியை தாண்டிச்சென்றன. கடந்துசென்ற ஒரு லாரியையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
சட்டென்று இரு மான்கள் துள்ளி கொம்புகளால் முட்டிக்கொண்டன. அவற்றை படமெடுத்துக்கொண்டிருந்த அஜிதனால் கச்சிதமாக அந்தச் சிறு சண்டையை பதிவுசெய்ய முடிந்தது. அவனுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. ‘இனிமே ஒரு ஸ்நோ டைகர மட்டும் பாத்துட்டா போரும் அப்பா’ என்றான். பேராசைக்கு அளவே இல்லை.
மணாலி நோக்கி இறங்க இறங்க சாலையின் இருபக்கமும் பசுமை பெருக்கெடுக்க ஆரம்பித்தது. மலைகளின் இயல்பு மாறியது. லடாக் இமயமலை என்ற கட்டிடத்தின் கூரை என்றால் மணாலி அதன் அடித்தளம். பாறைகள் மிக உறுதியானவையாக கன்னங்கரேலென இருந்தன. அவை முழுக்க மலையில் இருந்து ஊறிய நீரால் நனைந்து வெடிப்புகளில் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தன. அந்த நீர்த்தாரைகள் வளைவுகளில் இணைந்து வெண்ணிறமான ஓடைகளாக வழிந்து சென்றன.
மேலும் கீழே செல்லச்செல்ல நான்குபக்கமும் மலையருவிகள் வழியும் கரும்பாறைகளால் சூழப்பட்டோம். மலையருவிகள் தூரத்தில் பார்க்கையில் வெள்ளிச் சரிகையை பாறைமேல் போட்டதுபோல வளைந்து சுருங்கி நெளிந்து ஒளிவிட்டுக்கிடந்தன. அருகே நெருங்கும்போது பலத்த ஒலியுடன் சாலையைக் கடந்து கீழே கொட்டிச் சிதறி ஓடிமறைந்தன.
மனிதவாழ்க்கையும் மாற ஆரம்பித்தது. கனத்த ஸ்வெட்டர் போட்ட இடையர்கள் கூட்டம் கூட்டமாக செம்மறிகளை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார்கள். செம்மறிகள் சமீபத்தில் முடிவெட்டப்பட்டவை. கத்தரித்தடங்களுடன் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு சென்றன. சுரு ஆற்றில் கலங்கல் வெள்ளம் முட்டிப்பெருகிச் செல்வதுபோல என்று தோன்றியது. இடையர்களும் கொஞ்சம் வசதியானவர்களாக இருந்தனர். பலரிடம் சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் இருந்தன. அவை அவர்களுக்கு செய்தித் தொடர்புக்கும் உதவும் போலும்.
மணாலியில் இருந்து வரும் இந்தச்சாலை சில இடங்களில் நன்றாக உள்ளது. சில இடங்களில் வெறும் சேற்றுக்குழம்பல். காட்டாறுகள் மலைமீதிருந்து பொங்கி வழிவதனால் உறுதியான சாலை அமைப்பது கடினம் என்று படுகிறது. ஆறுகளுக்குக் குறுக்கே ராணுவம் கட்டிய தற்காலிக இரும்புப்பாலங்கள்தான். பாலங்களின் இரும்புப்பாளங்கள் மீது வண்டிகள் ஏறும்போது பாலம் கூக்குரலிட்டது. மிக அபூர்வமாக சிமிண்ட் பாலங்கள் இருந்தன. பல இடங்களில் பாலங்களை கட்டிக்கொண்டிருந்தார்கள்.
காஷ்மீர் பற்றிய அச்சம் இமாசல பிரதேசத்தைப்பற்றி இல்லை என்பதனால் இமாச்சலப்பிரதேசத்துக்குத்தான் அதிகம் பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு இமயமலைத் தரிசனம் என்பது இந்த மலைப்பாதைதான். இதன் பாதித்தொலைவு வந்தாலே ஓங்கி நிற்கும் பனிமமலை முகடுகளை பார்த்துவிடலாம். சாலைமுழுக்க அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கும். நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள நூற்றுக்கணக்கான இடங்கள்.
நாங்கள் சென்ற வழியெல்லாம் காதலிகள் காதலர்களின் காமிராக்களுக்கு ’போஸ்’ கொடுத்துக்கொண்டிருந்தனர். ஒரு தேனிலவு தாண்டிவிட்டால் எந்த சினிமாவிலும் கூச்சமில்லாமல் நடிக்க முடியும் என நினைத்துக்கொண்டேன்.
வழியில் நிறுத்தி ஆளுக்கொரு சோளக்கொண்டை வாங்கிக்கொண்டோம். ஏற்கனவே சுட்டு வைத்திருந்த சோளத்தை மேலும் சுட்டு தந்தார் கடைக்காரர். சுவையாகத்தான் இருந்தது. வெறும் தானியம் போல மணமிக்க இன்னொரு உணவு இல்லை.
சாலையின் இருபக்கமும் ‘தொங்கும்’ காடுகள். அவை சரிவில் அமைந்திருந்தாலும் சாலையில் இருந்து பார்க்கையில் செங்குத்தாகத் தொங்குவதுபோல, ஒரு மரத்தின்மேல் இன்னொரு மரம் ஏறி நிற்பதுபோலத்தான் தெரிந்தன. காட்டை ஒரு பெரும் திரைச்சீலையாகத் தொங்கவிட்டிருப்பது போலிருந்தது.
தொங்கும் காடுகள் என்பது நித்ய சைதன்ய யதியின் மாணவரும் அமெரிக்கக் கல்வியாளருமான பீட்டர் மொரேஸின் வரி. அவர் மேற்கு மலைச்சரிவில் செய்த பயணத்தில் மழைக்காடுகளைக் கண்டு வியந்து எழுந்தியது அது. கைப்பிடியளவுக்கு காடு என்ற அவரது வரியும் நினைவுக்கு வந்தது. மேற்குமலையில் காடு உருவாவதற்கு அதிக இடமே தேவையில்லை. யானை முதுகில்கூட மெல்லிய காடு முளைத்திருப்பதை கண்டிருக்கிறேன்.
இமயத்தின் இப்பகுதி முழுக்க விதவிதமான மலைப்பாதைகளைக் காணமுடிந்தது. மண்புழுக்கூட்டம் போல பின்னிப்பின்னி நெளிந்துசென்ற பாதைகள். அவை பல்வேறு இடையர் கிராமங்களுக்குச் சென்று முடிபவை. கிராமங்களை அந்த நூலால் கட்டி காட்டுக்குள் மூழ்கடித்து போட்டிருக்கிறார்கள். அவற்றைப்பிடித்து இழுத்து அக்கிராமங்களை மேலே எடுக்கமுடியும்.
சாலையிலிருந்து பார்க்கையில் அந்த சின்னச்சாலைகளில் மனிதர்கள் மெதுவாக நடந்துசெல்லும் காட்சி ஒரு கனவை எழுப்புகிறது. மிகச்சிறிய மனிதன். மிகமிகச்சிறியவன். ஆனால் அவனுக்கு மலைகள் போதாமலாகிவிட்டிருக்கிறது. கூட்டமாக அவன் மலைகளைவிட பிரம்மாண்டமானவன்.
மக்களின் முகங்களும் மாற ஆரம்பித்துவிட்டிருந்தன. மஞ்சள் இன மக்களை அனேகமாக எங்குமே காணமுடியவில்லை. சாலையோரம் தென்படக்கூடிய வணிகர்கள் பெரும்பாலும் செந்நிறத்தோற்றம் கொண்டவர்களாகவும் மலையிடுக்குகளில் ஆடுகளுடன் செல்பவர்கள் இருண்ட நிறத்தில் நம்மூர் சாயல் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
மலைச்சரிவில் கிளைடர் விமானத்தில் ஏறி பறப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை கூவி அழைத்துக்கொண்டிருந்தனர். மிகவும் பணச்செலவுள்ள ஒரு சாகஸம். எங்கள் முன்னால் காற்றில் கிளைடரில் ஏறிய இருவர் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். கீழே மின்கம்பிகள் ஓடிக்கொண்டிருந்தன. நேரே சென்று அதில் அமர்ந்துவிட்டார்களென்றால் என்னாவது என்று எண்ணிக்கொண்டேன்.
மியாமியில் சிறில் அலெக்ஸ் குடும்பத்துடன் சென்று நான் ஒரு பாரா கிளைடரில் ஏறியிருக்கிறேன். வானில் பறந்து நின்றபோது எனக்கு ஒரு விதமான பயமும் சிறிய ஏமாற்றமும்தான் உருவாகியது. எனக்கு எப்போதுமே நேரடியான சாகஸங்களில் ஈடுபாடில்லை. அவை கற்பனைத்திறன் இல்லாதவர்களுக்குரியவை என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
எனக்கு கற்பனையை தூண்டுமளவுக்கு மட்டும் பயணங்களும் சாகஸங்களும் இருந்தால் போதும். அதற்காக நான் என் நினைவறிந்த நாள் முதல் அலைந்தபடியே இருக்கிறேன். என் உடல் சென்ற பயணங்களை விட என் அகம் சென்ற பயணங்கள் மிக அதிகம். சாகஸங்களைச் செய்யும்போதெல்லாம் இது நான் கற்பனைசெய்த அளவுக்கு இல்லையே என்ற எண்ணம்தான் ஏற்படும். வந்திருக்காவிட்டால் என் கற்பனை இன்னும் மகத்தானதாக இருந்திருக்குமே என்று எண்ணுவேன்.
இந்த நிலக்காட்சிகள் மகத்தானவை. ஆனால் இவை என் கனவில் வருகையில் அற்புதமானவையாக ஆகிவிடுகின்றன. ஒருபோதும் நான் உள்ளுக்குள் கண்ட நிலங்களை வெளியே கண்டதில்லை. நிலங்களை கலந்துபிசைந்து பொன்னிலங்களை உருவாக்கும் ஒரு குழந்தை எனக்குள் உள்ளது. அதற்கு விளையாட்டுக்கு மூலப்பொருள் சேர்க்கவே நான் பயணம் செய்கிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கொரு கொள்கை உண்டு. நிலக்காட்சிகளையும், உணர்ச்சிகளையும் மொழியால் சித்தரிக்க முடிபவனே இலக்கியவாதி. சித்தரிப்பு ஒரு போதும் அதன் இலக்கை எட்டுவதில்லை. ஆனால் மொழி அதன் உச்சகட்ட சாத்தியத்தை அந்த முயற்சி வழியாகவே அடைகிறது.
மணாலியிலேயே தங்கலாமென்பதே எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் மணாலி சாலையே ஒரு சுற்றுலாக் கொண்டாட்டமாக இருந்தமையால் அந்தத் திட்டத்தை மாற்றிக்கொண்டோம். அங்கே எங்கும் தங்காமல் முடிந்தவரை சண்டிகர் அருகே வரை சென்று இரவு தங்கிவிட்டு காலையில் டெல்லிக்குச் செல்வதாக முடிவுசெய்தோம்.