திரு ஜெயமோகன்
1. இதை முழுக்க மூன்று முறை படித்தேன். முக்கால்வாசி அற்புதமான கட்டுரை – கால்வாசி பிழைகள் அடுத்த பத்தியில். குறிப்பாக, மண்ணுக்கேத்த, மண்ணில் விளையும் உணவுக்கேற்ற, காலாகாலம் மாறி வரும் நீருக்கேற்ற, அரசாட்சிகள், சமூக கோட்பாடுகள், பொருளாதார முறைகள், வரி வகிக்கும் சட்டங்கள் பண்டைய பாரதத்தில் நிலவி உள்ளன. மன்னர்களோ, வம்சங்களோ, மதங்களோ {சைவ, வைணவ, பௌத்த, சமண, ஆசீவக(?) } மாறும் பொழுதும் இவை அவ்வளவாக மாரவில்லை. முஸ்லிம் படையெடுப்பின் பின்னரும், ஐரோப்பிய நுழைவின் பின்னரும், பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, சமுதாயங்களை, நாடுகளை, கலாச்சாரங்களை சீரழித்துள்ளன. ஆனால் பல நன்மைகளும் செய்துள்ளன, பல முன்னேற்றங்களும் வந்துள்ளன.
கோயில் பராமரிப்பு, நிர்வாகம், வரிவிகிதம், பஞ்ச நிவாரணம் போன்றவையும் நம் வரலாற்று பாட புத்தகங்களில் சொல்லப் படுவதில்லை. இளம் ஜனநாயகத்திற்கு மன்னராட்சியை மட்டம் தட்டும் பிரசாரம் வேண்டும் என்பது ஒரு பக்கம். ஆடம் ஸ்மித், ரிகார்டோ, மாக்கே, மால்தூஸ், மார்க்ஸ், கீய்ன்ஸ் போன்ற பொருளாதார நூலாசிரியர்களை படித்த்வர்களால், இவர்கள் விவரித்த கொள்கைகள் பழக்கத்திலிருந்த கட்டுப்பாடுகளின், அமைப்புகளின் விதிமுரை விளக்கங்கள்தான்; பௌதிக, ரசாயன, உயிரியல் (கெலிலியோ, நியூட்டன், ஆரினியச், மெண்டலீவ், டார்வின் போன்ற) விஞ்ஞானிகளாகின் பரிசோதனை கண்டுபிடிப்ப்ய்கள் அல்ல; என்று புரிந்துகொள்ள முடியவில்லை – இது நம் கல்வி முறையின் குறைபாடு; கொலோனிய அடிமைத்தனத்தின் ஒரு விளைவு.
2. பிழைகளுக்கு வருவோம். (1) ஜென்கிஸ் கான் முகலாயர்கள் மேல் படை எடுக்கவில்லை. ஜெங்கிஸ் தான் முகலாயரின் முப்பாட்டன் – கிபி 1200 காலத்தில் வாழ்ந்தான். சீனா முதல் கிரேக்கம் வரை ஆண்டான். கிபி 1525 இல் பானிபட் போரில் வென்ற பாபர், ஜெங்கிஸ் கானின் வாரிசு. மங்கோல் என்ற சொல்லின் தழுவல்தான் முகல் என்ற சொல். (2) மங்கோலியா பாலைவனம் அல்ல, புல்பரப்பு நிலம் – குதிரைகளும் ஆடுகளும் ஓநாய்களும் மேயும் நிலம். (3)ஜெங்கிஸ் கானும் அவனது மங்கோல் வாரிசுகளும் முகமது கோரியின் அடிமைகள் அமைத்த ஐபக் வம்சத்தால் தடுக்கப்பட்டன். ஜெங்கிஸ் இன்றைய பாகிஸ்தானை மட்டும் தான் பிடித்தான். அலாவுதின் கில்ஜியின் அரவாணி தளபதி மாலிக் கஃபூர் யாதவ, ஹோய்சாள, பாண்டிய, காகத்திய மன்னர்களை நசுக்கினான். வடக்கில் ஜெங்கிஸின் வாரிசுகளின் படைகளையும் விரட்டி அடித்தான். (4)விஜயநகர் சாம்ரஜ்யம் முகலாய ஆட்சியை எதிர்த்து எழவில்லை. 1330-இல் ஐந்து டெக்கன் சுல்தான்களை எதிர்த்து எழுந்தது. 1525-ல் முகலாய பாபர் வந்தான்; 1565-இல் டெக்கன் சுல்தான்களால் (கோல்கொண்டா, பிஜபுர், பிரார், அகமதுநகர், பிடார்) விஜயநகர் என்ற ஊர் விழுந்தது – சூரையாடப்பட்டது – ஆனால் சாம்ரஜ்யம் அழியவில்லை – சந்திரகிரியில் தலைநகர் அமைத்து சிறிய ராஜ்யமாக தொடர்ந்தது. பாபரின் பேரன் அக்பர் டில்லியில் சுல்தானான பொழுது, தென்னாட்டில் தஞ்சை, மதுரை, செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் தொடங்கிவிட்டன. (5) பெரும்பாலான இந்திய கல் அணைகள் ஆங்கிலேயரால் கட்டப்பட்டன. அணைகளால் சில நேரம் வெள்ள தடுப்பும், இருபதாம் நூற்றாண்டில் மின்சார உற்பத்தியும் கிடைத்தாலும், அவை வண்டல் மண்ணை தடுத்து, வயல் வளத்தை அழித்து, ஒரு நதியின் உயிர் வளத்தை கெடுத்து, படகு, மீன் துறைகளை அழித்து, கால்வாய்களையும், ஏரிகளையும், குளங்களையும் கெடுத்துள்ளன. இந்திய விவசாயம் வெளிநாட்டு, மற்றும் செயற்கை உறத்தின் அடிமையாக வழி வகுத்துள்ளன.
சுதந்திரத்துக்கு பின் கட்ட பட்ட அணைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. (6) அமெரிக்கா போட்ட நெல் பிச்சையால் மட்டும் இந்தியா வாழவில்லை. நார்மன் போர்லாகின் பசுமை புரட்சியாலும், குள்ளமான் பயிர் வகைகளாலும், வேலை வாய்ப்பு திட்டங்களாலும், வினியோக முறையாலும், பஞ்சங்கள் ஒழிக்கப்பட்டன – இவை தான் அமர்த்யா சென்னின் நோபல் பரிசு ஆராய்ச்சியின் சாராம்சம். ஆனால் பசுமை புரட்சியும், ஆழ குழாய்களும், இலவச மின்சாரமும், மணல் சுரண்டலும், இந்திய விவசாயத்திற்கு யமனாக வளர்கின்றன – இது வேறு தலைப்பு என்பதால் இத்தோடு நிற்க.
இந்த பிழைகள் திருத்தப்பட்டால், உங்கள் கட்டுரை எல்லா மாணவர்களும் (சில சரித்திர அறிஞர்களும், அதிகாரிகளும், பத்திரகையாளர்களும் ) படிக்க வேண்டிய முக்கிய பதிவு.
3. காமத்தின் குணம் உரைத்த சங்க கவிதையும், செவ்வியல் பற்றிய கருத்தும், அற்புதம். செவ்வியல் என்பது ஒரு கலாச்சாரத்தின், ஒரு மக்களின், ஒரு நாகரீகத்தின், ஒரு நாட்டின் பரிணாம வளர்ச்சியின் மத்தியில் அல்லது உச்சியில் வருவது. தமிழிலும் சமிஸ்கிருதத்திலும் மிக பழைய நூல்களே செவ்வியலாய் இருப்பது ஒருவித அதிசயம். வேறு வழியில் பார்த்தால், யதார்த வாழ்க்கையின் எழுத்துச் சான்றுகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன அல்லது பாதுகாக்க படவில்லை என்றும் கொள்ளலாம். சமிஸ்கிருதத்தில், நெடுங்காலமாக எழுதா பழக்கம் (ஒழுக்கம், கட்டுப்பாடு என்றுகூட சொல்லலாம்) நிலவி உள்ளது. பேச்சு மொழியாகவே, மனப்பாட முறையிலேயே, கல்வி பயிற்கும், நூல் படைக்கும், அரசு நடத்தும் முறை நிலவியுள்ளது. இது ஒரு உலக விந்தை – ஆனால் ஒரு பேரிழப்பும் கூட.
இப்படிக்கு
ர. கோபு
அன்புள்ள கோபு
விரிவான கடிதத்துக்கு நன்றி. ஆம், நானே அக்கட்டுரையை திரும்பப் படித்தபோது அந்தப்பிழையை உணர்ந்தேன். இப்போது திருத்திக்கொணிட்ருக்கிறேன்
1. ஜெங்கிஸ்கான் அரேபியாமீதும் இந்தியாமீதும் படையெடுத்த காலம் முகலாயர் ஆட்சிக்கு முந்தையதே. ஆனால் ஆசிய நாடுகளில் இருந்து பெற்ற செல்வத்தால் செழித்த அரேபிய ஆப்கானிய நாடுகளை அவன் சூறையாடியது குறித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
2. மொகலாய ஆட்சியின் கடைசிக்காலத்தில் நடந்த படையெடுப்புகளை ஜெங்கிஸ்கானுடன் குழப்பிக்கொண்டிருக்கிறேன். பிழைகளை திருத்திக் கொள்கிறேன்
3. நீங்கள் விஜயநகரம் குறித்து சொல்வது சரியல்ல. அது டெல்லி சுல்தானிய ஆட்சிக்கு எதிராகவே உருவானது. கரிகர் புக்கர் இருவருமே டெல்லி சுல்தானால் தோற்கடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசென்று சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே மதம் மாறி இஸ்லாமியர்கள் ஆனார்கள். சுல்தானின் நம்பிக்கையை பெற்று திரும்பிவந்தார்கள். ஆனைகுந்தி மலையில் ஏற்கனவே ஒரு யாதவ அரசு இருந்தது. அந்த அரசின் செல்வம் புதையலாக இருந்தது. அதை மாதவர் என்ற துறவியின் [வித்யாரண்யர்] உதவியால் பெற்றுக்கொண்டு டெல்லிக்கு எதிராகவே தங்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தார்கள். பின்னர் டெல்லி வலுவிழந்தபோதே ஐந்து தளகர்த்தர்கள் ஐந்து பெரிய சுல்தான்களாக ஆனார்கள். அவர்கள் ராட்சசி -டெங்கிடி போரில் விஜயநகரத்தை அழித்தார்கள். என் பேச்சில் உள்ள சொற்பிழை நான் டெல்லி ஆட்சியை முகலாய ஆட்சி என்று சொல்லியிருக்கிறேன் என்பது
4 . அணைக்கட்டுகள் மூலம் நம் விளைநிலம் கிட்டத்தட்ட 40 பங்கு அதிகரித்ததே உடனடியாக உணவுப்பஞ்சத்தை போக்கியது. ஆனால் அதன் மூலம் மாபெரும் சூழலழிவுகள் உருவாயின. அதை அமெரிக்காவிலேயே வெறு உரைகளில் சொல்லியிருக்கிறேன்
5 இந்தியா தன் ஆரம்பகால பக்கவாதப்படுக்கையில் இருந்து எழுவதற்கு நேருவின் பொதுத்துறைகள் பெருமளவு உதவியிருக்கின்றன.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கட்டுரைகளில் பலசமயம் பிழைகளை இன்னொருமுறை வாசித்து திருத்துகிறோம். உரைகளில் சொற்கள் இடம் மாறும் அபாயம் எப்போதும் உள்ளது
ஜெ