இன்று காலை ஆறரை மணிக்கு நாகர்கோயில் திரும்பினேன். சரியாக இருமாதம் முன்பு ஜூலை ஒன்பதாம் தேதி நான் சென்னைக்குச் சென்றேன். அங்கிருந்து அமெரிக்கா. நேற்று மாலை என்னை வசந்தபாலனும் உதவியாளர்களும் வந்து கன்யாகுமரி ரயிலில் ஏற்றிவிட்டார்கள்.
ஜெட் லாக் தீர்வதற்காக பகலில் தூங்காமல் இருந்தேன். ஆகவே ஒருவகையில் கடும் போதையில் இருப்பதைப்போல தோன்றினேன். பிரபல வார இதழில் எக்மோரில் எழுத்தாளர் தள்ளாட்டம் என்ற சேதி வந்தாலும் வரும். ஏறி மர்ந்ததுமே எதிரே இருந்தவர் பெரிய பெட்டிகளை பார்த்துவிட்டு ‘சார் அமெரிக்காவா?’ என்றார். ஆமாம் என்றேன். ”அங்கெல்லாம் நம்மாளுங்களை வேலைய விட்டு தூக்குறாங்கதானே?” என்று நம்பிக்கையுடன் கேட்டார். அவரை வருத்தம் கொள்ள செய்யாமல் ‘;’ஆமாம் ” என்றேன்/ ”திரும்பி போகலையா?” என்றார். இல்லை என்றேன்.
”அதை நானே மூணு வருசமா சொல்றேன் சார் எவன் கேக்கிறான்…”என்று ஆரம்பித்தார். நான் தூங்கி விட்டேன். காலையில் வள்ளியூரை ரயில் தாண்டும்போதுதான் பிரக்ஞை மீண்டது. வடக்கன் குளத்தின் காற்றாடிகள் சோம்பேறித்தனமாக சுழல மகேந்திரமலை குளிரில் விரைத்து நின்றது
ஆரல்வாய்மொழி கணவாய். அப்பால் விரிந்த வயல்களில் பசுமை தேங்கி அலையடித்தது. அறுவடைக்குப் பின்னர் பயறு உளுந்துந் அட்டிருந்தார்கள்.நடாத வயல்களில் உதிர்ந்த நெல்கள் நாற்றாக முளைத்திருந்தன. கொக்குகள் காற்றில் மிதந்தன. மேகம் கப்பிய வானில் வெளிச்சம் கிழிபட்டு கொட்ட ஆரம்பித்திருந்தது
ரயில்நிலையத்துக்கு அஜிதன் வந்திருந்தான். பயலை இரண்டுமாதம் கழித்து சந்தித்தபோது பெரிதாக வளர்ந்துவிட்டான் என்ற எண்ணம் ஏற்பட்டது. பெரிய மீசை வேறு. காக்கை கலந்த குரல். போர்ட்டரிடம் ‘எவ்ளவுங்க?” என்றேன் ”குடுங்க எளுத்தாளர் சார்” என்றார். வேறு வழியில்லை நூறு ரூபாய் கொடுத்தேன்
காரில் வீடு திரும்பினேன். வீடே மாறியிருந்தது. அருண்மொழி வீட்டை பழுதுபார்த்து முற்றாக மாற்றியிருந்தாள். தரை மாற்றி புதிய பெயின்ட் அடித்து புத்தக அலமாரிகளுக்கு கண்ணாடி போடும் வேலை நடந்துகொண்டிருந்தது.
பாப்பாவும் அருண்மொழியும் பாய்ந்து வந்தார்கள். பெட்டியை திறந்து தன் தோழிகளுக்கு கொடுப்பதற்கான சின்னச் சின்ன பரிசுகளை பெற்றுக்கொண்டு சைதன்யா ஓடினாள். அஜிதனுக்கு கொஞ்சம் தாமதித்துத்தான் பள்ளி. ”அவனுக்கு ஒண்ணுமே சொல்லக்கூடாது.நான் வந்துதான் சொல்லணும்..”என்று சைதன்யா கட்டளை போட்டாள். ”உனக்கு தனியா சொல்றேன்” என்றேன் ”சொல்லப்பிடாது…நான் கேக்கத்தான் சொல்லணும்” என்று அடம்பிடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு சென்றாள். சென்றதுமே ”அப்பா சொல்லுப்பா ”என்றான் அஜிதன்
நாய்கள் கும்மாளமிட்டன. லாப்ரடார் துள்ளி குதித்து ஆடி புரண்டு அதகளம் செய்ய டாபர்மான் மல்லாந்து படுத்துவிட்டது. தாய்ப்பாசத்துக்கான ஏக்கமாம்
என் வீடு!. அதே மலைகள். அதே காற்று. அதே தென்னைமரம். இங்கே இருக்கிறேன் என சொல்லிக்கொன்டேன்