நேற்று காலை எட்டு மணிக்கு குளிர்ந்த பெங்களூர் நகருக்கு வந்து சேர்ந்தேன். நண்பர் ஷிமோகா ரவி வந்து அழைத்துச் சென்றார். அவர் இல்லத்தில்தான் வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலையிலேயே பெங்களூர் நண்பர்கள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர் . மொத்தம் 47 பேர் வந்தனர் என்றார்கள் . பலர் புதியவர்கள். லா.ச.ராவின் மகன் ல.ரா.சப்தரிஷி வந்திருந்தார். சில நண்பர்கள் சென்னையில் இருந்து இதற்காகவே வந்திருந்தனர் என்பது ஆச்சரியம் அளித்தது.
பொதுவாக பேசிக்கொண்டிருக்கலாம் என்பதே திட்டம். ஆகவே நண்பர்கள் பேசும் விஷயங்களை ஒட்டியே பேச்சு நடந்தது. அதிகமும் வரலாறு பற்றியே பேசினோம். சமகால அறப்பிரச்சினைகளுக்கான வரலாற்றுப்பின்புலம் என்ன என்பதில் தொடங்கி வரலாற்றுப் பிரக்ஞையின் பலவேறு தளங்கள் சார்ந்து உரையாடல் ஓடியது.
இலக்கியம் ஆன்மீகம் பற்றி நான் இணையத்தில் பேசி வருவனவற்றை ஒட்டி பலர் விவாதித்தார்கள். பொதுவாக உரையாடல் தீவிரமான தளத்தில் மட்டுமே இருந்தது. சிக்கலான கருத்துகள் கூட பெரும்பாலான நண்பர்களால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பது நிறைவு தந்தது.
மாலைவரை கிட்டத்தட்ட அனைவருமே இருந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆறு மணிக்கு மேல் நாங்கள் கடைக்குச் சென்று சில அவசியப்பொருட்கள் வாங்கி வந்தோம். மறுநாள் பயணத்துக்காக. இன்று காலை ஏழு மணிக்கு டெல்லி விமானம். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர். அங்கிருந்து கார்கில். லே, லடாக் என ஒரு மலைப்பயணம். ஆறுமாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, சாலை திறக்கக் காத்திருந்தோம். என்னுடன் என் மகன் அஜிதன், கவிஞர் தேவதேவன் , ஈரோடு கிருஷ்ணன், இராஜமாணிக்கம், கிருஷ்ணராஜ் ஆகியோர் உள்ளனர். திட்டமிட்டபடி ஷிமோகா ரவி அரங்கசாமி இருவரும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகவே அஜிதனும் கிருஷ்ண ராஜு இருவரும் வருகிறார்கள். இம்முறை மலைப்பகுதியில் இணைய வசதி இருக்கும் என்று படவில்லை. ஆகவே உடனடி பயணப்பதிவுகள் இருக்காது.