உரைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது “பசியாகி வரும் ஞானம்” படித்தேன். வெளிநாட்டில் வாழும்போது தாய்மொழியை தாயின் அரவணைப்பிற்கு ஒப்பிட்ட உங்களது ஞானத்தை ரசித்தேன்.
பிரேம்சந்தின் கதைகள் இன்றுவரை படித்ததில்லை. நீங்கள் குறிப்பிடும் கதை எத்தனை விஷயங்களைச் சொல்கிறது…இனிமேல் அவசியம் படிக்க வேண்டும்.
// இந்த அரங்கில் இத்தனை வகைவகையான உணவுகள் நடுவே உங்களை எல்லாம் பார்க்கும்போது இதைச் சொல்லத்தோன்றியது.//
உங்களது தீவிரமான மற்றும் ஆழமான வாசிப்பு உங்கள் நினைவு அடுக்குகளில் இருந்துகொண்டு உங்களுக்கு தேவையான போது வெளிவர தயாராக இருக்கின்றன என நினைக்கிறேன்.
அருமையான சொற்பொழிவை ஆற்றி இருக்கிறீர்கள்.
ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெயக்குமார்

பசி ஓர் அடிபப்டை சக்தி. நம் உடலை ஆளும் ஒன்பது மகாசக்திகளில் அதை இரண்டாவதாக வைத்திருக்கிறார்கள். அதன் வழியாகச் செல்லும் தூரம் அதிகம் அல்லவா?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய “யாருடைய ரத்தம்” உரையை படித்து மிகவும் நெகிழ்ந்தேன். அமெரிக்க வளரிளம்பருவ பிள்ளைகள் மற்றும் பெற்றோரைப் பற்றிய உங்கள் கருத்து 100% உண்மை (கசந்தாலும்). கட்டிய மனைவியின் சுகத்திற்க்காக  தாய்ப்பாலுடன் ருசியை, அன்பை, அறிவை புகட்டிய பெற்ற அன்னையை மறக்கும், புறக்கணிக்கும், அவமானப்படுத்தும் மகன்களின் மனோபவம்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்களுடைய தாய்நாட்டின் மீது. பிள்ளைகள்தான் பாவம், திரிசங்கு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் [ அவர்களின் காரணப்பெயர் ABCD – American Born Confused Desi ]. முடிந்தவரை வேர்களின் அருமையை மண்ணில் புழுங்கி ஜீவன் ரசம் பாய்ச்சும் தியாகத்தை இளம் பழங்களுக்கு உணர்த்துவோம், நாளைய விதைகளின் வேர்களின் நன்மைக்காக…
நன்றி!
-ரா.சு.

ஜெயமோகன்,

சிகாகோ உரை மிக நன்றாக இருக்கிறது. பிரேம்சந்தின் கதையும் தி.ஜா.வின்
கதையும் மறக்க முடியாதவை.

பன்னாலால் படேல், தாராசங்கர் பானர்ஜி ஆகியோரை பற்றி படித்தபோது நீங்கள்
பேசிய பல விஷயங்களை பற்றி எனக்கு இருந்த ஒரு கேள்வி இன்னும் தெளிவாகிறது.
நீங்கள் பல முறை சொன்ன ஒரு விஷயம் நம் குழந்தைகளுக்கு இந்திய மரபு
மறந்துவிடக்கூடாது, வேர்கள் எங்கே இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிய
வேண்டும், ஏனென்றால் அவர்கள் ஒரு நாளும் வெள்ளைக்காரர்களாக ஆக முடியாது
என்பது. எனக்கோ எப்படி ராமனும் கிருஷ்ணனும், சாணக்கியனும் நம் சொத்தோ அதே
போலத்தான் மோசசும், கில்கமேஷும், யுலீசசும், ஓடினும், தோரோவும், ஜெஃபர்ஸனும் நமது சொத்து என்று தோன்றுகிறது. Our heritage is worldwide,
அதை ஏன் இந்திய மரபு என்று சுருக்க வேண்டும்? நீ என்னதான் இந்திய மரபில்
ஊறி திளைத்தாலும் நீ எப்போதும் தமிழன்தான், நீ ஒரு நாளும் குஜராத்தி ஆக
முடியாது, பெங்காலி ஆக முடியாது என்று பன்னாலால் படேலையும் தாராசங்கர்
பானர்ஜியையும் ஒதுக்குவது சரியா? கன்ஸ்யூமரிசம், தொழில் நுட்பம்,
அறிவியல் மட்டுமே போதாது, கலைகள், இலக்கியம் ஆகியவற்றும் குழந்தைகளுக்கு
நேரம் இருக்க வேண்டும், இந்திய பண்பாடு, மரபு மிகவும் வளமானது, இந்திய
வம்சாவளி குழந்தைகளுக்கும் அதை பிடித்துக் கொள்வது சுலபம், அதை கட்டாயமாக
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள் என்று சொல்வது இன்னும் சரியாக
இருக்குமோ?

என் பெண்ணான – அவ்வளவாக விவரம் தெரியாத, ஐந்து வயதான க்ரியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு கிருஷ்ணன் கதைகள் மிகவும் பரவசம்
ஊட்டுகின்றன. அதே நேரத்தில் ஜேகபின் மகன் ஜோசஃப், மோசஸ் போன்ற கதைகளும் மிகவும் பிடித்திருக்கின்றன. யுலீசஸ் பாலிஃபீமசை ஏமாற்றிய கதையை அவள் பல
நாள் நினைத்து நினைத்து சிரித்திருக்கிறாள். கிருஷ்ணன் கதைகளோடு ஏன் நிறுத்த வேண்டும்? அவளால் மோசஸ், யுலீசஸ் ஆகிய மரபிலிருந்து பலம் பெற ஏன்
முடியாது?

Thanks,
RV

 

 

அன்புள்ள ஜெ

உங்கள் சிகாகோ உரையில் சொல்லப்பட்டிருந்த லட்டுப்பாட்டி கதை வாட்டர் [தீபா மேத்தா] சினிமாவில் இருந்தது, எடுத்தாளப்பட்டிருக்கலாம்
விஜயசங்கர்

முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை
அடுத்த கட்டுரைவெள்ளைமலை. புகைப்படங்கள்