கேள்வி பதில் – 09, 10, 11

விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா?

— ஜி.திராவிட்.

என் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசிக்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேறு வேறு. ஆனால் எழுதப்படும் உந்துதல், வாசிக்கப்படும் மனத்தொடர்பு இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அவ்விரண்டின் கூட்டையே நாம் இலக்கியம் என்கிறோம்.

நாம் சமீபமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம், இலக்கியம் ஒவ்வொரு தரப்புக்கும் ஒன்று என. தலித்துக்களின் துயரைப் பிறர் எழுதவும் உணரவும் இயலுமா என. பெண்களின் வாழ்வைப் பிறர் இலக்கியமாக எழுத உணர முடியுமா என. முடியாதென நம்மில் பலர் பொதுப்புத்தியைக் கொண்டு முடிவும் செய்திருப்போம்.

ஆனால் இம்முடிவு, இலக்கியம் என்பதையே நிராகரிப்பது என்று நாம் யோசித்திருக்க மாட்டோம். இதைக் கூவிச்சொல்பவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியாது. தங்கள் அளவில் ஒரு சிறந்த இலக்கிய அனுபவம் அவர்கள் அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இலக்கியத்துக்கும் வெறும் கருத்துவெளிப்பாட்டுக்கும் இடையேயான வேறுபாடும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இலக்கியத்தில் பார்ப்பது வெறும் கருத்துகளையே. அதில் மிதந்துகிடக்கும் கருத்துகள், அல்லது அதில் இவர்கள் கற்பித்துக் கொள்ளும் கருத்துகள்.

தலித் அனுபவம் பிறருக்குச் சிக்காது என்று கொள்வோம். தலித்துக்களின் வாழ்க்கை அனுபவங்கள், அதன் விளைவான அந்தரங்க உணர்வுநிலைகள் அவர்கள் மட்டுமே அறியக்கூடியவை என்பதுதான் அதற்கான வாதம் இல்லையா? இதே வாதத்தை விரித்தெடுப்போம். வெள்ளையனின் அனுபவம் கருப்பனுக்குச் சிக்காது. மேலைநாட்டு அனுபவம் கீழை நாட்டுக்குச் சிக்காது. கன்னடனின் அனுபவம் தமிழனுக்குச் சிக்காது. செம்புல நிலப்பகுதி அனுபவம் கரிசல்மண்காரனுக்குச் சிக்காது. வறண்ட திருப்பத்தூரின் எழுத்து, பசுமை மண்டிய குமரிமாவட்டக்காரனுக்குப் புரியாது. அப்படியேப் போனால் என் அண்டைவீட்டானின் உணர்வு எனக்குப் புரியக்கூடாது. மனித மனம் எவ்வளவு பூடகமானது என நாம் ஒவ்வொருவரும் அறிவோம். எவருமே தங்கள் பகற்கனவுகளைப் பிறிதொரு உயிருக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே கணவனின் உலகம் மனைவிக்குப் புரியாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் பிற எவருக்குமே புரியாது. ஆகவே இலக்கியம் என்பதே பொய்–அப்படித்தானா?

மனிதர்களால் சாதாரணமாகத் தங்களைப் பிறருக்கு உணர்த்திவிட இயலாது என்ற உண்மையிலிருந்தே கலைகளும் இலக்கியமும் பிறந்தன. அவை அசாதாரண வகைத் தொடர்புறுத்தல்கள். அவற்றின் குறியீட்டு அமைப்பு இதன் பொருட்டு உருவானதேயாகும். அவற்றின் அனைத்து உத்திகளும் மறைமுகமான நுட்பமான இவ்விலக்கை நிறைவேற்றும் பொருட்டு உருவானவையே.

ஆகவே தூந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப்பற்றி யூரி பலாயன் எழுதினால் குளிர்சாதனப்பெட்டிக்குள் மட்டுமே உறைபனியைக் கண்ட எனக்கு அது புரியும். இந்தச் சாத்தியத்திலிருந்தே இலக்கியம் உருவாகி நிலைநிற்கிறது. சங்ககால வாழ்வின் ஒரு தடயம்கூட எஞ்சாத இன்றும் கபிலன் என் ஆத்மாவுடன் பேசுகிறான். ஃபின்லாந்தின் பழங்குடிமொழியில் கபிலனை மொழிபெயர்த்தால் இதே உணர்வை அவன் அங்கும் உருவாக்குவான். பேரிலக்கியங்கள் நாகரிகங்களை, மொழிகளை, காலங்களைத் தாண்டிச் சென்று தொடர்புறுத்தும் என்பது இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அந்த யதார்த்தமே ‘உலக இலக்கியம்’ என்ற கருத்தை உருவாக்கியது. ஷேக்ஸ்பியரையும், கதேயையும் உலகின் சொத்துகளாக்கியது.

எல்லா இலக்கியப் படைப்பும் தனக்கென மிக அந்தரங்கமான, வேறு எங்குமே இல்லாத ஒரு தனி உலகைக் கொண்டுள்ளது. அதை வெளிப்படுத்த முயல்கிறது. அது வெளிப்படுத்தும்போது சிந்துவதும் சிதறுவதும் உண்டுதான். பல விஷயங்கள் கண்டிப்பாக விடுபட்டும் போகும்தான். எல்லைகளும் வேலிகளும் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் படைப்பியக்கம் அதைத் தாண்டுமென்பதை இலக்கியவாசகனாக, எழுத்தாளனாக நான் அறிவேன்.

அப்படியானால் ஏன் இப்பிரிவினைகள்? இவை வாசக வகைப்படுத்தல்கள் அல்லது திறனாய்வுக் கோணங்கள் அவ்வளவே. ஒரு படைப்பைப் பல்வேறு கோணங்களில் உய்த்தறிவதற்கான முறைகள். நான் யார்? விசாலாட்சி அம்மாவின் மகன், அருண்மொழிநங்கையின் கணவன், சைதன்யாவின் அப்பா, எழுத்தாளன், தொலைத்தொடர்புத்துறை குமாஸ்தா, இடதுசாரி தொழிற்சங்கச் செயலாளி… இவை மட்டுமல்ல நான். இதில் ஏதாவது ஒன்றில் என்னை நிறுத்தி மதிப்பிட்டாலும் அது எனக்கெதிரான அநீதியே. ஆ.மாதவன் எழுத்து எப்படிப்பட்டது? அது தமிழ் இலக்கிய, நவீன தமிழிலக்கியம். நவீனத்துவக் காலகட்ட இலக்கியம். அடித்தள மக்களைப்பற்றிப் பேசும் விளிம்பிலக்கியம். ஒரே கடைத்தெருவைப் பற்றி மட்டுமே எழுதுவதனால் கடைத்தெருக் கதைகள். நேரடியான சித்தரிப்பினால் இயல்புவாத அழகியல் கொண்டது [Naturalism]. கேரள-தமிழ் எல்லையில் இயங்கும் கலாசாரப் பரிமாற்ற இலக்கியம். வட்டார வழக்கு இலக்கியம். இவை எல்லாம் சேர்த்தாலும் ஆ.மாதவன் முழுமை பெறுவதில்லை. இவை அவரை அறிவதற்கான வழிகளே.

திறனாய்வுமுறைப் பகுப்புகளை வைத்து இலக்கியப்படைப்புகளை, இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தக் கூடாது. இலக்கியவாதியைப் புரிந்துகொள்வதைவிட அடையாளப்படுத்திச் செப்பிலடைக்க முயலும் சிறுமதி அரசியல்வாதிகளின் வேலை அது. இலக்கியவாசகன் அதைத் தவிர்க்கவேண்டும்.

-*-

இலக்கியப் பகுப்புகளை/தனிக்கூறுகளை தேவையென்று வைத்துக்கொண்டு, அந்த இலக்கியங்களை, அந்த வகையினரே முன் வழிநடத்துதல் முறையா அல்லது இலக்கியம் என்பது தன்னைத் தானே நடத்திச் செல்வது ஆகவே எவரால் என்பது முக்கியமில்லை என்பது முறையா?

— ஜி.திராவிட்.

உலகம் முழுக்கவே உள்ள வாதம் இது. பெண்களைப் பற்றி பெண்கள் மட்டுமே எழுதக்கூடிய ஒரு தளம் உண்டு என்று சொல்லி அதைக் கண்டடையவும் வளர்க்கவும் ஆங்கில, அமெரிக்கப் பெண்ணியர்கள் செய்த முயற்சி உதாரணமாகக் கொள்ளத்தக்கது. கறுப்பின இலக்கியம் இன்னொரு உதாரணம். ஆனால் இம்முயற்சி, இலக்கியத்தைப் பகுத்தபடியே போகும். கறுப்பின இலக்கியத்துக்குள் கறுப்பினப் பெண்ணிலக்கியம் தனி. அதாவது சினுவா ஆச்சிபி எழுதுவதல்ல, டோனி மோரிசன் எழுதுவது. மூன்றாமுலகக் கறுப்பினப் பெண்ணிலக்கியம் டோனி மாரிசன் எழுதுவதுபோல இருக்காது. அப்படியே போய் கடைசியில் அப்படைப்பாளியின் தனித்தன்மை வரை போய்விடலாம்.

ஒரு மனிதனின் சுயம் அல்லது ஆளுமை அல்லது தன்னிலை [Self, personality, subjectivity] என்பவை சூழலால் உருவாக்கப்படுபவை, அவனால் உள்வாங்கப்படுபவை, அவனே உருவகித்துக் கொள்பவை மட்டுமே என்று இன்றைய பின் நவீனத்துவச்சிந்தனையாளர்களில் பலர் வாதிடுகிறார்கள். பாலினத்திறனாய்வாளர்களில் [Gender critic] கணிசமானவர்கள் பாலியல்பு என்பதுகூட [ஆண்மை/ பெண்மை] இவ்வாறு சமூகத்தால் உருவாக்கப்பட்டு மனிதர்களால் சுவீகரிக்கப்படுபவையே என்று வாதிடுகின்றனர்.

கட்டவிழ்ப்புத் திறனாய்வாளர்கள் [Deconstruction critic] ஒரு படைப்பாளியின் சுயம் அல்லது தன்னிலை அவன் எழுதும்போது அதற்கேற்ப அம்மொழியால், மொழிக்குள் உருவாகி வருவதென்றும் அதேபோல வாசகன் என்ற சுயம் அல்லது ஆளுமை வாசிப்பின் போது உருவாவதே என்றும் வாதிடுகிறார்கள். ஒரு மனிதன் வழியாக அவன் உருவகித்துக் கொள்ளும் பல, தன்னிலைகள் கடந்து செல்கின்றன. அதாவது விஷ்ணுபுரம் எழுதும்போது அச்செயல்வழியாக நான் ஒரு ‘நான்’ ஐப் படிப்படியாக உருவகிக்கிறேன். அந்த நான் அல்ல ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதிய நான். வாசகனும் இப்படித்தான் செயல்படுகிறான். ஆகவே உறுதியான ஆளுமைகளாக வாசகனையும் எழுத்தாளனையும் உருவகிப்பது சரியல்ல என்கிறார்கள். ஆகவே பெண்ணாக நின்று எழுதுவதும் தலித்தாக நின்று எழுதுவதும் அப்படி வாசிப்பதும் எல்லாம் சுய உருவகங்களே. அவற்றை யாரும் உருவகித்துக்கொள்ள இயலும்.

நான் பின்நவீனத்துவர்களை அப்படியே ஏற்பவனல்ல. தெரிதாவோ ஃபூக்கோவோ என் ஆசிரியர்களல்ல. நாராயணகுருவும் நித்யசைதன்ய யதியும்தான் என் ஆசிரியர்கள். ஆனால் பின்நவீனத்துவக் கோணம் என் நோக்குக்குப் பக்கத்தில் வருகிறது. மனிதனின் சமூக அடையாளம், சமூகம் சார்ந்து அவன் உணரும் சுயம் அவனுடைய சாரமாக இருக்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அது ஒரு தொடக்கம்தான். அவனது சுயம் மேலும் ஆழமானது. பிரபஞ்சம் சார்ந்தது. சமூகம் சார்ந்த சுயத்தில் இருந்து அவன் தொடங்கலாம். பெண்ணாகவோ தலித்தாகவோ எழுத ஆரம்பிக்கலாம். ஆனால் ஆழமான ஆக்கம் அத்தளத்தை உடனே கடந்து சென்றுவிடும். காலைப் பனியினூடாக மலைகளை மௌனங்களாக அறிபவன் தலித்தோ பெண்ணோ அமெரிக்கனோ கறுப்பனோ உழைப்பாளியோ சுரண்டுபவனோ அல்ல. மேலும் ஆழமானவன். தூய மிருகம். அல்லது அதற்கு நேர் எதிரான ஒன்று. கம்பன் தமிழன். தல்ஸ்தோய் ருஷ்யன். உச்சத்தில் அவர்கள் இருப்பது ஒரே இடத்தில்தான்.

-*-

அரசியல்வாதியின் இலக்கியம்/ இலக்கியவாதியின் அரசியல் – எதில் வாசகர்கள் சற்று முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

— ஜி.திராவிட்.

அது உங்கள் வசதிப்படி. இலக்கியவாதியிடம் அரசியலையும் அரசியல்வாதியிடம் இலக்கியத்தையும் தேடுபவர்களிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பதுதான் நான் அறிந்தது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 08
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 12