கதவைத்திறந்து அண்ணா வாசலில் நின்றபோது, எழுந்தோடி மறுபக்கம் சன்னலோரமாகச் சென்றுவிட்டிருந்தேன். சென்று எந்தப் பயனுமில்லை. சன்னலுக்கு கம்பி ஒன்றும் இல்லை என்றாலும் அப்பால் ஆழம்தான். கீழே பலவகையான துருப்பிடித்த கார் பகுதிகள் கிடக்கும் ஒரு சின்ன முற்றம்.
அண்ணா ‘டேய் ஜெயா…டேய்! ’ என்று கூவியபோது திகைத்து நின்றேன். என் கைப்பிடியில் சிக்கிய ஜன்னல்கதவு ரீ என்றது.
அண்ணா ‘எந்தடா மயிரே? நின்னே எவிடெல்லாம் தேடானாணு” என்றார். வேட்டியை மடித்துக்கட்டி திடமாக நடந்து உள்ளே வந்தார். தரையாகப் போடப்பட்டிருந்த மரப்பரப்பு திம் திம் என அதிர்ந்தது. நடுங்கியபடி அப்படியே பெஞ்சில் அமர்ந்துவிட்டேன்.
அண்ணா என்னருகே வந்து தோளைப்பிடித்தார். ‘எந்தெடா?’
அவர் என்னைத் தொடும்வரைதான் என்னால் அடக்க முடிந்தது. தேம்பி அழ ஆரம்பித்தேன்.
அவர் என் தோளை அழுத்தி ‘செரி போட்டு போட்டு’ என்றார். ஐந்து நிமிடங்களில் சமாதானமாகி மூக்கையும் கண்ணையும் துடைத்தேன்.
அண்ணா என்னைத்தேடி விடுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கே எவருக்கும் .எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. எல்லாரும் அவரைப்பார்த்து பயந்து ஒளிந்திருக்கிறார்கள். அதன்பின் கட்சியலுவலகம் சென்றிருக்கிறார். அங்கே லட்சுமணனுடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
லட்சுமணனின் சித்தப்பாவின் அறை அது. அவருக்கு கல்யாணம் ஆகவில்லை. குடிப்பழக்கமும் உண்டு. அவர் கொஞ்சநாளாக ஊரில் இல்லை. எங்கோ விழுந்து அடிபட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் கிடந்தார். பூட்டுசாவி என ஏதுமில்லாத அந்த அறையில் என்னை தங்கிக்கொள்ளும்படிச் சொன்னான்.
‘எந்தெடா காரியம்?’ என்றான் அண்ணா.
என்ன நடந்தது என்பதை எப்படி அண்ணாவிடம் சொல்வது என்று சிந்தனை செய்தேன். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
‘நீ ஹாஸ்டலிலெ நிக்கேண்ணு சகாவு சொன்னார்…செரி நாலு எடம் நக்கி ஜீவிதம் படிக்கட்டும்ணு நானும் ஒண்ணும் சொல்லல’ என்றார் அண்ணா.
’என்னை ஒருத்தன் கொல்லவாறான்’ என்றேன்.
ஆனால் அண்ணா அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை ‘ஆமா கொல்லுதான்…போடா’ என்றபின் ‘செரி நீ வா, வீட்டுக்குப்போவம்’ என்றார்.
‘இல்ல… அவன் பெரிய ஆளு… பணக்காரன்…. அவனுக்கு ஆளும்பலமும் உண்டு’
‘ஆராக்கும் அவன்? என்ன சங்கதி?’
நான் சொல்ல ஆரம்பித்தேன்.
அன்று வடசேரி கம்யூனிஸ்டு ஆபீசில் இருந்து நாகமணியை ஒரு எஸ்டேட் லாரியில் ஏற்றி நேராக அவன் ஊருக்கே அனுப்பிவிட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னை பலவாறாக விசாரித்தார்கள். விதவிதமான ஆட்கள் வந்து பல கோணங்களில் கேள்விகள் கேட்கக் கேட்க எனக்கு பயம் அதிகரித்தபடியே வந்தது. நாகமணி கிளம்பிச்சென்றதும் ஒரு நிம்மதி ஏற்பட்டது.’சரி நீ ஹாஸ்டலுக்குப்போ’ என்றார்கள்.
‘அய்யோ’
‘ஒண்ணுமாகாது… டேய் கொண்டு விடு’
சைக்கிளில் ஏறி மாலையில் விடுதிக்குச் சென்றேன். என்னைக்கண்டதும் விடுதியே தேனீக்கூடு போலக் கலைந்து அதிர்ந்தது. பலர் ஓடிவந்து சூழ்ந்துகொண்டார்கள். ‘லே நாகம் எங்கலே…நாகம் எங்கலே மக்கா?’’
‘பத்திரமாட்டு போயாச்சு’ என்று மட்டும் சொன்னேன்.
மதியம் பத்துப்பதினைந்து ஆட்கள் கம்புகளும் வெட்டுகத்திகளுமாக விடுதிக்குள் புகுந்து எல்லா பையன்களையும் மிரட்டி நாகமணியைப்பற்றி கேட்டிருக்கிறார்கள். எங்கள் அறையில் ஜான் மட்டும்தான் இருந்திருக்கிறான். அவனை ஒருவன் மாறிமாறி கன்னத்தில் அறைந்து பிடித்து தள்ளியிருக்கிறான். ஸ்டீபனுக்கு மண்டையில் நல்ல அடி. ஏகப்பட்டபேருக்கு அடி விழுந்ததாகச் சொன்னார்கள். நாகமணி கிடைக்கவில்லை என்றால் மொத்த விடுதியையும் இடித்துத் தரைமட்டமாக ஆக்கிவிடுவோம் என்று சொன்னார்களாம்.
எங்களைத் துரத்தி வந்தவர்கள் மீண்டும் மாலையில் வந்திருக்கிறார்கள். மீண்டும் அறைதோறும் போய் மிதித்து உடைத்து கண்ணில்பட்டவர்களை எல்லாம் அடித்திருக்கிறார்கள். இம்முறை என்னைப்பற்றிக் கேட்டார்கள். சந்திரன் பயந்து என் பெயரை சொல்லியிருக்கிறான். அவனை இழுத்துச்சென்று வைத்து விசாரித்தார்களாம். நாகமணி சிக்கவில்லை என்றால் என்னை பொலி போடப்போவதாகச் சொன்னார்களாம்.
இவ்வளவுக்கும் ஒரு டம்ளர் தவறி விழுந்தால் கேட்கும் தூரத்தில் காவல் கண்காணிப்பாளரின் அலுவலகம் இருந்தது. அந்த வாசல்வழியாகத்தான் பைக்கில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபின்னர் இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே வந்து என்ன ஏது என்று கேட்டிருக்கிறார்கள். அடிபட்ட பையன்களெல்லாம் அழுதபடி சென்று சூழ்ந்துகொண்டு முறையிட்டிருக்கிறார்கள்.
‘லே, நீ கைய நீட்டினா அவனுக்கு வெறிவரத்தானே செய்யும்? வந்தமா சோலிசெய்து நாலு சக்கறத்த பாத்தமா இருக்கமாண்ணு இல்லாம ஏம்லே கைய நீட்டுதிய? நீயெல்லாம் என்னலே பெரிய சண்டியனா? தாயளி நாலஞ்சுபேர கொண்டு வச்சு தட்டினாத்தான்ல ஒளுங்குக்கு வருவிய’ என்றாராம் மூத்த கான்ஸ்டபிள்.
‘லே நிக்காத, போயிரு…எங்கிணயாம் போயி ஒளிஞ்சுகிடு கேட்டியா? கொன்னிருவானுகலே…அவனுக வெறி மூத்தாக்கும் அலையுதானுக…போயிரு’ என்று எல்லா பையன்களும் என்னைச்சூழ்ந்துகொண்டு ஒரேசமயம் சொன்னார்கள். யார் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. என் தலைசுற்றியது. என்னைச்சுற்றி பீதியில் வெறித்த வெள்ளைநிறமான கண்கள் விசித்திரமான மீன்கள்போலத் தெரிந்தன.
‘லே சிற்றி முளுக்க தேடுதானுவலே….பெரிய கூட்டம் எறங்கியிருக்கு’
பையை எடுத்துக்கொண்டு நேராக காலேஜுக்குத்தான் போனேன். விடுமுறைநாளானாலும் டென்னிஸ் ஆடுவதற்காக வந்திருந்தார்கள்.நாலைந்து பேராசிரியர்களும் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒட்டு மாமரத்தடியில் நின்றுகொண்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் மனம் முழுக்க அவர்களின் நினைவுதான். தேடிவந்துவிடுவார்களா? ஆனால் அவர்களால் கல்லூரிக்குள் நுழைய முடியாது. பேராசிரியர்கள் இருக்கிறார்கள். கண்ணாடிக்காரப்பையன்களும் பணக்காரர்கள்தான்.
ஆனால் அவர்களும் பணக்காரர்கள் அல்லவா? உள்ளே வந்து கண்ணாடிக்காரர்களிடம் பேசிவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால்கூட ஆச்சரியமில்லை. ஐந்துநிமிடத்துக்கு ஒருமுறை ஆழத்தில் விழும்போது வயிற்றுக்குள் உருவாகும் பிம்ம் என்ற உணர்ச்சி உருவானது.
ஒரேவழி ஊருக்கு ஓடிப்போவதுதான். அங்கே என் அப்பாவும் அண்ணாவும் உண்டு. எங்கள் சொந்தங்கள் உண்டு. அப்பாவிடம் சொல்லமுடியாது. மெதுவாக அண்ணாவிடம் சொல்லலாம். கண்டிப்பாக ஏதாவது வழி செய்வார். ஆனால் வீட்டுக்குப்போக எனக்குத் தயக்கமாக இருந்தது. தீபாவளிக்குப் பட்டாசுச்சத்தம் கேட்டு ஓடிப்போன நாய் நாலைந்துநாள் பட்டினிக்குப்பின் திரும்பி வருவதுபோல போய் வீட்டுமுன் நிற்கவேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி நான்கு மாதம் ஆகிவிட்டது. என் வீட்டிலிருந்து எந்த விசாரிப்பும் அது வரை வரவில்லை. அப்படியென்றால் செத்துப்போனால் போதும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நினைத்ததுமே கண்ணீர் கொட்டியது. தனிமையில் நின்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தேன். அனாதை என்று மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டேன். அழுது முடித்தபோது உலகம் சுத்தமாக பிரகாசமாகத் தென்பட்டது. என் சடலத்தை கல்லூரி வளாகத்தில் எப்படியெல்லாம் கண்டுபிடிப்பார்கள் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
ஆனால் அந்தக்கற்பனை கொஞ்சநேரத்தில் சலித்தது. அதன்பின் மாற்று வழிகளைப்பற்றி யோசிக்கத் தொடங்கினேன். லட்சுமணன் நினைவு அப்போதுதான் வந்தது. அவனுக்கு என்னைப்போல கொஞ்சம் வாசிப்புப் பழக்கம் உண்டு. அதேசமயம் என்னை தூரத்திலேயே வைத்திருப்பான். காரணம் அவன் குடும்பம் வசதியானது.
நினைத்ததுபோல லட்சுமணன் என்னை நிராகரிக்கவில்லை. ‘தல்காலம் நீ இங்க நில்லு….மிச்சத்த பிறவு பாப்பம்” என்று சொல்லி அந்த மாடியறைக்குக் கொண்டுவந்து சேர்த்தான்.
”கையில சில்லற இருக்கா?” என்று கேட்டான்.
”இருக்கு” என்றேன்.
‘கீள சாயக்கடை உண்டு கேட்டியா?’’
மேலே வந்தபின் இருட்டில் மட்டுமே கீழே போனேன். குமரேசனின் டீக்கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வந்து அறைக்குள் படுத்துக்கொள்வேன். கீழே உள்ள டயர் ஒட்டும் இடத்திலிருந்து ஒரு சிறுவனை மேலே அழைத்து குமரேசன் கடையிலிருந்து பரோட்டா வாங்கி வரச்சொல்லி தின்றபடி மேலேயே படுத்திருந்தேன். பின்பக்க சன்னல்வழியாகத் தெரிந்த தென்னைமரங்களையும் அப்பால் தெரிந்த முந்திரிக்காட்டையும் பகல் முழுக்க பார்த்துக்கொண்டிருப்பேன்.
இரண்டாம்நாளிலேயே என் மனம் அதைப்பற்றியே பயப்பட்டுக்கொண்டிருப்பதை விட்டுவிட்டது. எழுதப்போகும் நாவல்களைப்பற்றி யோசித்தேன். பயணம் செய்யப்போகும் ஊர்களைப்பற்றி கற்பனை செய்தேன். ஆனால் ஏதாவது சிறிய சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டேன். கதவை மூடியே வைத்திருந்தேன். ஆனால் அதை பூட்டமுடியாது. தாழிட்டாலும் உந்தினால் திறந்துகொள்ளும்.
அண்ணா என்னிடம் ‘டேய் நீ வா போவோம்’ என்றார்.
‘இப்பமா?’
‘பின்ன இப்பமில்லாம? நேரம் காலம் பாக்கணுமா? வாடா ”
அண்ணா அவரே என் பைக்குள் எல்லாவற்றையும் எடுத்துப்போட்டுக்கொண்டார். அதை கையில் எடுத்துக்கொண்டு ‘எறங்ஙடா எரப்பாளி” என்று ஆணையிட்டார்.
அவரை மறுத்துப்பேசி எனக்குப் பழக்கமில்லை. அவர் பின்னால் மெதுவாக சாலைக்கு வந்தேன். மதியவெயிலில் சாலை பளிச் என்று வெறித்துக்கிடந்தது. பேருந்தின் சிவப்பும் கார்களின் வெண்மையும் எல்லாம் கண்களை கூசச்செய்தன. சாலையில் எல்லோரும் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. வயிறு பகீர் பகீர் என்றது. ஓடிப்போய் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொள்ளவேண்டும் என்று மனம் தவித்தது. கதவுகளும் சுவர்களும் மூடாத வெற்றிடத்தில் நின்றபோது மேலே ஒரு கனத்த பொருள் ஆடும்போது தலையில் ஏற்படும் பதைப்பு உடம்பெங்கும் ஏற்பட்டது.
நாகமணி வேலை செய்த இடம் கொஞ்சம் சிக்கலான ஆசாமிகள் என்று நெல்சன் சொன்னான். கூப்பில் பழைய மரங்களை வெட்ட காண்டிராக்ட் எடுத்து மொத்த மரங்களையும் வெட்டிக்கொண்டு வந்து அறுத்து விற்கும் கூட்டம். சந்தனமும் தேக்கும்தான் உண்மையான வியாபாரம். அந்த மரங்களை ஆரல்வாய்மொழியிலிருந்தும் தோவாளையிலிருந்தும் பூதப்பாண்டியிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும் வண்டிகளும் அதற்கான ஆசாமிகளும் அங்கு உண்டு.
நாகமணியிடம் அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால் அவன் திரும்ப நாகர்கோயிலுக்கே வராமலிருப்பதுதான் நல்லது, அவனுக்கு நிரந்தரமான பாதுகாப்பைத் தர கட்சியால் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவன் அவனுடைய ஊரில் இருந்தாலும் ஆபத்துதான். நேராக நெடுமங்காடுப்பக்கம் கேரளத்துக்குப் போய்விடுவதுதான் நல்லது. அதற்கு கட்சி வழியாகவே ஏற்பாடு செய்தார்கள். ஒருவருடம் கழித்து எல்லாம் ஆறியபிறகு வேண்டுமானால் கல்லூரிக்கு வரலாம். ஆனால் அவன் மீண்டும் படிக்க முடியாதென எல்லோருக்கும் தெரிந்திருந்தது. உயிர் தப்பியதே பெரிய அதிருஷ்டம்தான்.
‘அவனுக மேல இவனுக கைய வைக்க முடியுமாலே? வச்சுட்டா பின்ன இங்க அவனுகளுக்க ராச்சியம் நிக்குமா?’ லட்சுமணன் சொன்னான். ‘விடமாட்டானுக’
ஓய்வான மத்தியானம். வெயிலுக்கு கடற்பக்கமிருந்து அடித்த காற்று இதமாக இருந்தது. சிறிய ஓட்டு வீட்டு முன்பக்கங்களில் பெண்கள் படுத்து தூங்கிக்கொண்டோ குந்தி அமர்ந்து பேசிக்கொண்டோ இருந்தார்கள். நிழலில் பன்றிகள் கூட்டமாகக் கிடந்தன. பன்றிகளின் கண்களைப்பார்க்க முயன்றேன். பன்றிகளை எவருமே கவனிப்பதில்லை. நம்மைப்பற்றி பன்றிகளுக்கு என்னதெரியும் என்பது எவருக்கும் தெரியாது. பன்றிகளின் உலகம் நகரம் முழுக்க இருக்கிறது. பன்றிகளுக்குமேல்தான் நகரமே இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்பன்றி இங்கே குதித்து அப்படியே பழையாறு வரை ரகசியமாகவே சென்றுவிடமுடியும்.
சட்டென்று ஒருவன் ‘லே’ என்றான். பாய்ந்து அண்ணாவின் கைகளைப்பிடித்துக்கொண்டேன்.
அவன் வேறு ஒரு சிறுவனைத்தான் அழைத்திருந்தான். ஆனால் அதற்குள் ஓரிரு துளி சிறுநீர் கழித்திருந்தேன். என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
அண்ணா ஒன்றும் சொல்லவில்லை. என் பிடியை விலக்கி விட்டு நடந்தார். பஸ்ஸுக்காக காத்து நின்றபோது தெருவையே பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எக்கணமும் அவர்கள் பாய்ந்துவந்துவிடுவார்கள். வேட்டிக்குள் புடைத்துத் தெரியும் வெட்டுகத்திகள். கண்களில் இரக்கமில்லாத ஒரு கூழாங்கற்தன்மை.
‘அப்படி உன் மேல கைய வச்சிர மாட்டானுக’ என்றார் அண்ணா திடீரென்று.
அவரைப் பார்த்தேன்.
‘டேய் அடீண்ணா சும்மாவா இருக்கு? அடிச்சிட்டு அவன் தைரியமா நடந்திருவானா? அவனுக்கும் பிள்ளையும் குட்டியும் இருக்கும். டேய் வந்து எறங்கிர மாட்டமா? அவன் சங்க பிடிச்சிரமாட்டமா? ஒரு அடி அடிக்கப்பட்டதுண்ணா சும்மாவா? நூறு அடி வாங்கதுக்கு ரெடியா இருந்தாத்தான் ஒரு அடி அடிக்கணும்…. கள்ள வியாபாரம் செய்யுதவன் அதுக்கு துணிய மாட்டான்…. நான் பாக்காத அடியாடே?’
’அவன் கேடியாக்கும்’ என்றேன்.
’புத்தியுள்ளவன்தான் கேடியாக முடியும் பாத்துக்க. புத்தியுள்ளவனுக்கு எந்தச் சாதிமேல கைய வைக்கலாம் எங்க ஒதுங்கிரணும்ணு நல்லா தெரிஞ்சிருக்கும்… உனக்கு பயமிருந்தா சொல்லு. நேரா அவன் கடைக்கே போவம். போயி பேசுவம். அடிக்கானா பாப்பம். வா’
‘இல்ல’
‘வாடா…போய் அவன்கிட்ட பேசுவம்’
‘வேண்டாம் அண்ணா’
‘செரி பிறவு போய் அவன்கிட்ட பேசுதேன்…ஆரு அவன்? எமதர்மன் ஒண்ணும் இல்லியே”
நான் பெருமூச்சுவிட்டேன். என் மனம் சற்று எடையை இழந்தது.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தபோது மேலும் நிதானமடைந்தேன். கால்களை நீட்டிக்கொண்டேன். அண்ணா என்னருகே அமர்ந்திருந்தார். சட்டென்று புன்னகை புரிந்தார்.
‘அவன்…உனக்க ஃபிரண்டு, அவனுக்க பேரு என்னவாக்கும்?’
‘நாகமணி’
‘சுணையுள்ள பயலாக்கும்….ஆணாப்பெறந்தவன்… ’
ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறானே என நினைத்தேன். கையில் கிடைத்தால் தலையல்லவா போகும்?
நான் நினைப்பதை உணர்ந்ததுபோல அண்ணா சொன்னார் ‘டே பயந்து கிடக்கது இவனாக்கும். இந்த அளவுக்கு சத்தம் போட்டு காடெளக்குதான்னா நல்ல பயம் எலும்பிலே கேறியாச்சுண்ணாக்கும் அர்த்தம்.’ கண்களை சிமிட்டியபடி ‘அந்த பயலுக்கும் அது ஒருநாலஞ்சுநாள் கழிஞ்சா தெரியும்….அவன் வேட்டிய தூக்கிக்கட்டிட்டு திரும்பி வருவான்…ஒருத்தனும் கைய வைக்க மாட்டான்…..’
வீட்டுக்குச் சென்றபோது இரவு ஆகிவிட்டிருந்தது. அப்பா திண்ணையில்தான் இருந்தார். முற்றத்தில் ஏறியபோது ஈஸி சேரில் அமர்ந்தபடி பார்த்தார். வீசிக்கொண்டிருந்த விசிறி ஒரு கணம் நின்றபின் மீண்டும் அசைய ஆரம்பித்தது. பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்றேன்.
அம்மா ‘டேய் மகாபாவி’ என ஏதோ ஆரம்பித்தாள்.
‘எல்லாம் நாளைக்கு. இப்பம் அவனுக்கு வல்ல கஞ்சியோ கிளங்கோ குடு’ என்றார் அண்ணா.
பெரிய தட்டு நிறைய சம்பா அரிசிக்கஞ்சி. மயக்கிய மரவள்ளிக்கிழங்கு. வாளைமீன் குழம்பு. கையை கழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். மூன்று நாட்களாக பெரிதாக ஏதும் சாப்பிடவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். சிலநிமிடங்களுக்குப்பின் உணவின் ருசி தவிர ஏதும் என் மனதில் இருக்கவில்லை.
கைகழுவினேன். அம்மா என் அறையில் கட்டில் மீது பாயை விரித்தாள். ‘போயி படுடா’
நான் பேசாமல் நின்றேன்.
அம்மா போகும்போது ‘பொறப்பட்டு போறான் சோத்துப்பக்கி…உனக்கு நாளைக்கு வச்சிருக்கு’ என்றாள்.
தலைகுனிந்து சென்று கட்டிலில் அமர்ந்தேன். நாலைந்துமுறை பெருமூச்சு விட்டேன். பின்பு படுத்துக்கொண்டேன். ஆனால் என் உடம்பும் மனமும் பதைத்துக்கொண்டே இருந்தன. என்னைச்சுற்றி ஏதோ இருப்பதுபோல ஓர் உணர்வு. பின்பு எழுந்து அமர்ந்தேன். அறைக்கதவு திறந்திருந்தது. எங்கள் வீட்டில் எந்த அறைக்கதவையும் மூடுவதில்லை.
எழுந்துசென்று அறைக்கதவை மூடித்தாழிட்டேன். திரும்ப வந்து படுக்கையில் அமர்ந்தேன். மூடியகதவை பார்த்துக்கொண்டிருந்தேன். இனிமேல் தூங்கமுடியும் என்று பட்டது. பதற்றம் வடிந்துகொண்டிருந்தது.
[புறப்பாடு முதற்பாகம் நிறைவு]