ஒரு முதற்கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நான் அறிவுடை நம்பி. எட்டாம் வகுப்பு படிக்கும் போது சிறுவர்மணியில் வெளியான பனிமனிதன் என்னை வெகுவாகக் கவர்ந்தது. வழக்கமான சிறுவர் கதைகளில் இருக்கும் ‘ குழந்தைத்தனம்’ இல்லாமல், வாசிப்பதற்கு ஒரு சவாலை பனிமனிதன் அளித்தது.

கல்லூரி இறுதியாண்டுகளில் திண்ணை இணைய இதழில் தங்களின் கதைகள் மூலம் மீண்டும் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். இளமைக்கே உரிய உணர்வெழுச்சியுடன் தங்களின் கதைகளை வாசித்தது இன்றுவரை நீளும் பெரும் மனக்கொந்தளிப்புகளை உருவாக்கியது. வடக்கு முகம், நதிக்கரையில், மடம், போதி, அறிவியல் புனைகதைகள் ஏற்படுத்திய உணர்வுகள் சாதாரணமல்ல. உண்மையில் இளமையின் கட்டடற்ற உணர்ச்சி வேகத்தை இவை திசைமாற்றி தேடலில் குவித்தன.பிறகு கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த பிறகே விஷ்ணுபுரம் வாங்கி வாசித்தேன்.

விஷ்ணுபுரம் வாசிப்பு என் மனக் கொந்தளிப்புகளை உச்சத்திற்குச் கொண்டு சென்றது. மனப்பிளவுக்கும் உன்மத்தத்திற்கும் சில படிகள் முன்னால் வரை மனம் சென்று வந்தது. ஒரு படைப்பை வாசிப்பது மட்டுமே அப்போது முடிந்தது. வெறி பிடித்தது போல் மீண்டும் மீண்டும் வாசித்தேன். பிறகு பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகியவற்றையும் வாசித்தேன். ஆனால் விஷ்ணுபுரம் முழுமையாக என்னை ஆக்கிரமித்தது. நாட்கணக்காக அதில் மூழ்கியிருந்தேன். கடும் வேலைப்பளு மட்டுமே என்னைக் காப்பாற்றியது.

பிறகு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகுதான் கொந்தளிப்புகள் மெல்ல இல்லாமலாகின.தொடர்ச்சியாகத் தங்களை வாசித்ததும் ஒரு காரணம். ‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’ என்று சோமன் சொன்னது மிகப்பெரிய உண்மை.

விஷ்ணுபுரம் பின் தொடரும் நிழலின் குரல், இன்றைய காந்தி பலவகையில் என் அறிதல்களை செம்மைப்படுத்திய படைப்புகள். கிட்டத்தட்ட என்னை நானே அழித்து மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இப்பயணத்தில் தங்களின் எழுத்துக்களை ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
அறிவுடை நம்பி.

அன்புள்ள அறிவுடைநம்பி

என்னைப்பொறுத்தவரை என் எழுத்துக்கள் எப்படி ஒருவருக்கு அறிமுகமானாலும் அவர் உண்மையான இலக்கிய ரசனை உடையவராக இருந்தால் அவரது ஆன்மாவுடன் பேசும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நான் எழுதும் கணங்களில் என் அகம் மட்டுமாகவே இருக்கிறேன். ஆகவே அவற்றைப்பற்றிச் சொல்லப்படுவனவற்றை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை

என் நம்பிக்கைக்கு ஒவ்வொருநாளும் கடிதங்கள் வழியாகச் சான்றுகள் வந்துகொண்டிருக்கின்றன. உங்களுடையதும் அப்படியே. நன்றி

எழுத்து வாசிப்பு இரண்டும் ஒரே விஷயத்தின் இருமுனைகள். நாம் இருவரும் இணைந்து ஒன்றைக் கண்டடைகிறோம். அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அவ்வகையில் நானும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்

எழுதுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 4
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 5