திரும்புதல்

கிட்டத்தட்ட இரண்டுமாத அமெரிக்கச் சுற்றுப்பயணம் முடிந்து இன்று , செப்டெம்பர் ஆறாம் தேதி காலை, ஊர்திரும்புகிறேன். செப்டெம்பர் எட்டாம்தேதி அதிகாலை சென்னைக்கு சென்று சேர்வேன் என நினைக்கிறேன். மறுநாள் காலையில் நாகர்கோயில்.

நெடுங்கால பயணங்கள் எனக்குப் புதிதல்ல என்பதனால் வீட்டுஏக்கம் என பெரிதாக ஏதும் இல்லை. என்றாலும் திரும்பிச் செல்வதை எண்ணும்போது என்னுடைய நாகர்கோயில் நகரும் மலைகளும் மழைக்குளிர் காற்றும் அருண்மொழியும் செல்லக்குழந்தைகளும் பிரியமான நாய்களும் எல்லாம் ஒருசேர நினைவில் அலையறைகின்றன

நான் சென்ற ஜூலை 9 ஆம்தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். பதினொன்றாம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிம் பதினொன்றாம் தேதியே அமெரிக்கா வந்தேன். அங்கே தொடங்கிய பயணம். ஆரம்பத்தில் நண்பர் திருமலைராஜன், சிறில் அலெக்ஸ், பாஸ்டன் பாலா ஆகியோரால் திட்டமிடப்பட்ட எளிய பயணமாக இருந்தது.  ஆனால் பின்னர் பல ஊர்களில் பல நண்பர்கள் அழைத்து அழைத்து பெரிதாக வளர்ந்து மிக பரபரப்பான பயணமாக ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட அமெரிக்கா முழுக்கவே பரவிய பயணத்தை இப்போது எண்ணினால் பயமாக இருக்கிறது.  ஜூலை 12 ஆத் தேதி நானும் பாஸ்டான் பாலாவும்  பாஸ்டன் நகரைச் சுற்றிப் பார்த்§தோம். பதிமூன்றாம் தேதி வெட்டிப்பயல் பாலாஜியுடன் அருங்காட்சியகங்களை பார்த்தேன்

ஜூலை 14 ஆம் தேதி  நண்பர் மெய்யப்பனுடன் பாஸ்டன் அருகே வெள்ளைமலை பார்க்கச் சென்றேன். ஜூலை 15 அன்று  நண்பர் வேல்முருகனுடன் எமர்சனின் வீட்டையும் வால்டன் குளத்தையும் சூழலையும் பார்த்தேன். கடலுக்குள் சென்று இரண்டு திமிங்கிலங்களை பார்த்தேன். அன்று மாதவன் என்ற நண்பருடன் கார்வார்ட் எம் ஐ டி சென்று சுற்றிப்பார்த்தேன்

ஜூலை 16 அன்று கிரேஹவுன்ட் பேருந்தில் கிளம்பி அல்பெனி சென்றேன். நியூயார்க் மாகாணத்தின் தலைநகரம்.  அங்கே ஓப்லா விஸ்வேஷ் வீட்டில் தங்கினேன். மறுநாள் ஜூலை பதினேழு அன்று அவருடன் கிளம்பி லேக் ஜார்ஜ் என்னும் ஏரியைப் பார்த்தேன்.

ஜூலை 18 அன்று அவருடன் சென்று நயாகரா பார்த்தேன். என்னைப்பார்க்க டெரொண்டோவில் இருந்து காலம் செல்வமும் வெங்கட் ரமணனும் வந்திருந்தார்கள். சில நண்பர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா கிடைக்கவில்லை என்றார்கள். நண்பர்களை ஒன்பது வருடம் கழித்து மீண்டும் சந்தித்தேன்.

மறுநாள் ஜூலை 19 அன்று காரில் கனெடிக்கட் சென்றேன். அங்கே கோ.ராஜாராம் வீட்டில் ஒரு நண்பர் சந்திப்பு. கிட்டத்தட்ட முப்பதுபேர் வந்திருந்தார்கள். அ.முத்துலிங்கம் அவர்கள் டொரொண்டோவில் இருந்து வந்திருந்தார். அன்றே கிளம்பி நியூயார்க் சென்றேன். அங்கே நண்பர் முரளியுடன் தங்கினேன்.

ஜூலை 20 அன்று நியூயார்க்கில் ஒருநாள் முழுக்க நகரைச் சுற்றிப்பார்த்தேன். சுதந்திர தேவியின் சிலை என்னை மிகவும் கவர்ந்தது. மறுநாள் 21 ஆம் தேதி காலை கிளம்பி கலை அருங்காட்சியகம். கோ.ராஜாராம் வந்து என்னை ‘சிகாகோ’ என்ற பிராட்வே இசைநாடகத்துக்குக் கூட்டிச் சென்றார். அன்றே ரயிலில் பயணம்செய்து எடிஸன் சென்றேன். அங்கே துகாராம் வீட்டில் தங்கினேன்.

ஜூலை 22  ஆம் தேதி காலையில் தாமஸ் ஆல்வா எடிஸன் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். துகாராம் வீட்டில் ஒரு நண்பர் சந்திப்பு. இருபத்தைந்து நண்பர்கள் வந்திருந்தார்கள். வெகுநேரம் பேசினோம்.  பல இணையப்புகழ் நண்பர்களை அப்போதுதான் சந்தித்தேன்

ஜூலை 23 அன்று பாஸ்டன் பாலாஜியுடன்  கிளம்பி வாஷிங்டன். அங்கே வேல்முருகன் வீட்டில் தங்கினேன். 24 ஆம் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையையும் சுற்றியுள்ள நினைவகங்களையும் பார்த்தேன். 25 அன்றும் வாஷிங்டன். அன்று மாலை வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். நாகர்கோயிலைச் சேர்ந்த மறைந்த அசுரன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பை நாகர்கோயில் நண்பர் உதயகுமார் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தார். அதன் வெளியீட்டுவிழாவும் நடந்தது. குமரிமாவட்ட நண்பர் பீட்டர் எனக்கான வரவேற்பு ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார்.

மறுநாள் 26 அன்று பாஸ்டன் பாலாஜியுடன் காரில் கிளம்பி பகல் முழுக்க பயணம்செய்து நள்ளிரவில் மீண்டும் பாஸ்டன். 27 அன்று காலையில் பாஸ்டனில் இருந்து விமானத்தில் மயாமி சென்றேன். ஏறத்தாழ மூன்று மணிநேரப்பயணம். நடுவே நியூயார்க்கில் அரை மணிநேர தங்கல்.

மியாமியில் சிறில் அலெக்சுடன் தங்கினேன். 28 ஓய்வு. மறு நாள் ஜூலை 29  அன்று  அருகே உள்ள செவ்விந்தியர் நினைவில்லத்தையும் அதை ஒட்டிய சதுப்புக்காட்டையும் பார்த்தேன். 30 அன்று ஆர்லாண்டோ சென்றோம். அங்கே கடல் விளையாட்டுகள். கடலுக்குள் சிறிய பிளாஸ்டிக் படகில் துழாவிச்செல்லுதல். இயந்திரப் படகுப்பயணம். இயந்திரப் படகு இழுக்கும் பாரசூட்டில் வானில் ஏறி மிதத்தல். கடலுக்குள் மூழ்கி கடல்பாசிகளையும் பவழப்பாறைகளையும் பார்த்தது அபாரமான அனுபவமாக இருந்தது

முப்பத்தொன்றாம் தேதி திரும்பிவந்து ஒருநாள் விட்டு மீண்டும் பயணம். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி  மயாமி கடற்கரையில் டிஸ்னிலேண்ட் அரங்குக்குச் சென்றோம். அங்கே பலவகையான அறிவியல் வேடிக்கைகள். பிரம்மாண்டமான ராட்டினத்தில் தலைகீழாக பாய்ந்தது மயிர்கூச்செரிய வைத்தது. அருகே வாட்டர் வேர்ல்ட் என்ற இடத்தில் பிரம்மாண்டமான சைபீரிய பனிக்கரடி ராட்சத சீல்கள் கடல்பசுக்கள் போன்றவற்றை பார்த்தேன்.  ஆகஸ்ட் இரண்டாம் தேதி கேப் கென்னடி முனைக்குச் சென்று மாபெரும் ராக்கெட்டுகளை , அமெரிக்காவின் முதல் நிலவுப்பயணத்தின் கருவிகளை கண்டேன். அன்றே திரும்பி வந்தோம்.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி மயாமியின் மைய நகரையும் அதைச் சுற்றியிருக்கும் கடற்கரையையும் பார்த்தேன்.  ஆகஸ்ட் நாலாம் தேதி மயாமியில் இருந்து விமானத்தில் கலி·போர்னியா வந்தேன். கன்யாகுமரியில் இருந்து டெல்லிசெல்வதைப்போல இருமடங்கு தூரம். ஆறு மணி நேரம். அமெரிக்காவின் மேற்கு கரை இது.

கலி·போர்னியாவில் திரும¨லைராஜன் இல்லத்தில் தங்கினேன். அவர் வீட்டில் நண்பர்கள் வந்து சந்தித்தார்கள். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அருணாவுடன்  தேதி ·ப்ரீமாண்ட் பகுதியைச் சுற்றிப்பார்த்தேன். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மாலை நானும் திருமலைராஜனும் காரிலேயே கிளம்பி லாஸ் ஆஞ்சலிஸ் சென்றோம். அங்கே லாஸ் ஆஞ்சலிஸ் ராம் இல்லத்தில் தங்கினோம்.  ஆகஸ்ட்  ஆறாம்தேதி அன்று  ஹாலிவுட் பயணம். யூனிவர்சல் ஸ்டுடியோவை ஒரு நாள் முழுக்க பார்த்தோம். படப்பிடிப்பு அரங்குகள். படபிடிப்பு முறைகள்

அன்று லாஸ் ஆஞ்சலிஸ் நகரில் அங்குள்ள தமிழ் நண்பர்கள் வந்து சந்தித்தார்கள். பத்துபேர். இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம்.மறுநாள் ஆகஸ்ட் ஏழு அன்று நானும் திருமலைராஜனும் கிளம்பி ஹ¥வர் அணையைப் பார்த்தபின் திரும்பி  லாஸ் வேகாஸ் சென்றோம். சூதாட்ட நகரில் ஓர் இரவு விடுதியில் தங்கி சூதாடிகளையும் விபச்சாரிகளையும் நீர்வேடிக்கைகளையும் பார்த்தோம்.

அங்கிருந்து கிளம்பி ஆகஸ்ட் எட்டாம் தேதி கிராண்ட் கான்யன். கொலராடோ ஆறால் அரிக்கப்பட்டு உருவான மாபெரும் நிலப்பள்ளத்தின் விளிம்பின் முடிவிலாத வடிவங்களில் ஒரு நாள். மாலையில் அருகே உள்ள வில்லியம்ஸ் என்ற கிராமத்தில் தங்கியிருந்தோம். மறு நாள் ஆகஸ்ட் ஒன்பதாம்தேதி  முழுக்க புதர் கருகி கற்றாழை உயர்ந்து பரந்து கிடந்த மோவே  பாலைவனம் வழியாக பயணம் செய்து மீண்டும் கலி·போர்னியா.

ஒருநாள் இடைவெளி. அன்று   ஆகஸ்ட் பதினொன்றாம்தேதி நண்பர் ஸ்ரீனிவாசன் வந்து வட சான்ப்ரான்ஸிஸ்கோ அழைத்துச் சென்றார். பிரிட்டிஷ் மாலுமி சர் ·ப்ரான்சிஸ் டிரேக் வந்திறக்கிய பாயிண்ட் ரியஸ் என்ற கடல்முனையையும் மெண்டசினோ என்ற மலை நகரையும் பார்த்தேன்.

ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி ஸ்டான்போர்ட் வானொலியில் பேட்டி.  ஆகஸ்ட் பதினொன்றாம்தேதி நானும் திருமலை ராஜனும் ஸ்ரீனிவாசனும் காரில் கிளம்பி  அபூர்வமான நீல நீர் நிறைந்து பரந்த  டாஹ¥ ஏரியையும் பார்த்தோம். அங்கே ஓர் ஓட்டலில் தங்கினோம்.

அதன்பின் ஆகஸ்ட் பதிநான்காம் தேதி லாஸன் எரிமலை. பின்னர் சென்று சாஸ்தா எரிமலை. ஆரிகான் மாநிலத்தில் மெட்போர்ட் என்ற ஊரில் டேய்ஸ் இன் என்னும் ஓட்டலில் தங்கினோம். மறுநாள் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி  ரோக் ஆறு வழியாக வடக்கே போய் எரிமலை வாயில் நீர் தேங்கி உருவான மாபெரும் கிரேட்டர் ஏரியின் அற்புதமான நீல வெளியை கண்டேன்.

திரும்பும் வழியில் சாக்ரமெண்டாவில் தங்கினோம். ஆகஸ்ட் 16 அன்று சாக்ரமாண்டோ நகரில் ஒரு கூட்டம். இண்டெல் நிறுவன அரங்கில் சாக்ரமெண்டா தமிழ்சங்கம் ஏற்பாடு செய்த கூட்டம். சுந்தரராஜன் [மூக்கு சுந்தர்] ஏற்பாடு செய்திருந்தார்.

ஆகஸ்ட் பதினேழாம் தேதி ·ப்ரீமாண்டில் ஓய்வெடுத்தேன். இங்கே உள்ள வாசகர்கள் வந்து என்னை சந்தித்தார்கள். இலக்கியம் தத்துவம் குறித்து விரிவாக பேசினேன்.

ஆகஸ்ட் 18 அன்று ·ப்ரீமாண்ட் நகரில் இருந்து கிளம்பி மினியாபோலீஸ் சென்றேன். அங்கே மினஸோட்டா பல்கலையில் பணியாற்றும் நண்பர் வேணுவின் வீட்டில் தங்கினேன். பத்தொன்பதாம் தேதி மினியாபோலீஸ் நகரை  ஆகஸ்ட் அன்று பார்த்தேன். அந்த நகர் அருகே ஒரு பாதுகாக்கபப்ட்ட காடும் நடுவே ஓர் ஏரியும் உள்ளது. அதில் படகுச்சவாரி செய்து பக்கவாட்டு காடுகளைக் கண்டேன்.

சிறில் அலெக்ஸ் அதற்குள் மியாமியில் இருந்து பணி மாற்றம் பெற்று மினியாபோலீசுக்கே வந்துவிட்டார்.  ஆகஸ்ட் 20 அன்று அவருடன் சென்று செயிண்ட் பால் தேவாலயத்தையும் மினியாபோலீஸ்  செனெட் ஹாலையும் பார்த்தேன். மறுநாள் இரவு மினஸோட்டா பல்கலை செல் ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடத்தைச் சென்று பார்த்தேன்

ஆகஸ்ட் 21  மினியாபோலீசில் இருந்து கிளம்பி விமானத்தில் சிகாகோ. சிகாகோவில் சந்திரசேகரன் என்னை வரவேற்று அவர் வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆகஸ்ட்  அன்று சிகாகோவில் தங்கினேன். அங்கே இருந்த கலைநுட்பம் மிக்க சுவாமிநாராயணன் ஆலயத்துக்குச் சென்றேன். மறுநாள் ஆகஸ்ட் 22 அன்று சிகாகோ தமிழ்ச்சங்கம் ஒரு பிக்னிக் ஏற்பாடு செய்திருந்தது. அங்கே வாசகர்களைச் சந்திக்கவும் உரையாடவும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.

அன்று மாலையே புளூமிங்டனில் இருந்து நண்பர்கள் வந்து காரில் அழைத்துச்சென்றார்கள். அங்கே கலைமணி எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புளூமிங்க்டன் தமிழ்ச்சங்கத்தில் அன்று மாலை பேசினேன். பாலா என்ற நண்பர் வீட்டில் இரவு தங்கினேன்

மறுநாள் ஆகஸ்ட் 23 அன்று நானும் பாலாவும் கலைமணியும் திரும்பி சிகாகோவுக்கே வந்து நகரைச் சுற்றிப்பார்த்தோம். விவேகானந்தர் பேசிய உலகமதமாநாடு நடந்த கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியிருந்தது. அதைக் கேட்டு திறக்கச் செய்து பார்த்தோம். சிகாகோ அருங்காட்சியகத்தையும் பார்த்தேன்

அன்று  ரயிலில் பல்கலை நகரமான ஆன் ஆர்பர் சென்றேன். அங்கே நண்பர் அருளின் விருந்தாளியாக தங்கியிருந்தேன்.  ஆகஸ்ட் 24 அருளுடன் மறுநாள்  டேய்ட்டன்  சென்றேன்.  ஒருநாள் முழுக்க ரைட் சகோதரர்கள் விமானம் உருவாக்கி பறக்கவிட்ட நகரையும் அவர்களின் வீட்டையும் அங்கிருக்கும் அமெரிக்க வவான்வெளி காட்சியரங்கையும் கண்டேன். திரும்பும் வழியில் ர.சு.நல்லபெருமாளின் மூத்த மகள் வீட்டுக்குச் சென்றேன்

மறுநாள்  ஆகஸ்ட் 25 டெட் ராய்ட் சென்றோம். பழமையான நகரம். அங்கே ·போர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை சுற்றிப்பார்த்தேன். விதவிதமான கார்கள் டிராக்டர்கள். அவற்றின் வழியாக ஒரு மாபெரும் பரிணாம மாற்றத்தை உணரமுடிந்தது அன்று மாலை ர.சு.நல்லபெருமாளின் இரண்டாவது மகள் அலர்மேல் மங்கை வீட்டில் தங்கினேன்.

மறுநாள் ஆகஸ்ட் 26 விமானத்தில் கிளம்பி மீண்டும் கலி·போர்னியா. அன்று மட்டும்தான் ஓய்வு. மறுநாள் ஆகஸ்ட் 27 அன்று நண்பர் அருணாவுடன் சான் ·ப்ரான்சிச்கோ சென்று சுற்றிப்பார்த்தேன்.  அன்றிரவு கலி·போர்னியா பே  ஏரியா சினிமா நண்பர்கள் வந்து சந்தித்தார்கள். மெய்ப்பொருள் படம் எடுத்தவர்களும் இருந்தார்கள்.

அதன் மறுநாள் ஆகஸ்ட் 28  அன்று தூள் டாட் காம்  நடத்தும் பாலாஜி ஸ்ரீனிவாசனுடன் யோசிமிட்டி மலைப்பகுதிக்குச் சென்றேன். நம்ப முடியாத அளவுக்குச் செங்குத்தான ஒற்றைப்பாறை மலைகள் கொண்ட பகுதி அது.  மரிபோஸா காடு சென்று உலகிலேயே பெரிய மரங்களான செகோயா மரங்களை பார்த்தேன்.

அதற்கு மறுநாள் திருமலைராஜன், ஆர்வி, அருணா, பகவதிப்பெருமாள், ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலி·போர்னியாவின் அழகான கடற்கரைச்சாலையான 17 மைல் டிரைவ் சென்றோம்.  பிக்ஸர் . சாலினாஸின் ஸ்டீன்பர்க் மியூசியம். அங்கே முடி உதிர்க்க வந்து கடற்கரையில் புரண்டுகிடந்த யானை சீல்களையும், ஒரு பாறை முழுக்க அப்பிக்கிடந்த கடல்சிங்கங்க¨ளையும் கண்டோம்

ஆகஸ்ட்30 அன்று கலி·போர்னியா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் ஓட்டலில் ஒரு சந்திப்பு. அதில் நாற்பது பேர் கலந்துகொண்டார்கள்.

முப்பத்தொன்றாம் தேதி  அருணா வீடுமறுநாள் கலி·போர்னியா வாழ் ஈழத்தமிழர்கள் அமரன் அவர்களின் இல்லத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஈழப்பிரச்சினை சார்ந்து என்னுடைய கருத்துக்களை விரிவாக பகிர்ந்துகொண்டேன்.

செப்டெம்பர் ஒன்றாம் தேதி பெர்க்கிலி பல்கலைகழகம். பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்டையும் அவரது துணைவி கௌசல்யா ஹார்ட்டையும் சந்தித்தேன். செப்டெம்பர் இரண்டாம் தேதி விமானத்தில் ஹ¥ச்டன். சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கினேன். மூன்றாம் தேதி ஹ¥ஸ்டனில் சண்முகம் வீட்டில் நண்பர் சந்திப்பு. தமிழ் ஆய்வாளர்  நா.கணேசன் அவர்களைச்  சந்தித்தேன். மறுநாள் ஹ¥ஸ்டன் அருங்காட்சியகத்தில்

செப்டெம்பர் நான்காம் தேதி மீண்டும் விமானத்தில் கலி·போர்னியா. ஐந்தாம் தேதி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பொதுநிகழ்ச்சி. என் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றி பாலாஜி சீனிவாசன் பேசினார். பிந்தொடரும் நிழலின் குரல் பற்றி அருணகிரி பேசினார். நான் கடைசியில் பேசினேன்

இன்று, செப்டெம்பர் ஆறாம் தேதி மதியம் பயணம் முடிந்து கிளம்புகிறேன்.இந்த நாடு இத்தனை பெரியது என்ற மனச்சித்திரமே இதுவரை எனக்கிருக்கவில்லை. இதன் அகலம் இந்திய துணைக்கண்டத்தின் நீளத்தைவிட இருமடங்கு. கலிபோர்னியாவே ஒரு நாடு அளவுக்குப் பெரியது. கலப்போர்னியாவுக்குள் நானும் ராஜனும் காரில் சுற்றிவந்த தூரம் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்றுவருவதைவிட அதிகம்.

இந்நாட்டின் கிழக்கையும் மேற்கையும் ஓரளவு மையத்தையும் சுற்றிப்பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் அமெரிக்காவில் வாழும் நண்பர்களில்கூட பலர் இந்த அளவுக்கு பார்த்ததில்லை. இரண்டுமாத காலம் அலைந்துகொண்டே இருந்தேன். ஆனாலும் இதன் ஒரு துளியைத்தான் பார்த்திருக்கிறேன். கை மண் அளவு.

முந்தைய கட்டுரைஅனுபவங்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசொல்வனம், இசை ஒரு கடிதம்