‘நான் வாழவைப்பேன்’ என்று விதிவசத்தால்தான் அந்தப்படத்துக்குத் தலைப்பு இருந்திருக்கவேண்டும். சிவாஜிகணேசனும் ரஜினிகாந்தும் நடித்தபடம். ரஜினிகாந்த் அந்தப்படத்தில் மைக்கேல் டிசூசா என்ற பேரில் நடித்தார். கொள்ளைக்கூட்டத்தலைவன். எனக்கு பொதுவாக கொள்ளைக்கூட்டங்கள் மீது விசேஷ ஈர்ப்பு இருந்த நாட்கள். கொள்ளைக்காரர்களின் தலைமறைவு வாழ்க்கையை நானும் அந்தரங்கமாகக் கனவுகண்டேன். மீண்டும் சரஸ்வதியில் திரையிட்டிருந்தார்கள். மாட்டினிக்கு டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.
முன்னால் நின்ற மனிதர் தலையில் துண்டைபோட்டிருந்தார். நிறைய சினிமா பார்ப்பவராக இருக்கும். இந்த மாதிரி திரையரங்குகளில் இந்தமாதிரி ஓடியடைந்த படங்களைப்பார்க்கவருபவர்கள் இரண்டுவகை. சினிமா எதானாலும் எப்படியும் பார்த்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள். சினிமாவே பார்க்காமல் ஆட்டுக்கு குழையொடிக்கவோ வாழைக்குலை விற்கவோ வந்த இடத்தில் தவறிப்போய் சபலப்பட்டுவிடுபவர்கள். இவர் முதல்வகையாகத் தோன்றினார்.
பாட்டா உள்ளே பதமாக டிக்கெட் கிழித்து நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ரூபாய்நோட்டின் மதிப்பை அவர் உள்ளுணர்வாலேயே மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்போதுதான் நாகமணி ஓடிவருவதைப் பார்த்தேன். வேட்டியை தூக்கிக் கட்டியபடி லேசாக விந்தியவன்போல ஓடி வந்தான். ஆனால் என்னையும் தாண்டி அவன் சென்றபோதுதான் அவன் என்னைப்பார்க்கவரவில்லை என உணர்ந்தேன்.
‘லே நாகு…லே ‘
அவன் என்னைப்பார்த்தான். அப்போதும் அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
‘லே நாகு இஞ்சலே…லே’
நாகமணி சட்டென்று என்னை நோக்கி ஓடிவந்து என்னருகே நின்றான். மூச்சிரைத்தான்.
‘என்னலே?’
‘ஆஸ்டலுக்குப்போறேன்ல’
‘எதுக்கு ? இப்பம் உனக்கு சோலி இல்லியா?’
‘ நான் அடிச்சுப்போட்டேன்’
‘யார?’
‘கண்ட்ராக்க’
எனக்கு பெரிதாக உறைக்கவில்லை. முன்னால் நின்றவர் டிக்கெட் வாங்கிவிட்டிருந்தார். என் முழு சிந்தனையும் அதில்தான் இருந்தது. சட்டென்று முடிவெடுத்தேன் ‘நீ உள்ள வா பேசுவம்’
‘எங்க?’
‘லே நாம தியேட்டருக்கு உள்ள போயி இருந்து பேசுவம்லே…இங்கிண எதுக்கு நிக்கோம்? வெயிலுல்லா?’
நாகமணி பிரமைபிடித்தவன் போல ஒப்புக்கொண்டான். இரண்டு ஐம்பது பைசா டிக்கெட்டுகள் எடுத்தேன். உள்ளே சென்று கடையைப்பார்த்தேன். அங்கே ஒரு சின்னப்பையன் அமர்ந்திருந்தான்.
‘பொரிகடல இருக்கா?’ என்றேன்.
‘சர்பத்து இருக்கு’
அது என்ன பதில் என யோசிக்கும்போது நாகமணி ‘லே அடிச்சுப்போட்டேம்ல!’ என்றான்.
‘யார?’
‘கண்ட்ராக்க’
சிலகணங்கள் கழித்து எனக்கு கடும்பீதி உருவாகியது “ஆர?’ என்றேன் அழுத்தமாக.
‘என்னைய அடிச்சாம்லே…ஒரு ஒயறு பாத்துக்க…இந்தா இம்பிடு தடியுள்ள ஒயற ஒரு கம்பில கெட்டி வச்சிருக்கான். அதக்கொண்டாக்கும் பயக்கள அடிக்கியது… என்னை எம்பிடுநாள் அடிச்சிருக்கான் தெரியுமா? இந்நா கண்டியா?’
பூரான் பூரானாக சிவந்து தடித்திருந்த புஜத்தைக்காட்டினான். ‘உள்ள குறுக்கில பெரிய தளும்பு இருக்குலே…வேணுமானா காட்டுதேன்’
‘வேண்டாம்’
‘இண்னைக்கு நான் ஒண்ணுமே செய்யல்ல… மத்தபயலாக்கும். கண்ட்ராக்கு வந்து கேட்டப்பம் அவன் சறுவிப்போட்டான். அவரு ஒயறு சாட்டைய எடுத்து என்னைய அடிக்கத் தொடங்கிப்பிட்டாரு… மோலாளி வேண்டாம் மோலாளி வேண்டாம் மோலாளி கண்ணுல பட்டிரும் மோலாளீண்ணு கெடந்து நெலவிளிக்கேன். கேக்கல்ல….பொறத்தால நீங்கினப்ப மிசினிலே காலுபட்டு மலந்து விளுந்துபோட்டேன். கீள போட்டு அடிக்காரு…தொடையில அடிய பாத்தியா?’
‘நீ என்ன செய்தே?’ என்றேன்.
‘கீள விளுந்தப்பம் எனக்கு என்னண்ணோ கேறி வந்துபோட்டுலே… எந்திரிச்சு கைய ஓங்கி ஒரு அடிவச்சுகுடுத்தேன்…செள்ளையில….அப்பிடியே நிண்ணுபோட்டாரு… அந்தால எறங்கி ஓடிவந்தேன்’
அவனைப் பார்த்து உள்ளே இழுத்துக்கொண்டது யாருக்காவது தெரியுமா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. ‘நீ எங்கியாக்கும் ஓடினே?’
‘ஹாஸ்டலுக்கு’
‘வெளங்கிரும்…லே அவனுக உன்னையப்பிடிக்கதுக்கு அங்கல்லா முதல்ல போவானுக?’
‘ஆமா’
‘ சொல்லுகதக்கேளு.. நாம இப்பம் நேராட்டு கம்மூணிஸ்டு ஆப்பீசுக்காக்கும் போகணும்’
’அதுக்கு அங்க தோளர் இருக்கமாட்டாருல்லா?’
அவரு ராத்திரிதான் வருவாரு…ஆனா அங்க அதுக்குள்ள வந்து அடிக்க மாட்டானுக…லே, அவரு பெரிய காண்டிராக்டராக்கும். அடியும் வேங்கிட்டு சும்மா இருப்பாருண்ணு நெனைக்கியா?’
‘இப்பம் என்னல செய்யியது? அறிவுகெட்டுப்போயி அடிச்சாச்சு… லே கொண்ணு போட்டிருவானுகளாலே?’
‘பாப்பம்…இப்பம் நீ வெளியே எறங்கினா ஆபத்தாக்கும்…’ என்ன செய்வதென்று தெரியவில்லை.
அதற்குள் உள்ளே பாட்டு போட்டார்கள்.
‘வா உள்ள போயி இருப்பம்’
‘என்ன சினிமா மக்கா? சிவாஜி படமா” என்றான் நாகமணி ஆவலாக.
’சினிமாவால பாக்கப்போறே? லே, அவனுக இப்பம் எங்கிண வாறானுகண்ணு தெரியல்ல… உனக்க பொறத்தால எறங்கியிருப்பானுக’
நாகமணி ‘லே, எனக்கு நீ அஞ்சுரூவா குடு… நேராட்டு ஊருக்குப்போறேன்…நாலுமணிக்கு பஸ்ஸு இருக்கு’ என்றான்
’பைசா தாறேன். ஆனால் அவனுக பஸ்சில பாக்கமாட்டானுகளா?’
சட்டென்று நாகமணி விரைபப்டைந்தான் ‘லே…அவனுகளாக்கும்’
தெருவில் இருவர் சைக்கிளில் வந்திறங்கி அந்தப்பகுதியை கண்சுழற்றிப் பார்ப்பதைக் கண்டேன்.
‘இவனுகளாலே?’
‘ஆமாலே…இவனுக கண்டிராக்குக்க சோலிக்காரனுகளாக்கும். சுமடு எடுக்கப்பட்டவனுக’
‘ஓடாதே’ என்று பிடித்துக்கொண்டேன். ’ஓடினாத்தான் திரும்பிபாப்பானுவ’
அவர்கள் மீண்டும் சைக்கிளில் ஏறி மிதித்துச்சென்றார்கள். பின்னால் செல்பவனின் வேட்டிக்குள் வெட்டுகத்தி கிடப்பதை காணமுடிந்தது
‘வாலே’ என்று மூச்சிரைக்க உள்ளே ஓடினேன். நாகமணி பெஞ்சில் இருந்ததும் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தான். திரையரங்கில் ஏழெட்டுபேர்தான். பெஞ்சில் நான்கே பேர்.
’நல்லகாலம்லே நீ அப்பிடியே போயிருந்தா இந்நேரம் பிடிச்சிருப்பானுவ’ என்றேன்.
சட்டென்று நாகமணி விசும்பி அழ ஆரம்பித்தான்.
’ஏல…என்னல? லே வேண்டாம்…லே வல்லவனும் பாப்பானுகள்லே…லே’ என்று அவனைச் சமாதானப்படுத்தினேன்.
‘என்னைய கொண்ணு போட்டிருவினும்லே…கொண்ணு போட்டிருவினும்லே…எனக்க அப்பனுக்கு ஆருமில்ல மக்கா…பாவப்பட்ட குடும்பமாக்கும்….மலைகேறி பட்டினி கெடக்கப்பட்ட சாதியாக்கும்லே’
‘லே என்ன… அப்பிடிக் கொண்ணுபோடுவானுகளா? அடிச்சா பாப்பம்லே’
அவன் மேலும் விசும்பினான். ‘கொண்ணு போட்டிருவினுமே..எனக்க மலமுத்தம்மோ கொண்ணு போட்டிருவானுகளே….எனக்க அப்போ என்னைய கொண்ணு போட்டிருவானுகளே’
‘லே இரு….என்னாண்ணு சொல்லு….லே ஏன் பயருதேண்ணு சொல்லு’ நான்குபக்கமும் பார்க்தபின் ‘லே ஆளுபாக்குகானுகலே’
அவன் அடக்கிக்கொண்டான். கையால் மூக்கையும் கண்களையும் துடைத்தான். விசும்பலை அடக்கினான்.
‘என்னல சொல்லு’
‘ அடிச்சப்பம் கண்டிராக்கு என்ன சொன்னான் தெரியுமா?’ என்றான்
‘என்ன?’
‘லே நான் பெலையப் பயல்லா….’
‘ஓ’
‘ஈனச்சாதிக்காரன் கைய வச்சுப்போட்டாம்லேண்ணு சொல்லிட்டு பொறத்தால ஓடிவந்தாம்லே… நான் சாடி ரோட்டில ஏறினப்ப லே உன்னைய எங்க போனாலும் கொண்ணு போட்டுட்டு திருச்செந்தூர் போயி மொட்டைய போடுவேன்லேண்ணு சத்தம்போட்டான்’
கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் தெளிவு வந்தது. எங்களூரிலும் அடிதடி எப்போதும் நடப்பதுதான். ஆனால் ஒரு தீண்டாச்சாதியினன் பிறரை திட்டினால் ஊரேகூடி அவனை வேட்டையாடி கொண்டுவந்து கட்டிப்போட்டு அடிப்பார்கள். கைநீட்டிவிட்ட ஒருவன் ஆனைக்கயத்தில் செத்து மிதந்திருக்கிறான்.
எனக்கு வந்த முதல்சிந்தனையே எப்படியாவது நாகமணியை அங்கேயே விட்டுவிட்டு வெளியே போய் விடுதியை அடைந்து போர்த்திக்கொண்டு சுருண்டு படுத்துவிடவேண்டும் என்பதுதான். ஆனால் மறுகணம் அப்படிச் செய்யக்கூடாது என்று பட்டது. நான்குமாதம் முன்பு இங்கே விடுதிக்கு வருவதற்கு முன்னால் என்றால் அப்படித்தான் செய்திருப்பேன். இப்போது வளர்ந்துவிட்டேன் என்று தோன்றியது. மேலும் இந்தமாதிரி சாகஸங்களைச் செய்யவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
என்னை அடிக்கமாட்டார்கள். நான் உயர்ந்த சாதிதான். ஆனால் அதைச் சொல்ல அவர்கள் நேரம் தரவேண்டுமே. நாகமணியின் சாதியில்கூட சிலர் வெள்ளையாக இருக்கிறார்கள். மேற்கொண்டு சிந்திக்கமுடியாமல் என் மூளையின் எல்லா சக்கரங்களும் இறுகி நின்றன.
சினிமாவில் ரஜினிகாந்தின் தலை அநியாயத்துக்கு கலைந்திருந்தது. அதைமேலும் மேலும் கலைத்தபடி வசனம் சொல்லிக்கொண்டிருந்தார். சிவாஜியின் முடி ஒரு பெரிய டெலிஃபோனை அவரது தலைமேல் வைத்ததுபோல உறுதியாக இருந்தது. அவர் தலைகீழாக பல்டியடித்தால்கூட அது கலையாது. ஆனால் என்ன கதை என்று எந்த பிடியும் கிடைக்கவில்லை.
நாகமணி எழுந்தான் ’லே எங்கல போறே?’
’பாத்துட்டு வாறேன்ல’
விசாரித்தவர்கள் திரும்பிவந்து பக்கவாட்டில் இருந்த சைக்கிள் பஞ்சர்கடைகளில் விசாரித்தால் திரையரங்குக்குள் வந்துவிடமுடியும் என்று பட்டது. விசாரிக்கவும் செய்வார்கள். ஏனென்றால் மேலும் கொஞ்சதூரம் சென்றால் நாகராஜாகோயில் விலக்கு. எதிர்பக்கம் மீனாட்சிபுரம் பேருந்துநிலையச்சாலை.
நாகமணி ஓடிவந்து ‘லே முன்னால நிக்கானுவ’ என்றான்
‘உள்ள வாறானுகளாலே?’
‘இல்லலே…வெளிய நிக்கானுக…இப்பம் நாலுபேரு இருக்கானுக’
என் மூச்சு குளிர்ந்த திரவம் போல நெஞ்சுக்குள் கனமாக இருந்தது. அதை முழு விசையாலும் உந்தி வெளியேவிட வேண்டியிருந்தது.
நாகமணி ‘லே என்னல செய்யுகது?’ என்றான்.
‘உள்ள விடமாட்டானுகலே…இது தியேட்டருல்லா?’
‘லே அம்பதுபைசாவுக்கு டிக்கெட்டு எடுத்தா ஆரையும் உள்ள விட்டுருவான்லா”
அது எனக்கும் சரியாகப்பட்டது. அப்படியென்றால் ஏன் வெளியே நிற்கிறார்கள்? சட்டென்று தெளிவாகியது. அவர்களில் ஒருவன் சென்று மறுபக்கம் கடைகளில் விசாரிக்கிறான். அவன் வருவதற்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.
‘லே நாகம் வாலே’
இருவரும் பாய்ந்து மறுபக்கம் சென்றோம். பெண்கள் அமர்வதற்கான பகுதி. அங்கே யாருமே இல்லை. அதற்கு அப்பால் மூங்கில்தட்டிக்கதவு மூடப்பட்டிருந்தது. தார்பூசப்பட்ட தட்டி. அதைப்பிடித்துத் தள்ளினேன். திறந்துகொண்டது. மறுபக்கம் வெயில் கண்ணைக்கூசியது.
’பெண்கள் களிப்பரை’ யின் மீது ஒரு பெண்ணை கரிய பெயிண்டால் வரைந்திருந்தனர். இரண்டு வட்டமாக முலைகள். அப்பகுதி முழுக்க பல பதங்களில் மலம். நாலைந்து காகங்கள் எழுந்து பறந்து மதில் மேல் அமர்ந்தன.
’லே எங்கல போறே?’ என்றான் நாகமணி
’முன்பக்கமாட்டு போக முடியாதுலே…இப்பிடியே அந்தால சாடிருவோம்’
மலம் மீது கால்வைக்காமல் விதவிதமாக நடனமிட்டு கழிப்பறையை அடைந்தோம். அப்பகுதியே கைவிடப்பட்டு கிடந்தது. செங்கல்லாலும் காரையாலும் கட்டப்பட்ட உயரம் குறைவான கழிப்பறை. கதவு இல்லை, ஸ்வஸ்திக வடிவ பாதை. உள்ளே எருக்கு முளைத்திருந்தது. முழுக்க முழுக்க மலக்காடு. இரவு தாத்தா தியேட்டரைப்பூட்டிக்கொண்டுசென்றபின் உள்ளே யார்யாரோ வந்து தங்குகிறார்கள் என்று தோன்றியது. விதவிதமான குப்பைகள். உடைந்த குப்பிகள். மட்காமல் மண்ணோடு கலந்த துணிகள். காகிதங்கள். ஏராளமான நிரோத் உறைகள் நிறம்வெளிறி தொய்ந்துகிடந்தன. கிழட்டு ஆட்டின் முலைக்காம்புகள் போல. குடல் துண்டுகள் போல.
மறுபக்கம் சுவர் கொஞ்சம் உயரமானது. ‘லே வளி இல்லலே’ என்றான் நாகமணி
‘ஏறிக்குதிலே…கண்ணாடி பதிச்சிருக்கானாண்ணு பாரு’
கண்ணாடி பதிக்கப்படவில்லை. நாகமணி மேலே பிடித்து ஒரே எம்பில் தொற்றி ஏறினான். மறுபக்கம் குதித்துவிட்டான்.
எம்பியபோது என்னால் மதில் விளிம்பைப் பிடிக்கமுடியவில்லை. மூன்றுமுறை எம்பியபின்புதான் பிடித்தேன். காலை மதிலில் ஊன்ற இடம் கிடைக்கவில்லை. அதற்கு பின்பக்கம் பேச்சொலி கேட்டது. நாங்கள் செய்த பிழை உடனே மண்டையை அறைந்தது. அந்த தட்டிக்கதவை சரியாக திரும்பி மூடாமல் வந்துவிட்டோம்.
மதில்மேல் ஏறி கீழே பார்த்தேன். அகலமான சாக்கடை கரிய நதிபோலச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. மொத்த நாகர்கோயிலின் சாக்கடையும் நாகராஜாகோயில் வழியாக திரண்டு சரிந்து வந்து முத்து தியேட்டரின் முன்பாகத் திரும்புவதைக் கண்டிருக்கிறேன். அது இந்தவழியாகத்தான் வளைந்து செல்கிறது என்று புரிந்தது.
‘லே ஆளமில்லலே…சாடு’ என்றான் நாகமனி. அவனுடைய தொடை வரை கரிய சாக்ஸ் போட்டதுபோல இருந்தது.
கண்ணைமூடிக்கொண்டு குதித்தேன். சளக் என்று சேற்றில் கால்கள் மாட்டின. சரிந்து ஓடைக்குள் கிடந்த எருக்குச்செடியை பற்றிக்கொண்டு காலைத் துழாவி வைத்து மறுபக்கம் ஏறிக்கொண்டேன். நாகர்கோயிலில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை என்பது ஒரு துளைதான். மலம்கழித்து அதன் மேல் நீரூற்றி தள்ளி வெளியே சாக்கடையில் விட்டுவிடுவார்கள். அதெல்லாம் வீட்டுக்குப் பின்னாலும் முன்னாலும் நொதித்து வெயிலில் காய்ந்து கருகி ஒழுகி வந்து பெரும்சாக்கடையில் கலக்கும்.
ஆனால் சாக்கடை வேறு எதுவோ போல வாசமெடுத்தது. அதில் யாரோ ஒரு புட்டிச்சாராயத்தையும் ஊற்றிக்கலந்ததுபோல. மறுபக்கம் நாகமணி நின்றுகொண்டு ‘லே வாலே…வந்திருலே’ என்றான்.
புதர்கள் வழியாக மறுபக்கம் சென்றேன். சில்லென்று நிழலாக இருந்தது. அந்த நிலமே தாழ்வானது. குட்டையாக புன்னைமரங்களும் வேறு சிலமரங்களும் படர்ந்திருக்க சாக்கடையின் ஈரம் மண்ணெல்லாம் ஊறிப்பரவியிருந்தது. அந்தப்பகுதி எங்கும் பன்றிகள். பெரிய பெரிய சினைப்பன்றிகள். உற்சாகமான குட்டிகள். கண்களில் மதமும் வாயில் கோரைப்பல்லும் கொண்ட ஆண்பன்றிகள். ஆகாயத்தாமரை மண்டிய பள்ளமான சேற்றுப்பகுதி முழுக்க பன்றிகள் புதைந்து கிடந்தன. நெளிந்தன.
கன்னங்கரிய ஈர மண். ஒரு பெரிய பன்றி மேல் நடப்பதுபோலிருந்தது. அந்த மண்ணே எழுந்து நடப்பதுபோல பன்றிகள் எழுந்து வால் சுழற்றி ஓடின. அவை நாங்கள் வருவதை உணர்ந்து விட்டதுபோல. பின்பக்கம் சுவர் மீது ஒருவன் ஏறி எங்களைப்பார்த்துவிட்டான். ‘லே அந்நா போறான்லே…அவந்தாம்லே….’
வேறு குரல்கள் மெல்ல கேட்டன.
‘கூட இன்னொருத்தனும் இருக்கான்லே….’
‘ஒளுகிணசேரிக்குப்போறானுகலே’
நானும் நாகமணியும் ஓட ஆரம்பித்தோம். பன்றிவிட்டைகளைப் பொறுக்கி சிறிய சிறிய குவியல்களாக வைத்திருந்தார்க்ள். அவற்றைச் சிதறடித்தபடி ஓடி மறுநுனியில் தெரிந்த குடிசை வரிசைகளுக்குள் சென்றோம்.
உண்மையில் அவை குடிசைகள் என்பதை அங்கே சென்றபோதுதான் புரிந்துகொண்டேன். செத்தையும் குப்பையும் குவித்திருப்பதாகவே தோன்றியது. இடுப்பளவுக்குக் கூட உயரமில்லாத குடிசைகள். இரண்டுகைகளையும் விரிக்குமளவுக்குக் கூட அகலமற்றவை. பாலிதீன்தாள்கள், சினிமாபோஸ்டர்கள், பழைய தகரங்கள் என எல்லாவற்றையும் கூரையாகப்போட்டிருந்தார்கள். குடிசைகளுக்கு வரிசையும் இல்லை. எல்லாகுடிசைகளுக்கு நடுவிலும் கரிய சாக்கடை ஓடியது. அந்தப்பெரிய சாக்கடை பரவித்தேங்கி ஊறிய பெரிய சதுப்பு அது.
கரியசேற்றில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சொறி பிடித்த உடலும் சிக்கான தலையும் கொண்டவை. எல்லா பிள்ளைகளுக்கும் மூக்குக்கு கீழே சளி வழிந்த தடம் சிவந்த புண்ணாக மாறி கொதகொதத்திருந்தது. குடிசைகளில் மனிதர்கள் இருப்பதுபோலத் தெரியவில்லை.
‘லே இந்த வளி எங்கபோவுதுலே?’ என்றான் நாகமணி
‘தெரியல்ல…இது தோட்டிகளுக்க எடமாக்கும்…..அந்தால பளையாறு போவுதுண்ணு நினைக்கேன்’
எனக்கு உண்மையில் அங்கே எந்த திசையும் புரியவில்லை. மொத்த நாகர்கோயிலும் தலைக்குமேல் எங்கோ இருப்பதாகப்பட்டது. ஒருமுறை எங்கோ விருந்தாளியாகச் சென்றபோது விசித்திரமான கழிப்பறையில் மலம் கழிக்கச் சென்றேன். பத்தடி ஆழமான பெரிய குழிக்குமேலே இரண்டு தென்னைமரத்தடிகளை போட்டிருந்தனர். ஆழத்தில் நொதித்த கரிய மலம் குமிழியிட்டது. இரண்டு தடியிலும் கால்வைத்து அமர்ந்தபோது கிச் கிச் என்று சத்தம் கேட்டு கீழே பார்த்தேன். ஏராளமான எலிகள் கீழே மலத்தில் திளைத்துக்கொண்டிருந்தன. அந்தப்பகுதிக்கு மேலே நகரத்தின் குதம் தெரிவதுபோல தோன்றியது.
ஒரு குடிசைமுன் அந்தக்கரிய மண்ணையே அள்ளிச்செய்ததுபோன்ற ஒரு கிழவி அமர்ந்திருந்தாள். பீளைபடிந்த கண்கள் அவள் நெடுநாள்முன்னரே செத்துவிட்டாள் என்று எண்ணச்செய்தன. அதன்பின்புதான் பல குடிசைகளுக்குள்ளும் அப்படி கிழங்கள் கிடப்பதைக் காணமுடிந்தது. சாக்கடை கசிந்தோடிய தெருவும் குடில்களின் உட்பகுதியும் ஒரே உயரத்தில் இருந்தன. நாய்கள் ஏதும் கண்ணுக்குப்படவில்லை. ஒருவேளை பகலில் அங்கே நாய்கள் இருக்காது போல.
தலைக்குமேலே ஒழுகிணசேரி பாலம் சென்றதைக் கண்டேன். பேருந்துகள் இரைச்சலுடன் சென்றுகொண்டே இருந்தன. ஏதோ டீக்கடையில் சினிமாப்பாட்டு ஒலித்தது. தளதளவென நாலைந்து பன்றிகள் சாக்கடையில் இறங்கி நீந்திச்சென்றன. இரண்டு குழந்தைகள் வந்து எங்களைப் பார்த்து நின்றன.
‘லே மேலே போனா கொண்ணு போட்டிருவானுக….ஒளுகிணசேரிக்கு போறதால்ல அங்கிண சொன்னானுவ?’
நாகமணியின் கண்கள் இரு சிப்பிகள் போல இருந்தன. அதிகமாகப் பேசினால் அவன் அங்கேயே படுத்து அழ ஆரம்பித்துவிடுவான் என்று தோன்றியது. எனக்கு அப்பகுதியின் வரைபடமே மனதில் வரவில்லை. அப்படி ஒரு நிலப்பகுதி நகரத்துக்கு நடுவே இருப்பதை அங்கே வாழ்பவர்கள் அன்றி வேறு எவராவது அறிந்திருப்பார்களா என்றே சந்தேகமாக இருந்தது. சர்க்காருக்கோ போலீஸுக்கோ கூட தெரிந்திருக்காது.
எப்படியானாலும் மேலே செல்லாமல் பக்கவாட்டில் சென்றுகொண்டே இருப்பதுதான் நல்லது என்று முடிவுசெய்தேன். ஆகாயத்தாமரை மண்டிய பிரம்மாண்டமான ஓடையில் கரிய நீரைக்கடக்க ஒரு தென்னந்தடி போடப்பட்டிருந்தது. அதன் வழியாக மறுபக்கம் சென்றோம். ஓடைக்கரை முழுக்க சிறிய குடிசைகள். சில குடிசைகள் சிதைந்து செத்து உதிர்ந்த வௌவால் போல தரையில் ஒட்டிக்கிடந்தன. நகரத்துக்குள் அத்தனை பன்றிகளா என்ற பிரமிப்பு தோன்றியது.
அப்பால் நாலைந்து தென்னைமரங்கள் நின்ற ஒரு மேடு தெரிந்தது. அதில் ஏறி நின்றால் அந்த இடம் எது என்ற ஒரு எண்ணம் வரும் என்று தோன்றியது. அதை நோக்கிச் செல்ல பல சிறு சாக்கடை ஒழுக்குகளைத் தாண்டவேண்டியிருந்தது. அங்கே வெயிலே இல்லை. சூரியனே வராத இடம்போல. இருட்டு நிரந்தரமாகக் குடியிருக்கும் இடம்போல. ஒரு துளி ஒளி விழுந்தாலும் கரியசேறு அதை உறிஞ்சிக்கொண்டுவிடும்போல.
மேட்டில் நின்றுபார்த்தபோது ஒரு அபாரமான காட்சியைக் கண்டேன். மொத்த நகரையும் பின்பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்காக வீடுகளின் பின்பகுதிகள். கதவோ சன்னலோ அற்ற சிமிண்ட் பரப்புகள். செங்கல்பரப்புகள். ஓலைத்தட்டிப்பரப்புகள். எல்லா வீடுகளும் அப்பகுதியை அருவருத்து திரும்பிக்கொண்டவை போலிருந்தன. வீடுகளின் அந்தரங்கக் கழிவுறுப்புகள் போல ஓட்டைகள் திறந்திருந்தன, குழாய்கள் கரிய நீரைக்கொட்டிக்கொண்டிருந்தன. இடுக்குகள் வழியாக குப்பைகள் பிதுங்கி வழிந்துகொண்டிருந்தன. அந்தக் குப்பைகளின் அருகே மனிதர்கள் தென்பட்டனர்.
ஊமத்தை போல ஊதாப்பூ பூத்த சேற்றுச்செடி வழியாக மறுபக்கம் சென்றோம். அங்கே குப்பையில் இரு கிழவிகள் காகிதம் பொறுக்கி சாக்குகளில் போட்டுக்கொண்டிருந்தனர். எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஏறிட்டுப்பார்த்த கிழவியிடம் நாகமணி ‘ஆயா..இந்தால போனா வடசேரிக்கு போலாமா?’ என்றான்.
கிழவி எங்களை ஏதும் புரியாமல் பார்த்தாள். வாய்க்குள் கரிய பல் ஒன்று தென்பட்டது.
மீண்டும் கேட்டேன் ‘வடசேரி…வடசேரி இங்கயா இருக்கு?’
கிழவி ‘டவுணு’ என்றாள் கை நீட்டி சுட்டிக்காட்டியபடி.
‘லே நேராட்டு ரோட்டில கேறீராத…அங்கிண நிக்கப்போறானுக’ என்றேன். ’அவனுகளுக்கு நம்மளக்காட்டிலும் இந்த எடம் தெரியும் கேட்டியா?’
‘பின்ன?’
‘இந்த சந்து வளியாட்டுபோவம்….இது வடசேரியாக்கும்…. வஞ்சியாதித்தன்தெருவுக்குள்ளார போனா அங்கிண கச்சியாப்பீஸு இருக்கு….அங்க போவம்’
நாகமணி சட்டென்று விசும்பி அழ ஆரம்பித்தான். ’நான் போறேன்… போயி சாவுதேன்…என்னைய கொண்ணு போட்டிருவினும்…என்னைய கொல்லாம விடமாட்டானுக….மலையம்மோ எனக்கு வய்யாமே…என்னைய கொண்ணு போட்டிருவானுகளே’
‘லே நாயே…இங்க நிண்ணு அளுதா வல்லவனும் பாப்பானுவலே…வாலே’
அவனைப்பற்றி சந்துக்குள் ஏற்றிக்கொண்டேன். குப்பைகள் மண்டிய சாக்கடைச்சந்துக்குள் தொடர்ச்சியாக மலம் பிதுங்கிய ஓட்டைகள் திறந்திருந்தன. ஆனால் அந்நேரத்தில் கண்ணாடிச்சில்லுகளில் கால் படாமல் தாவித்தாவிச்செல்வதைத்தவிர எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அப்போதுகூட நாகமணியை அப்படியே விட்டுவிட்டு நழுவிவிட்டாலென்ன, நமக்கெதற்கு வம்பு என்ற எண்ணம் அவ்வப்போது எழுந்துகொண்டிருப்பதை நானே ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஆனால் அபாயம் விலகிவிட்டது, நம்மை எவரும் அடிக்கப்போவதில்லை என்ற எண்ணமும் உள்ளூர இருந்தது.
அப்பால் வெளிச்சமாக திறந்திருந்த நீள்சதுரத்தில் இருந்து ஓர் ஒற்றையடிப்பாதை உள்ளே வந்தது. சாக்கடையில் விழாமல் ஓரமாக, சுவரைப்பற்றிக்கொண்டுதான் அதில் நடக்கமுடியும். அந்தப்பாதை ஒரு வீட்டுவாசலில் முடிந்தது. அங்கே நான்கு வாசல்கள். ஓடுபோட்ட மிகச்சிறிய வீடு. முன்பக்கம் வாசல் இருந்த பெரிய பழைய வீட்டின் கொல்லைப்பக்கத்து தொழுவத்தை வீடாக ஆக்கி வாடகைக்கு விட்டிருந்தார்கள்.
வாசல் வழியாக உள்ளே பார்த்தேன். உள்ளிருந்து ஒரு தாவணிபோட்ட பெண் எட்டிப்பார்த்தாள்.
‘ஆரு?’ என்று பயத்துடன் கேட்டாள். உள்ளிருந்து ஒரு கிழவி அமர்ந்தபடியே சாய்ந்து கவனித்தாள்.
‘இங்கிண வஞ்சியாதித்தன் தெருவுக்கு எப்படி போறது?’
‘நேராட்டு போனா கொளமாக்கும். அத வளைஞ்சு போவணும்’ அவளுக்கு நாங்கள் யார் என்ற பயம் மறையவில்லை. மெலிந்து உலர்ந்த பெண். அந்தச் சிறிய இடத்தில் ஜன்னலுக்கு மேலே தொங்கிய பாசிமணி சித்திரத்தை அவள்தான் செய்திருக்கவேண்டும்.
’கொளமிருக்குலே…களுவிட்டு போலாம்’ என்றேன்.
‘லே உனக்க காலிலே ரெத்தம்!’ என்றான் நாகமணி.
என் குதிகால் வெட்டுபட்டு பிளந்திருந்தது. நின்ற இடத்தில் ரத்தம் பரவிக்கொண்டிருந்தது. ரத்தத்தின் வெம்மையை மட்டும் மெலிதாக உணர்ந்தேன். என்னுள் இருந்து மிக அந்தரங்கமாக அது ஒழுகிச்செல்வதாகத் தோன்றியது.
‘வாலே பாப்பம்’ என்று மெதுவாகச் சென்று சாலையைப்பார்த்தேன். ஒளி பரவி சலனம் நிறைந்து ஓசைகள் பெருகி கொப்பளித்துக்கொண்டிருந்தது தெரு. எனக்கு கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.