பஞ்சமும் ஆய்வுகளும்

அன்புள்ள சார்,

நலமா?

உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன்.

பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு.

சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட!

பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. காரணம் இதுவரையில் நான் படித்த புத்தகங்களினால் ஊகித்த சரித்திரம்தான்.

சென்னையில் நான் வளர்ந்ததெல்லாம் அந்த க் கால்வாயின் ஓரத்தில். அதனாலேயோ என்னவோ .. படிக்கும் புத்தகத்தில் அதைப் பற்றி வரும்போதெல்லாம்… ஒரு சிலிர்ப்பு!!!!

முதலாவது, தெலுங்கில் ஏனுகுல வீர சுவாமி அய்யா என்கிறவரின் ‘நா காசியாத்ரா சரித்ரா'(என் காசி யாத்திரை சரித்திரம்) என்ற புத்தகம். தெலுங்கின் முதல் பயண வரலாறு நூல் அதுவென சொல்வார்கள். 1835 வாக்கில் எழுதியது. அதில் அவர் பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர்களின் சேவைகள்.. அதாவது கஞ்சித்தொட்டி அமைப்பதற்கு செய்த உதவிகளை ஆகா ஓகோ வென்று புகழ்வார்.

இரண்டாவது, எஸ்.முத்தையாவின் நூல்கள். பக்கிங்காம் கால்வாய்… பஞ்சத்துகாக (மட்டுமே) வெட்டப்பட்டது என்று தெரிந்து கொண்டது அவர் மூலம்தான். அதிகார ஆவணங்களை மட்டுமே.. ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதுவது அவருடைய வழக்கம்.

மூன்றாவது தெலுங்கில் ஜி. கல்யாண ராவின் “அன்டராணி வசந்தம்” (தீண்டத்தகாத வசந்தம்). அதில்.. ஓங்கோல்.. நெல்லூரில் தலித்துகளின் பஞ்சத்தை போக்க பக்கிங்காம் கால்வாய் வெட்டும் வேலை எவ்வளவு உதவி புரிந்தது என்று எழுதி இருப்பார்.

இந்து மேல் சாதிகளின் கொடுமைகளில் இருந்து சற்றேனும் விடுபடுவதற்கு உதவியதாகக் குறிப்பிட்டு இருப்பார்.
ஆந்திராவில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் இருந்து தலித்துகளின் சோகத்தை சொன்ன நூல் அது. அந்த பக்கிங்காம் கால்வாய் கட்டும்போதுதான்.. இன்று சென்னையில் இருக்கும் நெல்லூர், ஒங்கோலைச் சேர்ந்த தெலுங்கு தலித் மக்கள் சென்னையில் குடிபெயர்ந்தார்கள் என்று சொல்வார்கள். சென்னையில் எங்கள் பூர்வ சொந்த பந்தங்கள் அப்படி குடிபெயர்ந்தார்கள் என்று நான் நம்புகிறேன்.

சரி.. ‘இத்தனை’ வகையில் தலித்களின் முன்னேற்றத்துக்கு ‘பாடுபட்ட’ ஆங்கிலேய அரசை சற்று உன்னதமாகவேதான் நினைத்தேன்.

பக்கிங்காம் ஊழல்… பெரிய திறப்புதான்! பக்கத்திலேய கடல் இருக்கும்போது ஏன் பக்கிங்காம்? .. நான் யோசிக்கவே இல்லை.

ஏனுகுல வீர சுவாமி அய்யாவின் நூல்.. ஒரு ஆங்கிலேய அரசின் கீழ் வேலை புரிந்த இந்திய அதிகாரியின் துதி பாடல்.

முத்தையா.. ஆவணங்களை வைத்து மட்டுமே எழுதும் கறாரான சரித்திர ஆர்வலர்.

கல்யாண் ராவ்… மார்க்சிய தலித்திய- வரலாற்றுச் சிந்தனையாக நினைக்கிறேன்(சரிதானா?)

ஒரு கால்வாய் விஷயத்திலேயே எத்தனை பார்வைகள்!

தமிழ்நாட்டில் தலித் மக்களின் பஞ்சம் பற்றி… விஜயநகர காலத்துக்கும்… அடுத்து வந்த ஆங்கிலேயர் காலத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் சொன்னது இப்பொழுது கொஞ்சம் தெளிவாக புரிகிறது.

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ,

உண்மையில் இவ்விஷயத்தில் நாம் வரலாற்றை புறவயமாகப்பார்க்க இத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன.

இதில் வெட்கக்கேடான ஒரு விஷயம் உள்ளது. பிரிட்டிஷார் காலத்து ஆவணங்களை ஆராய்ந்து பிரிட்டிஷ் ராஜ் காலத்து பொருளியல்நிலையின் உண்மைகளை வெளிப்படுத்தவும் பிரிட்டிஷ்காரர்களே வரவேண்டியிருந்தது. எல்லா துறைகளைப் போலவே நம்மூரில் உண்மையான ஆய்வுகளுக்கும் பெரும் பஞ்சம். நாம் அமர்த்யாசென் சொல்வதுபோல ‘விவாதிக்கும் இந்தியர்கள்’. நாம் நேரடி ஆய்வுகள் செய்யமாட்டோம். தரப்புகளை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ற தரவுகளை அங்குமிங்கும் தேடி சேகரித்து நமக்குள் ஓயாமல் விவாதித்துக்கொள்வோம்.

இப்போது பிபின்சந்திரா எழுதிய காலனியம் என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அரைகுறைத் தகவல்களை விருப்பத்துக்கு ஏற்ப திரிப்பது, சுயமான ஆய்வுகளைச் செய்யாமலிருப்பது, தன் தரப்பின்மீது மதநம்பிக்கைக்கு இணையான உறுதி கொண்டிருப்பது ஆகிய இந்திய இடதுசாரிகளின் இயல்புக்கு மிகமிகச் சிறந்த ஆதாரம் இந்நூல். யோசித்துப்பாருங்கள். இந்தியாவின் அரசியல் சிந்தனையை தீர்மானித்ததில் பெரும்பங்கு வங்க இடதுசாரி அரசியலெழுத்தாளர்களுக்கு உண்டு. ஆனால் வங்காளத்தையே பஞ்சத்தில் மூழ்கடித்து அழித்த உப்புவேலி பற்றி ஒரே ஒரு வங்காள ஆய்வாளருக்குக் கூடத் தெரியாது. அதை ஆராய்ந்து சொல்ல ஒரு ராய் மாக்ஸ்ஹாம் வரவேண்டியிருந்தது. அப்படியென்றால் அவர்கள் சொன்ன அரசியல் முடிவுகளுக்கெல்லாம் என்னதான் மதிப்பு?

மறுபக்கம் நம்மூர் தேசிய ஆய்வாளர்கள். அவர்கள் இன்னும் பலபடிகள் பின்னால் நிற்பவர்கள். அவர்களை கூர்ந்து பார்த்தால் அவர்கள் தேசியம் என முன்வைப்பது தங்கள் மதநம்பிக்கையை அல்லது சாதிப்பற்றை என்று தெரியும். ஆகவே புறவய ஆய்வைச் செய்யவோ அல்லது இடதுசாரிகளுக்கு வலுவான பதிலைச் சொல்லவோ அவர்களால் முடியாது. அதற்கும் கெய்ன்ராட் எல்ட்ஸ் போன்ற வெள்ளைக்காரன்தான் வரவேண்டியிருக்கிறது.

இன்று திட்டவட்டமான தகவல்களின் அடிப்படையில் இந்தியப்பெரும் பஞ்சங்கள் அரசால் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த மழையளவிலும் விளைச்சலிலும் பெரிய வீழ்ச்சி ஏற்படவில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் அரசின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இங்குள்ள பஞ்சம்தாங்கி அமைப்புகளைச் சிதறடித்துவிட்டது என்பதை விரிவான ஆய்வுகள் நிறுவிவிட்டன. இச்சூழலில் பஞ்சம்பற்றிய நம் பார்வைகள் மாறிவிட்டிருக்கின்றன.

ஆனால் அன்றைய யதார்த்தத்தில் நின்று பார்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலேயே எழுதியிருக்கிறார்கள். பஞ்சநிவாரணம் செய்யக்கூடாது என்று ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதற்கு லஞ்சமும் கொடுத்துக்கொண்டு மறுபக்கம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களை அடிமைகளாக கப்பலேற்றிக்கொண்டு அன்னியநாடுகளுக்குச் சென்ற தோட்ட உரிமையாளர்களான வெள்ளையர்களைக்கூட பஞ்சத்தில் கஞ்சி ஊற்றிய தெய்வங்கள் என்று புகழ்ந்து எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். அந்தப்பஞ்சத்தில் இந்தியாவின் அடிமட்ட மக்கள் கூட்டம்கூட்டமாகச் செத்தொழிந்தனர். அவ்விரு பஞ்சங்களும் வராமலிருந்தால் இந்த தேசம் தலித் தேசமாக இருந்திருக்கும். அந்தப்பேரழிவைக்கண்டு இந்தியாவின் உயர்குடி மனசாட்சி அசையவில்லை. இந்தியாவின் மடாதிபதிகளும் மன்னர்களும் அவர்களை அண்டிவாழ்ந்த பண்டிதர்களும் அதைப்பொருட்படுத்தவில்லை. அந்தப்பெரும்பஞ்சங்களைப்பற்றி இன்றுகூட நாட்டார்ப்பதிவுகளே உள்ளன, செவ்வியல் இலக்கியம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

அந்தச் சுரணைகெட்டத்தனம் நம் வரலாற்றில் கறையாகப் படிந்துகிடக்கிறது. சில உதிரி முயற்சிகள் ஆங்காங்கே இருந்தன என்பது உண்மை. ஆனால் இந்தியாவின் உயர்சாதி -உயர்வர்க்கம் பிரிட்டிஷ் சுரண்டலுடன் ஒத்துழைத்து இந்தியமக்கள் கோடிக்கணக்கில் சாவதை ஆதரித்தது என்ற வரலாற்று உண்மையை மழுப்பவே முடியாது.

இந்திய வரலாற்றில் சுவாமி விவேகானந்தரின் குரல்தான் இந்திய மரபின் தரப்பில் இருந்து எழுந்த முதல் தார்மீகக் குரல். சுவாமிஜி ஒரு துறவியின் எல்லைகளைக்கடந்து மிக ஆக்ரோஷமாக, உச்சகட்ட வன்முறையைத் தூண்டும் விதமாகக்கூட எழுதியும் பேசியும் இருக்கிறார். அங்கிருந்துதான் இந்தியாவின் தேசிய அறவுணர்வு கண்விழித்து எழுந்தது.

பிரிட்டிஷார் பஞ்சத்தில் சோறுபோட்டார்கள் என்ற அபிமானம் இந்த சுரணைகெட்டத்தனத்துக்கு எதிராக இந்தியாவில் பரவலாக எழுந்ததுதான். அவர்களின் சுரண்டலே பஞ்சத்துக்குக் காரணம் என்ற உண்மை மறைமுகமானது, அதை சாமானியர் அறியமுடியாது.

பஞ்சத்தை பெரும் கட்டுமானங்களுக்கு அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைய ஊழல் மலிந்த பிரிட்டிஷ் அரசில் அது அதிகாரவர்க்கம்- குத்தகைவர்க்கம் இணைந்து செய்த பெரும் கொள்ளையாக ஆகியது. இன்றும் சென்னையின் பெரும் செல்வந்தர்களாக விளங்கும் இந்தியர்கள் அன்று கிளைத்துவந்த குடும்பங்கள்தான். ஆனால் அக்கட்டுமானங்கள் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு கஞ்சி ஊற்றின. ஆகவே அவை பஞ்சத்திலிருந்து காக்கவந்த தெய்வவடிவங்களாக எளிய மக்களால் எண்ணப்பட்டன.

இதை வரலாறாக எழுதுபவர்களில் மூன்று தரப்பு உண்டு. தலித் தரப்பு அன்றைய ஆதிக்கசாதியின் சுரணையின்மை ஈவிரக்கமற்ற சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான சினத்துடன், பிரிட்டிஷ் அரசு செய்த சிறு நிவாரணங்கள் பற்றிய நன்றியுடன் அவ்வாறு எழுதுகிறது. அது புரிந்துகொள்ளத்தக்கதே. அவர்களில் சிலரே ஆய்வாளர்கள்.

இடதுசாரி ஆய்வாளர்கள் சிறிது முயன்றால் ஆய்வுகள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் தரப்பை நிறுவத்தேவையான தரவுகளை மட்டுமே சேகரிப்பார்கள். அவர்களுக்கு வசதியான ஒரு கொள்கை இருந்தது. அதாவது இந்தியா ஆசிய உற்பத்திமுறை கொண்ட தேசம். தேங்கிப்போன விவசாயம் கொண்டது. ஆகவே இங்கே பஞ்சம் வந்தது. என்னதான் சுரண்டல் அரசாக இருந்தாலும் பிரிட்டிஷார் ஐரோப்பியர். அவர்கள் இந்தியாவுக்கு நவீன நாகரீகத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுவந்தவர்கள். ஆகவே தேங்கிப்போன இந்திய சமூகம் பஞ்சத்தை போக்கிக்கொள்ள முடியாது. பிரிட்டிஷாரின் உதவியாலேயே அவர்கள் பஞ்சத்தை வெல்லமுடியும். இது மார்க்ஸ் சொன்னது.

இதிலிருந்து ஓர் உறுதியான தரப்பை உருவாக்கிக்கொண்ட இடதுசாரிகள் இந்தத் தகவல்கள் எவற்றையும் சரிபார்த்ததில்லை. ஒரு மதக்கொள்கை போலவே இதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். மார்க்ஸியத்தின் உள்ளுறையாக உள்ள ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அடிமைகள் நம்மூர் மார்க்ஸிய ஆய்வாளர்கள். ஐரோப்பியர்கள் மீட்பர்கள் என்று ஆத்மார்த்தமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள் அவர்கள்.

மார்க்ஸியர்களின் அந்த நம்பிக்கையின் ஒவ்வொரு வரியும் ஆதாரபூர்வமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளது இன்று. இந்தியவேளாண்மையின் வரலாறு தெளிவான தரவுகளின் அடிப்படையில் இன்று எழுதப்பட்டுவிட்டது. அது தேங்கிப்போன வேளாண்மை முறை அல்ல, அது உணவுற்பத்தியில் நிலைத்த தன்மையை அடையவும் இல்லை. ஆனாலும் இடதுசாரிகளைப்பொறுத்தவரை மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னால் சொன்னதுதான்.

நம் தேசியவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆய்வே செய்யவேண்டியதில்லை. அவர்கள் தரப்பு முழுக்க ரிக்வேதத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. வானியல் முதல் அல்ஜிப்ராவரை.

கடைசித்தரப்பு இந்திய தேசிய எதிர்ப்பாளர்கள். அவர்கள் பெரும்பாலும் பிராந்தியவாதம் பேசக்கூடியவர்கள். இந்திய தேசிய எதிர்ப்பே அவர்களின் பிராந்திய தேசியத்தின் ஆதாரம். ஆகவே இந்தியதேசியத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எல்லாவகையிலும் நியாயப்படுத்துவார்கள்.

ஆக, இங்கே உண்மையில் வரலாற்று ஆய்வே இல்லை. நமக்கு உண்மைகளில் ஆர்வமில்லை. இன்றைய நமது அரசியலுக்காக நேற்றை நம் விருப்பப்படி கட்டமைக்கவே நாம் ஆராய்ச்சி செய்கிறோம்.

வெள்ளைக்காரர்கள் நியாய உணர்வுடன் பார்த்து ஏதாவது செய்தால்தான் உண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைஇரணியல் கொட்டாரம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 8 – விழியொளி