புறப்பாடு 6 – தூரத்துப்பாலை

வடசேரி ராஜேஷும், நாகராஜாகோயில் ராஜாவும், சின்ன யுவராஜும் கொஞ்சம் மிதப்பு. கட்டுப்படியாகாது. மீனாட்சியும், தங்கமும், முத்துவும்தான் சகாயம். ஆனால் ஒழுகிணசேரி சரஸ்வதி போல வராது. அங்கே தரைடிக்கட்டுக்கு இருபதே பைசாதான். பிரிட்டிஷ் காலகட்டத்தில் நாடகக்கொட்டகையாக ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் ஓலை வேய்ந்திருந்தார்கள். பிறகு ஓடு. ஓட்டுக்கூரைக்கு அடியில் பனம்பிரம்பு வேயப்பட்டிருக்கும். அது கர்ப்பமான மாட்டின் அடிப்பகுதிபோல வளைந்து தொய்ந்திருக்கும்.

மேலடுக்கில் ஒரு ஐம்பது கைவைத்த நாற்காலிகள். அவற்றில் அனேகமாக திரையரங்க உரிமையாளரின் நண்பர்கள் மட்டுமே வந்து அமர்வார்கள். மூட்டைப்பூச்சிநிலையங்கள். அடுத்து நூற்றுக்கணக்கான பெஞ்சுகள். கடைசியாக மணல்தரை. வெண்மணல் வருடத்துக்கு ஒருமுறை ஆடிக்கு மாற்றப்படும் அது வெற்றிலைச்சாறால் செந்நிறமாக உருப்பெறும். திரை சின்னதுதான். வசனங்கள் தெளிவாகக் கேட்க இருபக்கமும் இரண்டு கோளாம்பி ஒலிப்பெருக்கிகள். சரஸ்வதியை போதும் என்று சொல்லவைக்க எம்ஜியாரால்கூட முடியாது. கதாநாயகனின் அன்புத்தங்கை கற்பழிக்கப்பட்டு அவன் வஞ்சினம் எடுத்துக்கொண்டிருக்கும்போதுகூட ஆட்கள் டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே வந்து திரையைப்பார்த்துக்கொண்டே நடந்து அமர்ந்திருப்பவர்கள்மேல் முட்டி அவர்களால் கெட்டவார்த்தைகளுடன் பிடித்து அமரச்செய்யவைக்கபப்டுவார்கள்.

திரையரங்குகள் நமக்குப்பிடித்தமானவையாக ஆவது அவற்றில் நாம் பார்த்த படங்களின் நினைவுகளால்தான். நான் கல்லூரிக்கு வந்ததுமே சினிமாவையும் நூலகத்தையும் இரு கண்ணென கருத ஆரம்பித்தேன். சரஸ்வதி பிற திரையரங்குகளில் ஓடிமுடிந்த படங்கள் மீண்டும் ஓடும் அரங்கு. அங்கே இருபதுபைசா செலவில் தினமொரு படம் வீதம் இரண்டு வருடம் படங்கள் பார்த்தபின்னர் எனக்கு ஓர் உண்மை தெளிவாகியது. சினிமாக்களில் நல்ல படங்கள், நல்லவை அல்லாத படங்கள் என இரு வகை உண்டு. இரண்டாம் வகைப் படங்களைப் பார்க்காமலிருப்பது ஒன்றும் பெரிய தவறல்ல.

பைசாதான் பிரச்சினை. குலசேகரம்பகுதி பையன்களுக்கு ரப்பர். ரப்பர்ஷீட்டை புத்தகங்களுடன் சேர்த்து மடித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு ஷீட் எப்படியும் மூன்று ரூபாய்க்குக் குறையாது. ஒரு வாரம் சினிமா பார்த்தாலும் குறையாத செல்வம். அந்தப்பையன்கள் சரஸ்வதி பக்கம் வரமாட்டார்கள். ஈத்தாமொழி நாடார்பையன்கள் மாலையில் தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சச் செல்லும்போது அந்தி இருளில் சொந்தத் தோட்டத்திலேயே தேங்காய் திருடி தொலித்து நார்சேர்த்து வாகாகக் கட்டி ஊருக்கு வெளியே கைதைப்புதர்களில் போட்டுவிடுவார்கள். காலையில் குளித்து முத்தாலம்மன் கோயிலில் கும்பிட்டு குங்குமம் போட்டு வரும் வழியில் தேங்காய்களை சூட்கேஸ்போல தூக்கிக்கொண்டு வந்து கடையில்போட்டு காய்க்கு அறுபது பைசா மேனிக்கு பணம்பெறுவார்கள்.

மற்றவர்களைப் பொறுத்தவரை இருபது பைசா சேர்க்கமுடிந்தால் சினிமா. விசித்திரமான கல்லூரிக்கட்டணத்தை அப்பாவுக்குத்தெரியாமல் அம்மாவிடம் சொல்லி நம்பவைத்தல், ரப்பர்கொட்டை பொறுக்குதல், தோப்புத்தேங்காய் ரோட்டில் விழுந்து கிடைக்கப்பெறுதல், அம்மன்கோயில் உண்டியலில் தார்போட்ட குச்சியை நுழைத்தல் என அதற்குப் பல வழிகள் . கல்லூரியில் வெவ்வேறு குழுக்களாக இருந்தாலும் திரையரங்கில் பார்த்தால் ‘லே தாயளி…மாப்ள லே, மத்தவ சிரிக்காளாலே?’ என்று நலம் விசாரித்துக் கூச்சலிடுவோம். ‘ஒரு பத்து பைசா இருந்தா எடுலே….நாளைக்குத்தாறேன்…அர்ஜெண்டாக்கும்’ என்று சொல்லி வாங்கி சுக்குப்பாலைஸ் சாப்பிடுவோம். படம்முடிந்ததும் கண் பஞ்சடைந்து வெளியே வரும்போது ஒருவரை ஒருவர் பார்த்து ஈனஸ்வரத்தில் ‘பாப்பம்லே’ என்று சொல்லி வியர்வை வழிய பிரிவோம்.

நான் விடுதிக்கு வந்தபிறகு சினிமாவே பார்க்கவில்லை. அங்கே உள்ள பையன்களில் எனக்குத்தெரிந்து ஸ்டீபன்ராஜ் மட்டும்தான் சினிமா பார்க்கக்கூடியவன். சினிமாக்கொட்டகையில் வேலைபார்ப்பவர்கள் கூட சினிமா பார்ப்பதில்லை. பார்க்க வசதிப்படாது. கல்லூரியில் படிப்பவர்களில் பெரும்பாலும் எல்லாருமே மிச்சநேரமெல்லாம் வேலைதான்செய்தார்கள். வேலையும் இல்லாத நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அதிக பணத்தை விடுதியில் வைப்பதற்கு பயந்தோ அல்லது குடும்பத்தேவைகளுக்காகவோ நாலைந்துநாள் வருமானம் கையில் திரண்டதும் மணியார்டர் செய்துவிடுவார்கள். எல்லார் கையிலும் மணியார்டர் அட்டைகள் இருக்கும். அதை அப்படி வாங்கி சேமித்துக்கொள்வார்கள் என்பதை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. ஒருமுறை தட்டுப்பாடு வந்திருக்கிறது என்றான் ஜான். எங்கள் அறையில் ஜானிடம்தான் எல்லாரும் வாங்கிக்கொள்வார்கள். அவன் ஐந்துபைசா விலையை வாங்கிக்கொள்வான்

கடைசிவருடம் எனக்கும் சினிமா ஆர்வம் போய்விட்டது. மலையாள நாவல்களாக வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். பொற்றேக்காட்டின் சமூக நாவல்கள். வைக்கம் சந்திரசேகரன் நாயரின் சரித்திரநாவல்கள். தகழியின் வறட்சியான நீண்ட யதார்த்தவாத நாவல்கள். நகத்தைக் கடித்துக்கடித்து உரித்துக்கொண்டே படிப்பேன்.‘கீள ஒரு ஊசி விளுந்தா எப்டிலே எடுப்பே?’ என்று அருமை கேட்பான். இடைவிடாது நாட்கணக்காக என் கண்ணுக்குள் ஓடும் சினிமாதான் நாவல் என நான் கண்டுகொண்டிருந்தேன். நாவல் நடுவே சிறுநீர் வந்து உச்சபுள்ளியை அடையும்போது கையால் பிடித்துக்கொண்டு வெளியே ஓடுவேன்.

சந்திரனின் முதலாளி அவனுக்கு பத்து இலவச பாஸ் கொடுத்தபோதுதான் ஒரு இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது முடிவாகியது. ‘பாஸ்ணா அது எப்பிடி? சம்பளத்தில களிக்குத மாதிரியா?’ என்று நாகமணி தெளிவாக விசாரித்தான்.

‘இல்லல மக்கா…சும்மா…பத்து பாஸு பாத்துக்க’

‘சும்மாண்ணா…பெஞ்சா தரையா?’ என்றேன்

‘தாயளி அவன அடிலே….ஒருத்தன் கிறுக்கெடுத்து சும்மா குடுக்கான். எளவு வெளிய நிண்ணு பாத்துக்கோண்ணு சொன்னா பாக்க மாட்டியா? வாறான் பாரு’

நான் அருமையை சமாதானப்படுத்த ‘அப்பம் நீ வாறியா?’ என்றேன்

‘நான் சினிமா பாத்து வருசமொண்ணு ஆவுதுலே….போன கிறிஸ்துமஸுக்கு ஞானசௌந்தரி பார்த்தேன்’

ஞானசௌந்தரி மலைப்பகுதியில் இலவசமாக ஓடும் படம். எம்.எஸ்.பி பீடி கம்பெனி எங்களூர் திருவிழாக்களில் இலவசப்படம் போடுவார்கள். மலைப்பகுதிகளில் அவர்கள் செல்வதில்லை. அங்கே எப்படியும் பீடி விற்றுவிடும்.

பாஸ் என்று சந்திரன் சொன்னது ஒரு சிகரெட் அட்டை. அதில் ஒன்றுமே இல்லை, ஒரு கையெழுத்து மட்டும்தான்

‘லே இதில நம்பர் இல்லல்லா?’

‘பத்தாளுண்ணு மொதலாளி சொன்னாரு’

நான் மேல்விசாரணை செய்தேன். ‘பத்துபேருண்ணு சொன்னாரா? செரியாச் சொல்லணும்’

சந்திரன் யோசித்து ‘உனக்க பயக்க ஒரு பத்தாள கொண்டுவாலே, பாஸ்குடுக்கேன் எண்ணாக்கும் பணிக்கரு சொன்னது’ என்றான்

சரிதான். பத்துபேரை திரட்டினோம். ‘லே போட்டு கொட்டிப்பிடாதே…வந்து அம்மிருவானுக. மயமா பேசி ஒரு ஆறாள தேத்துவோம்’

நானும் சந்திரனும் குமுதத்தில் வெளிவந்த பட்டாம்பூச்சி நாவலில் சிறையில் இருந்து தப்பும் செய்தியை பகிர்ந்துகொள்ளும் கைதிகள் போல கிசுகிசுத்தபடி உலவினோம். மாலையில் பதினாறு பேர் இருந்தார்கள்.

‘தாயளி நீ என்னலே கணக்கு வச்சே? பதினாறுபேரு என்னத்துக்கு? உனக்க அம்மைக்க பதினாறு அடியந்தரத்துக்கா?’

‘நீயும் எண்ணினேல்லா? அப்பம் உனக்க கணக்கு எங்க இருந்தது? சுண்ணியில சுருட்டி வச்சிருந்தியோ?’

‘சண்டை போடாதியலே…எளவு இந்த சினிமாவாலே இங்கிண கொலையில்லா நடக்கப்போவுது’

அந்தியானது. பதினாறில் ஆறுபேரை கழிக்கவேண்டும். அவர்களிடம் எஸ்பி ஆபீஸ் முக்குக்கு வரச்சொல்லிவிட்டு மறுபக்கம் வழியாகச் சென்றுவிடலாம் என்றேன். ‘சேச்சே அதெல்லாம் கடவுளுக்கு பிடிக்காது…நான் சொல்லுகேன் அவனுகள்ட்ட’

சந்திரன் பம்மி ‘என்னையில்லா அடிப்பானுக?’ என்றான்.

‘அடிச்சிருவினுமா? லே கைய வச்சிருவானுகளா?’ அருமை கொதித்தான்.

உண்மையில் சந்திரன் மேலும் பலரிடம் சொல்லியிருந்தான். முதலாளியே கூப்பிட்டு பாஸ் கொடுத்த செய்தியை அவனால் அடக்கமுடியவில்லை. மாலை ஏழரை மணி அளவில் சினிமாவுக்காக கிட்டத்தட்ட இருபதுபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். ‘லே என்ன சினிமாலே?’ என்று அப்போதுதான் சிமிண்ட் வேலை முடிந்து வந்த அன்பரசன் ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்து கேட்டான்.

சந்திரனுக்குத்தெரியவில்லை. ‘அங்க வெள்ளிக்கிளம படம் மாத்துவான். இது வேளன்லா?’

‘லே சவத்துமூதி, படம் என்னலே?’

சந்திரன் படம் என்ன என்று கவனிப்பதேயில்லை. போனதும் அரங்கை சுத்தப்படுத்தி தண்ணீர் பிடித்துவைத்து டிக்கெட் கொடுத்து பணத்தை முதலாளியிடம் ஒப்படைத்துவிட்டு கிடைக்கும் இடைவெளியில் ஒருமணிநேரம் பெஞ்சில்படுத்து தூங்கிவிடுவான். எழுந்து மீண்டும் டிக்கெட் கொடுத்து மீண்டும் ஒரு தூக்கம். கடைசி ஆட்டம் முடிந்ததும் ஓடிச்சென்று அரங்கைக் கூட்டி கக்கூஸ்களில் தண்ணீரை அள்ளி இறைத்துக் கழுவிவிட்டு ஒருமணிக்கு கிளம்பி விடுதிக்கு வந்து படுத்து மறுநாள் காலை விழித்து பாயிலிருந்தே கல்லூரிக்குச் செல்வான்.

‘என்ன சினிமாவானா என்னலே மக்கா? எதுவானாலும் நாம பாக்காத படம்தான்’ என்றான் நாகமணி. அவன் தன் நோட்டுக்குள் ஒரு சின்ன தாளில் பௌடர் பொதிந்து வைத்திருந்தான். அபூர்வ தருணங்களுக்காக. அது வாசனை இழந்து மாவு மாதிரி இருந்தது.

சந்திரன் ‘லே எனக்கு…லே மக்கா’ என்றான். இருவரும் பௌடர் போட்டு முடியை நெற்றியில் சுருட்டிக்கொண்டார்கள். வேட்டியை ஏற்றிக்கட்டி கைகளை புஜங்களில் சுருட்டிவிட்டபோது கெத்தாக இருந்தது. மேலதிக நாகரீகத்துக்காக நாகமணி ஒரு கர்சீபை எடுத்து சட்டைக்காலருக்குப்பின்னால் வைத்துக்கொண்டான்.

’பத்து டிக்கெட்டுதாலா இருக்கு?’ என்றேன்

‘லே, போயி சொல்லிப்பாப்பம்…நாங்க இம்பிடுபேரும் ஒருசெற்று… வேணுமானா விடும்…இல்லேண்ணா மிச்ச ஆளுகளுக்கு டிக்கெட்டு எடுத்துப்போடுதோம்னு சொல்லுவோம்’ என்றான் அருமை.

அதுசரிதான் என்று எனக்குப்பட்டது

‘ரொக்கமா குடுக்கதனால ஒரு டிக்கெட்டுக்கு பத்து பைசா போடட்டு. ஏம்ல?’

அருமை எங்கும் விலைகுறைக்கக்கூடிய திறன் கொண்டவன் என நான் அறிவேன்.

ஆனால் கிளம்பும்போது பத்துபேர் திரளவில்லை. வருவதாகச் சொன்ன பலர் ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தார்கள். அனைவரும் சினிமாவுக்குக் கிளம்பும் கோலத்தில்தான் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஐசக்கையும் பாலனையும் நானே உசுப்பிப்பார்த்தேன். ‘லே ஐசக்கு, லே, சினிமாவுக்கு வாறியா இல்லியா?’

‘போலே…உறங்கவிடுலே நாறி’ எல்லாரும் தூக்கவெறியில் இருந்தார்கள்

கிளம்பும் கடைசித்தருணத்தில் ஜான் சொன்னான் ‘லே மக்கா. சினிமா கர்த்தருக்கு பிடிக்காத காரியமாக்கும்’

‘செருப்பால அடிப்பேன்…..லே பத்தாளு திகையல்லண்ணா என்னலே நெனைப்பாரு மொதலாளி?’

‘நான் வரல்ல…’ என்று சொன்னபின் ஜான் சுவரிலிருந்த திருசொரூபம் நோக்கி ஜெபம் செய்ய ஆரம்பித்தான்

‘இவன் செய்யுத ஜெபத்துக்கு ஒருநாளு ஏசு வந்து மண்டையில போடத்தான் போறாரு’

எதற்கும் இருக்கட்டும் என அருமை இன்னொருமுறை கழிப்பறைக்குச் சென்றுவந்தான். நாங்கள் கிளம்பி ஆலமரத்தடிமுக்கை அடைந்தபோது அருமை சொன்னான் ‘லே, ஒராளு குறையுதுல்லா? சகாவ விளிப்போம்’

‘லே சகாவையா? நீ என்ன நெனைக்கே அவரப்பத்தி?’

‘இல்லல….சும்மால்ல இருப்பாரு?’

‘சும்மா இல்லாம துள்ளிக்கிட்டிருப்பாரா? அவருக்கு ஆயிரம் சோலிகள் கிடக்கும். நீ கம்மூணுஷ்டு ஆபீஸுக்குள்ள போயி பாத்திருக்கியாலே?’

நான் பலமுறை போய்ப் பார்த்திருக்கிறேன். போஸ்டர்கஞ்சி வாசனையும் பீடிப்புகையுமாக இருக்கும். எல்லாமூலைகளிலும் கொடிகள் சாய்த்துவைக்கப்பட்டிருக்கும். செய்தித்தாள்கள் தரையில் விரிக்கபப்ட்டு படுக்கப்பட்ட கோலத்தில் காணப்படும்.

‘நீ என்னலே நினைக்கே?’

‘தோளர விளிச்சுப்பாக்கலாம். வரமாட்டாரு’

‘ஏன்?’

‘அவருக்கு இந்தமாதிரி சினிமால்லாம் பிடிக்காது’

‘ஏன்லே பிடிக்காது?’

ஏன் பிடிக்காது என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் பிடிக்க நியாயமில்லை என்றே பட்டது. ஏன் என்று உடனே நாகமணி சொன்னான் ‘தோளர்லாம் ஃபாதர் மாதிரியாக்கும். சினிமாவுக்கு வரப்பிடாது’

ஆனால் அருமை விடாப்பிடியாக சினிமாவுக்கு தோழரை அழைத்தேயாகவேண்டும் என்று சொன்னான். நல்ல விஷயம் ஒன்றை அவருக்குக் கொடுக்காமல் எப்படி தானே அனுபவிப்பது என்ற எண்ணம்தான்.

நாங்கள் சென்றபோது தோழர் சுடலை பெஞ்சில் படுக்கையை விரித்திருந்தார். தலைமாட்டில் மேஜைமேல் பீடிக்கட்டு. அருகே சிறிய ரேடியோவில் செய்தி ஓடிக்கொண்டு இருந்தது கதவு திறந்துதான் இருந்தது. வேறு எவரும் இல்லை.

எங்களைக் கண்டதும் எழுந்து ‘ஏம்ல? என்ன பிரச்சினை?’ என்றார்.

‘சினிமாவுக்குப்போறம் தோளர்’

‘நல்லது…போய்ட்டு வாங்க…நேரமாச்சுல்லா?’

‘நீங்க வாறியளா? ‘ என்றான் அருமை

‘நானா? நான்…..’ தயங்கி ‘நான் சினிமா பாத்து ரொம்பநாளாச்சு’

‘வாங்க தோளர், நான்ல விளிக்கேன்?’

ஆச்சரியமாக தோழர் ‘வாறேன்…இருங்க’ என்றார். ஆணியில் இருந்து சட்டையை எடுத்து மாட்டி ரேடியோவை அணைத்து பீடிக்கட்டை கையில் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

‘பூட்டல்லியா?’

‘பூட்டுறதுக்கு இங்க என்ன இருக்கு? ராமச்சந்திரன் சிலசமயம் வருவான்…. கடைசி வண்டி கிட்டாத மலைக்காரங்களும் வாறதுண்டு’

தோழர் கிளம்பி வருவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. மொத்த மனநிலையே பக்திபூர்வமாக மாறிவிட்டது. எல்லாரும் அடக்க ஒடுக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நாகமணியும் சந்திரனும் கைகளை மார்பில் கட்டியிருந்தனர்.

தோழருக்கு சங்கரன்கோயில்பக்கம். சுசீந்திரம் கோயில் கோபுரத்தில்தான் அவரை மாதிரி மனிதர்களைப்பார்த்திருக்கிறேன். கன்னங்கரிய ஆறடி உடல். படர்ந்த முகம். இடைவெளியுடன் பரவிய பெரிய பற்கள். தெறித்து நிற்கும் உருண்ட கண்கள். சுருட்டி கன்னத்தில் வைக்கப்பட்ட பெரிய மீசை. அவரும் கைச்சுருளில் கைக்குட்டை வைக்கக்கூடியவர். வேட்டியை மடித்துக்கட்டி கனமான தோல்செருப்பில் கூழாங்கற்கள் நசுங்க நடந்துவந்தார்

‘என்ன மாதிரி படம் தோளர்?’ என்றார் தோழர்

‘சினிமா’ என்றான் அருமை

‘நல்ல சினிமாதானே?’

வேறுவகை சினிமா இருப்பதை அருமை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுருக்கமாக ‘படம்படமாட்டு காட்டுவான்’ என விளக்கினான்.

‘தொளிலாளர் வர்க்கத்துக்க வாள்க்கையை காட்டுவானா?’

‘நீங்க சினிமா பாத்திருக்கியளா தோழர்?’ என்றேன்

‘நாலஞ்சுபடம் பாத்திருக்கேன்…பிறவு ஃபுல்டைமரா வந்தாச்சுல்லா?’

’ஃபைட் உண்டுமாலே?’ என்றான் நாகமணி

‘என்ன படம்னு தெரியல்லியே’

‘சரசதியிலேதான் படம்’ என்றான் இருதயம். ‘பெரிய மாடமாக்கும். பெஞ்சு உண்டு’

அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் சந்திரனை அருகே கூப்பிட்டு ‘லே பாஸு பெஞ்சுக்கா தரைக்கா?’ என்றேன்

‘ஏம்ல”

‘லே தோளர எப்டிலே தரையிலே இருத்துகது?’

‘லே மக்கா லே பெஞ்சு அம்பது பைசாலே. சும்மா குடுப்பானா?’

பீதியாகியது. மெல்ல நாகமணியிடம் ‘அம்பது பைசா இருக்காலே?’ என்றேன்

‘இருக்கு’

‘தோளருக்குமட்டும் பெஞ்சு எடுப்போம்’

அவன் புரிந்துகொண்டான். ரகசியமாக தலையசைத்தான்.

சரஸ்வதி அரங்குக்கு முன் சென்றபோதுதான் எனக்கு இலவச பாஸின் ரகசியம் ஓரளவு பிடிகிடைத்தது. புராதனமான படம். பக்த குசேலா. அதெல்லாம் தியேட்டரிலேயே ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் படங்கள். படம் இல்லாதபோது சும்மா ஒருநாளுக்குப்போட்டுவிடுவார்கள். போஸ்டர் படம் எல்லாம் கிடையாது. கையாலேயே கரிமையால் எழுதிய போஸ்டர்தான். யார் நடித்தது யார் இயக்கியது என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.

நான் தோழரைப்பார்த்தேன். அவர் உற்சாகமாக ஒரு பீடியைப்பற்றவைத்தார். என்னைத்தவிர எவரும் உற்சாகமிழந்ததுபோலத் தெரியவில்லை.

’சூடா டீ சொல்லுங்க தோழர்’ என்றார் தோழர்

அருமை தலை எண்ணிவிட்டு டீக்குச் சொன்னான். டீக்கடைக்காரர் ‘சினிமா பாக்கதுக்கா பிள்ள?’ என்று ஒருமுறை சந்தேகத்தை தீர்த்துக்கொண்டார்

அந்தசினிமாவுக்கும் நாலைந்து பெண்கள் வந்திருந்தார்கள். திரையரங்குக்கு அப்பாலுள்ள பழையாற்றங்கரை காட்டுநாயக்கர்ச் சேரியிலிருந்து வந்தவர்கள். வாசல் திறக்குமிடத்தில் சேலையால் தலையைப்போர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். நாலைந்துபேர் ஆங்காங்காகச் சிதறி நின்று பீடி இழுத்தார்கள்.

சாக்கடையோரம் ஒதுங்கி சிறுநீர் கழித்தபோது ஒருவன் ஆவலாக நெருங்கி ‘பொணை வேணுமா சார்?’ என்றான்.பீதியுடன் பாய்ந்து தோழர் அருகே வந்து நின்றுகொண்டேன்.

உள்ளே பாட்டுபோட்டார்கள். ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’

அமர்ந்திருந்த பெண்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள். பீடிக்கொள்ளிகள் வாசலைநோக்கிக் குவிபட்டன. கதவு கொடக் என்று திறக்க ஒரு குள்ளமான கிழவர் தோணி மாதிரி வளைந்த காலுடன் நின்றார்

சந்திரன் ‘சாமிப்பாட்டாவாக்கும்….நான் சொல்லுகேன்’ என்றான்

‘லே இந்தமாதிரி பாஸு உண்டுண்ணு சொல்லு… பெஞ்சா தரையாண்ணு கேளு….தரைண்ணு சொன்னாருண்ணாக்க தோளருக்கு பெஞ்சு எடு’ என்றேன்

‘என்ன தோளர்?’ என்றார் தோழர்

‘இல்ல….தரைன்னாக்க உங்களுக்கு மட்டும் பெஞ்சு எடுக்கலாமுண்ணு…’

’வே, நானும் பாட்டாளிதான்வே…எனக்கும் தரை போரும்…’

‘இல்ல அதுக்கில்ல’

‘நான் சொன்னத கேட்டா போரும்’

ஆனால் கிழவர் பாஸையே பார்க்காமல் எங்கே வேண்டுமென்றாலும் போய் அமரும்படிச் சொல்லிவிட்டார். நாங்கள் உற்சாகத்துடன் உள்ளே சென்றோம். சரஸ்வதி கர்ப்ப வயிறு தொய்ய, அரை இருட்டில் தூண்களின் நிழல்கள் சரிய , நடுவே காயப்போட்ட வேட்டிபோன்ற திரையுடன் இருந்தது. உள்ளே வவ்வால்கள் பறந்தன.

சரஸ்வதியில் அவ்வளவு பெஞ்சு உண்டு என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன். எல்லா பெஞ்சுகளிலும் அமர்ந்துவிடவேண்டும் என்ற வெறி எழுந்தது. அமர்ந்து அமர்ந்து பளபளப்பான புராதன பெஞ்சுகள். அவற்றில் விளக்கு பிரதிபலித்தது. பெஞ்சில் அமர்ந்து முன்பெஞ்சுமீது காலை நீட்டிக்கொண்டோம்.

‘சினிமாவிலே மக்கள் வாழ்க்கையை காட்டணும்’ என்றார் தோழர்.

நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். அருமை கைகளை நன்றாகச் சுருட்டிவிட்டு ஒரு நல்ல குஸ்திக்குத் தயாராகிறவன் போலிருந்தான். நாகமணி அவன் வாங்கிவந்திருந்த பட்டாணிக்கடலைப்பொட்டலத்தை அவிழ்த்து அனைவருக்கும் பகிர்ந்தான். தோழரும் கோயில்பிரசாதம் வாங்குபவர் போல இருகை குவித்து வாங்கிக்கொண்டார்

‘தோழர் நீங்க என்ன படிச்சீங்க?’ என்றேன்

‘என்னத்த படிப்பு? தோளர் நம்ம பக்கமெல்லாம் வெங்காடு… காஞ்சிபோயி கெடக்கும். ஒடமுள்ளுதான். அங்க ஆணு பொண்ணு புள்ள குட்டின்னு ரெண்டுகாலுள்ள எல்லா சீவனுக்கும் வேலை ஆடுமேய்க்கிறதுதான்…ஆடுக முள்ளை மென்னு தின்னு வளரும்….’

‘ஸ்கூலுக்கே போகலியா?’

‘இல்ல. மில்லுல சேந்து பதினெட்டுவருசம் வேலசெஞ்சேன்… தொளிற்சங்கத்தில சேத்தவரு வி.பி.சிந்தன் தோளர். அப்டியே இந்தால வந்தாச்சு….தோழர் சிந்தன் வந்திருங்க தோளர்னார்… வந்திட்டேன்’

‘ஊரிலே யாரு இருக்கா?’

‘பலபேரு…. ரெண்டு அண்ணனுங்க ஆடுதான் மேய்ங்கிறானுங்க’

‘ஊருக்குப்போறதில்லியா?’

‘அம்மா செத்தப்ப போனது…இப்ப ஒரு பத்து வருசம் இருக்குமா?’ என்று என்னைக் கேட்டார்.

தடாரென்று படம் ஆரம்பித்தது. யாரோ ஆக்ரோஷமாக ஏதோ சொல்ல யாரோ எங்கோ அதற்கு எதையோ வாசிக்க படம் ஓட ஆரம்பித்தது. தலைப்பு, பங்களிப்புப்பெயர்கள் எதுவுமே இல்லை. ஆரம்பக்காட்சிகள்கூட இல்லை.

குசேலர் மிக மங்கலாகத்தான் தெரிந்தார். கிருஷ்ணர்கூட அதைவிட மங்கலாக இருந்தார். குசேலர் முதியவர். கிருஷ்ணருக்கு நடுவயது. தொப்பையெல்லாம்கூட இருந்தது. அவரது மனைவிகளுக்கும் தொப்பை இருந்தது.

நான் அருமையைப்பார்த்தேன். மனக்கிளர்ச்சியில் அவன் கைகளை பெஞ்சில் இறுகப்பற்றியிருந்தன. வாய் திறந்து கண்களை சற்றே சுருக்கி திரையை கூர்ந்து பார்த்தான். திரையில் இருந்து பாய்ந்து வரப்போகும் எதையோ பிடிக்கத் தயாரானவன் போல.

மீண்டும் படத்தைப்பார்த்தேன் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. குசேலனுக்கு நிறைய குழந்தைகள் என்று தெரிந்தது. பலகுழந்தைகள் ஒரேவயதில் இருந்தன. அவர் மனைவி அவரை திட்டியதும் அவர் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்.

நான் ஒருமாதிரி படத்தை அனுமானித்து இலகுவானேன். கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன். சில கணங்களுக்குள் நன்றாகவே தூங்கிவிட்டேன். என் தூக்கத்திற்குள் யார் யாரோ ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களூர் அச்சு ஆசாரி வசனம்பேசி நடிக்கும் நாடகம். பாத்திரங்கள் உருண்டு விழுகின்றன. யாரோ மீண்டும் பாடுகிறார்கள்.

விழித்துக்கொண்டபோது தோழர் என் தோளைப்பிடித்து அசைத்துக்கொண்டிருந்தார். நான் அவர் தோளில்தான் தூங்கியிருந்தேன். ‘இடவேளை விட்டுட்டான் தோளர்’ என்றார் ‘எல்லாரும் தூங்கிட்டானுக…பாவம், உளைக்கும் வர்க்கம்!’

அருமை நன்றாக நீட்டி பெஞ்சில் படுத்து கைகளை வயிற்றின்மீது வைத்து வாய்பிளந்து அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

‘எளுப்பவா?’ என்றேன்

‘பரவாயில்லை…நாம ஒரு பீடி இளுப்போம்’

நாங்கள் வெளியே வந்தோம். தோழருக்கு நான் ஒரு டீயும் பீடிக்கட்டும் வாங்கிக்கொடுத்தேன். அவர் பீடியை ஆழ இழுத்து டீயை கூடவே குடித்தார்ர்.‘தோளருக்கு கொலசேகரம்பக்கமா?’

’ஆமா’ என்றேன்

‘ஒருவாட்டி ஜேஎச்சைப் பாக்க வந்திருக்கீங்க’

’ஆமா’ என்றேன் ‘உங்க ஊருப்பக்கம் வெவசாயமே இல்லியா?’

‘மளை பெஞ்சாக்க முளகு பருத்தின்னு போடுறது… பெய்யணுமே… வானம்பாத்த பூமி தோளர்… இங்கமாதிரி இல்ல’ அவர் பெருமூச்சுவிட்டார் ‘பிள்ளைக எல்லாம் கூளுக்கு அலந்து திரியும்’

மீண்டும் படம்போட்டார்கள். ‘படம் பாக்கணுமா?’ என்றேன்

‘வந்தாச்சே’ என்றார் தோழர்

மீண்டும் படம். நான் இம்முறை படுத்து காலை நீட்டியே தூங்கினேன்

படம் முடிந்ததும் தோழர் எங்களை எழுப்பினார் ‘போலாமா?’

வாயைத்துடைத்துக்கோண்டேன். ஏராளமான அருவிகள் என்னைச்சுற்றிக்கொட்டிக்கொண்டிருந்தனவே, என்ன ஆயிற்று என்று பார்த்தேன். தோழரின் பெரிய கரிய பற்கள்தான் தெரிந்தன.

நாங்கள் வெளியே செல்லும்போது அருமை அப்போதும் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றியது. கடைவாயை இறுக இறுக கடித்துக்கொண்டிருந்தான். அப்பாலிருந்து சாமிப்பாட்டா கப்பையாக அகலக்கால் வைத்து வந்து ‘லே சந்திரா உன்னை மோலாளி விளிக்காரு’ என்றார்

சந்திரன் ‘இந்நா வாறேன்’ என்று சென்றான். நாங்கள் வட்டமாக நின்றுகொண்டிருந்தோம். தோழர் ஒரு பீடியை தலைகுனிந்து ஆழ இழுத்தபடி சற்று அப்பால் விலகி நின்றார்

பணிக்கர் சந்தனநிற ஜிப்பாவும் தழையும் வேட்டிம் தங்கச்சங்கிலியுமாக வெளியே வந்தார். கூடவே சந்திரனும் பணிவாக வந்தான்

சந்திரன் ஓடி வந்து என்னிடத்தில் ‘லே மக்கா மோலாளி சொல்லுகாரு நாலு சோபாவ தூக்கி உள்ள போட்டுட்டு போணுமாம். காலம்பற ஆப்பீசர்மாருக்கு சோ இருக்காம்…’

‘சோபாவா?’

’ஆமாலே… வெயிட் இருக்காது பாத்துக்க….நாம பத்தாளு பிடிச்சா பிடிபிடீண்ணு போட்டுரலாம்….’

அருமை வேட்டியை இறுகக் கட்டி ‘லே வாலே’ என்றான்

ஆனால் உண்மையில் செய்யவேண்டியிருந்தது முதல் வகுப்பிலிருந்த எல்லா நாற்காலிகளையும் ஓரமாக அடுக்கி விட்டு அங்கே பஞ்சடைத்த பத்து சோபாக்களைப் போடுவதைத்தான். மறுநாள் நகராட்சி ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் சுகாதாரம் பற்றிய ஏதோ படம் காட்டுகிறார்கள். அதிகாரிகள் அமர்வதற்காகத்தான் சோபாக்கள். நாற்காலிகளை பெஞ்சுகள் இருக்குமிடத்துக்குக் கொண்டு செல்லவேண்டும்

முடியும்போது ஒன்றரை மணி ஆகிவிட்டது. நாங்கள் நன்றாகவே வியர்த்திருந்தோம். வெளியே வந்தபோது முதலாளி சென்றுவிட்டிருந்தார். சாமிப்பாட்டா கையில் பெரிய சாவிக்கொத்துடன் காத்து நின்றார்

‘பாட்டா ,மோலாளி வெள்ளத்துக்கு வல்லதும் குடுத்தாரா?’

‘இல்லியே மக்கா….’

அருமை அங்கிருந்த தொட்டியில் கை கழுவ ஆரம்பித்தான். கை கழுவுவது பற்றிய பிரக்ஞை அனைவருக்கும் வந்து அவர்களும் கழுவிக்கொண்டார்கள். நாற்காலிகளின் அடியில் அவ்வளவு தூசு எப்படிச் சேர்கிறதென்றே புரியவில்லை

தோழரை அணுகினேன். ‘போலாம் தோழர்’ என்றேன்

தோழர் மூக்கை உறிஞ்சினார். கமறி காறித்துப்பி இன்னொரு பீடியை உருவினார்

‘ஏன் தோழர் சளி பிடிச்சுப்போட்டோ?’

’இல்ல தோளர்…ஒண்ணுமில்ல’ பீடியை அவரால் பற்றவைக்கமுடியவில்லை. கைகள் நடுங்கின.

‘ஏன் தோழர்?’

‘இல்ல தோளர்’ தோழரின் குரல் அடைத்தது ‘படத்தப்பாத்து நான் அளுதுட்டேன் தோளர்’

‘ஓ’ என்றேன்.

‘என்னா படம் தோளர்!’ தோழர் பெருமூச்சுவிட்டார் ‘ம்ஹம் ம்ஹம்’ என்று கமறினார்.அவரால் பேச முடியவில்லை

‘தோளர் போலாமா?’ என்றான் நாகமணி

‘பன்னிரண்டு பிள்ளைங்கன்னாக்க கஷ்டம்ல தோளர்?’ என்றார் தோழர் ‘அதுகளுக்கு ஒருவாய் அன்னந்தண்ணி நெறைவா குடுக்கமுடியுமா? அதுகளுக்க சட்டியில என்னண்ணு அள்ளி வைப்பா அந்தப்பொம்பிள?’

சட்டென்று ஏதோ ஒரு சத்தம். அரைக்கணம் முடிந்துதான் நான் அது தோழர் என்பதை கவனித்தேன். அவர் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தார். கப்படா மீசையில் கண்ணீர் விழுந்து துளிவிட்டு நிற்பதை விளக்கொளியில் கண்டேன்.

ஆனால் அதை அங்கிருந்தே அவர்கள் அனைவரும் உணர்ந்துகொண்டதை அவர்களின் உடல்கள் விறைப்படைவதிலிருந்து, ஆர்வமற்றவர்கள்போல வேறெங்கோ பார்ப்பதிலிருந்து அறிந்தேன்.

புறப்பாடு1

புறப்பாடு 2

புறப்பாடு 3

புறப்பாடு 4

புறப்பாடு 5

முந்தைய கட்டுரைதுதிபாடிவட்டம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்யாகுமரி- கடிதம்