புறப்பாடு 4 – ஈட்டிநுனிக்குருதி

நான் கல்லூரிக்குச் சென்றபோது அங்கே ஏதோ நிகழ்ந்திருந்தது. பத்துப்பதினைந்துபேர் என்னால் கலைக்கப்பட்டார்கள். இரண்டுபேர் என்னைநோக்கி வந்தார்கள். அருமை என் கையைப்பிடித்து ‘லே, உனக்கு மணியார்டர் வந்திருக்கு’ என்றான்

‘எதுக்கு?’ என்றேன். அம்மா அனுப்பியிருப்பார்களா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. அவளுக்கு நீண்ட கடிதம் போட்டிருந்தேன். வீட்டைவிட்டுக் கிளம்பியதைப்பற்றி அப்பா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளவில்லை

நாகமணி என்னை அவனை நோக்கி திருப்பி ” குமுதம்காரனுக்க பைசாவாக்கும்…நீ கதை எளுதினேல்லா?’

கல்லூரி நோக்கி ஓடினேன். நல்லவேளையாக போஸ்ட்மேன் போகவில்லை. ஏராளமான பதிவஞ்சல்களை கொடுத்துக்கொண்டிருந்தார். மூச்சிரைக்கச்சென்று அவர் முன் நின்றேன்

‘என்னவாக்கும்?’

‘மணியார்டர்’

‘நீராவே செயமோகன்?’

‘ஆமா’

‘அடையாளம் இருக்கா?’

என் புத்தகங்களைக் காட்டினேன். அன்றெல்லாம் அடையாள அட்டை என்றொரு வழக்கம் இல்லை. அவர் என் பெயரைப்பார்த்துவிட்டு ‘பதினஞ்சு ரூவா உண்டு’ என்றார்.

தலையசைத்தேன்.

‘அம்பதுபைசா கம்மீஷன் கட்டு…அது எப்பமும் உள்ள பதிவாக்கும்’

அதற்கும் தலையசைத்தேன்

பதினைந்து ரூபாயை பிரமையுடன் வாங்கிக்கொண்டேன். முதலில் அந்தக்கதை என்ன என்றே நினைவுக்கு வரவில்லை. குமுதத்தில் அது வெளியாகியிருக்கிறது. கல்லூரி விலாசத்துக்கு இதழும் வந்திருக்கிறது. நேராக நூலகம் சென்றிருக்கும். அப்போதெல்லாம் குமுதம் வாசிப்பதில்லை. எனக்கு மலையாள இலக்கிய ருசி கிடைத்த காலம் அது.

திரும்பிவந்தபோது எல்லாரும் சூழ்ந்துகொண்டார்கள். ’மக்களே என்னலே கத?’ என்றான் ராஜு

எவ்வளவு யோசித்தும் என்ன கதை என்று நினைவுக்கு வரவில்லை. வாரம் இரண்டுகதை எழுதுவேன். அஞ்சல் செலவைக் குறைப்பதற்காக ஒரே உறையில் நாலைந்து கதைகள்கூட அனுப்புவேன். சின்னவயதில் நிறையவே எழுதினேன். பணமும் அவ்வப்போது வரும் . நடுவே கதை எழுதுவது நின்றுவிட்டிருந்தது. விடுதிக்கு வந்தபின்புதான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். முன்பு எழுதி மறந்துபோன கதைகளை எல்லாவற்றையும் திரும்ப எழுதிக்கொண்டிருந்தேன்.

ஆனால் கதையை ஏன் யாருமே வாசிக்கவில்லை? கல்லூரியில் முதல்வருடம் எழுதிய கதைகளை மங்கள ஆண்டணி சுரேந்திரா வாசித்து பாராட்டினாரே? அவர்கூட கவனிக்கவில்லையே?

’மாப்ள பைசாவ என்னல செய்யப்போறே?’ ராஜூ கேட்டான்

‘பரோட்டா திம்போம்’ என்று சொல்லி அருமை என் பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டான். ’ஆருலே வாறது?’

‘லே இன்னைக்கு மனோகரன் கிளாஸாக்கும்’

’மனோகரன மண்ணத்திங்கச்சொல்லு….நாங்க கெளம்பியாச்சு’

ஏழுபேர் கொண்ட கும்பல் பரோட்டாசால்னாவுக்காக கிளம்பியது. பேருந்துக்கு பணத்தை வீணடிக்கக்கூடியவர்கள் அல்ல. ஆகவெ பின்பக்கம் வேலி ஏறிக்குதித்து முந்திரிமரங்கள் அடர்ந்த தோப்புகள் வழியாக ஜெயசேகரன் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அப்பகுதியில் நாலைந்து பரோட்டாக்கடைகள் உண்டு.

‘லே, நல்ல பாட்டு போடுத கடைக்குப்போவம்லே’ என்றான் முருகேசன்

‘பாட்டயா பிச்சு திங்கப்போறே? நல்ல சகாயவெலைக்கு பரோட்டா கிட்டணும்…வாலே’

மொத்தக்கடையே கரிபிடித்திருந்த ஒரு ஓலைக்கூரைக்குச் சென்றோம். கல்லாவில் இருந்தவரும் கரி மூடியிருந்தார். பின்னால் கரிபடிந்த ஏசு, தூய இதயத்துடன் அருள்புரிந்தார். அப்பால் அவரது கரிமூடிய மனைவி.

‘மரியண்ணா, இஞ்சேரும், மொத்தம் ஏளு இல்ல எட்டு ஆளு. ரொக்கம் பதினஞ்சுரூவா….பரோட்டா சகாயமாட்டு வேணும்’ என அருமை பேரத்தை ஆரம்பித்தான்.

‘இங்கிண எப்பமும் சகாயவெலையாக்கும்லே…வேணுமானா அங்க கேட்டுப்பாரு’

ஒருபரோட்டாவுக்கு அன்று ஐம்பது பைசாதான். ரூபாய்க்கு மூன்று என மரியண்ணன் இறங்கி வந்தார். மொத்தம் நாற்பத்தைந்து பரோட்டா. சால்னாவுக்கும் பச்சைத்தண்ணீருக்கும் விலை கிடையாது. மாட்டுக்கறிக்குழம்பில் துண்டு கிடையாது. கேட்கக்கூடாது. பேரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கீற்றிலைகள் விரிக்கப்பட்டன. தண்ணீர் தெளித்து அழுத்தமாக நீவுகையில் அருமை ஒரு பிரபுவைப்போல கம்பீரமாக இருந்தான்.

”அண்ணா ரேடியோவப் போடுங்க, கேப்பம்’ அருமை கொடுத்த காசுக்கான நுகர்வின்பத்தைச் சற்றும் குறைக்கத் தயாராக இல்லை.

‘பாட்டு இந்நேரம் இருக்காதுல்லா?’

‘எல்லாம் ரேடியோதானே? போடுங்க’

ரேடியோ கரகரவென முனகியபின் ஏதோ பேச ஆரம்பித்தது. யாரோ இருவர் யாழ்ப்பாணத்தமிழில் பேசிக்கொண்டிருந்தனர். ‘இங்காலை வருவினமெண்டு நிண்டனான்…” எங்களூர் பகுதியில் யாழ்ப்பாணத்தமிழ் சுத்தமாகப்புரியும். நாங்களும் அதே நாதத்துடன் பேசக்கூடியவர்கள். விசர், பஞ்சி போன்ற சில அரிய சொல்லாட்சிகள் மட்டுமே வேறுபாடு. அவர்களுக்கும் நீக்கம்பு அம்மிங்கிருபோன்ற எங்கள் சொல்லாட்சிகள் இல்லைதானே.

பரோட்டா புதியதாகப் போடப்படவில்லை, சூடுபண்ணப்பட்டது. மரியண்ணன் பரோட்டாமேல் சினம் எழுந்தவர்போல இரு கைகளாலும் அழுந்தப்பற்றி தாறுமாறாகப் பிய்த்து இலைகளில் குவித்து வைத்தார். அதன் மேல் செந்நிறமாக இருந்த மாட்டிறைச்சி சால்னாவை ஊற்றினார். அதுவும் கொதிக்கவைக்கப்பட்டதுதான். கொஞ்சம் புளித்திருந்தாலும் சூடாக்கப்பட்டபோது நல்ல வாசனையை விட்டுக்கொண்டிருந்தது. அனைவரும் ஆவேசத்துடன் சாப்பிட ஆரம்பித்தனர்

மென்றபோது என் மூளையில் அந்த அசைவு தட்டியிருக்கவேண்டும். எனக்கு கதை நினைவுக்கு வந்தது. ஜெயப்ரியா என்றபேரில் கதை பிரசுரமாகியிருந்தது. ஒரே இதழுக்கு பலகதைகளை அனுப்புகையில் பல பெயர்களில் அனுப்பும் வழக்கமிருந்தது எனக்கு. ’லே அந்தக்கதை இப்பம் ஓர்மை வருது’

‘என்னல கதை?’ என்றான் அருமை முகமே இறுகி நெகிழ மென்றபடி

‘ஒரு பிள்ளைக்க கதையாக்கும்’

’பிள்ளைக்க கதைண்ணா?’

கதையைச் சொன்னேன். கிராமத்திலிருந்து சின்னப்பெண்களை ஒரிசாவுக்கு இறால்மீன் தொழிற்சாலைக்காக கூட்டிச்செல்கிறார்கள். பெண்களின் வீட்டினருக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே கிராமத்தில் இருந்து ஒரிசா சென்று அங்கே இறால்பண்ணையில் வேலைபார்க்கக்கூடிய திரேஸக்காள்தான் வீடுவீடாகச் சென்று பெற்றோரிடம் பேசி பெண்களைச் சேர்க்கிறாள். அவள் இறால் உரித்து பணம்சேர்த்து இலைத்தண்டுபோல செயினும் அஞ்சுகல் கம்மலும் போட்டு பளபளப்பாக இருக்கிறாள்.

அக்காளின் சிரிப்பையும் ,அவள் போட்டிருக்கும் நகைகளையும், குளப்படியின் பச்சைப்பாசி போன்ற அவள் புடவையின் மென்மையையும் கண்டு மோகம் கொள்ளும் லிஸியின் கதை நான் எழுதியது. அக்காளைப்போல அவளிடம் ஆசையாக யாருமே பேசியதில்லை. அவளுக்கு உண்மையில் என்ன பிடிக்கும் என்று கேட்டதுமில்லை. திருவனந்தபுரம் வரை அக்காள் பஸ்ஸில் கூடவே வருகிறாள். லிஸி அக்காளின் உருண்ட மென்மையான கைகளை பிடித்து தன் மடியிலேயே வைத்திருக்கிறாள்.

ஆனால் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் தெரிகிறது அக்காள் கூட வரப்போவதில்லை என. அக்காள் இறங்கும்போது லிஸி பதறியபடி ‘அக்கா நீங்க வரல்லியா?’ என்கிறாள். ஆனால் அக்காள் வேறு ஆளாக இருந்தாள். ‘கைய எடுட்டீ சவமே’ என்றாள். ரயில் கிளம்பியது. அதுவரை அறிந்த அனைத்துமே மாறிப்போயிருக்கும் இன்னொரு உலகைநோக்கி லிஸி சென்றுகொண்டிருந்தாள்.

அருமை சாப்பிட்டுமுடித்து ஏப்பத்துடன் எழுந்து சென்று எச்சில்இலையைப் போட்டான். அவன் கைகள் மரக்கட்டையாலானவை போலிருக்கும். கைகளை உரசிக்கழுவும்போது கட்டை உரசும் ஒலி கேட்கும். ஏப்பம் விட்டபடி என்னிடம் ‘பிறவு?’ என்றான்

‘கதை அம்பிடுதான்’ என்றேன்.

அருமை பத்து பைசா வைத்திருந்தான். அதற்கு வெற்றிலை போட ஆரம்பித்தான். தளிராகப்பார்த்து ஒரு வெற்றிலையைப் பொறுக்கி எடுத்து நரம்புகளை உரித்து நுனி கிள்ளி அதை பக்குவப்படுத்தியபின் தூணில் தொங்கிய குடுக்கையில் இருந்து சுண்ணாம்பை தொட்டு அதில் நீவினான். கடை வைத்திருந்த ஒற்றைக்கை ஆள் கொடுத்த களிப்பாக்குத் துண்டுகளை வைத்துச் சுருட்டி வாயில் அதக்கிக் கொண்டான். தாடை இறுக மென்றான். சுட்டு விரலில் கொஞ்சம் சுண்ணாம்பும் மற்ற இரு விரல்களில் ஒரு துண்டு பாக்கும் வைத்துக்கொண்டான். பதம் அமைவதற்காக மேற்கொண்டு சேர்ப்பதற்கு.

அருமையை அந்த அளவுக்கு சொகுசான இதமான மனிதனாக பார்த்ததில்லை. அவன் என்னைப்பார்த்து தாடையை மேலே தூக்கி எச்சில் சிந்தாமல் ‘பொறவு?’ என்றான்.

‘என்ன பொறவு?’

‘இல்ல, அந்தக்குட்டி என்ன ஆனா? ரெச்சப்பட்டாளா?’

‘கதைய அங்க நிப்பாட்டிட்டேன் அருமை’

அருமை வாயைத்திறந்து என்னைப்பார்த்தான். சிலகணங்களுக்கு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘அது எப்பிடி? அவ பாவப்பெட்ட குட்டியில்லா?’

’ஆமா அருமை…ஆனால் அதுக்குமேலே கதை இல்லியே’

‘லே தாயளி, அது நீ எளுதின கதையில்லாலே?’

’ஆமா’

‘பின்ன நீ எப்டிலே அந்தப்பாவப்பெட்ட குட்டிய கேற்றிவிட்டு சூத்தையும் திருப்பிக்கிட்டு வந்தே?’

கோபமாக ‘பின்ன நான் என்னசெய்யணும்?’ என்றேன்

‘அநத தேவ்டியாள பிடிச்சு வண்டிக்கெடையிலே சாத்தணும்லா? அந்த நாயிகளுக்கு அள்ளையிலே ரெண்டு சவிட்டுகுடுத்திட்டு குட்டி வெளிய எறக்கணும்’

‘ஆரு நானா?’

‘நீயில்லேண்ணா கதையில உள்ள வேற ஆராவது. லே திருவனந்தபுரம் ரெயிலிலே கைக்கு உறப்புள்ள ஆணாப்பொறந்தவன்மாரு இல்லாம ஆயிட்டானுகளா?’

‘லே அரும, இது கதையில்லா?’

‘கதைண்ணாலும் ஒரு நாயம் வேண்டாமா?’ அருமை கொதித்தான் ‘எரப்பாளி நாயே …அந்த பாவப்பெட்ட குட்டிய அனாதையா சீரளிய விட்டுட்டா நீ கதைய எளுதுகே? சீவிருவேன் தாயளி’

இது என்ன பிரச்சினை என்றே எனக்குப்புரியவில்லை

‘அது தப்புண்ணுதானே சொல்லுதேன்’

‘தப்புண்ணு நீ சொல்லி தெரியணுமாலே நாறத்தேவ்டியாமோனே?’

‘லே வாய விடாதே’

‘வாய விட்டா நீ என்னல செய்வே? லே நீ என்னல செய்வே?’

ராஜு வந்து எங்களை பிடித்து விலக்கினான். ‘லே அருமை நீ அடங்குலே…லே செயா, நீ அந்தால போலே’

’அந்தப் பாவப்பைசாவக்கொண்டாக்கும் இவன் பரோட்டா வேங்கி குடுத்திருக்கான்… பீயத்திண்ணது மாதிரி இருக்கு தூ… தூ..’

‘லே அரும அடங்குலே’

‘இந்த நாயி எனக்க வாய நாறவச்சிட்டானே’

‘லே சண்ட போடாதியலே வாலே’

நாங்கள் மீண்டும் முந்திரித்தோப்புக்குள் நுழைந்தோம். கண்கலங்கி அழும் நிலையில் இருந்தேன்.

ராஜு ‘என்னல காரியம்? ’என்றான்.

நான் சொன்னேன்.

‘இந்த நாய இங்கிண போட்டு அடிக்கணும்’ என்று அருமை நடுவே என் மேல் பாய பிறர் பிடித்து விலக்கினர்

முழுக்கக் கேட்டபின் ராஜு ‘அருமை சொல்லுகதிலயும் நியாயம் உண்டு….அப்டி விட்டுப்போடப்பிடாதுல்லா?’ என்றான்

எனக்கு அவர்கள் சொல்வதே புரியவில்லை. ’அது ஒரு கதையாக்கும்…. நடக்காத விசயம்…’ என்றேன்.

‘கதைண்ணு தெரியும்லே…ஆனா கதையிலயும் முத்தாலம்மனுக்க நீதீண்ணு ஒண்ணு வேணுமா இல்லியா?’என்றான் ராஜு.

என்ன சொல்வதென்று அறியாமல் மாறி மாறிப்பார்த்தேன். எல்லா முகங்களும் என்னை கடுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தன. பலவீனமாக ‘கதையெல்லாம் அப்டித்தான் எழுதணும்’ என்றேன்.

யாரும் ஒன்றும் சொல்லவில்லை. முந்திரி நிழலில் செம்மண் பரப்பில் அமர்ந்திருந்தோம். சட்டென்று லிஸியை நினைத்தேன். எனக்கு மனம் பொங்கிவிட்டது, கண்ணீர் விட ஆரம்பித்தேன்.

‘லே என்னல? லே’

‘தெரியாம எளுதினதாக்கும்’ என்று தொண்டை இடறச் சொன்னேன்

‘செரிலே மக்கா…விடு…லே அருமை, விடுலே. அவன் ஏமான்வீட்டுப்பயல்லா…அவனுக்கு பாவங்களுக்க துக்கம் தெரியாதுல்லா?’

அருமை தலையசைத்தான்.

புறப்பாடு 1

புறப்பாடு 2

புறப்பாடு 3

முந்தைய கட்டுரைவிராலூர் சோழர் கல்வெட்டு
அடுத்த கட்டுரைவெள்ளையானை – வரவிருக்கும் நாவல்