சாயங்காலம் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது விடுதியறை வாசலில் ஒரு கரியபெண் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் பூனைபோல சத்தமில்லா நாசூக்குடன் எழுந்தாள். பார்த்ததுமே அவள் ஜானுக்கு உறவு என்று புரிந்துகொண்டேன். பதினாறுவயதிருக்கும். பெரிய கண்கள். கலைந்துபறக்கும் கூந்தல். கையில் ஒரு சிறிய பை.
அறையைப்பூட்டி சாவியை கட்டளைக்குமேலேயே வைத்துவிட்டுச் செல்வோம். அறைக்குள் எவருக்கும் திருட்டுபோகுமளவுக்கு உடைமைகள் ஏதும் இல்லை. சாவியைஎடுத்து திறந்தபடி ‘ஜானுக்க தங்கச்சியா?’ என்றேன்.
‘ஓம்…அம்ம சொல்லிச்சு…’ என்று மெல்லிய குரலில் இழுத்தாள். ஐந்துவயதுப்பெண்ணின் குரல்.
‘ஜான் வாறதுக்கு நேரமாவும்லா? அவன் சோலிக்குப்போயிட்டுதான் வருவான்’
அவள் ஒன்றும் சொல்லவில்லை
அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தேன். அவள் வெளியே சுவரோடு ஒட்டியவள்போல நின்றிருந்தாள். நீலநிறமான சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். மிகமெலிந்த பெண். மலைப்பகுதிகளில் ஆணும்பெண்ணும் குழந்தைகளும் எல்லாருமே மெலிந்துதான் இருப்பார்கள். மாடுகள் மட்டும்தான் கொழுத்திருக்கும்
‘உள்ள வந்து இருக்கியாட்டீ?’ என்றேன்
‘வேண்டாம்’ என்றாள்
அவளை பார்ப்பதை தவிர்த்தேன். ‘உனக்க பேரு என்ன?’
‘மேரி’
‘எத்தனாம் கிளாஸு படிக்கே?’
‘படிக்கேல்ல’
‘ஏன்?’
‘அங்கிண பெரிய பள்ளிக்கூடம் இல்லல்லா?’
‘சின்னப்பள்ளிக்கூடம் தீருத வரைக்கும் படிச்சியோ?’
’ம்’
‘பைபிளு படிப்பியா?’
அவள் ஒன்றும் சொல்லவில்லை
‘ஏம்டீ?’
அதற்கும் பதில் சொல்லவில்லை
அவளைப்பார்த்தேன். உடம்பும் முகமும் தெரியவில்லை. நீலச்சட்டையின் விளிம்பு மட்டும்தான் தெரிந்தது
’படிக்க நேரமில்லியோ?’
‘மலையில உள்ள பள்ளிக்கூடத்திலே உப்புமாவு மட்டும்தான் குடுப்பாவ….படிக்கச் சொல்லிக்குடுக்கமாட்டாவ’
குழம்பி ‘ஏன்?’ என்றேன்
‘அங்கிண வாத்திமாரு இல்லல்லா??’
‘ஓ’
‘அப்புக்குட்டி மட்டும்தான் அங்கிண இருப்பாரு…அவருக்கும் வைவிளு படிக்கத்தெரியாது’
மலைப்பகுதிகளிலும் உள்பகுதி கிராமங்களிலும் உள்ள பள்ளிகளைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. பிறகு சேவைநிறுவனங்களுடன் அலைந்து திரிந்து நேரில் அவை செயல்படும் விதத்தை அறிந்துகொண்டேன். அங்கே அனேகமாக எந்தப்பள்ளியிலும் ஆசிரியர்கள் செல்வதில்லை. சம்பளத்தில் ஒருபகுதியை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டால் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிப்பார்கள். மதிய உணவு ஒழுங்காகக் கொடுக்கப்பட்டால் மக்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததைப்பற்றி கேட்கமாட்டார்கள். ஐந்தாம் வகுப்புவரை படிக்காத பிள்ளைகள் மலையில் கிடையாது. ஆனால் அ எழுதத்தெரிந்த ஒரு பிள்ளைகூட இருக்காது.
காரணம் ஆசிரியர்பயிற்சி பெற்று வேலைக்குள் நுழைபவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர்கோயில் ‘டவுண்’காரர்கள். அவர்களுக்கு மலைப்பகுதி என்பது நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு தொலைவானது. சென்றகாலங்களில் மலேரியாவும் காலராவும் ஆட்சிசெய்த பகுதிகள். ஆகவே மலை என நினைத்தாலே குலைநடுங்குவார்கள். நாகர்கோயிலில் நின்று பார்த்தால் விஷநீலத்தில் மேற்கிலும் தெற்கிலும் எழுந்து தெரியும் மலைகள் அவர்களை எப்போதுமே அச்சுறுத்தும். ‘மலைவெள்ளம் ஆத்தில வந்தா வெந்நி வச்சு வீட்டிலயே குளிக்குத ஆளுக. பின்னல்லா மலையில செண்ணு சோலி செய்யுகது?’ என்று ஒரு கல்வியதிகாரி சொன்னார்
‘…பின்ன ஜான் எப்ப்டி படிச்சான்?” என்றேன்
‘அவனுக்கு பாதரு சொல்லிக்குடுத்தாருல்லா?’ என்றாள் மேரி
நேரமாகிக்கொண்டிருந்தது. விடுதியில் எட்டுமணிக்குமேல்தான் கொஞ்சமாவது மனித நடமாட்டம் இருக்கும். நானேகூட புத்தகத்தை வைத்துவிட்டு நூலகம் போகத்தான் வந்தேன். ஆனால் இந்தப்பெண்ணை இங்கே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தெரியவில்லை.
’சும்மாதான் வந்தியா?’
‘அம்மை சொன்னா…’
‘எதுக்கு…’
அவள் மிகவும் குரலைத்தாழ்த்தி ‘ரூவா’ என்றாள்.
‘எம்பிடு?’
‘அம்பது…’ என்றபின் ‘அம்மைக்கு மேலுசொகமில்ல’ என்றாள்
‘என்ன?’
‘துள்ளப்பனி….மிசனுக்கார ஆசுபத்ரி மருந்தாக்கும் குடிச்சியது’
எழுந்து என் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து பத்துரூபாய்களை எடுத்தேன். ‘இந்தா இத கொண்டுட்டுப்போயி குடு’
‘அய்யோ…’
’இங்கபாரு குட்டி, நீ இங்க ராத்திரி நிக்கமுடியாது. கேட்டியா?’
அவள் பேசாமல் நின்றாள்
’ஜான்கிட்ட சொல்லுதேன். நீ போ. அவன் வாறதுக்கு ராத்திரி ஆவும்’
அவள் மெல்ல உள்ளே வந்து பணத்தை வாங்கிக்கொண்டாள். மிகமெலிந்த கைகள். உள்ளங்கை வாழைப்பூ நிறமாக இருந்தது
‘அம்மைக்கிட்ட சொல்லு ஜான் நல்லா இருக்கான் எண்ணு…என்னட்டி?
’சொல்லுதேன்’
சட்டென்று அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. என் மனம் அதிர்ந்தது. இரு கூரிய கத்திமுனைகள் நுனியில் மட்டும் உரசிச்சென்றதுபோல. அவள் சிறுமி அல்ல என்று அறிந்தேன். நான் சிறுவன் அல்ல என்றும்.
அந்தசிந்தனைகளின் நுனியில் அவள் எப்படி எந்நேரத்தில் சென்று சேர்வாள் என்ற எண்ணம் எழுந்தது. ‘ஏம்டீ நெடுமங்காட்டு பஸ்ஸிலெயா போவே?’
‘ஓம்’
‘அது வெலக்குக்குபோறப்ப எட்டுமணி ஆயிருமே. அதுக்குமேலே ஏழெட்டு கிலோமீட்டர் நடக்கணும்லா?’
’வெலக்கிலே கோயிலு இருக்குல்லா? அங்கிண தங்கிட்டு காலம்ப்ற போவேன்….’
சர்ச்சில் அப்படி நிறையபேர் தங்கியிருப்பார்கள். ‘பைசவா பத்திரமா வச்சுக்கோ’ என்றேன்.
‘ஓம்’
‘எங்க வப்பே?’
மீன்கொத்தி தொட்டெழுந்த தடாகம்போல கண்கள் அதிர்ந்தன. ‘உள்ளுக்கு’ என்றாள்
‘ஓ’ என்றேன்
அவள் வெளியே சென்று அதேபோல நின்றாள். இப்போது எனக்கு அறை கனமான புழுக்கமான காற்றால் நிறைந்திருப்பது போலிருந்தது.
‘சாயை குடிச்சுதியா?’
‘வேண்டாம்’
‘செரி அப்பம் போ’
அவள் ‘வாறேன்’ என்றாள்.
அவள் வராந்தாவைத்தாண்டிச் செல்வதை பார்த்தேன். அவள் மறைந்ததும் ஆசுவாசம் கொண்டேன். கட்டிலில் படுத்துக்கொண்டேன். கூரையில் மழைநீர் வளையங்கள் காட்டுமரத்தில் சப்பைக்காளான்கல் பூத்திருப்பது போல உலர்ந்திருந்தன. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஜான் இரவு எட்டுமணிக்கு மேல்தான் வந்தான். நடை சரியில்லாமல் இருந்தது. வந்ததுமே நாற்காலியில் அமர்ந்துகொண்டு பைபிளை எடுத்து பிரித்தான்
‘ஏம்லே?’ என்றேன்
‘ஏசு சோதிக்காரு’
‘என்னலே ?’
காலைக்காட்டினான். அழுக்குத்துணியால் கட்டு போட்டிருந்தான்.
‘என்னல ஆச்சு?’
ஆணியை மிதித்துவிட்டானாம். சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் சிமிண்ட் வார்ப்பு முடிந்த கட்டிடம் ஒன்றுக்கு தண்ணீர்விடுவதற்காகச் சென்றிருக்கிறான். கீழே கிடந்த பலகையில் நீட்டியிருந்த ஆணி ஏறிவிட்டது
‘ரெத்தம் வந்ததா?’
’உள்ள ரெத்தம் எல்லாம் போயாச்சுலே…இனி ஊறினாத்தான் உண்டு’
’காலக்காட்டுலே”
‘லே நோவுதுலே’
கட்டை மெல்ல அவிழ்த்தேன். உடனே என் கையெல்லாம் ரத்தம்
‘கெட்டுலே…லே கெட்டு கெட்டு’
இறுக்கிக் கட்டினேன்
‘என்ன மருந்துலே வச்சே?’
‘கெட்டுமேலே ஒண்ணுக்கடிச்சேன்…பொறுத்திரும்’
மலையில் அது ஒருவழக்கம். எந்தக்காயம் மீதும் உடனே சிறுநீர் கழித்துவிடுவார்கள்
‘நீவா நாம கோட்டாறு ஆசுபத்திரிக்கு போவம்…’
’இதுக்கு என்னத்துக்கு மருந்து…நான் படாத முள்ளா? போலே’
மீண்டும் மீண்டும் சொன்னேன். துரு ரத்தத்தில் கலந்தால் உயிருக்கே ஆபத்து என்றேன்.
‘பைசா கேப்பாவனுகளா?’
‘சர்க்கார் ஆசுபத்திரில்லா, கேக்கமாட்டாவ. கேட்டா குடுக்கேன். எனக்க கையிலே ரூவா இருக்கு’
அவன் கிளம்பினான். படி இறங்கும்போது அவனால் நடக்கமுடியவில்லை என்று கண்டேன். ‘ஏசுவே ராசாவே’ என்று முனகிக்கொண்டே இருந்தான்
குறுக்குவழியாக கோட்டாறுக்கு நடந்தோம். மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவனை தோளோடு தாங்கிக்கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ‘ஏசுவே ராசாவே’ என்று சொன்னான்
கோட்டாறு ஆஸ்பத்திரிக்குச் சென்று சேரும்போது பத்துமணி. அந்நேரத்திலும் அங்கே கூட்டம் நிறைந்திருந்தது. அதிகமும் நடுவயதுப்பெண்கள். தூக்குவாளிகள் ஒயர்கூடைகள் புட்டிகளுடன் அலைந்துகொண்டிருந்தார்கள்.
ஒரு நர்ஸ் ‘அய்யய்ய. இங்க என்ன ரெத்தம்? லே அந்தால போலே…அந்தால போ’ என்றாள்
‘எங்க?’ என்றேன்
‘எங்கியாம் போ…லே போலே’ என்றபடி சென்றுவிட்டாள்
இன்னொரு நர்ஸிடம் கேட்டேன். அவளும் ‘அந்தால போலே…இஞ்ச நிக்கப்பிடாது’ என்றாள்
சட்டென்று எழுந்த கோபத்துடன் ‘எங்கபோணும். அதச் சொல்லுங்க’ என்றேன்
‘என்னலே?’ என்று அந்த நர்ஸ் கோபமாக நிமிர்ந்தாள்.
‘கேட்ட கேள்விக்கு பதிலச்சொல்லுங்க. ஓப்பி எங்க?’ என்றேன்
அவள் கண்கள் மாறின. அவள் என் சாதியை ஊகித்துவிட்டாள். ‘ஓப்பி அங்க…அங்க மாணிக்கம்னு ஒரு ஆளு உண்டு…கேளுங்க’ என்றாள்.
‘நீங்க வந்து சொல்லுங்க’ என்றேன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி.
‘வாறேன்’ என்றாள் கண்களை திருப்பியபடி.
அவளுக்குப்பின்னால் சென்றபோது ஜான் ‘நீ வரேல்லண்னா என்னைய நாய தொரத்துகது மாதிரி தொரத்துவா’ என்றான்
‘பேசுத மாதிரி பேசணும்லே’
‘பேசணும்லா? லே, அதுக்கு நம்ம கையில பைசா இருந்தா மட்டும்போராது. நம்ம அப்பன் தாத்தன் கையிலயும் பைசா இருந்திருக்கணும் கேட்டியா?’
நர்ஸே புண்கட்டுமிடத்திலிருந்த மாணிக்கத்தை கூப்பிட்டு புண்ணை கழுவி கட்டும்படிச் சொன்னாள். அவள் என்னைத்தான் சுட்டிக்காட்டினாள். மாணிக்கம் என்னைப்பார்த்து வந்து ‘ஆருக்காக்கும் புண்ணு?’ என்றான்
‘இவனுக்கு….காலிலே ஒரு ஆணி குத்திப்போட்டு’
‘ஆணிகுத்தாத ஆளுண்டா நாட்டிலே? இவனாரு? வீட்டு சோலிக்காரனா?’
‘இல்ல சேந்து படிக்கோம்’
‘ஓ’ என்றார். அந்த ஓவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை
ஜான் தரையில் அமர்ந்துவிட்டான். காலை நீட்டிக்கொண்டு ‘ஏசுவே ஏசுவே’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
‘நான் மாணிக்கமாக்கும். ஏசுவில்ல’ என்றபடி மாணிக்கம் துணிச்சுருளை எடுத்தார். அவர் ஒரு புட்டியைத்திறந்தபோது சாராயவீச்சம் எழுந்தது. ஜானின் கட்டை அவிழ்த்துவீசினார். ரத்தம் வழிய வழிய காயத்தைத் துடைத்து கிரீஸ்போன்ற ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து அதில் வைத்து அழுத்திக்கட்டினார். ஜான் ‘ஏசுவே எனக்க ஏசுவே!’ என்று கூச்சலிட்டான்.
‘ஆணிகுத்துகது பாம்பு கடிக்கப்பட்டது மாதிரியாக்கும்…வெசமெறக்கணும்’ என்றார் மாணிக்கம்
ஒரு சின்னவயசு நர்ஸ் வந்து ‘கையக்காட்டுலே’ என்றாள்
ஜான் ‘வேண்டாம்’ என்றான்
‘லே கையக்காட்டு’ என்றார் மாணிக்கம்
ஜான் முகத்தைத் திருப்பிக்கொண்டு புஜத்தைக்காட்டினான். அவள் அதில் ஒரு ஊசியைப்போட்டாள். வழக்கமாக ஊசி போடுவது போல அல்ல. ஊசியை கிட்டத்தட்ட புஜம்மீது எறிந்தாள். அதன்பின் ஒரே அழுத்து. பஞ்சை வைத்துவிட்டு ‘பிடிச்சுக்கோ’ என்றபின் போய்விட்டாள்
’போலாமா?’ என்றேன்
‘போலாம்…பளுப்பு வராது. வந்தா மறுக்கா வந்து காட்டுங்க’
ஜானைப்பிடித்து எழுப்பினேன்
‘ஏமானே, வெள்ளம்குடிக்கதுக்குச் சில்லற?’
பையிலிருந்து இரண்டுரூபாய் எடுத்து மாணிக்கத்துக்குக் கொடுத்தேன்.
திரும்பி வரும் வழியில் நாலைந்து இடங்களில் ஜான் நின்றான். ‘லே தலையச் சுத்துது கேட்டியா?’
‘ரெத்தம் போயிருக்குலே…’
‘பாவங்கள ஏசு சோதிப்பாருலே’ ஜான் மூச்சிரைத்தான். ‘சுத்திச் சுத்தி வருதுலே’
‘ஆஸ்டலுக்குப்போயி சோறு திண்ணா செரியாயிரும்’ என்றேன்
மீனாட்சிபுரம் தாண்டவே ஒருமணி நேரம் ஆகிவிட்டது. ‘லே ஜான் உனக்க தங்கச்சி வந்திருந்தா கேட்டியா?’ என்றேன் . சாலை இருட்டில் மின்கம்பத்தைப்பிடித்தபடி நின்றிருந்தான்
‘என்னத்துக்கு வந்தா ?’
‘உனக்க அம்மைக்குச் சுகமில்லியாம்…அம்பது ரூவா வேணும்னு சொன்னா’
‘லே, அது கிளவிக்க அடவாக்கும்…அவளுக்கு ஒரு தீனமும் இல்ல. நான் இஞ்ச டவுணிலே சம்பாதிச்சு ஜாளியடிக்கேண்ணாக்கும் அவ நினைக்கா….’
‘அம்பது ரூவா குடுத்தேன்’
‘அம்பது ரூவாயா?’
‘எனக்க கதையெளுத்துபணம் கையில இருந்தது’
‘கிளவி பொன்னு சேக்குகாலே….மொவள கெட்டிக்குடுக்கதுக்கு. தின்னமாட்டா .நல்ல துணி எடுக்கமாட்டா. கிறிஸ்மஸுக்கு கூட மனசறிஞ்சு கஞ்சி குடிச்சமாட்டா’
’ஆர கெட்டிக்குடுக்கதுக்கு?’
‘இந்தக்குட்டிய….இவளுக்கு இப்பம் பதினாறுல்லா? அடுத்த வருசம் அனுப்பிப்போடணும்னு சொல்லுதா’
விடுதிக்கு வந்தபோது ஜானுக்கு குமட்டல் இருந்தது. அறைக்குள் சந்திரனும் அருமையும் இருந்தனர். அவர்கள் தூங்க ஆரம்பித்த நேரம். ஜானைக்கண்டதும் எழுந்து வந்தனர்.அருமை, ஜானுக்கு சோற்றை நீர்விட்டு பிசைந்து கஞ்சியாக்கி ஓரிருவாய்கள் ஊட்டினான். ஜான் குமட்டியதும் விட்டுவிட்டான்.
நானும் ஜானும் தரையில் படுத்துக்கொண்டோம். ஜான் படுத்துக்கொண்டு ‘லே அரும, வைவிள எடுத்து தலையணைக்கு அடியிலே வையிலே’ என்றான்
பைபிளை ஒரு கையால் வருடிக்கொண்டே இருந்தபின் ஜான் தூங்கிவிட்டான். சிறிதுநேரம் இருட்டுக்குள் தெரிந்த அடிக்கூரையை பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே வேப்பமரம் சிலிசிலுத்தது. பின்னர் கனவில் மேரியைக் கண்டேன். நானும் அவளும் ஒரு மலையடிவாரத்தில் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் அந்த நடை காற்றில் நீந்திச்செல்வதுபோல இலகுவாக இருந்தது. மேரி கையில் ஒரு பெட்டி வைத்திருந்தாள்
‘அதுக்குள்ள என்னட்டீ?’ என்றேன்
‘வடை.சுறுக்கா பணியாரம் எல்லாம் இருக்கு’
’தருவியா?’
‘இல்ல. ஏசுவுக்கு குடுக்கதுக்காக்கும்’
காற்று சுழன்றடித்தது. என் கை எதிலோ மாட்டிக்கொண்டது. இல்லை, என் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன். ஜான் என் கையைப்பிடித்திருந்தான்.
‘ஏம்லே?’ என்றேன்
ஜான் சொன்னது புரியவில்லை. கொளகொளவென்று ஒரு சத்தம் குரலுடன் கலந்துவிட்டதுபோல
எழுந்து விளக்கைப்போட்டு திரும்பியவன் அலறியபடி பின்னால் நகர்ந்தேன். என்னருகே புதிய ஒருவன் படுத்திருந்தான்.
அருமை பாய்ந்து எழுந்து “என்னலே?’ என்றான்
‘இவன்…’ என்று பீதியுடன் சுட்டிக்காட்டினேன்.
அருமை ‘ஆருல இவன்? இஞ்ச எப்டி வந்தான்?’ என்றதுமே புரிந்துகொண்டு ‘லே, இவன் ஜான்லே’ என்றான்
ஜான் இருமடங்காக இருந்தான். முகம் உப்பி வெளிறி உருண்டிருந்தது. சீனர்களைப்போல இடுங்கிய கண்கள். மூக்குபரந்து செம்புள்ளிகளுடன் இருந்தது. உதடு தடித்து தொங்கியது. தாடைத்தசை கீழிறங்கி கழுத்து இடுங்கி உடம்பே உப்பி ஒரு பூதாகரக் குழந்தை போலிருந்தான். விரல்கள்கூட உப்பி உருண்டிருந்தன. குழந்தைபோலவே கைகால்களை ஆட்டி ததும்பிக்கொண்டிருந்தான். கொளகொளவென வாயிலிருந்து ஒரு குரல் ஒலித்தது
சந்திரன் எழுந்து அருமையிடம் ‘லே…என்னலே” என்றான். ஜானை அருமை சுட்டிக்காட்டியதும் ‘அய்யோ’ என்று கதறினான்
அருமை ”இது மலைவாதையாக்கும்லே….பேயி’ என்றான்
’இல்லலே, இண்ணைக்கு அந்த நர்சு குடுத்த ஊசி தப்பிப்போச்சு…வாறப்பமே தலை சுத்துதுண்ணு சொன்னான்’
‘செத்திருவானாலே?’ என்றான் சந்திரன் அழுகையின் விளிம்பில் நின்று.
‘நெல்சன் சகாவு இப்பம் எங்கல இருப்பாரு?’
‘நாகராஜாகோயிலுக்கு அந்தால கம்மூணிஸ்டு ஆப்பீஸுண்டு…அங்கிண இருந்தாலும் இருப்பாரு’ அருமை இறங்கி ஓடினான்.
அதற்குள் அறைமுழுக்க பையன்கள் குழுமிவிட்டார்கள். ‘இது தடிக்காரன்கோணம் சாயிப்புக்க பேயாக்கும்…நான் ஆளைக்கண்டிட்டுண்டு….இதுமாதிரித்தான் இருப்பாரு…ஆனை சவிட்டிச் செத்தாரு’ என்றான் ஒருவன்
நெல்சன் வரும் ஒலி தொலைவிலேயே கேட்டது. ‘லே வெலகுங்கலே…ஒற்ற ஒருத்தன் இங்கிண நிக்கப்பிடாது…லே மாறுலே’
நெல்சன் வந்து எட்டிப்பார்த்ததுமே ‘லே, இது அலெர்ஜியாக்கும்….மருந்து மாறிப்போச்சு….லே இங்கிண போண் எங்க இருக்கு?’ என்றான்
‘வார்டன் ரூமிலே போண் உண்டும்’
வார்டன் சாம்ராஜ் ஒரு களியக்காவிளைககாரர். நடுநிலை ஆசிரியர் வேலை. பகுதிநேர பெந்தெகொஸ்செதே ஊழியம். கூடவே வார்டன் பொறுப்பு. ஆகவே வார்டன் வேலையை சமையற்கார அந்தோணிக்கே கொடுத்துவிட்டிருந்தார். அவருக்குண்டான பங்குப்பணத்தை நாலாம்தேதி பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுக்கவேண்டும். வார்டனின் அறையை நேசையன் என்ற இன்னொரு ஆசிரியருக்கு சகாய வாடகைக்குக் கொடுத்திருந்தார். கட்டில், கொசுவலை ,மேஜை, நாற்காலி இணைக்கப்பட்ட கழிவறை எல்லாம் உடைய வசதியான அறை. நேசையன் மாலை ஐந்துமணிக்கு வந்து கதவைமூடிக்கொண்டால் ரேடியோவின் எட்டரை மணி வரை பாட்டு கேட்பார். ஒன்பதுக்கெல்லாம் தூங்கிவிடுவார். எக்காரணம் கொண்டும் கதவைத்திறப்பதில்லை
நெல்சன் வார்டன் அறைமுன் சென்று நின்று ‘வே கதவத்தெறவும்வே’ என்றான்.
சன்னலைத் திறந்து நேசையன் ‘லே, இஞ்சவந்து சல்லியம் செய்யப்பிடாது…போலீசிலே சொல்லுவேன்’ என்றார்
‘வே, ஒருத்தன் சாவக்கெடக்கான்வே…வேற எங்கயும் போண் இல்ல …கதவத்தெறவும் வே’
‘எனக்கு இதில காரியமில்ல’ என்றபடி நேசையன் ஜன்னலைமூடிக்கொண்டார்
நெல்சன் ஆவேசமாக பாய்ந்து கதவை ஓங்கி மிதித்தான். கதவு அதிர்ந்தது. மீண்டும் இரண்டு உதை ‘லே ஒரு பெஞ்ச நவுத்திக்கொண்டாங்கலே…ஒடைப்போம்’
நேசையன் கதவைத்திறந்து ‘போக்கிரித்தனம் செய்யப்பிடாது-’ என ஆரம்பிப்பதற்குள் நெல்சன் அவரது கன்னம் கண் காது எல்லாவற்றையும் சேர்ந்து பளாரென்று ஓர் அறை விட்டான். அவர் ‘எக்கம்மோ….என்னைய கொல்றாண்டோ’ என்று அலறியபடி அப்படியே அமர்ந்துவிட்டார். மொத்தக்கூட்டமும் ஆரவாரம் செய்தது
திரும்ப ஜானைநோக்கி ஓடினேன். ஜான் கைகளை குழந்தைபோலவே ஆட்டினான். அவன் கையைப்பிடித்தேன். அவன் கொளக் கொளக் என்று சொன்னது என்ன என்று எனக்குப்புரிந்தது. என்பெயரை. என் உடம்பு குளிர்ந்தது.
நெல்சன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரச்சொன்னான். முதலில் அங்கே தூங்கிக்கொண்டிருந்த சின்னடாக்டர் ஏதோ சமாளிப்பாகப் பேசியதாகவும் ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றால் எம்.எல்.ஏ ஹேமச்சந்திரன் அங்கே வருவார் என்று சொன்னதும் டாக்டர் பதறியடித்து ஆம்புலன்ஸ் அனுப்புவதாகச் சொன்னதாகவும் பிறகு அறிந்தேன்.
இருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. சிவப்பு விளக்கு தலைக்குமேல் சுழல அது முற்றத்தில் நின்றது. தூளிக்கட்டிலைத் தூக்கிவந்த இரு சிப்பந்திகள் மேலே வந்து ‘எங்க பேசண்டு?’ என்றார்கள்.
நெல்சன் “இந்நா கெடக்கான்….பாத்து செய்யுங்க…பயலுக்கு வல்லதும் ஆனா பிறகு ஒற்ற ஒருத்தன் டாக்டர்ணு சொல்லி நடக்கமாட்டான் இஞ்ச’ என்றான்
‘பென்சிலின் அலர்ஜியாக்கும்…. டெஸ்ட் டோஸு குடுக்காம ஏத்திப்பிட்டாவ’ என்றார் முதிய சிப்பந்தி
‘லே செத்திருவானால? ’ என்றான் அருமை என் கையைப்பிடித்தபடி.
‘சின்னவயசுதாலா?’
ஜான் அருகே அந்த தூளிக்கட்டிலை வைத்து அவனை இயல்பாகப் புரட்டி அதில் ஏற்றி தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். வண்டிக்குள் அவனை ஏற்றிக்கொண்டார்கள்.
‘லே ஜெயா நீயும் கேறு….நாங்க பொறத்தால வாறம்’ என்றான் நெல்சன்
ஏறிக்கொண்டேன். ஜான் கையை நீட்டி துழாவிக்கொண்டே இருந்தான். அவன் கையைப்பிடித்துக்கொண்டேன். வண்டி மிகையாகக் குலுங்கியது. இரு சிப்பந்திகளும் சாதாரணமாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.
ஜான் நேராக உள்ளே கொண்டுசெல்லப்பட்டான். சற்று நேரத்தில் நெல்சனும் சகாவு திவாகரனும் நான்கு ரப்பர்த்தொழிற்சங்க ஊழியர்களும் வந்து சேர்ந்தனர். பெரிய டாக்டரை அவரது வீட்டுக்கே சென்று கூட்டிவந்தார்கள்.
நான் என்ன செய்வதென்று தெரியாமல் பெர்ஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கே ஏற்கனவே இருந்த ஒரு கிழவி என்னிடம் ‘அடிபிடிக்கேஸா மக்கா?’ என்றாள் ஆவலாக.
பெரியடாக்டர் வழுக்கையும் தொப்பையுமான குண்டு மனிதர். வெள்ளைவெளேரென்று இருந்தார். வெளியே வந்து திவாகரனிடம் ‘முறிமருந்து போட்டாச்சு….ஒண்ணும் பிரச்சினையில்ல…நாளைக்குச் செரியாயிருவான்’ என்றார்
‘அந்த ஊசிபோட்ட தேவ்டியாள பாக்கணுமே’ என்றான் நெல்சன். திவாகரன் அவனை தோளைத்தொட்டு அடக்கினார்.
‘அவ நல்லதுக்காகத்தான் போட்டிருக்கா….டெஸ்ட் ஊசி போட்டு பாத்திருக்கணும்…அது அவ நெனைப்புல வரல்ல….இந்த ஊசியும் பென்சிலின் மாதிரியாக்கும். ஆனால் பென்சிலின் இல்ல. கேட்டா பென்சிலின் ஊசிக்குமட்டும்தான் டெஸ்டுன்னு நினைச்சேன்னு சொல்லுதா…நல்ல குட்டிதான்’ என்றார் டாக்டர்
டாக்டர் சென்றபின் மேலும் அரைமணிநேரமாகியது அனைவருக்கும் நிலைமையை விளக்க.
‘ஈ நேரத்தில் இவிடே சாயை கிட்டுமோடா?’ என்றார் தோழர் திவாகரன்
‘பஸ் ஸ்டாண்டுக்கு போனா குடிக்கிலாம் தோளர்’
நெல்சன் என்னிடம் ‘லே நீ இங்க இரி…’ என்றான். தலையசைத்தேன். அவர்கள் கூட்டமாகக் கிளம்பிச்சென்றார்கள். ஆஸ்பத்திரி வளாகம் மெல்ல அமைதி அடைந்தது. காலை நீட்டிக்கொண்டேன். சற்று நேரத்தில் நான்குபக்கமிருந்தும் பிசின் மாதிரி தூக்கம் வந்து மூடியது. கைவிரல்கள் ஒட்டிக்கொண்டன. கால்கள் சிக்கிக்கொண்டன. உதடுகளைக்கூட அசைக்கமுடியவில்லை. ஆனால் ஆஸ்பத்திரியை மூடிய கண்களுக்குள் உணர்ந்துகொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த மேரி ‘என்னைய கெட்டிக்குடுக்க பொன்னு வேணும்லா?’ என்றாள்.
மறுநாள் காலையில் நர்ஸ் ஏதோ விசாரிப்பதை வெகுதொலைவிலிருந்து கேட்டேன்.. ஜான் என்ற சொல் பலமுறை காதில் விழுந்ததும் பதறி எழுந்து வாயைத்துடைத்து ‘நானாக்கும்….நானாக்கும் ஜானுக்க ஆளு’ என்றேன்
‘சாயையோ காப்பியோ வாங்கிக்குடுங்க…போதம் வந்தாச்சு’
உள்ளே சென்றேன். உள்ளே தீவிர சிகிழ்ச்சைக்கு உள்ளாகும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் படுத்திருந்தனர். விழித்திருந்தவர்கள் சிலர்தான். ஒரு பெண்மணி அர்த்தமில்லா வெறிப்பு கொண்ட கண்களால் என்னை பார்த்தாள். என் நடையை அவள் கண்ணசைவு தொடர்ந்துவந்தது. ஜானை பார்ப்பது பற்றி நினைத்தபோது இதயம் துடித்தது
ஜான் வீக்கமெல்லாம் வடிந்திருந்தான். முகத்தில் ஒரு அதைப்பு மிச்சமிருந்தது. வாய்க்கு இருபக்கமும் அழுத்தமான கோடுகள். கண்களுக்குக் கீழே சுருக்கம். தோல்முழுக்க கொசுக்கடிபோன்ற புள்ளிகள். ஜானேதான். ஆனால் பெருவெள்ளம் வந்து வடிந்த ஆறுபோல சேறும் குப்பையும் படிந்திருந்தான் என்று பட்டது
‘லே ஜான்’ என்றபடி கட்டில் விளிம்பில் அமர்ந்தேன். “பயப்படுத்திப்போட்டேலே’
‘சர்க்காரு ஊசி வேண்டாம்ணுல்லா சொன்னேன்…நீயில்லா கூட்டிட்டுவந்தே?’
‘ஒரு தப்பு நடந்ததாக்கும்லே…அந்த நர்சுக்கமேலே தப்பில்ல கேட்டியா? புதிய மருந்த குத்திவச்சுப்போட்டா’
‘ஏசு சோதிக்காரு’ என்றான் ஜான் ‘லே,நீ ஹாஸ்டலுக்குப்போயி எனக்க வைவிள எடுத்திட்டுவா’
‘சாயை வேங்கிக்குடுக்கச் சொன்னா தொப்பிக்காரி….சாயையா காப்பியா?’
‘லே இங்கிண ஹார்லிக்ஸ் கிட்டும் கேட்டியா?’
‘வேங்கிட்டு வாறேன்’ என்றேன் ‘நல்லகாலம்லே, ராத்திரி கொண்டுவந்ததனால தப்பினே. காலம்பற பாத்திருந்தா இந்நேரம்–’
‘எனக்கு வெள்ளத்தில முங்கிப்போற மாதிரி இருந்தது. சூடான வெள்ளம். மூக்கும் வாயும் எல்லாம் வெள்ளம் கேறிப்போச்சு. அப்பமாக்கும் கைய நீட்டி உனக்க காலைப் பிடிச்சேன்… தலைக்குமேலே நீங்க ரெண்டாளும் நீந்தி போனிய..’
‘ரெண்டாளும்னா? ஆரு?’
ஜான் குழம்பி அவன் சொன்னதை அவனே கவனித்து என்னைப்பார்த்தான். பின் பார்வையைத் திருப்பி. ‘நீயும் மேரியும்’ என்றான்.