அன்புள்ள ஜெயமோகன்,
சிற்றிதழ்கள் நிர்வாகத்திறனின்மை கொண்டவை என்று எழுதியிருந்தீர்கள். சொல்புதிதும் அப்படித்தானா?
அருண்
அன்புள்ள அருண்,
என்ன சந்தேகம்? சொல்புதிது அளவுக்கு குளறுபடியாக வந்த இதழ்கள் மிகக் குறைவு. எனக்கு நிர்வாகத்திறன் போகட்டும், நிர்வாகம் என்ற ஒன்றின் இருப்பு பற்றிகூட ஒன்றும் தெரியாது. என்னையே வேறு யாராவதுதான் எப்போதும் நிர்வாகம்செய்து வருகிறார்கள்.
நான் சிற்றிதழ்களை நடத்தக்கூடாது. நடத்தவும் மாட்டேன். அது நண்பர் சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யின் கனவு. அவர் இதழ் ஆரம்பிக்க என்னிடம் உதவி கேட்டார். சேர்ந்து ஆரம்பித்தோம். அதன் விஷயங்களை திரட்டியளிப்பது மட்டுமே என் பொறுப்பு.பொதுவாக நான் விஷயங்களின் கைப்பிரதிகளை அனுப்புவதுடன் சரி. அதன்பின் அச்சிட்ட இதழ்களையே காண்பேன். மேலும் நான் அப்போது என் பெரிய நாவல்களின் வேலைகளையே முதன்மையாகக் கவனித்தேன். இவ்வியல்பு காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. இன்றுவரை என் ‘எதிரிகள்’ என்னைப்பற்றிச் சொல்லும் அவதூறுகளின் அடிப்படைகள் இவ்வாறு உருவானவையே.
ஐந்தாவது இதழ் வந்தபோது ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணன் அதிகாரியாக பணி உயர்வு பெற்று கடும் பணிச்சுமைக்கு ஆளானார். அதுவரை இதழின் ஆசிரியர் விற்பனை பிரதிநிதி கடைநிலை ஊழியர் எல்லாமே அவர்தான். அப்போது ஒப்பு நோக்க பிழைகள் குறைவு. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இதழ் வெளிவரும்போது மனச்சோர்வுதான்.
பின்னர் சரவணன் 78 ஆசிரியராக வந்தார். அப்போதுதான் அவர் பட்டமேற்படிப்பை முடித்திருந்தார். குறைவான ஊதியத்தில் அவர் பணியாற்ற முன்வந்தார். ஆனால் அனுபவம் குறைவு.தொடர்ச்சியாக பலவகையான பிழைகள் குளறுபடிகள்.
முக்கியமான குளறுபடி என்றால் தமிழிசை பற்றிய கட்டுரை சார்ந்த விவாதத்தைச் சொல்ல வேண்டும். தமிழ் சிற்றிதழ்களில் தமிழ் இசைக்கு ஒரு முக்கியமான தனி இதழ் வெளியிட்டது சொல்புதிதுதான். அதன் அட்டையில் நா.மம்முதுவின் படம் வெளியிடபட்டது. உள்ளே அவரது விரிவான பேட்டி. அவரை விரிவாக அறிமுகம் செய்தது சொல்புதிதுதான். வித்வான் லக்ஷ்மண பிள்ளை பற்றி மிக விரிவான ஒரு கட்டுரையை எம்.வேதசகாயகுமார் எழுதினார்.
பொதுவாசகர்களுக்காக தமிழிசை பற்றிய இரு அறிமுகக் குறிப்புகளை எழுதிச்சேர்க்கலாமென பிறகு தோன்றியது. சரவணனுக்கு தகவல்களை அனுப்பி இரு பின் குறிப்புகளை சேர்க்கும்படிச் சொன்னேன் — பெயரில்லாமல் சாய்ந்த எழுத்தில். இதழ் வெளிவந்தபோது அவை இரு தனி கட்டுரைகளாக, ஒன்று சரவணன் பேரிலும் இன்னொன்று இதழ் பொறுப்பாளரான அருண்மொழி நங்கை பேரிலும் வெளியாகியிருந்தது. நான் மிகக் கடுமையாக அவரை கண்டித்தேன். ஆனால் குறிப்புகள் கட்டுரைகள் போல நீண்டு விட்டமையால் வேறு வழி தெரியவில்லை என்று அவர் சொன்னார்.ளொரு கோணத்தில் இதழியலில் இது தவிர்க்க முடியாததும்கூட.
சில வருடங்கள் கழித்து பொ.வேல்சாமி அருண்மொழிநங்கை பேரில் வந்த கட்டுரை தஞ்சை தமிழ்பல்கலையைச் சேர்ந்த ஓர் ஆய்வாளர் எழுதியது என்று என்னிடம் தெரிவித்தார். உடனே நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அத்தகவலை உறுதி செய்து கொண்டேன். அப்போது சரவணன் இதழைவிட்டு போயிருந்தார். அந்த ஆய்வாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியதுடன் இதழ் சார்பில் பொது மன்னிப்பும் கேட்டேன். பின்னர் சரவணன் எனக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியிருந்தார்.
உண்மையில் சரவணன் பேரில் வந்த கட்டுரையும் வேறு ஒரு கட்டுரையின் நகல் என்று இரண்டையும் சேர்த்துதான் பொ.வேல்சாமி சொல்லியிருந்தார். ஆனால் நம் சக இதழ்களுக்கு இந்த தகவல் முக்கியமானதாகப் படவில்லை. அதை தவிர்த்தால் மட்டுமே பழியை என்மீது திருப்ப முடியும் என்பது அவர்களின் திட்டம். பொ.வேல்சாமி என்னிடம் சொன்னதை நான் உறுதிசெய்துகொண்டேன், ஆனால் அவர் அதை அவரது கட்டுரைகளில் சொல்லவில்லை.
இன்னொரு குளறுபடி மேலும் வேடிக்கையானது. நிர்மால்யாவும் நானும் மொழிபெயர்த்த கல்பற்றா நாராயணனின் நெடுஞ்சாலை புத்தர் என்ற கவிதை சொல்புதிதின் பின்னட்டையில் வெளியானது. அது ஊட்டியில் நடந்த கவிதைபரிமாற்ற அரங்குக்காக மொழியாக்கம் செய்யப்பட்டது. அம்மொழியாக்கம் 30 தமிழ் மலையாள கவிஞர் மத்தியில் படிக்கப்பட்டு திருத்தப்பட்டு பலமணிநேரம் விவாதிக்கவும்பட்டது. அக்கூட்டத்தில் சரவணன் பங்குகொண்டிருந்தார். அவர்தான் சொல்புதிதுக்கு அப்போது பொறுப்பு. ஆனால் சொல்புதிதில் அக்கவிதையில் இரண்டு வரிகள் விடுபட்டு பிரசுரமாகியிருந்தது. மேலும் இருவரிகள் அச்சுக்குளறுபடியாகியிருந்தன. வழக்கம்போல சால்ஜாப்புகள்.
இரு வருடம் கழித்து ஓர் இதழில் அதே சரவணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சொல் புதிதில் வந்த மொழிபெயர்ப்பையும் நான் என் தொகுப்பில் சேர்த்த சரியான மொழிபெயர்ப்பையும் அளித்து ஒப்பிட்டு மொழிபெயர்ப்புகள் நடுவே ஏன் இந்த வேறுபாடு, இப்படியெல்லாம் மொழிபெயர்த்தால் என்ன இலக்கிய நம்பகத்தன்மை என்றெல்லாம் கேட்டு ஒரு பெரிய கட்டுரை! இசை பற்றிய கட்டுரைக்காக நான் சரவணனை மன்னிக்காமைக்காக பழிவாங்குதல்.
அடுத்து என் நண்பர் மௌலானா சதக்கத்துல்லா ஹஸனீ ஆசிரியரானார்.பொதுவாக இதழில் பிழைகள் குறைந்தாலும் அவருக்கு இலக்கிய நுட்பங்கள் தெரியாமையினால் சில சிக்கல்கள் உருவாயின. எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்] டாமன்,டையூவுக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டிருந்த நான் அவ்விதழைக் காணவேயில்லை.
வேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர். அவர் அவரே எழுதிய கதை என்று சொன்னதுமன்றி மன்னிப்பு கோரவும் இல்லை.
வசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிரமிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே. அதனால்தான் மௌலானாவுக்கு புரியவில்லை. காலச்சுவடு அதை வெளிச்சமாக்கி பிரச்சாரத்தை தூண்டிவிட்டது.
எனக்கு வசை இலக்கியத்தில் நம்பிக்கை இல்லை. சொல்வது எதுவானாலும் நேரடியாகவே சொல்வேன். சொல்புதிது வசையிலக்கியத்தை வெளியிட்டதுமில்லை. அதன் இதழ்கள் விரிவான ஒட்டுமொத்த ஆய்வுகளுக்காகவே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றுவரை அக்கதை நான் எழுதியது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.ர் அப்பிரச்சாரத்தை சோர்விலாது நடத்திய காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன்ரென் நண்பர். அவருக்கு மிக நன்றாகவே தெரியும், அது நான் எழுதியதல்ல என்று. நாகர்கோயிலில் அக்கதை¨யை முன்னரே வேதசகாயகுமாரின் வாயால் வாசித்து கேட்காத அறிவுஜீவிகள் குறைவு. ஆயினும் நான் பொறுப்பேற்று நேரடியாக மனுஷ்யபுத்திரனுடன் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினேன். எழுத்திலும் மன்னிப்பு கேட்டேன். உண்மையில் எவரையும் புண்படுத்த நான் விரும்புவதில்லை.
சொல் புதிது நன்றாகவே வரவேற்பு பெற்றது.இதழ்கள் மிகக் குறைவாகவே மிஞ்சியுள்ளன, என் மாடியில். ஆனால் பணம் கையில் வந்தது மிகக்குறைவு. முதல் இதழ் முதல் 15 வது இதழ் வரை ஒரு பைசாகூட தராத விற்பனையாளர் பலர். சந்தா கட்டியவர்களுக்கு ஒழுங்காக போய்ச்சேரவும் இல்லை. இன்றுகூட எப்படியும் அரை லட்ச ரூபாய் வெளியே நிற்கிறது.
கடைசியில் எவரோ- யார் என நானறிவேன்– சொல் புதிது ஓர் இஸ்லாமிய தீவிரவாத இதழ் என்று சொல்லி புகார் செய்து விட்டார்கள். மௌலானாவை தினம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூட்டி வைத்து மாதக்கணக்கில் விசாரணை செய்தார்கள். நாங்கள் முறைப்படி பதிவுசெய்யாமல் நடத்தி வந்தோம். அதையே காரணம் காட்டி இதழை நிறுத்தினார்கள். பதிவுக்கு முயன்றபோது பெயர் கிடைக்கவுமில்லை. இதழ் நின்றுவிட்டது.
சொல்புதிதை இப்போது பார்க்கும்போது அதன் மிக விரிவான பேட்டிகள், இந்திய மரபு குறித்த கட்டுரைகள், நூல்பகுதிகள் ஆகியவற்றுக்காக அதை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்லத்தோன்றுகிறது.