எண்பத்திரண்டில் அப்பாவுடன் சண்டைபோட்டுவிட்டு நாகர்கோயில் வந்தேன். சண்டை என்றால் நேருக்குநேர் அல்ல. என்னைப்பற்றி அவர் சொன்ன ஒரு சொல் அவமதிப்பாக எனக்குத் தோன்றியது. ‘இவனை புத்தகங்களுடன் சேர்த்து எரிக்கவேண்டும்’ என்று சொன்னால் எப்படித் தாங்கிக்கொள்வது?
என் உடைகளை ஒரு துணிப்பையில் செருகிக் கொண்டு சென்று ஒரு புதருக்குள் வைத்தேன். வழக்கம்போல கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மாவிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொன்னபோது என் கண்கள் கலங்கி தொண்டை அடைத்தது. வீடுதிரும்பாமலிருக்கும்போதுதான் அப்பா என் கோபத்தை உணரப்போகிறார். அந்த கணத்தை நூற்றுக்கணக்கான முறை கற்பனையில் ஓட்டிக்கொண்டேன். அது எங்கெங்கோ எரியும் தசைப்பரப்புகளில் தைலமாக குளிர்ந்து பரவியது. கல்லூரிக்குச் செல்லும்வழியில் பையை எடுத்துக்கொண்டேன். நடக்கும்போது வைராக்கியமாக கால்களை வலுவாக வைத்தேன். வேட்டியை இறுக்கமாகச் சுழற்றி மடித்துக்கட்டிக்கொண்டேன். இதோ வருகிறேன் உலகமே!
ஆனால் பகல் முழுக்க நகர்மன்ற நூலகத்திலும் மரத்தடிகளிலும் அமர்ந்திருந்து மதியம் கட்டுச்சோற்றை தேங்காய்த்துவையலுடன் கலந்து தின்று மாலையானபோது திகில் கவ்வியது எங்கே செல்வது? கையில் பணமில்லை. சாயங்கால உணவுக்கு வழியில்லை. எங்கே இரவு தூங்குவது? தெரிந்த எவரும் நகரில் இல்லை. என் பெரியம்மா மகள் நாகர்கோயிலில் இருந்தாள். ஆனால் அன்று எனக்கு அவளை அறிமுகம் இல்லை.
பூங்காவையே சுற்றிச்சுற்றிவந்தேன். குழாய்த்தண்ணீரைக் குடித்தேன். சினிமா சுவரொட்டிகளைப்பார்த்தேன். சட்டென்று வீட்டையோ ஊரையோ நினைத்துக்கொண்டு மனம் உருகிக் கண்ணீர் உகுத்தேன். பின்னர் வைராக்கியத்துடன் மனதை இறுக்கிக் கொண்டேன். மாலையானதும் பசி குடலை அமைதியிழக்கச் செய்தது. அது உறுமி நெளிந்தது. தண்ணீர் அவ்வளவு குமட்டலை உருவாக்குமென அப்போதுதான் அறிந்தேன்.
மாலை எட்டுமணிக்கு பூங்காவை மூடிவிடுவார்கள். அதன்பின் எங்கும் என்னால் தூங்கமுடியாது. நானறிந்த ஒரே இடம் பூங்காதான். சட்டென்று அடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொண்டேன். எட்டுமணிக்கு காவலர் விசில் அடித்து அங்கிருந்தவர்களை வெளியே செல்லும்படிச் சொன்னார். தொளதொளவென்று காக்கிச்சீருடை அணிந்த மெலிந்த கிழவர். விசில் பல இடங்களில் ஒலித்தது. என் அருகே நின்றுகூட அவர் விசில் ஒலி எழுப்பினார்.
சற்றுநேரத்தில் பூங்காவிளக்குகள் அணைந்தன. வெளியே இரும்புக்கதவு இழுத்துச்சாத்தப்படும் கிரீச் ஓலம். கிழவரின் இருமல். மேலும் சற்றுநேரம் மூச்சடக்கி அமர்ந்திருந்தேன். பின்பு நூலகத்தின் பின்பக்க வராந்தாவுக்குச் சென்றேன். மன்னர்காலகட்டத்து கட்டிடம். நான்கு பக்கமும் வராந்தாக்கள் உண்டு. பின்பக்க வராந்தாவின் ஒட்டுத்திண்ணையில் யாரும்காணாமல் தூங்கமுடியும் என நினைத்தேன்.
ஆனால் மூங்கில்தட்டிவைத்து மறைக்கப்பட்ட வராந்தாவின் கதவு திறந்திருப்பதைக் கண்டேன். தள்ளிப்பார்த்தேன். திறந்துதான் இருந்தது. உள்ளே சென்றேன். தூசுபடிந்த நீண்ட வராந்தா. காகித அட்டைகள் சிதறிக்கிடந்தன. ஒருவகை மருந்துவாசனை. வராந்தாவின் ஓரத்துக்குச் சென்றேன். அங்கே உடைசல் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அப்பால் ஓர் இடமிருந்தது. அந்த வராந்தாவுக்குள் காவலர் வந்து பார்த்தால்கூட விளக்கைப்போடாமல் என்னைக் கண்டுபிடிக்கமுடியாது.
அட்டைகளை எடுத்துப்போட்டுப் படுத்துக்கொண்டேன். நினைத்ததைவிட கொசு அதிகம். என் முகத்தையே அவை சுற்றிச்சுற்றி வந்து ரீங்காரமிட்டன. வெளியே படுத்திருந்தால் கொசுக்கடி தாளமுடியாமல் பூங்காவை விட்டு ஓடியிருப்பேன். பெருமூச்சுகளாக வந்தது. இந்த உலகில் ஓர் அனாதை என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வைக்கம் முகமது பஷீர் அல்லது சுவாமி விவேகானந்தர் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் அப்படி ஆவதற்குள் செத்துப்போய்விடுவேன் என்று தோன்றியது.
நான் செத்துப்போனால் ஒவ்வொருவரும் எப்படி எப்படி அழுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கே துக்கம் தாளாமல் கண்ணீர்வந்தது. தொண்டை கரகரவென்று இருந்தது. உப்பில்லாமல் விளாங்காய் சாப்பிட்டதைப்போல. ஆனால் என் உள்ளூர அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றும் தெரிந்திருந்தது. ஆகவே துக்கத்தைப் பெருக்க கற்பனைகளை ஊதிவிட்டுக்கொண்டே இருந்தேன்.
யாரோ வரும் ஒலி. ஒரு பெண்குரல். கூடவே ஒரு ஆண். ஆண் மெல்லியபோதையில் பேசிக்கொண்டிருந்தான். ‘எனக்க கிட்ட பேசுதியா? ஆருகிட்ட? இல்ல கேக்கேன்…ஏல ஆருலா நீயி?’
அவள் உள்ளே வந்து ‘வாரும்வே’ என்றாள்.
அவன் உள்ளே வந்ததும் ஏப்பம் விட்டான். ’இது என்ன எடம் குட்டி?’
‘சர்க்காரு எடமாக்கும்…ஆரும் வரமாட்டினும்…ரூவாய எடும்வே…’
‘ரூவாயா? அத அந்த நொண்டிக்க கையில குடுத்தேம்லா?’
‘அத பள்ளியில சென்னு சொல்லும்…பைதாவ எடுத்திட்டு முந்திய அவுரும்..’’
”ஏட்டி உள்ளது…இந்தா இப்பம்தாலா குடுத்தேன்…அவன விளிச்சு கேளு….கண்ணாண ரூவா அஞ்சாக்கும் எண்ணிக்குடுத்தேன்’
‘அப்ப, அவனுக்க கிட்ட போ …எந்திரிலே தாயளி…கைய வச்சேண்ணாக்க தாக்கோல்கொத்த அரிஞ்சு கையில தந்துபோடுவேன்’
’இதென்ன அக்குரும்பா கெடக்குவு….என்ன வேணும் சொல்லு’
‘அஞ்சு ரூவா எடும்’
‘அப்பம் பத்து ரூவாயா? உனக்க சூத்தும் மூஞ்சியும் ஒண்ணு மாதிரில்லாட்டி இருக்கு’
‘அஞ்சுரூவாய எடும்வே…’
‘பைசா இல்ல’
‘பின்ன?’
‘நான் போறேன்’
அவள் உரக்க ‘எங்கிணலே போற நாறக்கூதறப்பயலே? சோலிய முடிச்சுட்டு பைசா இல்லேண்ணா சொல்லுகே? ஏல நில்லுலே…லே’
அவன் சட்டென்று குரலைத்தாழ்த்தி ‘ஏட்டி சத்தம்போடாத…நான் கௌரவக்காரனாக்கும்…முந்தியவிடு…முந்தியவிடு சொல்லுதேன்’
‘அஞ்சுரூவாய வச்சுட்டுப்போலே…தூக்கிட்டு வந்தேல்லா? ஏலே வையிலே பைசாவ’
‘குடுக்கேன்…நீ பிடியவிடு’
‘பைசாவ எடுலே…அந்தக்களி இஞ்ச வேண்டாம் கேட்டியா?’
’குடுக்கேன்…இந்தா…உனக்கக் கட்டப்பணம். போருமா? சாவு, போ…’
அவள் பிடியை விட்டிருக்கவேண்டும். அவன் வேட்டியை கட்டிக்கொள்ளும் சத்தம்.
‘நாறத்தேவிடியாண்ணு சொல்லுகது செரியாத்தான் இருக்கு’
‘மோந்துட்டுல்லா வந்தீரு?’
‘சீ மாறுடீ தேவ்டியா’
‘எனக்கு உம்ம ஓசி ஒண்ணும் வேண்டாம்….இருந்துட்டு போவும்’
‘போடி’
’இல்லவே…உள்ளத்தச்சொல்லுதேன்…வந்திட்டீருல்லா?’
‘அதிப்பம்…’
‘இரும்வே…ஒண்ணும் பயராதியும்…’
‘வல்லவனும் கண்டா….நான் குடும்பக்காரனாக்கும்’
‘இஞ்ச ஆரும் வரமாட்டினும். வாரும்’
அசையாமல் படுத்திருந்தேன். பெருமூச்சுகள், அசைவுகளின் ஒலிகள். ஆனால் அதிகபட்சம் மூன்று நிமிடம்கூட ஆகியிருக்காது. அவன் எழுந்து அமர்ந்து பீடி பற்றவைத்துக்கொண்டான். அவள் ஆடையை அணிந்துகொள்ளும் ஓசை. எனக்கு அது புத்தகத்தைப்புரட்டும் ஒலிபோலக் கேட்டது.
‘பீடி இருக்காவே?’
‘இருக்கு’
அவளும் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டாள். சிறு குருவி போல தீக்குச்சிச்சீறல். பீடிவாசனை.
‘என்ன செய்தீரு?’
‘நமக்கு தேங்கா ஏவாரமாக்கும்….சந்தையில போட்டுட்டு போற வளி….”
‘வண்டி காலத்தயா?’
‘ஓ…காலத்த அஞ்சரமணிக்கு….நெடுமங்காடுபோற வண்டி….பஸ்ஸ்டாண்டிலே கெடக்கும்பளாக்கும் நொண்டி வந்து கேட்டான்’
’தேங்கா வேங்கி விப்பீரோ?’
‘என்ன வேவாரம்? செத்தவேவாரம்… அந்தால தேங்கா வேங்கி தொலிச்சு தலைச்சுமையாட்டு கொண்டுவந்து இங்க வித்தா சுமட்டுக்கு நாப்பதுரூவா நிக்கும். அது வச்சு கஞ்சியும் பற்றுமாட்டு குடும்பம் போவுது…பைசாவ அம்புரோஸுக்க சாயக்கடையிலே குடுக்கியது. போறப்பம் வேங்கிக்கிடுயது. கள்ளப்பயக்க சல்லியம் உள்ளதாக்கும்லா?’
’நீரு அண்டாயரிலே ரூவாய தைச்சு வச்சிருக்கத பாத்தேன்…’
‘குட்டி, நீ… கண்ணாண…சத்தியமா…எனக்க ஜீவிதமாக்கும்!’
‘சும்மா கெடயும்வே… உம்மபைசா எனக்கு என்னத்துக்கு? நீரு பிள்ளக்குட்டிக்காரன்லா?’
‘உனக்க ஆளுக அறிஞ்சா என்னய கொண்ணு போட்டிருவானுக’
‘நான் இருக்கும்பம் கைய வச்சிருவானுகளா? பயராதியும்’
‘உனக்கு பிள்ளிய இருக்காட்டி?’
‘கெடக்கு…ரெண்டு பொட்டைக….மூத்தது எட்டாம்கிளாஸு படிக்குது. சின்னவ நாலு’
‘கெட்டினவன் உண்டா?’
‘கெட்டினவன்னு ஆருமில்ல…இப்பம் இந்த நொண்டிய வச்சிருக்கேன்….ஆளுண்ணு ஒருத்தன் வேணும்லா?’
’உள்ளதாக்கும். எனக்க மவன் இந்த வரியம் பத்து எளுதுகான்…குட்டி ஒம்பது…நிண்ண நிப்பில வளந்துபோச்சு….கெட்டினவளுக்கு எப்பளும் தீனமாக்கும்….நடுவு தளந்துபோட்டா…ஆனா நல்லவளாக்கும். அவ வளக்குத ஆடும் கோளியும் உள்ளதுகொண்டு வீடு பட்டிணியில்லாம நிண்ணுபோவுது’
‘எல்லா எடத்திலயும் கத ஒண்ணுதாலா?’
’குட்டிகளுக்கு வல்லதும் உருட்டி வச்சிருக்குதியா?’
‘இருவத்தஞ்சுபவுனு இருக்கு….பேங்கில அடமானம் வச்சிருக்கேன்…வீட்டில வச்சிருந்தா நொண்டி எடுத்துப்போடுவான்….’
வெளியே ஒருவன் ‘ஆச்சா?’ என்றான்.
அவள் ‘ இந்தா’ என்றாள்.
‘அப்பம் நான் வாறேன்….’
‘செரி….மறுக்கா வாறப்ப வாரும்’
‘பாப்பம்’ என்றபின் அவன் வெளியே சென்றான். அவள் பீடிக்கறையை காறித்துப்பியபின் வெளியே சென்றாள். இருட்டுக்கு அப்பால் ஓசைகள் கரைந்து கரைந்து மறைந்தன.