அன்புள்ள ஜெ,
உங்கள் திருப்பூர் உரை வாசித்தேன். கடைசி வரிகள்என்னை மிகவும் நெகிழச்செய்தன. வெளிப்படையாக
தேசப்பற்றும் ஆழ்மனதில் தேச வெறுப்புமாகப்பலர் இன்று வேஷம் போடுகின்றனர். தனிப்பட்ட முறையில் எனக்கு என் தேசம் மீதான அபிமானம் பல வருஷங்களாகவே குறைந்து கொண்டு தான் இருக்கிறது. உங்கள் உரை என் கருத்தையோ நிலைப்பாட்டையோ மாற்றவில்லை என்றாலும் தேசக்கனவு என்ற மானிட உணர்வின்
உச்சத்தை சில மணித்துளிகள் தோன்றச்செய்தீர்கள். நன்றி!!
உண்மைதான்!பிழைத்தலே பிரம்மப்பிரயத்தனம் என்ற நிலையில் இருந்து இன்று பிழைக்க வந்த தேசத்திலும் தழைக்கத்தொடங்கி இருக்கும் இந்திய தேசிய இனம் சீக்கிரம் தெளிவு பெற்று தன் வரலாற்றை சரியாக அறிய முற்படும் என்று இன்று நம்பிக்கை கொள்கிறேன்.
தகவல்களும் அறிவுத்திறப்புகளும் நிரம்பிய அற்புத உரை. ஏற்கனவே சிறிதும் பெரிதுமாக பல கட்டுரைகளில் நீங்கள் எழுதிய விஷயங்கள் என்றாலும், அதை ஒரே தொகுப்பாக லட்டு போல் கேட்டு மகிழ்ந்த திருப்பூர் மக்கள் பாக்கியசாலிகள்.
அன்புடன்,
ஜெய்கணேஷ்
அன்பு ஜெயன்,
முதலில் என் நன்றி.
திருப்பூருக்கு வரஇயலாத என்னைப் போன்றவர்களை மனதில் கொண்டு தங்களின் பேச்சை எழுத்து வடிவில் அளித்த உங்களுக்கு.
சங்குக்குள் கடல் – தேசமென்னும் தன்ணுணர்வு.இதை சிப்பிக்குள் முத்தென்றே கொள்கிறேன்.
இருட்டைப் பழிப்பதற்காக ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றியிருக்கிறீர்கள்.
சிறு வெளிச்சமென்றாலும் உலகத்து இருட்டை விரட்ட வல்லது. ஒரு தகப்பன் தன் குழந்தையின் விரல் பற்றி அழைத்துச் செல்வதுபோல் தங்கள் பேச்சு அமைந்துள்ளது.
ஜனநாயகத்திற்கான சுதந்திரம் என்று சொன்ன அம்பேத்காரின் பெயரை உபயோகிப்பவர்கள் கூட இந்த செய்தியை எங்கும் சொல்லவில்லை.
நான் என்ற ஒரு புள்ளியில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து பிரும்மாண்டமாய் விரிகிறது.
உடனடியாக நிறைய எழுத முடியவில்லை.
இந்த பிரமிப்பு விலகியபின் எழுதுகிறேன்.
மீண்டும் என் நன்றி.
சந்தானகிருஷ்ணன்.