அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
பாகிஸ்தானில் உருதுமுஸ்லிம்களுக்கான தனிநாடொன்றை உருவாக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அந்நாட்டின் இந்தியாவிலிருந்து குடியேறிய முஹாஜிர்களின் கட்சியான எம்.கியூ.எம் இன் தலைவர் அல்டாஃப் ஹுசைன் எச்சரித்துள்ளார்.வாக்களிக்கப்பட்ட நாட்டை நம்பி சென்ற உருதுமுஸ்லிம்கள் இன்று அந்நாட்டிலேயே இரண்டாந்தர, அவ்வாறு கூட கூறமுடியாது,மூன்றாம்தர குடிமக்கள் ஆகிவிட்டார்கள்.இந்திய பிரிவினை எந்த உருதுமுஸ்லிம்களை மையமாககொண்டு செய்யப்பட்டதோ அவர்களை அது இரு தேசங்களுக்கு மத்தியில் பிரித்து அரசியல் பலமற்றவர்களாக செய்ததைத் தவிர வேறெந்த நன்மையையும் அளிக்கவில்லை.இந்த பிரிவினையால் நன்மை அடைந்தவர்கள் பஞ்சாபி முஸ்லிம்களும்,வங்காளி முஸ்லிம்களும் மட்டுமேயாவர்.
இந்தியாவிலுள்ள உருது பேசும் முஸ்லிம்களுக்கும்,பாகிஸ்தானில் உள்ள கராச்சியை மையமாகக் கொண்ட உருது பேசும் முஹாஜிர்களுக்கும் மொழியை அடிப்படையாகக் கொண்ட தனிநாடொன்று கராச்சியை உள்ளடக்கிய தெற்கு சிந்து பகுதியில் அமைப்பதே நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கும் உருதுமுஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும்.இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் நில விட்டுக்கொடுப்பை செய்யலாம்.இந்த உருதுதேஷ் அல்லது உருதுஸ்தான் மொழியை அடிப்படையாககொண்டு அமைவதனால் பெருமளவிற்கு மத அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதாகவும் அமையக்கூடும்.இந்திய,பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மானிடப்பேரழிவினைப் பாடமாகக்கொண்டு மக்கள் இடப்பெயர்வை மிகவும் திட்டமிட்டும் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இதை செய்ய முடியுமாயின் தெற்காசியாவில் அனைத்து மக்களும் வெறுப்புகளை களைந்து சமாதானமும் செழிப்புமாக வாழக்கூடிய எதிர்காலம் இலகுவாக உருவாகும்.
இதனை விடுத்து பாகிஸ்தானில் வாழும் உருது பேசும் மக்களுக்கு மாத்திரம் கராச்சியை மையமாகக்கொண்ட ஜின்னாபூர் என்ற தனிநாடொன்றை உருவாக்குவது பெரிய மாற்றங்கள் எதனையும் கொண்டுவரமா என்பது சந்தேகம்தான்.
http://dividepakistan.blogspot.ae/
சிவேந்திரன்