துதிபாடி வட்டம் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே? உங்கள் படைப்புகள் மீதும் கருத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவன் நான். ஆனால் எனக்கு உங்களைச்சுற்றி உள்ள வட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளனைச்சுற்றி இப்படி ஒரு வட்டம் எதற்காக? வேறு எழுத்தாளர்கள் இப்படி வட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்களா? உங்களைத் துதிபாடுவதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஆகவேதான் நான் இதை உங்களிடம் கேட்கிறேன்.இந்தத் துதிபாடல் உங்கள் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. அல்லது உங்கள் பலவீனத்தை உருவாக்குகிறது

சிவகணேசன் பெருமாள்

அன்புள்ள சிவகணேசன்,

முதல்கடிதம் எழுதுகிறீர்கள். மின்னஞ்சல்கூட புதியதாக இருக்கலாம் n எழுத்து பலமுறை பயன்படுத்தப்பட்ட விசித்திரமான மின்னஞ்சல். கேள்விக்கு நன்றி.

இந்த வினாவில் ஒரு முன்முடிவு உள்ளது. உங்களுக்கு சற்றும் தெரியாத ஒரு பெரிய கூட்டத்தைப்பற்றி அவமதிப்பான, சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு முன்முடிவு. அவர்கள் அனைவரும் முட்டாள்கள் நீங்கள் மேலானவர் என்ற எண்ணம். அடிப்படையான வாசிப்போ அதன் விளைவான சுயமோ கொண்ட ஒருவர் இப்படி தனக்குத்தெரியாதவர்களைப்பற்றி முடிவுகளை உருவாக்கிக்கொள்ள மாட்டார். கூச்சமில்லாமல் அதை பொதுவில் வைக்கவும் மாட்டார். ஆனால் உங்களைப்போல பலரும் அதைச்செய்கிறார்கள் என நான் அறிவேன்.

என் வாசகர் சுற்றத்தில் இருப்பவர்களின் கல்வித்தகுதி பற்றிய ஒரு கணக்கெடுப்பு நிகழ்ந்தது. அவர்களில் மிகக் குறைவான கல்வித்தகுதி உடையவன் நானே என்று தெரியவந்தது. அவர்களில் ஏராளமானவர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிவியலிலும் தத்துவத்திலும் உயர் ஆய்வுசெய்பவர்கள். சர்வதேச ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளியிட்டு வருபவர்கள். பெரும்நிறுவனங்களின் நிர்வாகப்பொறுப்பில் இருப்பவர்கள். நான் சற்றும் அறியாத பல துறைகளில் பெரும் படிப்பும் தொடர் வாசிப்பும் கொண்டவர்கள். இலக்கியத்திலேயேகூட என்னைவிட அதிகம் வாசித்தவர்கள் பலர் உண்டு. என்னைத் துதிபாடி அவர்கள் அடையக்கூடியது ஏதும் இல்லை. துதிபாடி வாழும் அளவுக்கு அவர்கள் ஆளுமையற்றவர்களும் அல்ல.

அவர்கள் வெறுமே துதிபாட ஒன்றுகூடுபவர்கள் என்று சொல்லும் உங்களைப்பற்றி எனக்கு ஒரு சித்திரம் உருவாகிறது. உங்கள் அறிவுத்திறன் மற்றும் ஆளுமை பற்றி ஆழமான தன்னம்பிக்கைக் குறைவுள்ளவர் நீங்கள். பிறரிடம் முரண்படுவதன் வழியாக மட்டுமே தனித்துநிற்க முடியும் என்ற எண்ணம் கொண்டவர். எந்தத்துறையிலும் எதையும் சாதித்தவரோ இனிமேல் சாதிக்கக்கூடியவரோ அல்ல. எளிய மனிதராகவே வாழ்ந்து முடியக்கூடியவர். அதேசமயம் கடுமையான உரத்த கருத்துக்களைச் சொல்லி உங்களை உங்களிடமே நிரூபித்துக்கொள்ள முயன்றுகொண்டும் இருப்பீர்கள். அதன் ஒரு விளைவே எவருக்கும் எந்நிலையிலும் நல்லெண்ணத்தையோ உயர்மதிப்பையோ அளிக்கமாட்டேன் என்ற உங்கள் நிலைப்பாடு. அதற்காக பரிதாபமே கொள்கிறேன். ஏற்கனவே தோல்வியடைந்த மனிதர் நீங்கள்.

உங்கள் இடம் ஃபேஸ்புக் தான் அங்கே சென்று ஒரு பக்கத்தை உருவாக்கி உதிரிக்கருத்துக்கள் வசைகள் நக்கல்கள் என்று கொட்டுங்கள். முக்கியமானவர்களை வசைபாடினால் உங்களுக்கும் சிலர் கூடுவார்கள். அந்த முக்கியமானவரின் எதிரிகள். அவர்கள் உங்களை ‘துதி’ பாடுவார்கள். நெஞ்சில் புண்பட்டு எரியும் அகங்காரத்தில் சந்தனம் பூசியதுபோல இருக்கும். அப்படியே வாழ்க்கை ஓடி முடியும். வேறு வழியே இல்லை. வாழ்த்துக்கள்.
*

என்னுடைய வாசகர்களாக எனக்கு அறிமுகம் ஆகக்கூடியவர்கள் என் எழுத்துக்கள் மீதான பிரியத்தை பொதுவான அம்சமாகக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் மிகச்சில நாட்களிலேயே என் நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். முரண்பாடும் விவாதமும் கோபமும் எல்லாமே அந்த நட்பின் எல்லைக்குள் நிகழ ஆரம்பிக்கின்றன. நட்பில் மேல் கீழ் பதவிகள் இருக்கமுடியாது. இந்த நட்புவட்டத்துக்குள் உள்ள ஒவ்வொருவருக்கும் அது தெரியும். சற்றே மனம் திறந்த ஒவ்வொருவராலும் இதை உணரவும் முடியும்,

இத்தகைய ஒரு நட்புவட்டம் எனக்கிருப்பதற்குக் காரணம் என் இயல்புதான். அதுபற்றிய பெருமிதம் எனக்குண்டு. நான் நினைவறிந்த நாள்முதலே பெரும் நட்பு வளையம் கொண்டவன். என் ஆரம்பப்பள்ளி நண்பர்கள் இன்றும் நாற்பது வருடங்களாக நண்பர்கள். கல்லூரி நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் என் பெயருள்ள குழந்தைகள் கல்லூரி செல்ல ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் இயக்கங்களில் பெற்ற நண்பர்கள் , தொழிற்சங்கத்தில் பெற்ற நண்பர்கள் இன்றும் நீடிக்கிறார்கள்.இதை எழுதும்போது நான் எர்ணாகுளம் அருகே ஒரு நண்பரின் புது இல்லத் திறப்புவிழாவுக்கு வந்திருக்கிறேன். எண்பதுகளில் என் தொழிற்சங்கத்தோழர். அவரது வீட்டை நான் திறந்து வைத்தேன்
.
இந்த நட்பு எழுத்தாலோ கருத்துக்களாலோ வந்தது அல்ல.நான் எழுதும் ஒரு வரியைக்கூட வாசிக்காத நண்பர்களே எனக்கு அதிகம். என் எல்லாக்கருத்துக்களையும் நிராகரிக்கும் நண்பர்களே எண்ணிக்கையில் அதிகம். இருபத்தி ஐந்து வருட நண்பரான பவா செல்லத்துரை என் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் உடனிருப்பவர். என்னுடைய எந்தக்கருத்தையும் அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதற்குக் காரணம் பல. நான் எப்போதும் நட்புகளில் உணர்ச்சிகரமாகவும் நேர்மையுடனும் இருப்பவன். ஒருபோதும் எந்த நட்பையும் எனக்குக் கீழாக பார்க்காதவன். நண்பர்களின் பிசிறுகளை மன்னிப்பவன், ஆகவே என் பிழைகளை அவர்களும் மன்னிக்கிறார்கள். இந்த இலக்கியமே இல்லை என்றாலும் எனக்குப் பெரிய வட்டம் இருந்திருக்கும்.

இந்த இலக்கியவட்டம் எனக்கிருக்கும் சாதரணமான ஒரு நட்புச்சூழலே. இதை நான் வைத்திருக்கும் அமைப்பு என கற்பனைசெய்துகொண்டு பொறாமை கொள்பவர்கள் இதை எதிர்க்க எடுக்கும் நிலைப்பாடுதான் இதில் உள்ளவர்களெல்லாம் துதிபாடிகள், ஆளுமையற்றவர்கள் என்ற பிரச்சாரம். என் நட்புக்குழுமத்திலுள்ளவர்களில் சிலரே இதை நம்பி ‘நான்லாம் அப்டி இல்லை’ என்று காட்டுவதற்காக வெளியே சென்று என்னைப்பற்றி கிண்டலாகவும் விமர்சனமாகவும் எழுதுவதும் உண்டு. தன்னம்பிக்கை கொண்டவர்கள் ‘சரிதான், என்னைப்பற்றி நீ என்ன சொல்வது?’ என அந்தக்கூச்சலைப் புறக்கணித்து விடுவார்கள். எல்லாவகையான ஆளுமைகளும் கலந்ததுதான் ஒரு வட்டமாக இருக்கமுடியும்.

*

இந்த இலக்கியவட்டம் ஏன் உருவாகிறது? உண்மையில் இதில் நான் ஒரு முகாந்திரம் மட்டுமே. நம் சூழலில் கொஞ்சம் இலக்கியம் வாசிக்கும் ஒருவர் இலக்கிய ரசனை கொண்ட இன்னொருவரைச் சந்திக்கவே முடியாது. ஒரு நூலை வாசித்தபின், ஒரு சினிமா பார்த்தபின் எழும் மன எழுச்சி என்பது அதை உடனே பகிர்ந்துகொள்ளத் துடிப்பை உருவாக்குகிறது. அதற்கு ஆளில்லாதபோது பெரும் தனிமையுணர்வை எழுப்புகிறது. இத்தகைய வட்டங்களில் ஒவ்வொருவரும் சமானமான நண்பர்களைக் கண்டுகொள்கிறார்கள். அந்த நட்பு பலசமயம் வாழ்க்கையின் முக்கியமான உயிர் சுவாசமாகவே ஆகிவிடுகிறது. இந்த வட்டத்தின் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஈர்ப்பு நான் அல்ல, இதிலுள்ள பிறரே.

சமானமான ரசனையும் சிந்தனையும் கொண்டவர்களுக்கான தேடலில் ஆழமான கசப்புகளை அடைந்த பலர் உண்டு. யார் எவரென தெரியாமல் இணையத்தில் கருத்துப்பகிர்வுக்குச் செல்வதன் விளைவாக உருவாகும் புண்படல்களை நிறையபேர் அடைந்திருப்பார்கள். ஆகவே நேரடி அறிமுகம் இத்தகைய பகிர்வுக்கு இன்றியமையாதது. இலக்கியக்கூடல்களுக்குப்பின்னரே நட்புகள் உறுதியாக உருவாகின்றன என்பதன் காரணம் இதுவே

இலக்கிய வாசிப்பு அதன் ஒரு கட்டத்தில் இருவகை இறுக்கங்களை உருவாக்குகிறது. ஒன்று கடுமையான கருத்தியல்நிலைப்பாடுகள். உறுதியானநிலைப்பாடுகள் கொண்டவர்கள் மாற்றுத்தரப்பை மூர்க்கமாக மறுப்பார்கள். தங்களால் எதிர்க்கப்படுபவர்களைப் புண்படுத்தி தங்கள் தரப்பை நிறுவ முயல்வார்கள். அவர்களிடம் நிகழ்த்தப்படும் விவாதம் மோசமான அடிகளைப்பெற்றுத்தரும். இன்னொன்று, இலக்கியவாசிப்பிலிருந்து அழகுணர்வைப் பெறாமல் அறிவார்ந்த தகவல்களை மட்டுமே பெறுவது. காலப்போக்கில் வெறும் அகங்காரம் மட்டுமே கொண்டவர்களாக ஆகியிருப்பார்கள். வாசித்த நூல்பட்டியலை ஒப்பிப்பவர்கள். ஒற்றைக்குரல் வசைகளைக் கொட்டக்கூடியவர்கள். இலக்கியப்பரிமாற்றத்துக்காக இவர்களை நாடும் வாசகன் ஆழமாகப் புணபடுவான். தமிழில் இலக்கிய விவாதத்துக்காக உருவாக்கப்பட்ட ஆரம்பகால விவாதத்தளங்கள் முழுக்கச் செயலிழந்தது இதனால்தான்.

அதற்கு மாற்று என்பது நட்புக்குழுமம் தான். அங்கே பொதுவான ரசனை மற்றும் அறிவார்ந்த தளம் கொண்டவர்கள் கூடுகிறார்கள். பொதுவாக அனைவரும் மதிக்கும் ஒருசிலரின் மட்டுறுத்தல் இருந்துகொண்டிருக்கிறது. எல்லா விவாதங்களுக்கும் அப்பால் நட்பு தொடரவேண்டுமென்ற ஒரு விதிமுறை முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதுவே நட்பார்ந்த ஒரு சூழலை உருவாக்குகிறது. இதுவே இலக்கிய வட்டத்தின் ரகசியம்.

இத்தகைய வட்டத்தின் அவசியத்தால்தான் இவை உருவாகின்றன. செயற்கையாக ஒரு மனிதரின் தேவைக்காக இவற்றை உருவாக்க முடியாது. உருவாகும் ஒவ்வொன்றுக்கும் அதற்கான தனி இயல்பும் தானாகவே உருவாகி வரும். இப்படி உருவாகும் வட்டத்தை இன்னும் சில ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகப் பயன்படுத்தலாமே என்ற எண்ணமே அதை முறைப்படுத்தத் தூண்டியது. தமிழின் நவீன இலக்கியச் சூழலில் அமைப்புகளாகச் செய்தாகவேண்டிய பணிகள் பல உள்ளன. இருக்கும் அமைப்புகள் எல்லாமே மரபு சார்ந்தவை, கல்வித்துறை சார்ந்தவை. அந்தப்பணிகளே இந்த அமைப்புக்கான நியாயங்களை உருவாக்குகின்றன.
*

இத்தகைய அமைப்பு எங்கும் இல்லை என்பவருக்கு இலக்கியவரலாறு என்ன தெரியும் என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. உலகம் முழுக்க எல்லா இலக்கியச்செயல்பாடுகளும் இப்படி தன்னிச்சையாகச் சேரும் இலக்கியநட்புக்குழுமங்களால்தான் செய்யப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவையாவது வாசித்துப்பாருங்கள். நூற்றுக்கணக்கான நட்புக்குழுமங்கள் உள்ளதைக் காணலாம். சென்ற காலங்களில் அவை கூடிய கட்டிடத்தின்பெயரால், விடுதிகளின் பெயரால், இடத்தின் பெயரால் வரலாற்றில் இடம்பெற்ற எத்தனை அமைப்புகள் உள்ளன என்று காண்பீர்கள்

தமிழிலும் மலையாளத்திலும் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதல் ஓர் எழுத்தாளரை அல்லது சிந்தனையாளரைச் சுற்றி உருவான நட்புக்குழுமங்கள் தீவிரமாகச் செயல்பட்டுள்ளன, அவையே இலக்கியமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. கேசரி பாலகிருஷ்ணபிள்ளை அப்படி ஒரு மையமாக மலையாளத்தில் இருந்தார். அவரது வட்டத்தில் இருந்து வந்தவர்களே எம்.பி.பால், கேசவதேவ், தகழி பஷீர், உறூப் போன்றவர்கள். மலையாளத்தின் யதார்த்தவாத எழுத்தின் கலைக்கூடமே கேசரியின் வட்டம்தான். அவர் ஊர் ஊராக பயணம்செய்து ஒவ்வொரு ஊரிலும் தன் நண்பர்களைச் சந்திப்பார். சுவாரசியமான விஷயம், கேசரி வலதுசாரி, அவரிடமிருந்து வந்த அனைவருமே இடதுசாரிகள்.

அதன்பின் எம்.கோவிந்தன் ஒரு மையம். கோவிந்தன் இருந்தது சென்னையில். சமீக்ஷா என்ற சிற்றிதழையும் நடத்தினார். ஒவ்வொரு இரண்டுமாதத்துக்கும் ஒருமுறை கேரளத்தில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரை பயணம்செய்வார். பழைய விடுதிகளில் அறை போட்டு அங்குள்ள வாசகர்கள் மற்றூம் நண்பர்களுடன் விடியவிடிய உரையாடுவார். அதன்பின் அடுத்த ஊர். அவரது செலவை நண்பர்கள் பகிர்ந்துகொள்வார்கள். அந்தக்குழுமம் இன்று சமீக்ஷா குழுமம் என அழைக்கப்படுகிறது. அதைப்பற்றி நூற்றுக்கணக்கான நினைவுகள் எழுதப்பட்டுவிட்டன. அந்தக் குழுமத்தில் இருந்துதான் ஆற்றூர் ரவிவர்மாவும், கடம்மனிட்ட ராமகிருஷ்ணனும், ஆனந்தும், ஓ.வி.விஜயனும் எல்லாம் வந்தார்கள். மலையாள நவீனத்துவம் பிறந்தது,

நான் கோவிந்தனை அவரது முதிர்ந்த வயதில் கண்டிருக்கிறேன். அவருக்குப்பின் பி.கே.பாலகிருஷ்ணன், எம்.என்.விஜயன், ஆற்றூர் போன்றவர்களைச்சுற்றி ஒரு குழுமம் இருந்தது .நான் ஆற்றூர் ரவிவர்மாவின் குழுமத்தில் இருந்து வந்தவன். இன்றும் அக்குழுமத்தின் பழைய நண்பர்கள் எனக்குப்பிரியமானவர்கள். அவர்களுடன் ஓயாமல் விவாதித்தே நான் வளர்ந்தேன்.

தமிழில் ஆரம்பகட்டத்தில் வலுவான அறிவார்ந்த குழுமமாக இயங்கியது டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை மையமாகக் கொண்ட ஒரு குழுமம்தான். அவர்களே மணிக்கொடியை உருவாக்கினார்கள். ஒவ்வொருநாளும் சந்தித்துப்பேசக்கூடிய குழுமமாக இருந்தார்கள் அவர்கள். அதன்பின் க.நாசு. கோவிந்தனைப்போலவே க.நா.சுவும் சிற்றிதழ்கள் நடத்தினார். அவரும் ஊர் ஊராகப் பயணம் செய்திருக்கிறார். எங்கும் அவருக்கு சில வாசகர்கள், நண்பர்கள் இருந்தனர். இன்று இந்தக்குழுமம் பற்றிச் சொல்லப்படும் எல்லா வசைகளும் அவமதிப்புகளும் அன்று க.நா.சு பற்றியும் சொல்லப்பட்டன.. ஆனால் க.நா.சுவிடமிருந்தே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ந.முத்துசாமி, சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி என நவீனத்துவத்தின் ஓர் அலை தமிழில் நிகழ்ந்தது

க.நா.சு துதிபாடிகளை உருவாக்க ஊர் ஊராக அலைகிறார் என்ற வசையை சொல்லிக்கொண்டே இருந்த இடதுசாரிகளும் அத்தகைய குழுமங்களாகவே இயங்கினர். அன்றைய இடதுசாரிக்குழுமங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்புச்சுற்றமும் நா.வானமாமலையும் அமைப்பான ஆராய்ச்சிவட்டமும் முக்கியமான பங்களிப்பாற்றியவை. அதன்பின்னர் சுந்தர ராமசாமியின் நட்புக் குழுமம் இருந்தது. அவர் காகங்கள் என்ற மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சியை பலவருடம் தொடர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். தேவதச்சனின் நண்பர்வட்டமும் ஞானக்கூத்தனின் வட்டமும் தமிழில் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியிருக்கின்றன.

இவற்றை எல்லாவற்றையுமே அடிப்பொடிவட்டம் என்றும் துதிபாடிகளைத் தேடுவதற்காக மட்டுமே எழுத்தாளன் இதைச் செய்கிறான் என்றும் ஒருவர் சொல்வாரென்றால் அவரை எப்படிப்புரிந்துகொள்வது? அவருக்குத்தெரிந்த இலக்கியம் என்ன? கருத்துக்கள் செயல்படும் விதம் பற்றி அவர் அறிந்தது என்ன? உண்மையில் அவர் எழுதப்படிக்கத்தெரிந்த ஆசாமி, அந்த ஒரே தகுதியில் இலக்கியம் பற்றியும் கருத்து சொல்கிறார், அவ்வளவுதான்.

இலக்கியம் நுட்பமான, அந்தரங்கமான தொடர்ந்த கருத்துப்பரிமாற்றம் மூலமே உள்வாங்கப்பட முடியும். ஒரு காலகட்டத்தின் பொதுவான சிந்தனைகளும் ரசனையும் அப்படித்தான் திரளமுடியும். நம் சூழலில் இலக்கியப்பரிமாற்றத்துக்கான முறையான அமைப்புகள் ஏதும் இல்லை என்பதனால் எழுத்தாளர்களே முன்கை எடுத்தால் மட்டுமே அத்தகைய அமைப்புகளை உருவாக்கி நடத்தவும் முடியும். அதைத்தான் டி.எஸ்.சொக்கலிங்கம் முதல் சுந்தர ராமசாமி வரை செய்தார்கள். இப்போதும் அதுவே ஒரே வழி. நம்மால் முடிந்தது செயல்படுவது மட்டுமே. இலக்கியத்தில் என்ன நிகழும் என்பது நாம் ஒருபோதும் வகுத்துவிடமுடியாத ஒன்று. அது பலநூறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவது.

இருவகை எழுத்தாளர்கள் உண்டு. எழுதுவதை மட்டுமே செய்யக்கூடியவர்கள். உறூப், அசோகமித்திரன் போல. இலக்கியம் கருத்தியல் செயல்பாடுகள் என எல்லா வழியிலும் சமூகத்துடன் உரையாட முற்படுபவர்கள். எம்.கோவிந்தன், சுந்தர ராமசாமி போல. இரண்டாம் வகை எழுத்தாளர்களைச்சுற்றி மட்டுமே இலக்கியக்குழுமம் உருவாகும். அது அவர்களின் கடமை. அவர்களின் பங்களிப்பு. அது முற்றிலும் எழுத்தாளனின் இயல்பைச் சார்ந்த விஷயம்.

நான் என் இயல்புக்கு ஏற்ப என் முன்னுதாரணங்களாக எம்.கோவிந்தனையும், சுந்தர ராமசாமியையும் எடுத்துக்கொண்டேன். நான் இலக்கியத்திற்கான குழுமத்தை உருவாக்க ஆரம்பித்து இருபதாண்டுகள் ஆகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சந்திப்புகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடந்துள்ளன. இவை எதுவும் என் படைப்புகளுக்காக அல்ல. தமிழ்-மலையாளக் கவிதைப்பரிமாற்றத்துக்காக, தமிழின் முக்கியமான படைப்பாளிகளை கௌரவிப்பதற்காக, விவாதிப்பதற்காக, செவ்வியல்நூல்களை புரிந்துகொள்வதற்காக.

துதிபாடிக்கூட்டம் என வசைபாடும் மூடர்கள் வரலாறு முழுக்க அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். நேற்று வசைபாடியவர்களைப்பற்றி இன்று எவருக்கும் தெரியாது. எது சாதிக்கப்பட்டதோ அதுவே நீடிக்கும். நானும் நண்பர்களும் இன்று செய்பவை எல்லாம் வரலாற்றில் இருக்கும்.

ஆனால் இந்த வசைபாடல் பலவீனமான வாசகர்களை, நண்பர்களை பாதிக்கிறது என எனக்கும் தெரியும். அவர்கள் குழுமத்தில் இருந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். சொன்னாலும் மிகுந்த வெட்கத்துடன் சொல்வார்கள். ஒருசிலர் சமன் செய்ய வெளியே வம்புபேசுபவர்களுடன் சேர்ந்துகொண்டு தாங்களும் சில பேசுவார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடவேண்டுமென்பதே என் எண்ணம்.

தன்னம்பிக்கை கொண்ட எழுத்தாளன் இந்தக்கூச்சல்களை ஈயைத்தட்டிவிடுவதுபோல புறக்கணித்து முன்செல்வான். தான் யாரோ அதை எங்கும் திடமாக முன்வைப்பவனாக இருப்பான். இன்று தான் யார் என்று மட்டும் அல்ல நாளை தான் யார் என்பதும் ஓரளவு அவனுக்குத்தெரிந்திருக்கும். அது அளிக்கும் நிமிர்வும் அவனிடமிருக்கும். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு என்னைப்பற்றி பல சிற்றிதழ்களில் ‘சுந்தர ராமசாமியின் துதிபாடிக்கும்பலில் ஒருவர்’ என்று எழுதப்பட்டிருப்பதை இன்று வாசிக்கலாம். ‘ஆம்,நான் அவரது நட்புக்குழாமில் ஒருவன். அவரை ஆசிரியராக எண்ணுபவன். ஆனால் அவரை தாண்டிச்செல்லக்கூடியவன் என்று உள்ளூர அறிந்தவன்’ என்று நான் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறேன். எப்போதும் இலக்கியம் முன் செல்லும் பாதை அதுதான்.

ஜெ

மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2009

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44
அடுத்த கட்டுரைநீலியும் இசக்கியும்