அன்பு ஜெயமோகன்,
கீழைத்தேய, மேலைத்தேய மெய்யியல்களை, முறையே அகவய, புறவய கண்ணோட்டங்களை ஒப்புநோக்கி உங்கள் தளத்தில் நீங்கள் வரைந்த விரிவான மடலை வாசித்து மகிழ்ந்தேன். அதேவேளை Richard Attenborough எழுதிய The Words of Gandhi என்னும் குறுநூலை அருகில் இருக்கும் கனடிய நூலகத்தில் கண்ணுற்றேன். “இன்றைய காந்தி”யில் நீங்கள் விரித்துரைத்த விவரங்களைப் பளிச்சிடப் புலப்படுத்தும் மேற்கோள்களை, புறவயக் கண்ணோட்டங்களை இந்நூலில் அவர் திரட்டிக் கொடுத்துள்ளார். “ஒரு மனிதர் இன்னொரு மனிதரை இழிவுபடுத்தி இன்புறுவது எனக்கு விசித்திரமாக இருக்கிறது” என்று காந்தி அடிகள் கூறிய வசனம் தன்னை அதிரடியாக ஆட்கொண்டதை அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதன் பெறுபேறுகளுள் “காந்தி” திரைப்படம், The Words of Gandhi இரண்டும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “(காந்திய) நெறிகளுக்கு அமைந்தொழுகுவதற்கு நான் அயராது முயன்று வருகிறேன்” என்று காந்தி அடிகள் தெரிவித்த கூற்று மேற்படி மேற்கோள்களுள் ஒன்று. எத்துணை தன்னடக்கம்! எத்துணை பெருந்தன்மை!
மணி வேலுப்பிள்ளை
அன்புள்ள மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு,
காந்தி அவரைப்பற்றி எளிய மக்கள் கொண்டிருந்த உன்னத பிம்பத்தை எட்ட அயராது உழைத்த மனிதர். மாமனிதர் ஆவதற்கான வழியே அதுதான் போலும்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் தமிழக கேரள மாநிலங்களில் நிலவும் குடிப்பழக்கம் குறித்தும் அது குறித்த சசிப்பெருமாளின் போராட்டம் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். இன்று வெகு நாள் கழித்து டாஸ்மாக் போயிருந்தபோது கண்ட காட்சி என்னை அசத்தியது. நடுத்தர வயதுள்ள அழுக்கு லுங்கியும் சட்டையும் அணிந்த ஒருவர் வேகமாக கையில் குவார்டர் பாட்டிலுடன் வந்தார். பாட்டிலை ‘நேக்காக’ ஓப்பன் செய்த அவர் மேஜையில் யாரோ குடித்துவிட்டு போட்டிருந்த காலி பாட்டிலை எடுத்து அதில் அரை பாட்டில் ‘சரக்கை’ ஊற்றி வாட்டர் பாக்கெட்டில் இருந்த நீரை மிக்ஸ் பண்ணி ஒரு கல்ப் அடித்தார். இதே போல இரண்டாவது முறையும் செய்து சட்டை பாக்கெட்டில் இருந்த ஊறுகாயை எடுத்துக் கடித்துக்கொண்டே போய்விட்டார்.
உடல் மனம் குடும்பம் சமூகம் ஆகியவற்றின் மேல் அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன் குடிப்பதை எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறேன். நானும் அவ்வகையே… ஆனால் இது போன்ற பொறுப்பில்லாமல் குடித்து சீரழியும் நம் மக்களைப் பார்க்கும் போது மனம் கனத்துப்போகிறது. அதை குற்ற உணர்வு என்று சொல்ல மாட்டேன். பெரும்பாலும் அடிமட்ட சமூகத்தில் உள்ள தினசரி குடிகாரர்கள் அந்தந்த நாட்களில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அழுத்தத்தை போக்கி கொள்ளவே குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்,
குடி இருவகை. கேளிக்கைக்குடி, அடிமைக்குடி. நம்மில் பெரும்பாலானவர்கள் குடி அடிமைகள். அடிமையானவருக்கு குடி என்பது அந்நேரம் உருவாகும் நிலைகொள்ளாமையில் இருந்து விடுதலை. ரஞ்சித்தின் ஸ்பிரிட் என்ற மலையாளத்திரைப்படத்தில் ஒரு குடியடிமை சாராயத்தில் விட தண்ணீர் தேடுவான். தண்ணீர் இருக்காது. கழிவறையில் மலக்கோப்பைக்குள் மட்டும் தண்ணீர் இருக்கும். ஒருகணம் அதை அள்ளினாலென்ன என அவன் நினைக்கும் தருணம் படத்தில் இருக்கும். நந்து என்ற நடிகர் அற்புதமாக அதைக்காட்டியிருந்தார்.
ஜெ